சிறந்த நடிகர் : விக்ரம் (தெய்வதிருமகள்)
சிறந்த நடிகை : அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)
சிறந்த படம் : எங்கேயும் எப்போதும்
சிறந்த இயக்குனர் : வெற்றிமாறன்
சிறந்த வில்லன் : அஜீத்
சிறந்த காமெடி நடிகர் : சந்தானம்
சிறந்த பொழுதுபோக்கு நடிகர் : தனுஷ்
சங்கரன்கோவில்: ஒருதலை ராகம் போன்று ஒருதலைக் காதலும் வெற்றிப்படமாக அமையும் என்று இயக்குனர், நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகரும், லட்சிய தி்முக தலைவருமான டி. ராஜேந்தர் ஒருதலைக் காதல் என்ற படத்தை எடுத்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பை நெல்லை மாவட்டத்தில் நடத்த இருக்கிறார். இதற்காக சங்கரன்கோவிலுக்கு வந்த அவர் சங்கரநாராயணசாமி கோவிலில் வழிபாடு செய்தார்.
பி்ன்னர் அவர் கூறுகையில்,
நான் கடந்த 35 ஆண்டுகளாக ஜோதிட ஆராய்ச்சி செய்து வருகிறேன். முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகப்படி அவருக்கு சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் புதுக்கோட்டை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று பேசினேன். இப்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளில் அதி்முக வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார். ஒருதலைக் காதல் படத்தில் நானே கதாநாயகனாக நடித்து வெளியிட இருக்கிறேன்.
இந்த படத்துக்கான ஷூட்டிங் முழுக்க, முழுக்க தேனி, தென்காசி, சங்கரன்கோவில், குற்றாலம் பகுதியில் நடத்தப்படும். அந்த காலத்தில் ஒருதலை ராகம் போல் இந்த படமும் வெற்றிப் படமாக அமையும் என்றார்.
பின்னர் தளவாய்புரத்திலுள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து ஆணையூர் மலைப்பகுதி, நெல்கட்டும்செவல் புலித்தேவர் நினைவு மாளிகை ஆகியவற்றை பார்வையிட்டார்.
வடிவேலு இல்லாத காமெடி களம் நன்றாக இல்லைதான். எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும், என்றார் நகைச்சுவை நடிகர் விவேக்.
பசுமை கலாம் என்ற தனது மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நட்டு சாதனைப் புரிந்துள்ளார் விவேக். ஒரு நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி, அவரது இமேஜை தூக்கி நிறுத்தியுள்ளது அவரது இந்த முயற்சி.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டத்தை விவேக் ஆரம்பித்தார். இந்த ஆண்டு ஜூனில் திட்ட இலக்கை எட்டியுள்ளார். தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதி உள்ள மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் விவேக்.
இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டி:
அப்துல் கலாமின் கனவான ஒருகோடி மரம் நடுதல் என்ற திட்டத்தின் முதல் பகுதிதான் இது. மீதி தொன்னூறு லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுக்க நடும் திட்டம் உள்ளது.
அதற்கு எத்தனை ஆண்டுகளாகும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த இலக்கை தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
என்னுடைய இந்த முயற்சிக்கு பல நிறுவனங்கள் துணை நிற்கின்றன. மரம் நடுதலுக்கான பெரும் செலவுகளை ஏற்கின்றனர். அவர்களுக்கு நன்றி.
உண்மையில் மக்களிடையே மரம் நடுதல், மரங்களால்தான் மழை என்ற விஷயம் உணரப்படவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. இந்த அறிவியல் உண்மைகளை வலியுறுத்தி இனி பிரச்சாரம் செய்யப் போகிறேன்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக வரமுடியாத சூழல் குறித்து...
அதுபற்றி நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. தேர்தலில் போட்டியிடுவது அவரது சொந்த முடிவு. ஆனால் எங்களுக்கு எப்போதும் ஜனாதிபதி அவர். அவருக்காக எதுவும் செய்வோம். அவர் சொல்லுக்கு கட்டுப்படுவோம்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு நீங்கள் நடித்து வந்துள்ள முரட்டுக்காளை குறித்து...
அது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட படம். முதல் முறையாக ஒரு திருநங்கை வேடத்தில் நடித்துள்ளேன். மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக பதினாறு வயதினிலே டாக்டர் - ஸ்ரீதேவி போர்ஷனை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியிருந்ததற்கு நல்ல வரவேற்பு. பதினாறு வயதினிலே படத்துக்கு நான் பரம ரசிகன். பல ஆண்டுகள் மனசுக்குள் ஊறியிருந்த அந்த விஷயம் இந்தப் படத்தில் நகைச்சுவையாக வெளிப்பட்டுள்ளது.
அந்த டாக்டர் கேரக்டருக்கு செல் முருகன் ரொம்ப பொருத்தமாக இருந்தார். இன்று பெருமளவு பேசப்படும் காமெடியாகிவிட்டது அது!
நீங்களும் வடிவேலுவும் உச்சத்திலிருந்தீர்கள் ஒரு கட்டத்தில். இப்போது வடிவேலு இல்லாத இந்த காமெடி களத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கஷ்டமாகத்தான் உள்ளது. வடிவேலுவின் பிரச்சினைக்கு அவர் காரணமா.. வேறு காரணம் என்றெல்லாம் நான் ஆராய விரும்பவில்லை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். எல்லாம் சீக்கிரமே சரியாகிவிடும் என நம்புகிறேன்," என்றார்.
இனி அடுத்த ரவுண்டு...
பசுமை கலாம் திட்டத்தை செயல்படுத்தும் மும்முரத்தில் பல பெரிய படங்களைக் கூட இழந்ததாகக் கூறும் விவேக், இந்த ஆண்டு முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறாராம்.
சூர்யாவுடன் சிங்கம் 2, முக்தா சுந்தரின் பத்தாயிரம் கோடி, கந்தா உள்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அஜீத், விஜய் என தன் முந்தைய ஹீரோக்களுடனும் கைகோர்க்கப் போகிறாராம்!
தான் சினிமா ஹீரோ மட்டுமல்ல.. நிஜத்திலும் ஹீரோதான் என சத்யமேவல ஜெயதே மூலம் நிரூபித்துவிட்டார் ஆமிர் கான் என்று கூறியுள்ளார் சல்மான் கான்.
ஆமிர் கானும் சல்மானும் பாலிவுட்டில் நெருக்கமான நண்பர்கள். ஒருவர் பணி்யை மற்றவர் பாராட்டிக் கொள்வது வழக்கம்.
பெண் சிசுக் கொலை, மருத்து உலக முறைகேடுகள் குறித்து ஆமிர் கான் சமீபத்தில் ஆரம்பித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே நாடு முழுவதும் பெரும் அலையைக் கிளப்பியுள்ளது.
துபாயில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சல்மான்கான், இந்த நிகழ்ச்சி குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், "நாட்டின் முக்கியமான பிரச்சினையை துணிந்து கையிலெடுத்துள்ளார் ஆமிர் கான். சமூக மாற்றத்துக்கான ஒரு முதல் நகர்வு இது. தான் நிஜத்திலும் ஒரு ஹீரோதான் என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார் ஆமிர். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்," என்றார்.
தனது சத்யமேவ ஜெயதே ஷோவின் ஆரம்பத்தில், சல்மானின் படத்தைக் குறிப்பிட்டு ஆமிர் கான் பாராட்டியது நினைவிரு்கலாம்.
தென்னிந்திய சி்னிமா தொழிலாளர்கள் சம்மேளன (ஃபெப்சி) தேர்தலில் இயக்குநர் அமீர் வெற்றி பெற்றுள்ளார்.
ஃபெப்சி நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த சம்மேளனத்தில் உள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடந்தது.
இந்த அமைப்பின் தலைவர் பதவிக்கு இயக்குனர் அமீரும் இயக்குனர் விசுவும் போட்டியிட்டனர். பொதுச் செயலாளர் பதவிக்கு சிவா, உமாசங்கர், முரளி ஆகியோர் போட்டியிட்டனர். துணைத்தலைவர், துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் திரைத்துறையை சார்ந்தவர்கள் போட்டியிட்டனர்.
பெப்சி அமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன. இவற்றில் 25000 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வடபழனியில் உள்ள பெப்சி சம்மேளன கட்டிடத்தில் நடைபெற்ற இத்தேர்தலில், ஒவ்வொரு சங்கத்திலும் உள்ள தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.
வாக்குப் பதிவு முடிந்ததும், இன்று மதியமே வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 68 வாக்குகள் பதிவாகின. இதில் பாரதிராஜாவின் வாக்குகள் சர்ச்சைக்குரிய முறையில் இருந்ததால் அவரின் வாக்கு நீக்கப்பட்டது. மீதமுள்ள 65 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் விசுவை விட அதிக வாக்குகள் பெற்று இயக்குனர் அமீர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமீருக்கு ஆதரவாக 37 வாக்குகள் கிடைத்தன. விசுவிற்கு 28 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அமீர் 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அமீரின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நித்யானந்தா உத்தரவு இருந்தால்தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வேன் என்கிறாராம் நடிகை ரஞ்சிதா.
தெலுங்கில் கம்யம் 2 நபடத்தை இயக்கியவர் பிரவீன் ஸ்ரீ. இப்போது காளி சரண் என்ற படத்தை இயக்குகிறார். 80 களில் நடந்த நிஜ சம்பவத்தை வைத்து உருவாகும் கதையாம் இது.
இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ரஞ்சிதாவை அனுகியுள்ளார் பிரவீண். கதை கேட்ட ரஞ்சிதாவுக்கு கேரக்டர் பிடித்துப் போனதாம். ஆனால்... நித்யானந்தாவின் அனுமதி இருந்தால்தான் நான் நடிக்க முடியும். எனவே என்னால் எதுவும் இப்போது சொல்ல முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதனால் இயக்குநர் பிரவீனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லையாம்.
ஜெயில், வழக்குகள், மதுரை ஆதீன சர்ச்சைகள் என சிகத்கலில் இருக்கும் நித்தியானந்தாவிடம் இவர் எப்போது அனுமதி வாங்கி, எப்போது தன் படத்தில் நடிப்பது என்ற கடுப்பில் வேறு நடிகைகளையும் பரிசீலித்து வருகிறாராம் பிரவீண்!
சென்னை: தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகளில் புதிய வரவாக லோட்டஸ் டி.வி. உதயமாக உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி, ஸ்டார் விஜய், மக்கள் தொலைக்காட்சி, கேப்டன் டிவி, நியூஸ் பிளஸ், ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், வின் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ஜீ தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி, மெகா டிவி, பாலிமர் டிவி என பல தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் புதிய வரவாக லோட்டஸ் டிவி உதயமாக உள்ளது. இந்த தொலைக்காட்சியில் அரசியல், பொழுது போக்கு, வர்த்தகம், ஆன்மீகம், விளையாட்டு, இசை, பாடல்கள், செய்திகள் போன்றவைகள் ஒளிபரப்பாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.
கோவையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சில பிரமுகர்கள் இணைந்து இந்த தொலைக்காட்சியை துவங்குகின்றனர்.
லோட்டஸ் என்ற பெயருக்கேற்ப தாமரைப் பூ தான் இந்த தொலைக்காட்சியின் லோகோ.
கவுதம் மேனன் - சூர்யா கூட்டணி மீண்டும் களமிறங்குகிறது. இந்த முறை அவர்கள் இணையும் படத்துக்கு துப்பறியும் ஆனந்தன் என பெயரிடப்பட்டுள்ளது.
காக்க காக்க, வாரணம் ஆயிரம் என கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் வந்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இப்போது மூன்றாவது முறையாக இருவரும் இணைகின்றனர். இந்தப் படத்தை கவும் மேனனின் போட்டோன் கதாஸ் தயாரிக்கிறது.
முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமையும் ஆக்ஷன் படம் இது. விஜய்யை வைத்து கவுதம் மேனன் இயக்கும் யோஹன் முடிந்ததும், இந்தப் படம் தொடங்குகிறது.
இந்தப் படம் குறித்து சூர்யா கூறுகையில், "நானும் கவுதம் மேனனும் இணைந்தாலே ரொமான்ஸ், நல்ல பாடல்கள், அதிரடி ஆக்ஷன் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு கூடிவிடுகிறது. துப்பறியும் ஆனந்தன் இவையெல்லாவற்றுடன், இதுவரை தமிழில் பார்க்காத வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும்," என்றார்.
கவுதம் மேனன் கூறுகையில், "துப்பறியும் ஆனந்தன் படத்தில் சூர்யா என்னுடன் இணைவதில் பெரிய மகிழ்ச்சி. ரொம்ப ஸ்டைலான ஆக்ஷன் படம் இது. 2013-ல் தொடங்குகிறது," என்றார்.
துப்பறியும் ஆனந்தன் என்ற தலைப்பு, அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கவிருந்த படத்துக்கு வைப்பதாக இருந்து. கவுதம் -அஜீத் கூட்டணி உடைந்துவிட்டதால், அந்தக் கதையும் தலைப்பும் இப்போது சூர்யாவுக்குப் போயிருக்கிறது!
ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் விஜய்யின் துப்பாக்கி படத்தின் ட்ரைலர் காட்சி வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகிறது.
வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ட்ரைலர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் பிறந்த நாளுக்கு 10 நாட்கள் கழித்துதான் ட்ரைலர் வெளியாகும் என முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
விஜய், காஜல் அகர்வால் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் துப்பாக்கி. கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஒரு போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
எனவே படத்தின் முன்னோட்டக் காட்சியான ட்ரைலரை விஜய் பிறந்த நாளன்று வெளியிடக் கோரி வந்தனர்.
இதுகுறித்து முருகதாஸ் தனது ட்விட்டரில், "வரும் 22-ம் தேதி பெரிய படங்களெல்லாம் வெளியாகின்றன. அன்று துப்பாக்கி ட்ரைலர் வெளியிடுவது முடியாது. 10 நாட்களில் வெளியிட்டுவிடுவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி படம் வெளியாகும் என்று தெரிகிறது!
ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோசன் என எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் தன்னை ஜெயிக்க யாராலும் முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் அமிதாப் பச்சன்.
புகழ் பெற்ற ‘ கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்த அமிதாப் பச்சன் தன்னுடைய தனித்திறமையை இந்த நிகழ்ச்சியில் நிரூபித்தார். இதன் முதல் இந்த நிகழ்ச்சிக்கான டி ஆர்.பி ரேட்டிங் எகிறியது.தற்போது கே.பி.சி சீசன் 6 தொடங்கியுள்ளது. இதனையும் அமிதாப் பச்சனே தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 140 கோடி ரூபாயாம். சோனி டி.வி தான் இந்தளவிற்கு சம்பளத்தை கொட்டிக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் இந்திய நடிகர்களிலேயே சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சிக்காக அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையை ‘பிக் பி' அமிதாப் பச்சன் பெற்றுள்ளார்.
தற்போது ஸ்டார் ப்ளஸ் டிவியில் அமீர்கான் தொகுத்து வழங்கும் ‘சத்ய மேவ ஜெயதே' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது டிஆர்பி ரேட்டிங் கணக்கெடுப்பின் படி 3 வது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் கோன் பனேகா குரோர்பதி அனைத்து நிகழ்ச்சிகளையும் முந்திக்கொண்டு முன்னணியில் உள்ளதாக டிஆர்பி கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
சென்னை: சினிமா தொழிலாளர்கள் சம்மேளன (ஃபெப்சி) தேர்தல், சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசுவும் அமீரும் போட்டியிடுகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (ஃபெப்சியில்), 23 சங்கங்களை சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
2012-2014-ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள சம்மேளன கட்டிடத்தில், காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு, அமீர் ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். பொதுச்செயலாளர் பதவிக்கு ஜி.சிவா, உமாசங்கர் பாபு ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு அங்கமுத்து சண்முகம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மற்ற நிர்வாகிகளின் தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவுக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விசு அறிக்கை
'பெப்சி' தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்? என்பது பற்றி விசு விடுத்துள்ள அறிக்கையில், "1955-ம் ஆண்டிலேயே 'படிதாண்டா பத்தினி,' `லவகுசா' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவன், நான். அதை நான் நேசிக்கிறேன். சுவாசிக்கிறேன். 1987 காலகட்டங்களில் இருந்து நிறைய ïனியனில் செயலாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.
எந்த சங்கத்திலும் என் மீது இதுவரை புகார் கிடையாது. நானும் யார் மீதும் புகார் கொடுத்தது இல்லை. என்னை தாயாக இருந்து காப்பாற்றிய 'பெப்சி' சிலரால் தளர்ச்சி அடைந்து விட்டது.
அதை தாங்கிப் பிடித்து, தூக்கி நிறுத்தி, எதிர்கால சந்ததிகளுக்கு ஆரோக்கியமான 'பெப்சி'யை உருவாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதனால்தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்,'' என்று கூறியுள்ளார்.
அமீர் அறிக்கை
அமீர் விடுத்துள்ள அறிக்கையில், "பெப்சி தேர்தலில் நானாக போட்டியிடவில்லை. 23 சங்கங்களின் நிர்வாகிகள்தான் என்னை போட்டியிட செய்திருக்கிறார்கள். 15 சங்கங்களின் சம்பளம் பேசி முடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 8 சங்கங்களின் ஊதியம் இன்னும் பேசி முடிக்கப்படவில்லை. உடனடியாக அதை பேசி முடிக்க வேண்டும்.
தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்பட அரசிடம் இருந்து சில சலுகைகளை பெற்றுத்தருவதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன்.
'பெப்சி' தேவையில்லை என்று சொன்னபோது யாரும் தட்டிக்கேட்கவில்லை. தேர்தல் என்று சொன்னதும், சங்க தலைவர்கள் ஓடி வருவது ஆச்சரியமாக இருக்கிறது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
35 திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகி நடித்தவர், தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் 700 திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக களம் இறங்கி வெற்றி பெற்றவர் நடிகை அனுராதா. இப்பொழுது சின்னத்திரையில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தங்கம் தொடரில் சரசரக்கும் பட்டு கட்டி, கழுத்து நிறைய நகை போட்டு எப்பொழுதும் அலங்காரத்துடனேயே இருக்கும் முத்தரசி அத்தையாக வரும் அனுராதா அளித்த சிறப்பு பேட்டி.
கவர்ச்சி நடிகையாக நடித்து விட்டு குடும்ப சூழ்நிலையால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்தேன். பின்னர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தங்கம் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் நடிகர் விஜயகுமாரின் தங்கையாகவும், ரம்யா கிருஷ்ணனின் அத்தையாகவும் நடித்து வருகிறேன்.
இப்பொழுது உள்ள திரைப்படங்களில் கவர்ச்சிப் பாடல்கள் என்று தனியாக இல்லை. கதாநாயகிகளை கவர்ச்சியாக உடை அணிகின்றனர். அவர்களே ஒரு சில குத்துப்பாட்டுக்கு நடனமாடுகின்றனர். அதனால் கவர்ச்சி கதாபாத்திரம் என்று தனியாக ஒன்று தேவையில்லை என்றாகிவிட்டது.
என்னைப் போல என் மகளும் சினிமாவில் கவர்ச்சி நடனமாடவேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவள் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். குவாட்டர் கட்டிங் திரைப்படத்தில் போலீஸ் வேடத்திலும், தெலுங்கு மொழி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இதற்காக நந்தி விருதும் பெற்றிருக்கிறார்.
ஜோதி லட்சுமி போல நீங்கள் ஏன் மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடக்கூடாது என்று நிறைய பேர் என்னிடம் கேட்கின்றனர். ஜோதிலட்சுமி உடம்பை அப்படியே கச்சிதமாக வைத்திருக்கிறார். எனக்கு அப்படி இல்லை. ஆனால் சினிமாவில் எனக்கென்று ஒரு இடத்தை தக்கவைப்பேன் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இப்ராகிம் ராவுத்தர் அணி செய்யும் இடையூறுகளால், பணியாளர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத நிலை உள்ளது. எனவே அவர்களை அப்புறப்படுத்த வேண்டும், என சங்கத்தின் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில், பொதுச்செயலாளர் பி.எல்.தேனப்பன் உள்பட சங்க நிர்வாகிகள் நேற்று பகல் 11 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.
போலீஸ் கமிஷனர் திரிபாதி வெளியில் சென்றிருந்ததால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.
பின்னர் வெளியில் வந்தவுடன், எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் பேசுகையில், "எங்கள் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு எதிராக சட்டவிரோதமாக இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டி என்று சொல்லப்படுகிற அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பினர், எங்கள் சங்கத்தை செயல்படவிடாமல் இடையூறு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் வங்கி பண பரிவர்த்தனைகள் எதுவும் எங்கள் சங்கம் சார்பில் செய்ய முடியவில்லை. சம்பளம் கொடுக்க முடியவில்லை. யாருக்கும் உதவிகள் செய்ய இயலவில்லை. சங்க உறுப்பினர்களுக்கு கூட மருத்துவ உதவி போன்ற எதையும் செய்ய இயலாத நிலை உள்ளது.
இந்த நிலையில் எங்கள் சங்கத்தின் உறுப்பினர் ஜெயலட்சுமி, தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் செய்யும் நிர்வாகத்தில், அட்ஹாக் கமிட்டி என்று சொல்லிக்கொள்பவர்கள் எந்த இடையூறும் செய்யக் கூடாதென்று, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி உள்ளார்கள்.
எனவே ராவுத்தர் அணியினரை அப்புறப்படுத்தி, எங்கள் சங்கத்தின் அன்றாட பணிகள் நடந்திட உதவி செய்திடுமாறு கூடுதல் கமிஷனரை கேட்டுள்ளோம்," என்றார்.
அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போய்விட்டது.
இந்தப் படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படத்திற்கு 'யூ/ஏ' சான்றிதழ் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படத்தை மும்பையில் உள்ள மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டால், அப்படத்தை வயதுக்கு வந்தோர் மட்டும் அதாவது 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கவேண்டும். யூ/ஏ சான்றிதழ் கிடைத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோரிலிருந்து இப்படத்தை பார்க்கலாம்.
அஜித்குமார் இப்படத்தில் இலங்கை அகதியாக - தாதாவாக நடிக்க, பார்வதி ஓமனகுட்டன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் வன்முறை மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழுவினர் அவற்றை வெட்டி எறிய முயற்சித்தனர். ஆனால் இயக்குனர் சம்மதிக்கவில்லை. இதனால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்தனர்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் கடைசி வாரத்துக்கு தள்ளிப் போயிருப்பதாகத் தெரிகிறது.
மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி.
விஜய் டி.வி. சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். 143 படங்களில் இருந்து 34 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.
சிறந்த நடிகருக்கான விருது தெய்வத் திருமகள் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் பிரபுதேவா இவ்விருதை வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருதை எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தமைக்காக அஞ்சலி பெற்றார். சிம்ரன் இவ்விருதை வழங்கினார்.
சிறந்த திரைப்படத்துக்கான விருது எங்கேயும் எப்போதும் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகர் விருதை சந்தானம் பெற்றார். பிடித்தமான நாயகன் விருது அஜீத்துக்கும், பிடித்தமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டன.
சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். பிடித்த படத்துக்கான விருது 'கோ'வுக்கு வழங்கப்பட்டது. கோவை சரளா சிறந்த காமெடி நடிகைக்கான விருதை பெற்றார்.
சிறந்த இயக்குநர் விருது வெற்றி மாறனுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாசுக்கும் வழங்கப்பட்டன. சரத்குமார், உமா ரியாஸ் ஆகியோரும் சிறப்பு விருது பெற்றார்கள். சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துக்கும், செவாலியே சிவாஜி கணேசன் விருது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டன.
விழாவில் கமலின் விஸ்வரூபம் படம் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
81 வயதான மூத்த நடிகை சௌகார் ஜானகி, 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
பணம் படைத்தவன், ஒளி விளக்கு, படிக்காத மேதை, பார் மகளே பார், உயர்ந்த மனிதன், பாபு, எங்கள் தங்க ராஜா உள்பட பல படங்களில் எம்.ஜி.ஆர்-சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர், சௌகார் ஜானகி. பாலச்சந்தரின் இருகோடுகள் படத்தில் இவர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
ரஜினி, கமலுடனும் நடித்துள்ளார். ரஜினிக்கு அம்மாவாக இவர் நடித்த தில்லு முல்லு பெரும் வரவேற்பைப் பெற்ற படம். இவருக்கு இப்போது 81 வயது ஆகிறது.
கடந்த 15 வருடங்களாக இவரை திரையில் பார்க்க முடியவில்லை. 15 வருட இடைவெளிக்குப்பின், சௌகார் ஜானகி மீண்டும் நடிக்க வருகிறார். `கழுகு' படத்தின் கதாநாயகன் கிருஷ்ணாவின் பாட்டியாக, 'வானவராயன் வல்லவராயன்' என்ற படத்தில் நடிக்கிறார்.
நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின் நடிக்க வருவது பற்றி சௌகார் ஜானகி கூறுகையில், "தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், இதுவரை 385 படங்களில் நடித்து இருக்கிறேன். கடந்த 62 வருடங்களாக நடித்து வருகிறேன். தமிழ்நாடுதான் எனக்கு சோறு போட்ட புண்ணிய பூமி. என் வாழ்நாளில் தமிழையும், தமிழ்நாட்டையும் மறக்க மாட்டேன்.
நான் கடைசியாக நடித்த படம், 'தொடரும்.' அஜீத், தேவயானி நடித்து, ரமேஷ்கண்ணா இயக்கிய படம். அதன் பிறகு நடிப்பை தொடர வாய்ப்பில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
சினிமாவை விட்டு நான் என்றுமே விலகியதில்லை. கடந்த பதினைந்து வருடங்களாக யாரும் என்ன நடிக்க அழைக்கவில்லை. அதற்காக வருத்தப்படாமல், என் ஆன்மிக பணியை தொடர்ந்து கொண்டிருந்தேன். சினிமாவை விட்டு நான் விலகிவிட்டதாக சிலர் வதந்தியை பரப்பியதால்தான் யாரும் என்னை நடிக்க அழைக்கவில்லை.
இயக்குநர் ராஜ்மோகன் சொன்ன கதை எனக்கு பிடித்தது. `வானவராயன் வல்லவராயன்' படத்தில் என் கதாபாத்திரம் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. 81 வயதான நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக்கொண்டார். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கு ஈடுகொடுத்து நடித்து, எனக்கு இன்னும் வயதாகவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.
மறக்கமுடியாத கமல்...
62 வருடங்களில் எத்தனையோ நடிகர்களை சந்தித்து இருக்கிறேன். `ஹே ராம்' படத்தில் கமல்ஹாசன் என்னை நடிக்க அழைத்தார். ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தேன். அதற்குள் எனக்கு இருதய 'ஆபரேஷன்' செய்ய வேண்டிய சூழ்நிலை. மேற்கொண்டு அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.
ஆனால், எனக்கு பேசிய தொகையை மொத்தமாக ஒரே 'செக்'காக எனக்கு அனுப்பி வைத்தார். அந்த தொகைதான் என் 'ஆபரேஷன்' செலவுக்கு உதவியது. அந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்,'' என்றார்.