ஆர்.கே.நடிப்பில், ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு

RK and Meghna Naidu
ஆப்பிள் புரொடக்ஷன்ஸ் ஏசி ஆனந்தன் தயாரிக்க, எல்லாம் அவன் செயல் வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் ஷாஜி கைலாஷும் ஆர்கேயும் மீண்டும் இணையும் பிரமாண்டமான படம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’.
சத்யராஜ் – கீதா நடித்து, கமல்ஹாஸனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பாக வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற படத்தின் தலைப்பு இது. ராஜ் கமல் நிறுவனத்திடமிருந்து முறையாகப் பெறப்பட்டுள்ளது.
இந்தியில் பெரும் வெற்றிப் படமாக, பரபரப்பாகப் பேசப்பட்ட ‘அப்தக்சப்பன்’ படத்தின் மூலக் கதையைத் தழுவி உருவாக்கப்படும் படம் இது. அப்தக்சப்பன் நானா படேகரின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. நானா படேகரின் கேரியரில் மிகச் சிறந்த படமாகக் கொண்டாடப்படும் அந்த ‘அப்தக்சப்பன்’ உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கி தமிழில் தயாரிக்கின்றனர்.
நேர்மை, யதார்த்தம் மிக்க ஒரு காவல் அதிகாரியின் கதைதான் இந்தப் படம். தற்போது பி வாசு இயக்கத்தில் புலிவேஷம் படத்தில், சந்தர்ப்ப சூழலால் ரவுடியாக மாறும் இளைஞனாக நடிக்கும் ஆர்கே, இந்தப் படத்தில் நேர்மையான காவல் அதிகாரியாக நடிப்பது ஒரு சுவாரஸ்யமான முரண்!
தைரியமான, பரபரப்பான கதைகளைப் படமாக்குவதில் பெயர் பெற்றவர் ஷாஜி கைலாஷ். அவரது இந்தப் படத்துக்கு, திரைக்கதை வசனம் எழுதுகிறார் போக்கிரி பட புகழ் வி பிரபாகர்.
சின்னக் கலைவாணர் விவேக் காமெடி களம் காண, ஆஹா படத்தின் நாயகன் ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் அதிரடி வில்லனாக வருகிறார், நீண்ட நாட்களுக்குப் பிறகு.
மலையாளம்-தமிழில் சகாப்தமாக கருதப்படும் நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகன் இந்தப்படத்தில் பரபரப்பாக போலீஸ் அதிகாரியாக அறிமுகமாகிறார். ராதாரவி, யுவராணி, சிங்கம்புலி ஆகியோரும் நடிக்கின்றனர்.
கவர்ச்சியிலும் அழகிலும் தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழும் மதுரிமா இந்தப் படத்தில் நாயகியாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.
இசையை ஸ்ரீகாந்த் தேவா கவனிக்க, எடிட்டிங்கை டான் மேக்ஸின் உதவியாளர் ஷம்ஜத்தும் (அறிமுகம்) கவனிக்க, தயாரிப்பை மேற்பார்வை செய்கிறார் கே எஸ் மயில்வாகனன்.
சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கோவா நகரங்களிலும், வெளிநாடுகளிலும் படமாகிறது கடமை கண்ணியம் கட்டுப்பாடு!
 

அக்கா ரெட்டியைக் கைவிட்ட தங்கச்சி ரெட்டி!

Sameera Reddy
சமீரா ரெட்டி பெரும் சோகத்துடன் உள்ளாராம். காரணம், தனது தங்கை தயாரிக்கும் தெலுங்கு, இந்திப் படத்தில் தன்னை நாயகியாகப் போடாததாலாம்.
இந்தியில் நடித்து வரும் சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அசல் படத்தில் அவர் ரசிகர்களை ஏமாற்றி விட்டார். இருந்தாலும் தற்போது மீண்டும் கெளதம் மேனனின் நடு நிசி நாய்களை நம்பியுள்ளார். இப்படம் தனக்கு நல்ல பெயரை மட்டுமல்லாமல் விருதையும் சேர்த்து அள்ளித் தரும் என்று நம்புகிறாராம் ரெட்டி.
இந்த சந்தோஷத்தில் இருந்து வந்த சமீராவுக்கு தங்கச்சி சுஷ்மா ரெட்டி மூலம் ஒரு சோகம் வந்து சேர்ந்தது. சுஷ்மா ரெட்டி ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாரிக்கிறார். ஆனால் இதில் நாயகியாக சமீராவை அவர் தேர்வு செய்யவில்லையாம்.
சொந்த தங்கச்சியே தனது படத்தில் தன்னை நாயகியாகப் போடாதது குறித்து சமீராவுக்கு ஏமாற்றமாம். இருந்தாலும் நடுநிசி நாய்கள் மூலம் தனக்கு வரப் போகும் ஏற்றத்தை நினைத்து ஆறுதல் படுத்திக் கொண்டாராம் தன்னைத் தானே…