வேலாயுதம் இயக்குநர் ராஜாவுக்கு விஜய் பாராட்டு!


வேலாயுதம் படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படம் மிக விறுவிறுப்புன் சிறப்பாக வந்திருப்பதாகவும் அதற்கு ராஜாவின் அபார உழைப்புதான் காரணம் என்றும் அவர் கூறினார்.

ராஜாவின் இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் இந்தப் படத்தின் ரஷ் பார்த்துள்ளார் விஜய். படம் முடிந்ததும் அமைதியாகக் கிளம்பிச் சென்றுவிட்டாராம் விஜய். பக்கத்திலிருந்த ராஜாவிடம் கூட எதுவும் சொல்லவில்லையாம்.

என்னடா இது... படம் பிடிக்கவில்லையா? என டென்ஷனாக இருந்தாராம் ராஜா. அப்போது ராஜாவின் தந்தை எடிட்டர் மோகன் போனில் அழைத்துள்ளார். "படம் பார்த்துவிட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டதால் விஜய் எதுவும் பேசவில்லையாம். படம் மிகப் பெரிய வெற்றிபெறும் என விஜய் கூறியதோடு, உன்னை வெகுவாகப் புகழ்ந்தார்," என்று கூறியுள்ளார் மோகன்.

இதுகுறித்து ராஜா கூறுகையில், "விஜய் மிக எளிமையான இனிய மனிதர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. இந்தப் படத்தில் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்தப் படம் திகட்டாத விருந்தாக அமையும்," என்றார்.
 

ஈழத்தில் தமிழ் இனத்தைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும்- நடிகை அஞ்சலி


தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார்.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்ணன், சீனு, நடிகை ரோஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், வேலு பிரபாகரன், ஆர்.கே.செல்வமணி என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

தற்போது நடிகை அஞ்சலியும் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் இயக்க செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சென்று கையெழுத்து வாங்கினர். இயக்குனர் மு.களஞ்சியத்திடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.

இதுகுறித்து நடிகை அஞ்சலி கூறுகையில், "இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை நடந்த போது இந்த செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். ஆனால் சமீபத்தில் டி.வி.யில் நேரடியாகவே அந்த படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியானேன். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களை கொன்று குவித்திருந்தனர். எங்கும் ஒரே பிண மயம். அதைப் பார்த்து அழுதேன். சாப்பிடக் கூட பிடிக்கவில்லை.

ஈழத் தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவுக்கு கடும் தண்டனை வழங்க விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. இதற்கு என் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்," என்றார்.

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இப்படிக் கூற தைரியம் இல்லை. ஆனால் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அஞ்சலி ராஜபக்சேவை கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இனி ஏனோதானோ கேரக்டர்கள் வேண்டாம்! - 'இயக்குநர்' அம்பிகா


அவன் இவன் படத்துக்குப் பிறகு, கூடுதல் அந்தஸ்து கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் அம்பிகா. மேலும் இயக்குநராகவும் புரமோஷன் ஆவதால், இனி தனக்கென்று கண்ணியமான இமேஜை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளார்.

ஹீரோயினால கலக்கிய அம்பிகா, திருமணத்துக்குப் பிறகு நடிக்க வந்த பிறகு அம்மா, அண்ணி என கிடைத்த வேடங்களையெல்லாம் செய்து வந்தார். ஒரு சில காட்சிகளே இருந்தாலும் நடிக்க ஒப்புக் கொள்வார்.

இப்போது அவன் இவன் படத்தில் அவருக்குக் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். கிடைக்கிற வேடங்களையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல், தேர்ந்தெடுத்து, நல்ல வேடம், பெயர் சொல்லுமளவுக்கு காட்சிகள் இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறார். கூடவே அண்ணபெல்லா என்ற மலையாளப் படத்தையும் இயக்கி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அவன்-இவன்’ படத்தில் எனது கேரக்டருக்கு கிடைத்துள்ள வரவேற்பு எனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இனி ஏனோதானோ வேடங்களில் நடிக்க மாட்டேன்.

இப்போது மலையாளத்தில் ஷஜிலால் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். இது விருதுக்காகவே உருவாகும் படம். நிச்சயம் எனது வேடம் பேசப்படும். இன்னொரு மலையாள படத்திலும் நடிக்கிறேன்.

ஒரு இயக்குநராக மலையாளத்தில் நான் அறிமுகமாகும் 'அண்ணபெல்லா’ படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை," என்றார் அம்பிகா.
 

மணிரத்னத்தின் புதிய படம்... கார்த்திக் மகன் ஹீரோ!


கார்த்திக்கின் மகனை ஹீரோவாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம். ஹீரோயின் உள்பட முக்கிய நடிகர்கள் அனைவரும் இதில் புதுமுகங்களே என தெரிய வந்துள்ளது.

ராவணன் படத்தை தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக எடுக்கவிருந்தார் மணிரத்னம். விஜய், ஆர்யா, மகேஷ்பாபு ஆகியோர் நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்புக்கு லொக்கேஷன்கள் கூட பார்க்கப்பட்டுவிட்டன.

ஆனால் அந்தப் படத்தின் பிரமாண்டம், செலவு போன்றவற்றை மனதில் வைத்து இப்போதைக்கு படத்தை தள்ளி வைத்துள்ளார்.

இந்த நிலையில் மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் புதிய படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகனை நாயகனாக அறிமுகப்படுத்தப் போகிறாராம் மணிரத்னம். நாயகி உள்பட முக்கிய பாத்திரங்களுக்கு புதுமுகங்களையே ஒப்பந்தம் செய்திருப்பதாகத் தெரிகிறது. கார்த்திக்கும் கவுரவ வேடத்தில் தோன்றுவார் என்கிறார்கள்.

இந்தப் படத்துக்காக லொக்கேஷன் கூட பார்த்தாகிவிட்டதாம். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை தமிழில் மட்டுமே எடுக்கிறார் மணிரத்னம். 2002 ம் ஆண்டுக்குப் பிறகு நேரடியாக தமிழில் மட்டுமே அவர் இயக்கும் படம் இதுதான். கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்குப் பிறகு அவர் எடுத்த படங்கள் அனைத்தும் தமிழ் - இந்தியில் எடுக்கப்பட்டன. இதனால் இயல்புத்தன்மை குறைந்து மொழிமாற்றுப் பட பாணியில் அவை அமைந்துவிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்தே இந்தப் புதிய முடிவை மேற்கொண்டுள்ளாராம் மணிரத்னம்.
 

இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!


இன்றைய இளைஞர்களின் விருப்பமான நடிகர், இளைஞர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர் யார் தெரியுமா… அஜீத்!

ஆனந்த விகடன் பத்திரிகையின் சினிமா இணையதளத்தில் ‘இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் யூத் ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?’ என்று கேள்வி கேட்டிருந்தார்கள்.

இதற்கு பதிலாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டு, அவர்களில் ஒருவர் பெயரை குறிப்பிடுமாறு கேட்டிருந்தனர்.

கடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே ஜூலை 31-ம் தேதியுடன் முடிந்தது.

38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள வாக்கெடுப்பில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

சூர்யாவுக்கு 495 வாக்குகளும், கமலஹாசனுக்கு 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 376 வாக்குகளும், சிம்புவுக்கு 199 வாக்குகளும், ஆர்யாவுக்கு 107 வாக்குகளும், சீயான் விகரமுக்கு 73 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று விஜய் முதலிடத்தில் இருந்தார். அஜித் இரண்டாமிடத்தில் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டார்.

காரணம், இணையதளத்தில் அஜீத்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வாக்கெடுப்பு விஷயம் தெரிந்ததும் அவர்கள் அதிகளவில் வாக்களித்து அஜீத்தை முதலிடத்துக்கு கொண்டுவந்துவிட்டனர். எஸ்எம்எஸ் மூலம் நண்பர்களுக்கு போன் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதும் நடந்தது.

முன்பு வட இந்திய இணைய தளம் நடத்திய சர்வேயிலும் இதேபோல அஜீத் ரசிகர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

 

காஜல் மீது கஜோல் கணவர் அஜய் தேவ்கனுக்கு திடீர் கரிசனம்


சிறந்த கணவன் என்று பெயர் எடுத்துள்ள நடிகர் அஜய் தேவ்கனுக்கு சிங்கம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டுள்ளது.

இந்தி சிங்கம் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். இது தான் காஜலின் முதல் இந்தி படம். இந்நிலையில் தென்னிந்திய படம் ஒன்றின் படபிடிப்புக்காக காஜல் பாங்காக் செல்ல வேண்டியிருந்தது. கடைசி நேரத்தில் அவரது உதவியாளர் நழுவ, துணைக்கு ஆளில்லாமல் தவித்தார் காஜல்.

உடனே நான் இருக்க கவலை ஏன் என்று அஜய் தேவ்கன் வந்துள்ளார்.

இது குறித்து காஜல் கூறியதாவது,

நான் நடிக்கும் தென்னிந்திய படம் ஒன்றின் படபிடிப்புக்காக பாங்காக் செல்ல வேண்டியிருந்தது. எனக்கு துணையாக வரவேண்டிய எனது உதவியாளர் கடைசி நேரத்தில் முடியாது என்று கூறிவிட்டார். இது குறித்து அறிந்த அஜய் எனக்கு துணையாக ஒரு ஆளை அனுப்பி வைத்தார் என்றார்.

என்ன துணைக்கு ஆளத் தான அனுப்பினார் அவர் ஒன்றும் செல்லவில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். வழக்கமாக அஜய் தேவ்கன் யாருடனும் அவ்வளவாக ஒட்டமாட்டார். ஒரு நடிகைக்கு தானாக வந்து உதவி செய்திருப்பது இதுவே முதல் தடவை.

அட உண்மையிலேயே அஜய் தான் உதவினாரா என்று பாலிவுட் வியக்கிறது.

 

ஏழைகளுக்காக ரஜினி கட்டும் புதிய மருத்துவனை - அண்ணன் சத்யநாராயணா தகவல்


ஏழை எளிய மக்கள் இலவசமாக நவீன சிகிச்சைகளைப் பெற புதிய அதிநவீன மருத்துவமனையை ரஜினி உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக அவரது அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

ரஜினி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார்.

வசதியுள்ளவர்கள் பணம் செலவழித்து வெளிநாடு சென்று சிகிச்சைப் பெறுகிறார்கள். ஆனால் ஏழைகள் நிலைமை… அவர்களுக்கும் இதே மருத்துவ வசதியைச் செய்ய வேண்டும் என்று ரஜினி யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்காக மிகப்பெரிய அதிநவீன மருத்துவமனையை சென்னையில் உருவாக்கும் முயற்சியில் உள்ளார் ரஜினி. இந்த மருத்துவனைக்காக வண்டலூர் அருகே இடமும் வாங்கியுள்ளாராம். பெங்களூரில் சாய்பாபா உருவாக்கியுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போல பெரிய அளவில் சென்னையில் ரஜினி உருவாக்கவிருக்கிறார் என அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ராவ் கூறுகையில், “ஏழைகளுக்காக பெரிய மருத்துவமனை கட்ட ரஜினி திட்டமிட்டிருப்பது உண்மைதான். இலவச சிகிச்சை கொடுப்பார்னு நினைக்கிறேன். இதுக்காக வண்டலூர் பக்கத்தில் நிலம் கூட வாங்கிப் போட்டிருக்கார். சின்ன வயதில் அவரை டாக்டராக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். டாக்டராக முடியாத குறையை இப்படியாவது தீர்த்துக்கலாமே என்பதில் எனக்கு சந்தோஷம். தன்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு நிறைய செய்யணும் என்பது அவர் ஆசை, லட்சியம். அதை நிச்சயம் செய்வார்,” என்றார்.

ஏற்கெனவே தான் பிறந்த ஊரான கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தில் பெரிய நூலகம், மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார் ரஜினி. அந்தப் பகுதி இளைஞர்களின் மேம்பாட்டுக்காக வேறு சில திட்டங்களும் வைத்துள்ளாராம் ரஜினி. இதற்கான அறக்கட்டளைக்கு ரஜினியும், அவரது அண்ணன் சத்யநாராயணாவும் நிர்வாகிகளாக உள்ளனர். நாச்சிக்குப்பம் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி, ஆடுமாடுகளுக்கென்றே தனி குடிநீர்த் தொட்டி, கோயில் சீரமைப்பு என ஏற்கெனவே பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர், எந்த விளம்பரமும் இல்லாமல்!

 

நான் தலைமறைவாகவில்லை, எங்கேயும் ஓடவில்லை- நடிகர் வடிவேலு


சென்னை: போலீஸ் என்னைத் தேடுவதற்கு நான் ஒன்றும் என்கவுன்டர் குற்றவாளி அல்ல. நான் தலைமறைவாகவுமில்லை. நான்தான் நியாயமாக புகார் தந்திருக்க வேண்டும், என்று வடிவேலு கூறியுள்ளார்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்று இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நடிகர் வடிவேலு கூறியதாவது:

நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன். போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என் கவுன்டர் குற்றவாளி அல்ல.

கொஞ்ச நாள் பட வாய்ப்புகளை நிறுத்திட்டு இடம் சம்பந்தமான பிரச்சினைகளை சரி பண்ணிட்டு இருக்கேன்.

ஏமாந்தவன் நானே...

உண்மையை சொன்னா ஏமாந்தவன் நான். வாங்கிய இடங்களை பறி கொடுத்து மோசம் போய் நிற்கிறேன். பிரச்சினைக்குரிய இடத்தை பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை காட்டி எனக்கு விற்றனர். இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது.

2002-ல் அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும்.

பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால் விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு.

சிரிக்க வைச்சி சம்பாதிச்ச பணம்

உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன்.

மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான் என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். போலி பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன். கூடவே இருந்து என் உதவியால் சினிமாவில் நடிச்சி சாமி பக்தியை காட்டி உங்களுக்கு துரோகம் செய்வேனா, அப்படி செஞ்சா என் பிள்ளை விளங்குமா என்றெல்லாம் சொன்னவர் கிட்ட ஏமாந்துட்டேன்.

எங்கும் ஓடல...

என் குல தெய்வமான அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு போர்ஜரி சொத்தா வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டார். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன்," என்று கூறியுள்ளார்.
 

மோசடி, கொலை மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமீன்!


சென்னை: சன் டி.வி.யின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவுக்கு 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் அளித்து சென்னை செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வல்லகோட்டை படத்தை தயாரித்த டி.டி.ராஜா கொடுத்த ரூ 1.25 கோடி மோசடி மற்றும் ‘சிந்தனை செய்’ என்ற படத்தின் கிராபிக்ஸ் டிசைனர் அருள்மூர்த்தி கொடுத்த ரூ.11 லட்சம் மோசடி ஆகிய வழக்குகளின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சக்சேனா மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஏற்கெனவே தீராத விளையாட்டுப் பிள்ளை பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த சக்சேனாவை, இந்த வழக்குகளிலும் சக்சேனா கைது செய்தனர்.

இவற்றில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்தார். பின்னர் சக்சேனாவுக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். சக்சேனா மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

ஏற்கெனவே இருவ வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது அடுத்த இரு வழக்குகளில் சக்சேனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

ஆனாலும் இன்னும் இரு வழக்குகள் அவர் மீது விசாரணையில் உள்ளதால் சக்சேனா தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இரு வழக்குகளிலும் சக்சேனாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன்பு வந்தது.

அப்போது அரசு தரப்பு வக்கீல் கோபிநாத், ‘சக்சேனா மீதான வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

 

முத்த சர்ச்சை: ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு சம்மன்


பொது இடத்தில் முத்தமிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி உள்பட 5 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு டெல்லியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழா மேடையில் ரிச்சர்ட் கேர் ஷில்பாவை கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்தார். ஷில்பா என்னவோ சிரித்தபடி முத்தத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக நடந்ததாகக் கூறி பீகாரில் உள்ள சிவான் நகர நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஹரே ராம் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த அவர் நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் ரிச்சர்ட் கேர் உள்ளிட்ட 5 பேர் வரும் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

 

ஆர்வம் இருந்தால் யாரும் இயக்குநராகலாம்! - பாக்யராஜ்


கற்றுக் கொள்ள வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் சினிமாவில் யாரும் இயக்குநராகலாம் என்றார் இயக்குநர் பாக்யராஜ்.

யுவன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாக்யராஜ், பாடல்களை வெளியிட்டுப் பேசுகையில், "இந்த படத்தின் இயக்குநர் சரணின் சொந்த பெயர் சரவணன். அவர் என்னிடம் வேலை செய்தவர். அவர் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்று இங்கே சொன்னார்கள். உண்மையில் அவர் உதவி இயக்குநராக என்னிடம் வேலை செய்யவில்லை. அதற்கும் மேலே...

ஆரம்பத்தில் என் அலுவலகத்தில் டீ, காபி கொடுப்பவராக வேலை பார்த்தார். அவர் செய்கிற வேலை அதுவாக இருந்தாலும், இயக்குநர் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் நிறைய இருந்தது. தினமும், என் உதவி இயக்குநர்களுக்கு அவர் சாப்பாடு பரிமாறும்போது, இன்று என்ன கதை விவாதம் நடந்தது, இயக்குநர் என்ன சொன்னார்? என்று கேட்டு தெரிந்து கொள்வார்.

அந்த துடிப்பும் ஆர்வமும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் இயக்குநர் ஆகலாம்.

டீ - காபி வாங்கித் தரும் வேலை கூட கிடைக்கவில்லை

நான் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தபோது, டீ-காபி வாங்கி கொடுக்கிற வேலை கூட கிடைக்கவில்லை. ஹைதராபாத், விஜயவாடா என அலைந்து கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர்கள், "எந்த வேலை வேண்டுமானாலும் செய். ஓட்டலில் சர்வர் வேலைக்கு மட்டும் போய் விடாதே'' என்று சொன்னார்கள்.

விஜயவாடாவில், வேலை தேடி அலைந்து கொண்டிருந்தேன். மூன்று நாட்களாக சாப்பிடவில்லை. பசி மயக்கத்தில் கீழே விழுந்து விடுவோம் என்ற நிலை வந்தபோது, சர்வர் வேலை என்றாலும் பரவாயில்லை என்று ஒரு ஓட்டலுக்கு சென்று வேலை கேட்டேன்.

தகுதி இல்லை

அந்த ஓட்டல் உரிமையாளர் என்னை முதலில் சாப்பிட சொன்னார். பிறகு பக்கத்தில் அழைத்து, "தம்பி, சர்வர் வேலையை சாதாரணமாக நினைக்காதே. ஞாபக சக்தி அதிகமாக இருந்தால்தான் அந்த வேலையில் நிலைக்க முடியும்'' என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. சர்வர் வேலைக்கு கூட நான் தகுதி இல்லை என்று,'' என்றார் பாக்யராஜ்.
 

த்ரிஷாவுக்கு திருமணம்... மணமகன் பெயர் அம்ருத்!


வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் செய்யப் போகிறார் அவரது அம்மா. மணமகன் பெயர் அம்ருத். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்.

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.

அவரது தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார்.

இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதை த்ரிஷா மறுத்து வந்தார்.

இப்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார்.

அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல. பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.