'இனி பெரிய நடிகர்கள் படம் தோற்றால் ஹீரோக்கள் 20 சதவீத சம்பளத்தை திருப்பித் தரணும்!'

'இனி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களின் படங்கள் தோல்வியைத் தழுவினால் அவர்களின் சம்பளத்திலிருந்து 20 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும்'.

-இப்படி ஒரு முடிவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ரகசியமாக எடுத்திருக்கிறது. அதற்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

Tamil film producer council's new decision against big heroes

இப்போதைக்கு விஷயத்தை வெளியில் சொல்லாமல் அமைதி காக்கிறார்கள். வரும் ஜூலா 24-ம் தேதிக்குப் பிறகு இந்த முடிவு நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்.

இதன்படி ரூ 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தினால், அவர்கள் பெற்ற சம்பளத்தில் 20 சதவீதத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தரவேண்டும்.

இந்த முடிவு மிகவும் அபாயகரமானது என தயாரிப்பாளர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகர்களின் கால்ஷீட்டை தொடர்ந்து தங்கள் வசமே வைத்திருக்க சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் செய்யும் வேலை இது என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

ஒரு முன்னணி ஹீரோவின் படம் தோற்றால், அவர் தர வேண்டிய '20 சதவீதப் பணத்தைத் தர வேண்டாம், கால்ஷீட் கொடுங்கள் அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என்று தொடர்ந்து அவரை வைத்துப் படமெடுத்து பணம் பார்க்கவே அந்தத் தயாரிப்பாளர் முனைவார். அதற்கு தோதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நடிகர் சங்கமும் துணை போகிறது என்கிறார்கள்.

இந்த முடிவுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எப்படிச் சம்மதித்தார்? யாரிடம் ஆலோசனை செய்தார்? என்று நடிகர்கள் தரப்பு கொதித்துப் போயுள்ளது.

ஜூலை 24-ம் தேதிக்குப் பிறகு பரபர காட்சிகள் அரங்கேறும் எனத் தெரிகிறது.

 

மாரி பஞ்சாயத்து... மொத்த பாரத்தையும் தனுஷ் தலையில் சுமத்திய சரத்குமார்!

மாரி படம் ஒருவழியாக ரிலீசாகிவிட்டது. அந்தப் படம் வெற்றியா தோல்வியா என்ற விவகாரத்துக்குள் போகும் முன், படத்தின் தயாரிப்பாளரான சரத்குமார், ஹீரோ தனுஷைப் படுத்திய பாட்டை பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறது மீடியா.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ராதிகா சரத்குமார், சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன். இவர்களின் முந்தை இரு படங்கள் சரியாகப் போகாததால் ஏற்பட்ட நஷ்டத்தைக் காட்டி மாரி படத்தை நிறுத்தப் பார்த்திருக்கிறார்கள்.

Maari dispute: Rs 11 cr loss for Dhanush

பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்தபோதே, நேற்று அதிகாலை 4 மணிக்கு தனுஷுக்கு போன் அடித்திருக்கிறார் சரத்குமார். 'தம்பி, உங்க சம்பளத்துல ஒரு ரெண்டு கோடி விட்டுக் கொடுத்தா படம் வெளியாகிடும்' என்று கேட்க, தனுஷும் யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் சேட்டிலைட் சேனல் உரிமையை எந்த டிவியும் வாங்காத நிலையில், ரூ 9 கோடி கொடுத்து தனுஷே வாங்கிக் கொண்டது நினைவிருக்கலாம். இதை தனுஷ் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அதுதான் உண்மை என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

ஆக, தனுஷுக்கு இந்தப் படம் நடித்ததால் ஒரு பலனும் இல்லை. அந்த சேட்டிலைட் உரிமை விற்றால்தான் ஏதாவது தேறும் என்கிறது பாக்ஸ் ஆபீஸ் தரப்பு.

 

20 கிலோ ஏற்றி இறக்கிய 'இஞ்சி இடுப்பழகி' அனுஷ்கா!

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக 20 கிலோ எடையை ஏற்றி இறக்கியுள்ளார் அனுஷ்கா.

பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்காவின் பட வரிசை பெருகி வருகிறது. அவரது அடுத்த படம் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி'. இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்ததை தொடர்ந்து திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Anushka increases 20 kg weight for Inji Iduppazhagi

'இஞ்சி இடுப்பழகி' படத்தின் கதையே எடைக் குறைப்பு பற்றியதுதான். இந்தப் படத்தில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் வருகிறார். இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடி, பின்னர் ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருகிறாராம்.

குண்டான அனுஷ்காவைப் பார்த்த பலரும், அனுஷ்காவுக்கு அக்காவா நீங்க என்று கேட்டார்களாம்.

ஆர்யா இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராக தோன்றுகிறார். சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் ஆர்யா பங்கேற்று வெற்றிப் பெற்ற சர்வதேச சைக்கிள் போட்டி பற்றிய காட்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனவாம்.

 

மாரி - விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ்

ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

இசை: அனிருத்

தயாரிப்பு: சரத்குமார், தனுஷ், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன்

இயக்கம்: பாலாஜி மோகன்

சென்னையின் ஒரு ஏரியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா மாரி. புறா பந்தயம் விடுவது, ஏரியாவாசிகளிடம் மாமூல் வசூலிப்பதுதான் வேலை. அவனிடமிருந்து ஏரியாவைக் கைப்பற்ற லோக்கல் கோஷ்டி ஒரு நேரம் பார்த்து காத்திருக்கிறது. அதற்கு தோதாக வருகிறார் புது இன்ஸ்பெக்டர். அந்தப் பகுதிக்கு புதிதாகக் குடிவரும் காஜல் அகர்வாலைப் பயன்படுத்தி, ஒரு கொலை வழக்கில் மாரியை உள்ளே தள்ளுகிறார் இன்ஸ்பெக்டர்.

அதன் பிறகு எல்லாமே தலைகீழாகிறது. எதிர்கோஷ்டி ஏரியாவை எடுத்துக் கொள்கிறது. ஏழுமாத சிறை வாசத்துக்குப் பிறகு வெளியில் வரும் மாரி, எப்படி ஏரியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் என்பது மீதிக் கதை.

Maari Review

கொக்கி குமாராக ஏற்கெனவே பரிச்சயமான தனுஷ், இதில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கெத்து காட்டியிருக்கிறார். வேடத்திலிருக்கும் அந்த முறுக்கும், திமிரும் செயலில் இல்லை என்பதுதான் மைனஸ்.

ஆனால் நடிப்பில் இம்மியளவு குறை வைக்கவில்லை தனுஷ். செஞ்சுருவேன்.. என்று அவர் சொல்லும் விதம் ஈர்க்கத்தான் செய்கிறது. மாமூல் கேட்டு வரும் எதிர்க்கோஷ்டியை அவர் மடக்கும் இரு காட்சிகளில் மாரி அட சொல்ல வைக்கிறான்.

காஜல் அகர்வால் அழகாக வருகிறார். தனுஷைக் காட்டிக் கொடுப்பதைத் தவிர இதில் பெரிய வேலை இல்லை. ஒரு பாடலில் துணை நடிகை ரேஞ்சுக்கு இறங்கி ஆடுகிறார்.

ரோபோ ஷங்கருக்கு இதில் பெரிய வேடம். சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். மாரியால் யாருக்கு லாபமோ... ரோபோ ஷங்கருக்கு பெரிய ஏற்றம். அடிதாங்கியாக வரும் வினோத், 'பர்டு' ரவியாக வரும் மைம் கோபி, கான்ஸ்டபிள் காளி வெங்கட் அனைவருமே கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

Maari Review

வில்லன் வேடத்தில் அறிமுகமாகியிருக்கும் விஜய் யேசுதாஸுக்கு, ஒரு நடிகருக்குரிய உடல் மொழி எளிதில் வருகிறது. ஆனால் மோசமான வேடம் அவரைக் காலி பண்ணுகிறது.

ஒரு இன்ஸ்பெக்டர் எங்குமே வெளிப்படையாக தாதாவாக செயல்படமாட்டார், அது சாத்தியமும் இல்லை. இந்த அடிப்படைக் கூடத் தெரியாமல் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரம் அது. அதனால்தான் மொத்தப் படமும் சொதப்பலாய் தோன்றுகிறது, பார்த்து முடித்த பிறகு.

படம் முழுக்க சிகரெட் சிகரெட்... பார்க்கும் நமக்கே மூச்சு முட்டுகிறது. இதுக்கொரு தடை போடக் கூடாதா..

அனிருத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்போது ரசிக்கும்படி இருந்தாலும், வெளியில் வந்ததுமே மறந்து போகிற ரகம். இன்றைக்கு அதுவே போதும் என முடிவு செய்துவிட்டார்கள். பின்னணி இசை கொஞ்சம் கூட பொருந்தவில்லை.

Maari Review

ஓம் பிரகாஷின் காமிராவில் க்ளைமாக்ஸ் சண்டை அனல் பறக்கிறது. நிஜ திருவல்லிக்கேணியா செட்டா என்பது தெரியாமல் படமாக்கியிருக்கிறார்.

தனுஷை பக்கா தாதாவாகக் காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்திய பாலாஜி மோகன், ஹீரோயின், மெயின் வில்லன் இருவர் பாத்திரப்படைப்பிலும் கோட்டை விட்டிருக்கிறார்.

 

மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் அர்ஜுன்!

'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன், அடுத்து அர்ஜூனை வைத்து படம் இயக்குகிறார்.

'கப்பல்' படத்தை தயாரித்த ஐ ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம் ஹாலிவுட் ஸ்டைலில் தயாராகிறது.

Arjun to wear cop uniform again

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்து அருண் வைத்தியநாதன் கூறுகையில், "என் ஒவ்வொரு படமும் மற்றொரு படத்தில் இருந்து மாறுப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருப்பேன். அச்சமுண்டு அச்சமுண்டு ஒரு சமுதாய பிரச்சனையைப் பற்றிய படம் என்றால், மலையாளத்தில் மோகன் லால் சாரை வைத்து நான் இயக்கி பெரும் வெற்றி அடைந்தத 'பெருச்சாழி' திரைப்படம் அரசியல் பற்றிய படமாகும்.

எனது அடுத்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான கதை எழுதுவதில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் என் மனத்தில் உதித்ததுதான் இந்தப் படத்தின் மையக் கரு. அந்த கதைக் கருவை எனது நண்பர் ஆனந்த் ராகவ் உடன் இணைந்து மேலும் மேருகேற்றினேன். எனது தயாரிப்பாளர்கள் சுதன் இடமும், உமா ஷங்கர் இடமும் கதையைப் பற்றி விவாதித்தோம்.

எங்கள் மனதில் அந்த கதையின் நாயகன் பாத்திரத்துக்கு அர்ஜுன்தான் பொருத்தமாக இருப்பார் என தோன்றவே அவரை அணுகினோம். ஒரு காவல் துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தோற்றத்திலும் சரி, செயல் வடிவிலும் சரி அவர் ஒருவரே பொருத்தமாக இருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஒரு சினிமா போலீசாக இல்லாமல் நிஜத்தில் ஒரு காவல் அதிகாரி எப்படி நிதானமாக ஆழமாக ஒரு பிரச்சனைக்கு தீர்வுக் காண்பாரோ அந்த ஆழத்தை அர்ஜுனின் கதா பாத்திரம் வெளிப்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படத்தில் மேலு பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

சர்வதேச அளவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் தலை சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்," என்றார்.

 

அடுத்து அஜீத்தை இயக்குகிறார் கே வி ஆனந்த்!

அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கேவி ஆனந்துக்கு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ரஜினிக்கு கதை சொல்லி, அவரது அனுமதிக்காகக் காத்திருந்த நேரத்தில் அஜீத்துக்காக ஒரு கதை உருவாக்கியிருந்தார் கே வி ஆனந்த்.

KV Anand to direct Ajith's next

அதற்கு அஜீத்தும் ஓகே சொல்லி, இதையே தனது அடுத்த படமாக அறிவித்துவிடுங்கள் என்றாராம்.

இப்போது சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், இதை முடித்ததுமே கேவி ஆனந்த் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இந்தப் படத்தையும் ஏஎம் ரத்னமே தயாரிப்பார் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், அஜீத்தின் முன்னாள் தயாரிப்பாளரான எஸ்எஸ் சக்ரவர்த்தி தனது நிக் ஆர்ட்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிப்பார் என சிலர் கூறி வருகின்றனர்.

இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

 

ரஜினியுடன் நடிக்க ஆசை.. என் பெயரையும் பரிசீலியுங்கள் ரஞ்சித்! - தனுஷ் கோரிக்கை

ரஜினியுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது... எனவே என் பெயரையும் பரிசீலியுங்கள் ரஞ்சித் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் ஏற்கனவே தனது படங்களுக்கு ‘மாப்பிள்ளை', ‘படிக்காதவன்', ‘பொல்லாதவன்' என மாமனார் ரஜினி படத் தலைப்புகளைச் வைத்து வெற்றி கண்டுள்ளார்.

Dhanush wants to act with Rajini

இப்போது அவருடன் இணைந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ரஜினி நடிக்கும் எந்திரன் 2-ம் பாகத்தில் இன்னொரு முன்னணி கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதே மாதிரி ரஜினியின் இன்னொரு படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனுஷ் ஒரு பேட்டியில், "ரஜினியுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். ரஞ்சித் இயக்கும் படத்தில் அப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன். அந்த படத்தில் நடிக்க என்னையும் பரிசீலிக்குமாறு ரஞ்சித்தை கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

 

'சிவாஜிக்கு அரசு ஏன் மணிமண்டபம் கட்ட வேண்டும்... அவரது குடும்பத்தினர் கட்டட்டுமே!'

சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட அரசு இடம் அளித்தும் மண்டபத்தை கட்டாமல் நடிகர் சங்கம் ஏமாற்றி வருவதாக சிவாஜி சமூக நலப்பேரவை குற்றம்சாட்டி, உண்ணாவிரதம் அறிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுதான் இலவசமாக நிலம் கொடுத்துவிட்டதே. மணிமண்டபத்தையும் அரசே கட்ட வேண்டுமா... அவரது குடும்பத்தினர் கட்டட்டுமே, என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Social activists strongly condemned Sivaji Manimandapam request

இது குறித்து சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நடிகர் திலகம் சிவாஜி மறைவுக்கு பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடம் மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிதர வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு தமிழக அரசு அடையாறு சத்தியா ஸ்டியோ எதிரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கிரவுண்டு இடத்தை நடிகர் சங்கத்திற்கு ஒதுக்கியிருப்பதாக அறிவித்தது.

அரசு இலவசமாக அளித்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் சிவாஜி பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதி இதுகுறித்து பேசுவார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் இருக்காது. மணிமண்டபம் வரும் என்று நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் தலைமையில் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது. இதன் பின்னர் நடிகர் சங்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து எந்த பணியும் நடைபெறவில்லை. தொடர்ந்து நடிகர் சங்கம் ஏமாற்றி வருகிறது.

தன்னுடைய கலைத்திறனால் நடிப்பாற்றலால் உலகையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்கவைத்த நடிகர் திலகம் சிவாஜிக்கு நடிகர் சங்கமோ தனிப்பட்ட அமைப்போ மணிமண்டபம் அமைப்பதைவிட தமிழக அரசே அமைப்பது அவருக்கு பெருமைசேர்ப்பதாக அமையும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரத பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களையும், நடிகர்களையும் அழைத்துள்ளோம்," என்றார்.

கடும் எதிர்ப்பு

இந்த கோரிக்கை மற்றும் உண்ணாவிரத அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

"ஏன் இதை அரசு கட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இடத்தைக் கேட்டு வாங்கிய நடிகர் சங்கமே கட்டுவதுதானே முறை? நடிகர் சங்கத்தை எதிர்த்தல்லவா இவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்? அதுவும் இல்லாவிட்டால், நல்ல செழிப்பான நிலையில் உள்ள சிவாஜி குடும்பமே இதைக் கட்டலாமே? சிவாஜியின் பேரன் இப்போது பல கோடி சம்பளம் பெறும் முன்னணி நடிகர்தானே?", என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது சமூக வலைத் தளங்களிலும் எதிரொலித்து வருகிறது.

 

விஷால் எனக்கு அண்ணன் மாதிரி.. கோவிச்சிக்க மாட்டார்! - விஷ்ணு விஷால்

‘வெண்ணிலா கபடிக்குழு' படம் மூலம் நடிகராக அறிமுகமான விஷ்ணு, ரஜினிகாந்தின் நண்பர் இயக்குநர் நடராஜின் மருமகன். பிரபல போலீஸ் அதிகாரி ரமேஷ் குடவாலாவின் மகன்.

முதல் படம் தந்த வெற்றி, அடுத்த இரு படங்களில் தொடரவில்லை. ஆனால் அடுத்தடுத்து வந்த குள்ளநரிக் கூட்டம், ‘முண்டாசுப்பட்டி', ‘ஜீவா', ‘இன்று நேற்று நாளை' படங்களின் வெற்றி, அவரை முன்னணி நாயகனாக்கியிருக்கிரது.

Vishal is like my own brother, says Vishnu

நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய விஷ்ணு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

விஷ்ணு எப்படி விஷ்ணு விஷால் ஆனார்?

அவர் கூறுகையில், "என்னுடைய இயற்பெயர் விஷால். நான் சினிமாவில் வரும்போது, விஷால் பெரிய நடிகர். இதனால் என் பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் விஷ்ணு என்று மாற்றிக் கொண்டேன்.

விஷால் கோவிச்சிக்க மாட்டார்

என்னுடைய இயற்பெயரும் இணைந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அதனால் விஷாலும் கோபித்துக் கொள்ளமாட்டார் என்பதால் என் பெயரை விஷ்ணு விஷால் என்று தற்போது மாற்றிக் கொண்டுள்ளேன். இதற்காக விஷால் கோபித்துக் கொள்ள மாட்டார்.

அண்ணன் மாதிரி

விஷால் என்னுடைய அண்ணன் மாதிரி. எனக்கு ஒரு பிரச்சனை வந்தால் முதலில் உதவி செய்யும் அளவிற்கு என்னுடன் பழகி வருகிறார்.

நன்றி

எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனது நண்பர்களான விஷால், ஆர்யா, விக்ராந்த், உதயநிதி ஆகியோர் எனக்கு தக்க சமயத்தில் நல்ல உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

 

தங்கை இஷிதாவிற்கு அக்கா தனுஸ்ரீ தத்தா கொடுத்த டிப்ஸ்

மும்பை: பாலிவுட் பட உலகில் அறிமுகமாகியுள்ள இஷிதாவிற்கு அக்கா தனுஸ்ரீ தத்தா நடிப்பு டிப்ஸ் கொடுத்தாராம். இதை அவரே கூறியுள்ளார். தங்கை நடிக்கும் போது சீனியரான அக்கா நடிகைகள் டிப்ஸ் கொடுப்பது ஒன்றும் புதிதில்லையே என்றும் அவர் கேட்டுள்ளார்.

விஷால் நடிப்பில் வெளிவந்த ‘தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. தமிழில் இவர் இந்த ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார். இருந்தாலும், பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் இவருடைய தங்கை இஷிதா தத்தாவுக்கு தற்போது கிடைத்துள்ளது.

Tanushree Dutta's career advice to her sister Ishita

இஷிதா தத்தா தற்போது திரிஷ்யம் பாலிவுட் ரீமேக்கில் அஜய் தேவ்கானுக்கு மகளாக நடித்துள்ளார். ஏற்கெனவே கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் இவர் நடிப்பது இதுதான் முதல் படம். இந்தப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது. பாலிவுட்டில் முதல் படத்திலேயே அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்தது இஷிதாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஷிதா, தேசிய விருது நடிகர் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். ஒரு புதுமுகமாக அவருடன் நான் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்கள், உங்களின் அக்கா தனுஸ்ரீ தத்தா உங்களுக்கு டிப்ஸ் கொடுத்தாரா என்று கேட்டனர். அதற்கு அவர், திரிஷ்யம் படத்தில் நடிக்கும் போது அக்கா வெளிநாட்ல இருந்தாங்க. அங்கேயிருந்தே டிப்ஸ் கொடுத்தாங்க என்று கூறியுள்ளார்.

அஜய் தேவ்கானும் இஷிதாவின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். இஷிதா மிகவும் திறமையாகவும் கவனமாகவும் நடிக்கக்கூடியவர். ‘திரிஷ்யம்' படத்தில் மிகவும் நன்றாக நடித்துள்ளார். அவருடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என்று அஜய் தேவ்கான் கூறவே தேசிய விருது பெற்றது போல மகிழ்ச்சியில் இருக்கிறார் இஷிதா.

 

வாரிசு நடிகை மீது கொலவெறியில் இருக்கும் சங்கத் தலைவி

சென்னை: கேரளாவில் இருந்து வந்திருக்கும் வாரிசு நடிகையை சங்கத் தலைவி திட்டித் தீர்க்கிறாராம்.

கோலிவுட்டில் எத்தனை நடிகைகள் இருந்தாலும் ஆந்திராவில் இருந்து வந்துள்ள சங்கத் தலைவியின் மார்க்கெட் பாதிப்பில்லாமல் இருந்தது. அவர் தனது அக்காவுக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறார்.

A young actress is jealous of fellow actress

யார் வந்தாலும் அப்பாடா நம்ம மார்க்கெட் நல்லா இருக்கிறது என்று நினைத்த சங்கத் தலைவியின் நினைப்பில் மண் விழுந்துவிட்டதாம். கேரளாவில் இருந்து வந்துள்ள வாரிசு நடிகை சங்கத் தலைவியின் இடத்தை பிடித்துவிட்டாராம்.

வாரிசு நடிகையின் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் போட்டி போடுகிறார்களாம். தனக்கு இருக்கும் மவுசை பார்த்துவிட்டு அம்மணி சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.

இப்படி வாரிசு நடிகையின் காட்டில் வாய்ப்பு மழை ஜோராக பெய்வதை பார்த்து சங்கத் தலைவிக்கு வயித்தெரிச்சலாம். இதனால் வாரிசு நடிகையை பற்றி கரித்துக் கொட்டுகிறாராம். மேலும் வாய்ப்பு பெற சங்கத் தலைவி தனது சம்பளத்தை குறைக்கவும் தயாராகிவிட்டாராம்.