சென்னை: அறிமுகமான முதல் படம் முடிந்து வெளிவருவதற்குள், தனக்கு ப்ளைட் டிக்கெட் வேண்டும், நட்சத்திர ஓட்டலில் ரூம் வேண்டும், உடன் அம்மாவுக்கும் டிக்கெட் வேண்டும் என்றெல்லாம் கேட்டு பெண் தயாரிப்பாளரை டார்ச்சர் செய்துள்ளார் புதுமுகம் கீர்த்தி.
படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களுக்கு ஹீரோயின்கள் வருவதே இல்லையே என்ற குற்றச்சாட்டுகளை பல தயாரிப்பாளர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
முன்னணி ஹீரோவான கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்துக்கே, அதன் நாயகி காஜல் அகர்வால் வரவில்லை. அவரை வரவிடாமல் மேனேஜர் தடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
எனவே இனி படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நாயகிகள் வராவிட்டால் அவர்களுக்கு சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அப்படி இருந்தும் நேற்று நடந்த உயிர்மொழி படத்தின் இசை மற்றும் அறிமுக பிரஸ் மீட்டுக்கு படத்தின் நாயகி கீர்த்தி வரவில்லை. இத்தனைக்கும் அவருக்கு இதுதான் முதல் படம்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சண்முகப்பிரியா பேசுகையில், "இந்த உயிர்மொழி படத்தின் படப்பிடிப்பை சொன்ன நேரத்துக்குள், குறித்த பட்ஜெட்டுக்குள் நல்லபடியாக நடத்திக் கொடுத்துவிட்டார் இயக்குநர். என் நிலைமையைப் புரிந்து ஒத்துழைத்தனர் அனைவரும்.
ஆனால் நடிகை கீர்த்தி மட்டும் சரியான ஒத்துழைப்பைத் தரவில்லை. படம் முடிந்து வியாபாரம் பேசப்போகும் இந்த நேரத்தில்தான் பப்ளிசிட்டி முக்கியம். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கே அவர் வர மறுத்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஒரு வாரமா பேசிப் பார்த்தோம். ‘ப்ளைட்ல டிக்கெட் போட்டுக் கொடுக்கணும், ஸ்டார் ஓட்டல்லதான் ரூம் வேணும்... கூட அம்மா மேனேஜருக்கும் அதே வசதி வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போட்டார். பரவால்ல வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
இந்தப்படத்தை நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு தான் முடிச்சோம். படம் ஆரம்பிச்சப்ப நான் நிறைமாத கர்ப்பிணியா இருந்தேன். உடல் சிரமங்களைப் பார்க்காம நான் ஓடித் திரிஞ்சேன். குழந்த பிறந்த 12-ம் நாளே நான் ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தேன். தயாரிக்கணும்னு வந்ததுக்கப்புறம் ஏற்றம், இறக்கமெல்லாம் இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன். அதனால் இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கல.
ஆனா, ஒரு தயாரிப்பாளரை நடிகை இப்படி நோகடிப்பது சரியா?
என்னோட டீம்ல எல்லாருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. ஹீரோயின் மட்டும் ஒத்துழைப்பு கொடுக்கல.
ஷுட்டிங் டைம்ல கூட அவங்களை ரொம்ப கெஞ்சிக் கூத்தாடி தான் கூப்பிட வேண்டியிருந்தது. நான் எதுவும் சொல்லக்கூடாதுன்னு தான் நெனைச்சேன். ஆனா முடியல.
இதுக்கு நிச்சயம் ஒரு தீர்வு வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்திலும் நிச்சயம் முறையிடுவேன்.
ஆனா ஒண்ணு... அந்த ஹீரோயின் இப்போ இங்க இல்லாததால நஷ்டம் எங்களுக்கில்ல. அவங்களுக்குதான். இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்த்திட்டு, புதிய பட வாய்ப்புகள் இந்த மாதிரி நடிகைகளைத்தான் தேடிப்போகிறதே தவிர, எங்களைப் போன்றவர்களைத் தேடி அல்ல.
இந்த மாதிரி ஹீரோயின்கள் வந்து பப்ளிசிட்டி கொடுத்து ஓட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படத்தில் கதை இருக்கிறது.. அந்த நம்பிக்கையில் படத்தை வெளியிடுகிறோம்," என்றார்.