'யாரும் நம்மால பாதிக்கக் கூடாது...!' - கோச்சடையானை தள்ளி வெளியிடச் சொன்ன ரஜினி!

பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தால் கோச்சடையானுக்கு 750 அரங்குகள் நிச்சயம் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உறுதியாகக் கூறியும், அதே தேதியில் வெளியாகும் விஜய், அஜீத் படங்கள் பாதிக்க வேண்டாம் என்று கூறி கோச்சடையானை தள்ளி வெளியிட அறிவுறுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதனை படத்தின் தயாரிப்பாளரும் உறுதி செய்துள்ளார்.

'யாரும் நம்மால பாதிக்கக் கூடாது...!' - கோச்சடையானை தள்ளி வெளியிடச் சொன்ன ரஜினி!

கோச்சடையான் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் 750 தியேட்டர்களைத் தர திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அதே தேதியில் விஜய் நடித்த ஜில்லாவும் அஜீத் நடித்த வீரமும் வெளியாவதாக அறிவித்தனர். இதனால் விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில், வீரம் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதை நாங்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டோம், ஆனால் தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளதாக ரஜினியிடம் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது வீட்டில் வைத்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் முரளி மனோகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய ரஜினி, நம்மால் எந்த வகையிலும் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறியதோடு, 'நம்ம படம் சோலோவாவே வரட்டும். அதுக்கேத்த மாதிரி ஒரு தேதியை டிசைட் பண்ணுங்க," என்றாராம்.

 

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்!

சென்னை: பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டர் இன்று அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

இந்திய சினிமாவில் பல நூறு படங்களில் 50 ஆண்டு காலம் நடன இயக்குநராக பணியாற்றியவர் ரகுராம்.

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மரணம்!

இன்று பிற்பகல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ரகுராமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்தது.

ரகுராமின் மகள்தான் பிரபல நடிகை காயத்ரி ரகுராம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது உடல் காம்தார் நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரகுராமின் மகள்கள் வெளிநாடு சென்றிருப்பதால், அவர்கள் திரும்பிய பிறகே இறுதி சடங்குகள் நடத்தப்படும்.

நாளை பிற்பகலுக்குப் பிறகு அவர் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூதுவராக செயல்படவில்லை - நயன்தாரா, த்ரிஷா மறுப்பு

சென்னை: நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சிசிஎல்லின் சென்னை ரைனோஸ் அணிக்கு விளம்பரத் தூதராக செயல்படவில்லை என்று நடிகைகள் நயன்தாராவும் த்ரிஷாவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் ‘சிசிஎல்' நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூதுவராக செயல்படவில்லை - நயன்தாரா, த்ரிஷா மறுப்பு

இதில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனேஸ் அணிக்கு நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோர் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

திரிஷா ஏற்கனவே இந்த அணியில் தூதுவராக இருந்துள்ளார். நயன்தாராவை தூதுவராக நியமித்து பிறகு நீக்கி விட்டனர்.

இப்போது மீண்டும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர்களிடம் கேட்டபோது மறுப்பு தெரிவித்தனர்.

நயன்தாரா கூறுகையில், "சிசிஎல் கிரிக்கெட் அணிக்கு தூதுவராக இருக்கும்படி கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதற்கு என்னிடம் நேரமும் இல்லை. தற்போது எனது முழு கவனமும் நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில்தான்," என்றார்.

த்ரிஷா கூறும்போது," ஏற்கெனவே நான் தூதுவராக இருந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை யாரும் என்னை அழைக்கவில்லை," என்றார்.

 

ஒரு வாரம் தள்ளிப் போனது கோச்சடையான் இசை வெளியீடு... கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!

சென்னை; சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த விழா பிரமாண்டமாக நடக்கிறது.

ஒரு வாரம் தள்ளிப் போனது கோச்சடையான் இசை வெளியீடு... கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!

முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் இறுதி பிரிண்ட் தயார் செய்யும் பணிக்காக சவுந்தர்யா வெளிநாடு சென்றிருப்பதால், மேலும் இரண்டு வாரங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது இசை வெளியீடு.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான் பாடல்கள் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. இதில் தமிழ் மற்றும் இந்தியில் ரஜினியே தன் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போதுதான் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து இறுதி அறிவிப்பு வெளியாகும்.

இதற்காக நேரு உள்விளையாட்டரங்கை முன்பதிவு செய்ததோடு, ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், திரைத் துறையினர், பொதுப் பிரிவினர் என அனைத்துத் தரப்பினருக்கும் அனுமதிச் சீட்டுகள் தயாராகி வருகின்றன.

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!'

படம் மற்றும் அதன் நாயக - நாயகிகளுக்காக சில பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகளை அடிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று.

நடிகை படப்பிடிப்பின்போது கடலில் விழுந்தார், குளத்தில் விழுந்தார், மாடு முட்டியது, கல் தடுக்கி விழுந்ததில் ரத்தம் கொட்டியது என்றெல்லாம் அவர்களின் பிஆர்ஓக்கள் பரபரப்பு தகவல் பரப்புவார்கள்.

வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!'

சரி, தெரிஞ்ச விஷயம்தானே என அவற்றையெல்லாம் செய்தியாக்கி இலவச பப்ளிசிட்டியும் தருவார்கள் மீடியாக்காரர்கள்.

கொடுக்கிறது டுபாக்கூர் தகவலாக இருந்தாலும், அதையும் சரியாக செய்ய வேண்டாமா... நம்ம நடிகை வேதிகாவுக்கு பப்ளிசிட்டி தருவதாகக் கூறிக்கொண்டு, சமீபத்தில் அவரது ஆட்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்கள்...

"சில தினங்களுக்கு முன் சிங்காரவேலன் என்ற மலையாளப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது வேதிகா தவறி குளத்தில் விழுந்துவிட்டார். இருந்தாலும் தைரியமாக சமாளித்து கரையேறி, ஷூட்டிங்கைத் தொடர்ந்தார். அவர் தைரியத்தை அனைவரும் பாராட்டினார்கள்' என்று செய்தி பரப்பிவிட்டனர்.

ஆனால் சிங்காரவேலன் என்ற படம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதியே வெளியாகிவிட்டது.

வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!'

அதைவிடக் கொடுமை, அதன் க்ளைமாக்ஸ் காட்சி கடந்த மே மாத இறுதியில் படமாக்கப்பட்டதாம்.

வேதிகா இப்போது நடித்துக் கொண்டிருப்பது வசந்த பாலனின் காவியத் தலைவன் படத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை அம்பலமானதும், மலையாள பத்திரிகைகள் ரவுண்டு கட்டி கிண்டலடித்து வருகின்றன வேதிகாவை!

 

சிம்பு - நயன் பற்றிய கேள்விகளால் வெறுப்பு - ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஹன்சிகா!!

சென்னை: தொடர்ந்து சிம்பு - நயன்தாரா ஜோடி சேர்வதைப் பற்றியே பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்ததால் கடுப்பான ஹன்சிகா, தனது ட்விட்டர் கணக்கு மூடிவிட்டார்.

நடிகர், நடிகைகள் பலரும் இப்போது தங்கள் கருத்துகள், பட விவரங்களை ரசிகர்களுக்கு நேரடியாக சமூக வலைத் தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு - நயன் பற்றிய கேள்விகளால் வெறுப்பு - ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஹன்சிகா!!

ஹன்சிகாவும் ட்விட்டரில் இருந்தார். சிம்புவுடனான காதலை டுவிட்டர் மூலம்தான் அவர் வெளிப்படுத்தினார். தனது படங்கள், படப்பிடிப்பு விவரங்களையும் வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சிம்பு எப்போது மீண்டும் நயன்தாராவுடன் கைகோர்தாதாரோ, அன்றிலிருந்து இந்த ட்விட்டர் ஹன்சிகாவுக்கு தொல்லையாக மாறிவிட்டது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல், நண்பர்களும்கூட சிம்பு - நயன்தாரா மீண்டும் சேர்ந்து நடிப்பது பற்றி ஹன்சிகாவிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்ததில் வெறுத்துப் போய்விட்டாராம் ஹன்சி.

சிம்புவை இன்னும் காதலிக்கிறீர்களா? நயன்தாராவுடன் உங்கள் காதலன் ஜோடி சேர்வதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? சிம்பு இப்போது உங்களுடன் பேசுகிறாரா? நாங்க அப்பவே உங்களை எச்சரித்தோமே... கேட்டீர்களா? போன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம்.

இதனால் கடுப்பான ஹன்சிகா, தனது ட்விட்டர் கணக்கையே க்ளோஸ் பண்ணிவிட்டார். தற்காலிகமாக விலகுவதாகவும், பிறகு பார்க்கலாம் என்றும் ட்வீட் செய்துவிட்டு வெளியேறியுள்ளார் ஹன்சிகா!

 

சித்திரம் டிவியில் கோலுவுடன் விளையாடுங்க!

கலைஞர் குழுமங்களில் ஒன்றான சித்திரம் டி.வி.யில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுமையான நிகழ்ச்சி "கோலுவுடன் விளையாடுங்க..."

இதுவரை தொலைக்காட்சிக்கு வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த நாம் அதனோடு களமிறங்கி விளையாடப் போகிறோம்.

சித்திரம் டிவியில் கோலுவுடன் விளையாடுங்க!

கோலு என்னும் அனிமேஷன் கதாபாத்திரம் டி.வி.யில் விளையாடும் வீடியோ கேம்களில், நாம் வீட்டில் இருந்தபடியே பங்கேற்க முடியும். கோலுவோடு இணைந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து விட்டால் விளையாட்டுக்குள் நுழைந்து விடலாம்.

நம்முடைய மொபைல் போனிலோ அல்லது லேண்ட்லைனிலோ இருக் கும் எண்களை வைத்து விளையாட்டை நகர்த்தலாம். இதில் அதிக புள்ளிகளை பெற்று வெற்றி பெறும் குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு நிகழ்ச்சி, சிறந்த பொழுதுபோக்காகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஹைதராபாத்தில் விஜய் - காஜல் அகர்வால் நடனம்!

ஜில்லா படத்துக்காக விஜய் - காஜல் அகர்வால் நடனமாடிய பாடல் காட்சி சமீபத்தில் ஹைதராபாதில் படமாக்கப்பட்டது.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி வழங்கும் படம் "ஜில்லா". இந்தப் படத்தின் டாக்கி பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள அண்ணபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கில் இந்தப் பாடலை படமாக்கினார்கள்.

ஹைதராபாத்தில் விஜய் -  காஜல் அகர்வால் நடனம்!  

விஜய் - காஜல் அகர்வால் இருவரும் சேர்ந்து ஆடிய இந்த பாடல்காட்சியில் சார்லட், ஹேஜல் என்ற இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் ஆடிப் பாடினர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்தார்.

முக்கிய வேடத்தில் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ், மகத், தம்பி ராமய்யா, சூரி, சம்பத், ரவிமரியா, ஆர்.கே.சரண், நிவேதா, பிரதீப் ராவத், ஜோமல்லூரி, ப்ளாக் பாண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

வைரமுத்து, விவேகா, யுகபாரசி, பார்வதியின் பாடல்களுக்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஆர் டி நேசன்.

 

ரதி, ரம்யா நடிக்கும் சித்திரம் பேசுதடி: 5 சகோதரிகளின் கதை

ஜெயா டிவியில் சித்திரம் பேசுதடி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இது தாயில்லாத, தந்தையின் வளர்ப்பில் வளரும் 5 சகோதரிகளின் கதை.

கோலங்கள், மாதவி, பொக்கிஷம் தொடர்கள் மூலம் சின்னத்திரை நேயர்களுக்கு அறிமுகமான இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் குடும்பத்தொடர் ‘சித்திரம் பேசுதடி'.

ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடர், பெண்களையும் குடும்ப உறவுகளையும் மையப்படுத்தி வந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சி தொடர்களுக்கு மத்தியில், இன்னொரு கோணத்தில் ரசிகர்களை ஈர்க்கும்விதத்தில் உருவாகி வருகிறது.

ரதி, ரம்யா நடிக்கும் சித்திரம் பேசுதடி: 5 சகோதரிகளின் கதை

பெண்களின் கதை

ஆணாதிக்கமும் பொருளாதாரமும் அடக்கி ஒடுக்கும் பெண்ணின் மனச்சித்திரம் பேசத் தொடங்கினால் அதில் எத்தனையோ கண்ணீர் சுவடுகள் இருக்கலாம். எண்ண முடியாத சிரிப்பலைகள் பரவலாம்.

பெண்களின் சுதந்திரம்

‘‘சித்திரம் பேசுதடி'' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடரில், திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் தனிப்பட்ட சுதந்திரம், ரசனை, லட்சியம் என இருக்க, திருமணத்திற்கு பிறகு அவள் அவளாக இருக்கிறாளா? இருக்க முடிந்ததா? என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான கதைக்களமே இந்தத் தொடர் என்கிறார் இயக்குநர் திருச்செல்வம்.

5 சகோதரிகள்

குந்தவை, தமயந்தி, தேன்மொழி, மணிமேகலை, கயல்விழி இவர்கள் ஐவரும் தாயை இழந்த ஐந்து சகோதரிகள். இவர்களின் தந்தை ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்வாணன்.

பெண்களின் கனவுகள்

திருமணத்திற்கு முன்பாக இந்த பெண்களிடம் இருக்கும் கனவுகள், தேடல்கள் எல்லாமே திருமணத்திற்கு பின்பாகவும் உயிர்ப்போடு இருக்கிறதா, அதை அடைகிறார்களா அல்லது மறைந்து போகிறதா? இன்றைய இளம்பெண்களின் வாழ்க்கை தட பதிவுகளை மிக யதார்த்தமாக பேச வருகிறது, இந்த தொடர்.

தேன்மொழியாக ரதி

‘சொல்ல மறந்த கதை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரதி கதையின் நாயகி தேன்மொழி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ரம்யா, பூஜா, ஸ்ரீதேவி ஆகியோர் சகோதரிகளாக நடிக்கின்றனர்.

இயக்குநர் திருச்செல்வம்

இவருடன் சத்யப்பிரியா, விஜயகிருஷ்ணராஜ், பாரதி, மோகன் வைத்யா, ஷ்ரவன், ரம்யா, பூஜா, பிரகாஷ்ராஜன், ஸ்ரீதேவி, பவ்யகலா, ஹர்ஷிதா, சங்கரன்கோவில் கணேசன், ருத்ராஸ்ரீ, மாஸ்டர் ரோகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஜெயா டி.விக்காக திருச்செல்வம் தியேட்டர்ஸ் நிறுவனம் ‘‘சித்திரம் பேசுதடி'' தொடரை தயாரித்து வழங்குகிறார்கள். இந்த தொடருக்கு நவநீத் சுந்தர் இசையமைத்துள்ளார். கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.

 

ஜெயா டிவியில் ஆல்பம் 2: மீண்டும் வரும் பெப்சி உமா

ஜெயா டிவியில் ஆல்பம் 2 நிகழ்ச்சியை பெப்சி உமா மீண்டும் தொகுத்து வழங்குகிறார்.

சன் டிவியில் பெப்ஸி நிறுவனம் ஸ்பான்சர் செய்த உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் நடத்தி சாதனை புரிந்தவர். இதனால் அவரது பெயர் பெப்ஸி உமா என்றே மாறிப்போனது.

கட் அவுட் வைக்கும் அளவிற்கு பிரபலமான உமா, கலைஞர் டிவி தொடங்கப்பட்ட உடன் அங்கே மாறினார். பின்னர் அங்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களினால் மீடியா உலகை விட்டே விலகினார்.

ஜெயா டிவியில்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜெயாடிவியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களை பேட்டி கண்டார். சிவகுமார், பிரபு என திரை உலக பிரபலங்களும், அரசியல் கட்சியினரையும், காவல்துறை அதிகாரிகளையும் பேட்டி கண்டார்.

போலீஸ் புகார்

ஜெயா டிவியில் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்பட்ட உமா, தன்னை அவமானப்படுத்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் கொடுத்து விட்டு மீண்டும் சின்னத்திரையிலிருந்து விலகிக் கொண்டார்.

உமா சமாதானம்

உமா புகார் கொடுத்த தயாரிப்பாளர் மீது சேனல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து சமாதானமாகிவிட்ட உமா மீண்டும் உற்சாகத்தோடு வருகிறார்.

ஆல்பம் 2

இப்போது மீண்டும் தனது சின்னத்திரை பயணத்தை தொடரவிருக்கிறார். "ஆல்பம் நிகழ்ச்சியோட ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. அடுத்த பகுதி புதுப்பொலிவுடன் தயாராகிக்கிட்டிருக்கு. வித்தியாசமான கோணத்தில் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். மீண்டும் ஆல்பம் 2 வில் ரசிகர்களை சந்திப்பேன்" என்கிறார் உமா.