சென்னை: இந்த வருடம் முதல் 6 மாதங்கள் சோதனையைச் சந்தித்த தமிழ் சினிமா தற்போது தான் அதில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த மாதத் தொடக்கத்தில் வெளிவந்த பாபநாசம் மற்றும் பாலக்காட்டு மாதவன் 2 படங்களும் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன.
இந்நிலையில் தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த பாகுபலி திரைப்படம், தமிழ்நாட்டில் ஒரு வசூல் சூறாவளியை நிகழ்த்தியுள்ளது. தமிழில் எந்தப் பெரிய நடிகர்களும் படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை எனினும் இந்த 2 நாட்களில், இதுவரை 10.25 கோடியை தமிழ்நாட்டில் வசூலித்து சாதனை செய்துள்ளது பாகுபலி.
கே.ஈ.ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோகிரீன் சார்பாக சுமார் 333 திரையரங்குகளில் பாகுபலி திரைப்படத்தை வாங்கி வெளியிட்டார், தெலுங்கு மொழியில் பாகுபலி திரைப்படம் 46 திரையரங்குகளில் வெளியானது.
மொத்தம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 379 திரையரங்குகளில் பாகுபலி திரைப்படம் வெளியானது, வெளியான 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை மொத்தம் 10.25 கோடியை வசூலித்து உள்ளது.
பெரிய நடிகர்கள் யாரும் இல்லாத போதும் ராஜமௌலி என்ற பெயருக்காகவே தமிழ்நாட்டில் படம் வெற்றிகரமாக ஓடிவருகிறது, உலகம் முழுவதும் சுமார் 4200 திரையரங்குகளில் வெளியான பாகுபலி 2 நாட்களில் 100 கோடியை வசூலித்து வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.