சென்னை: விக்ரம் நடிக்கும் `தாண்டவம்` படத்தின் தலைப்புக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தாண்டவம்
சென்னை 16-வது உதவி சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில், ஸ்டார் நைன் மீடியாஸ் உரிமையாளர் எஸ்.விஜய் தாக்கல் செய்துள்ள மனுவில், "தாண்டவம் என்ற தலைப்பில் புதுமுக நடிகர் நடிக்கும் சினிமா படத்தை தயாரித்து வருகிறேன். இந்த படத்தின் தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் 2010 டிசம்பர் மாதம் பதிவு செய்துள்ளேன்.
இந்தநிலையில், யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை `தாண்டவம்` என்ற தலைப்பில் தயாரிக்கிறது. இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் வைத்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், ஆர்.சங்கரின் தாண்டவம் என்ற தலைப்பை நாங்களும், விக்ரமின் தாண்டவம் அல்லது சிவதாண்டவம் என்ற தலைப்பை யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம், தாண்டவம் என்ற பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்துள்ளது. எனவே தாண்டவம் படத்தின் தலைப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். தாண்டவம் படத்தின் தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்," என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், `தாண்டவம் என்ற படத்தின் தலைப்பை பதிவு செய்துவிட்டு, அதை புதுப்பிக்க வில்லை. எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
பின்னர் மனுதாரர் தரப்பில் கோதண்டபாணி, யு.டி.வி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வக்கீல் சிவானந்தராஜ் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரருக்கு ஆர்.சங்கரின் `தாண்டவம்' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் புதுப்பிக்கவில்லை. எனவே, யு.டி.வி. மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் தாண்டவம் என்ற தலைப்பை பயன்படுத்தியுள்ளது. எனவே தாண்டவம் தலைப்பை பயன்படுத்த இடைக்கால தடைக் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.