லஸ் கார்னரில் கே.பி.க்கு சிலை வைக்க வேண்டும்: இயக்குநர் சங்கம் கோரிக்கை

சென்னை: மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு லஸ் கார்னரில் சிலை வைக்க வேண்டும் என அரசுக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்தவாரம் காலமானார்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் அவரது உருவப்பட திறப்பு நிகழ்ச்சி வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது. இயக்குநர் பாரதிராஜா பாலச்சந்தரின் உருவ படத்தை திறந்து வைத்தார்.

லஸ் கார்னரில் கே.பி.க்கு சிலை வைக்க வேண்டும்: இயக்குநர் சங்கம் கோரிக்கை

அதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கத்தின் தீர்மானங்களை ஆர்.கே.செல்வமணி வாசித்தார். அதன் விபரமாவது:-

- வளசரவாக்கத்தில் உள்ள இயக்குனர் சங்க அலுவலகத்துக்கு டைரக்டர் பாலச்சந்தர் பெயர் சூட்டப்படும் பாலச்சந்தர் திரைப்பட விழா சென்னையில் ஒரு வாரம் கொண்டாடப்படும்.

- பாலச்சந்தர் இயக்கிய முக்கிய படங்களை தேர்வு செய்து ஒரு வாரம் சென்னை தியேட்டர்களில் திரையிடப்படும்.

- மயிலாப்பூர் லஸ் கார்னரில் பாலச்சந்தருக்கு சிலை நிறுவவும் அவர் வாழ்ந்த வீட்டின் அருகில் உள்ள தெருவுக்கு பாலச்சந்தர் பெயர் சூட்டவும் அரசை கேட்டுக் கொள்கிறோம்.

- பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் பாலச்சந்தர் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் இதில் பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பர்.

- பாலச்சந்தர் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், வி.சேகர், ஆர்.கண்ணன், எஸ்.பி.முத்துராமன், பேரரசு, பார்த்திபன், ரவி மரியா, மனோபாலா, வசந்த், ஆர்.வி. உதயகுமார், ஆர்.சுந்தரராஜன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா புஷ்பா கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

‘படம் பார்க்க போலாமா’.... டூரிங் டாக்கிஸ் மூலம் பாடகரானார் நடிகர் ஜீவா!

சென்னை: எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வரும் டூரிங் டாக்கிஸ் படத்தில் ஒரு பாடலைப் பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ஜீவா.

நடிகர் விஜய்யும், ஜீவாவும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் நண்பன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜீவாவின் அப்பா ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் விஜய். தற்போது, விஜயின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வரும் டூரிங் டாக்கிஸ் என்ற படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் ஜீவா.

‘படம் பார்க்க போலாமா’.... டூரிங் டாக்கிஸ் மூலம் பாடகரானார் நடிகர் ஜீவா!

முற்றிலும் புதுமுகங்களே நடிக்க தயாராகி வருகிறது டூரிங் டாக்கிஸ் படம். விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்திற்கு இசை இளையராஜா. இப்படத்தில் ஜீவா பாடல் ஒன்றைப் பாடியிருப்பதன் மூலம், டூரிங் டாக்கிஸ் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

ஜீவா பாடிய பாடல் ‘படம் பார்க்க போலாமா' என ஆரம்பிக்கிறதாம். இது படத்தின் அறிமுகப் பாடலாக வருவதாக ஜீவா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த யான் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்க, ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நடித்திருந்தார்.