கத்தி படத்தில் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் விஜய்

சென்னை: கத்தி படத்தில் விஜய் மக்கள் பிரச்சனையை தீர்க்க போராடுகிறாராம்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா லண்டனில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையிலேயே இசையை வெளியிடுகிறார்கள்.

கத்தி படத்தில் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் விஜய்

குளிர்பான நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து படம் நகர்கிறதாம். படத்தில் விஜய் மக்களுக்காக எப்படி குரல் கொடுக்கிறார், பிரச்சனைகளை சந்திக்கிறார், அதை தீர்க்கிறார் என்பது தான் கதையாம்.

கத்தி படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்தில் விஜய் அனிருத் இசையில் ஸ்ருதி ஹாஸனுடன் சேர்ந்து ஒரு பாடல் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் லிங்கா பர்ஸ்ட் லுக்!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் முதல் தோற்ற படங்கள் வரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவிருக்கிறது.

ரஜினி - சோனாக்ஷி - அனுஷ்கா ஜோடியாக நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் லிங்கா.

கடந்த மே மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் மைசூரில் தொடங்கியது. 40 நாட்கள் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும், அதே சூட்டோடு ஹைதராபாதில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினியின் லிங்கா பர்ஸ்ட் லுக்!

இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இப்ப்போது ஷிமோகாவில் நடந்து வருகிறது. இன்னும் மூன்று வாரங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

இதுவரை படத்தின் ஸ்டில்கள் எதுவும் மீடியாவில் வெளியாகாமல் பார்த்துக் கொண்டுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்படும் ஸ்டில்கள் மற்றும் ரசிகர்கதள் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட படங்கள் மட்டுமே வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் போஸ்டரை வரும் விநாயகர் சதுர்த்தி (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். அன்று காலையிலேயே போஸ்டர் வெளியாகிவிடும் என்று அப்படத்தின் எடிட்டர் தெரிவித்துள்ளார்.

 

அஞ்சலியிடம் பணம் பறிக்க முயற்சி... அம்பலமானது களஞ்சியத்தின் நாடகம்!!

இயக்குநர் களஞ்சியம் உயிருக்குப் போராடுவதாக அவரது நண்பர்கள் அறிக்கை, அஞ்சலியிடமிருந்து எப்படியாவது பணம் பறிக்க போட்ட நாடகம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆந்திராவில் ஓங்கோல் அருகே விபத்தில் சிக்கி, படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறார் களஞ்சியம் என்று முதலில் செய்தி வெளியிட்டார்கள். அடுத்து ஓங்கோல் மருத்துவமனையிலிருந்து திடீரென அவர் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறி, சுய நினைவே இல்லாமல் கிடக்கும் களஞ்சியத்தை அஞ்சலிதான் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்று கோர்த்துவிட்டார்கள், அவரது நண்பர்கள்.

அஞ்சலியிடம் பணம் பறிக்க முயற்சி... அம்பலமானது களஞ்சியத்தின் நாடகம்!!

களஞ்சியம் விபத்துக்குள்ளானால், அஞ்சலி என்ன செய்ய முடியும் என்ற கேள்வியுடன்தான் இந்த அறிக்கையை வெளியிட்டார்கள் நேற்று. இன்றோ, களஞ்சியம் அடிபட்டு உயிருக்குப் போராடும் லட்சணத்தை புகைப்படத்துடன் அம்பலமாக்கிவிட்டார்கள்.

அவர் திருச்சி மருத்துவமனையில் படுத்தபடி கிடக்கும் ஒரு படம் வெளியாகியுள்ளது. அதில் கை மற்றும் தோளில் சிறு சிராய்ப்புகளுடன் காணப்படும் களஞ்சியம் , நல்ல நிலையில் காட்சி தருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், "களஞ்சியம் நன்றாகத்தான் இருக்கிறார். லேசான சிராய்ப்புகள்தான். அவரை பொது வார்டில்தான் வைத்திருக்கிறோம். அவரது உதவியாளர்கள் நாங்கள் சொல்லச் சொல்ல கேட்காமல் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தனர்," என்றனர்.

இதுகுறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, "கடந்த வாரம் வரை என்னை எப்படியெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தார் களஞ்சியம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதாவது அவரது உண்மை முகம் என்னவென்பது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். அவர் பணம் எதுவும் என்னிடம் இல்லை. நான் இழந்த பணமும் சொத்தும்தான் ஏராளம். நியாயமாக நான்தான் அவர்மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். இப்போது நான் என்பாட்டுக்கு நடித்துக் கொண்டிருக்கிறேன். தேவையின்றி என் பெயரை யாரும் எதிலும் இழுக்க வேண்டாம்," என்றார்.

 

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல பாடகி ஜானகி சாமி தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி, பி.பி.சீனுவாசஸ் மகனுடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு பிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். அவருடன் பிரபல முன்னணி பாடகர் பி.பி.சீனுவாஸ் மகன் பி.பி.எஸ்.பணீந்தர் உடன் வந்தார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல பாடகி ஜானகி சாமி தரிசனம்

பாடகி ஜானகியை பொதுதீட்சிதர்கள் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் பாடகி எஸ்.ஜானகி சிற்றம்பலமேடை மீது ஏறி ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார்.

பொதுதீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கினர். பின்னர் நடராஜர் கோயிலுக்குள் உள்ள தில்லை ஸ்ரீகோவிந்தராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு புறப்பட்டு சென்றனர்.

 

பிஸி சூட்டிங்… லீவ் போட்டுவிட்டு காதலுடன் டூர் போன யோகா நடிகை

சென்னை: ஒரு வருடம் இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்ற யோகா நடிகை தற்போது சூட்டிங்கிற்கு லீவ் போட்டுவிட்டு யாருக்கும் சொல்லாமல் தனது ரகசிய காதலனுடன் டூர் போயிருக்கிறாராம்.

சூப்பர் நடிகருடனும், தல நடிகருடனும் தமிழில் நடித்து வருகிறார் யோகா நடிகை. அது மட்டுமல்லாது தெலுங்கு படங்களுக்காக கிலோ கணக்கில் நகையைப் போட்டு நடித்த யோகா நடிகை அதிகம் சோர்வடைந்து விட்டாராம்.

கடந்த ஒரு வருடமாக இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்றது, வாள் சண்டை, குதிரை ஏற்ற பயிற்சிகளும் பெற்றது அயர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததால் சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருந்தது வேறு மேலும் டென்ஷனை அதிகரித்துவிட்டதாம்.

தற்போது தனது பணிகளை பெரும்பகுதி முடித்துவிட்ட யோகா நடிகை வெளிநாடு சென்று ஓய்வு எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து குடும்பத்தினரிடம் மட்டும் தான் எங்கு செல்கிறேன் என்பதை தெரிவித்தார். மற்றவர்களிடம் டூர் செல்வதாக மட்டும் கூறிவிட்டு பறந்து விட்டாராம்.

யோகா நடிகையுடன் அவரது ரகசிய காதலனும் அவருடன் சென்றுள்ளார். 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் திரும்பி வந்து மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நிழலுலக தாதாக்களால் ஆபத்து: ஷாருக்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானிற்கு நிழலுலக தாதாக்களால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தால் அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானுக்கு நெருக்கமான தயாரிப்பாளர் கரீம் மொரானி. ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் பாலிவுட் படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானி. ஷாருக்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கரீம் மொரானியும் ஒருவர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மும்பையிலுள்ள கரீம் மொரானி வீட்டுக்கு வெளியே நின்றபடி 3 பேர் அவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு கரீம் மொரானியின் செல்போனுக்கு மிரட்டல் எஸ்எம்எஸ் வந்தது.

நிழலுலக தாதாக்களால் ஆபத்து: ஷாருக்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

நிழலுலக தாதா ரவி பூஜாரிதான் இந்த மிரட்டல்களுக்கு காரணம் என்று கரீம் மொரானி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ரவி பூஜாரி கோஷ்டியால் ஷாருக் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கிடைத்த உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து ஷாருக்கானிற்கு மும்பை போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் பணத்துக்காக நிழலுலக தாதாக்களிடமிருந்து மிரட்டல்களை எதிர்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. தாவுத் இப்ராகிம், சோட்டா சகீல், ரவி பூஜாரி ஆகியோர் இந்த தாதாக்களில் முக்கியமானவர்கள்.

 

திமுகவின் முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு! நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது!!

சென்னை: திமுக வழங்கும் முப்பெரும் விழா விருதுகளில் நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.

திமுக ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக உதயமான நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவை நடத்தி வருகிறது.

திமுகவின் முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு! நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது!!

இந்த விழாவில் பெரியார், அண்ணா, பாவேந்தர் மற்றும் கலைஞர் பெயரில் விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம். இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகளை திமுக அறிவித்துள்ளது.

விருது பெறுவோர் விவரம்: பெரியார் விருது-பெங்களுர் வி.டி.சண்முகம்; அண்ணா விருது-முனைவர் ஜான்; பாவேந்தர் விருது-புதுக்கோட்டை விஜயா; கலைஞர் விருது-நடிகர் குமரி முத்து.

 

இனி கேரளாவில் பெண்கள் நிம்மதியாக நடமாடலாம்.. மம்முட்டி

கொச்சி: கேரள அரசு மது பார்களை மூட உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். இனி பெண்கள் நிம்மதியாக, பயமின்றி நடமாட இது உதவும் என்று நடிகர் மம்முட்டி கூறியுள்ளார்.

கொச்சியில், கல்லூரி, பள்ளி வளாகங்களில் போதை பொருட்களை அனுமதிக்கக் கூடாது எனவும், மாணவர்களிடம் போதையின் தீமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இனி கேரளாவில் பெண்கள் நிம்மதியாக நடமாடலாம்.. மம்முட்டி

இதில் 12 ஆயிரம் கல்லூரி, பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். நடிகர் மம்முட்டி இதில் கலந்து கொண்டு பேசினார்.

மம்முட்டி அப்போது கூறுகையில், கேரள அரசு பூரண மதுவிலக்கை மாநிலத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது பாராட்டுக்குரியது. கேரளாவில் பூரண மதுவிலக்கு, மது ஒழிப்பு கோரிக்கைக்காக பல போராட்டங்கள் நடந்துள்ளது. நானும் இது தொடர்பான போராட்டங்களில் பங்கேற்று உள்ளேன்.

தற்போது மாநிலத்தில் உள்ள மதுபான பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் இனி பெண்கள் பயமின்றி வெளியில் நடமாடும் சூழ்நிலை உருவாகும். இது மிகவும் நல்ல முடிவு என்றார் மம்முட்டி.

 

ரூ 10 லட்சம் செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர்!

நெல்லை: எர்ணாகுளம் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ 10 லட்சம் காப்புத் தொகை செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பை ஆரம்பித்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

மோகன் லால் - மீனா நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

இப்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் நாயகனாக கமல் ஹாஸன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் கவுதமி.

ரூ 10 லட்சம் செலுத்திவிட்டு கமலின் பாபநாசம் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர்!

இந்த நிலையில் படத்தின் கதை தன்னுடையது என்றும், மற்ற மொழிகளில் ரீமேக் செய்த போது தனக்கு விவரம் தெரியவில்லை. எனவே தமிழ் ரீமேக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் எழுத்தாளர் சதீஷ் பால் மனுத்தாக்கல் செய்தார்.

சதீஷ் பால் நாவலைப் படித்துவிட்டு த்ரிஷ்யம் படத்தைப் பார்த்த நீதிபதி, இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால், காப்புரிமை சட்டப்படி குற்றமாகும் என்கு கூறி தமிழ் ரீமேக்குக்கு தடை விதித்தார். படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்றால் ரூ 10 லட்சத்தை காப்புத் தொகையாகக் கட்டிவிட்டு தொடங்கலாம் என்று படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப்புக்கு உத்தரவிட்டார்.

இதனை ஏற்று ரூ 10 லட்சத்தை நீதிமன்றத்தில் கட்டிவிட்டு படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டனர் கமல் மற்றும் படக்குழுவினர்.

திருநெல்வேலியின் எழில் மிகுந்த பகுதிகளில் பாபநாசம் படப்பிடிப்பு நடக்கிறது.

 

அபிராமி ராமநாதன் 68வது பிறந்த நாள்! - எஸ்பி முத்துராமன் வாழ்த்து

தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவருமான அபிராமி ராமநாதன் தன் 68வது பிறந்த நாளை இன்று கேக் வெட்டிக் கொண்டாடினார்.

ரஜினி நடித்த ப்ளட்ஸ்டோன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் அபிராமி ராமநாதன். அபிராமி மெகாமால் மூலம், திரையரங்குகளின் தோற்றம் மற்றும் நடத்தும் விதத்தை மாற்றியவர்.

சிவாஜி படத்தை அதிக அரங்குகளில் வெளியிட்டு, படம் திரையிடும் போக்கையும் மாற்றியவர் அவர்தான். தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.

அபிராமி ராமநாதன் 68வது பிறந்த நாள்! -  எஸ்பி முத்துராமன் வாழ்த்து

அபிராமி ராம நாதன் தன்னுடைய 68 வதுபிறந்த நாளை இன்று இன்று கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது இயக்குனர்கள் எஸ்.பி முத்து ராமன், அரவிந்த் ராஜ், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா, நடிகர் கருணாஸ், அபிராமி ராமநாதன் மனைவி நல்லம்மை ராமநாதன், மகன் ஆர்.சிவலிங்கம், மகள் மீனாட்சி பெரிய கருப்பன், மருமகன் பெரிய கருப்பன், பேரன் அண்ணாமலை, பேத்தி மீனாட்சி மற்றும் பலர் வாழ்த்தினர்.

முன்னதாக அயனாவரம் அருவி ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,முதியோர்களுக்கு இலவச உடை, பேக், உணவு வழங்கினார் அபிராமி ராமநாதன்.

 

'பப்'பில் குடிபோதையில் தள்ளாடிய நடிகையின் மகள்

மும்பை: நம்ம ஊரு மயிலு நடிகையின் மூத்த மகள் பப்பில் குடித்துவிட்டு போதையில் தள்ளாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கு ஏற்கனவே திருமணமான இயக்குனரை திருமணம் செய்து மும்பையில் செட்டிலானவர் மயிலு நடிகை. அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளை அவர் நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது. விருது விழாக்கள் என்று தான் எங்கு சென்றாலும் மகளையும் அழைத்து செல்கிறார்.

மகள்களுடன் மயிலு நடிகையும் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. இத்தனை வயதான ஒருவர் இப்படியா நீச்சல் உடையில் புகைப்படம் எடுத்து அதை வெளியிடுவது என்று விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகையின் மூத்த மகள் பப்பில் குடித்துவிட்டு போதையில் தள்ளாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மகளுக்கு பப் கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்ததே நடிகை தான் என்றும் கூறப்படுகிறது.

அம்மா கற்றுக் கொடுத்து கலாச்சாரத்திற்கு மகள் அடிமையாகிவிட்டார் என்று கூட பேசப்படுகிறது. நடிகையின் பெயரை மகள் கெடுத்துவிடுவார் போல என்று சிலவிமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 

விஜய்- சங்கீதா... திருமண வாழ்க்கையில் 15 ஆண்டுகள்!

சென்னை: இளைய தளபதி விஜய், சங்கீதா தம்பதி தங்களது 15வது திருமண நாளில் அடியெடுத்து வைக்கின்றனர்.

விஜய் இலங்கை தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த தனது ரசிகை சங்கீதாவை கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஞ்சய், திவ்யா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விஜய்- சங்கீதா... திருமண வாழ்க்கையில் 15 ஆண்டுகள்!

இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர்களுக்கு திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனைவி சங்கீதா பற்றி கூறுங்களேன் என்று விஜய்யை கேட்டால் அவர் அடிக்கடி சொல்வதாவது,

கஷ்ட காலங்களில் கூட என்னை வழிநடத்துவது என் மனைவியின் அளவு கடந்த அன்பு தான் என்பதாகும்.

வாழ்த்துக்கள் விஜய், சங்கீதா.

 

சுந்தர் சியுடன் சண்டையா?- ராய் லட்சுமி விளக்கம்

அரண்மனை படத்தில் தனது காட்சிகள் குறைக்கப்பட்டதால் இயக்குநர் சுந்தர் சியுடன் விவாதத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார் ராய் லட்சுமி.

ராய் லட்சுமி தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் வருகிறார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களை மையப்படுத்தித்தான் கதையே நகருவதால் மற்ற பாத்திரங்களின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு காட்சிகள் வெட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

சுந்தர் சியுடன் சண்டையா?- ராய் லட்சுமி விளக்கம்

ராய் லட்சுமி, வினய், ஆண்ட்ரியா ஆகியோர் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளை சுந்தர்.சி நீக்கிவிட்டதாகவும், இதனால் ராய் லட்சுமி சுந்தர்.சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இதை ராய் லட்சுமி முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பிஆர்ஓ மூலம் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், "அரண்மனை' படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் வதந்திதான்.

நான் படத்தைப் பார்த்தேன். அதில், என்னுடைய காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. எனக்கும் சுந்தர்.சிக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை. நான் நடித்துள்ள ‘அரண்மனை' ‘இரும்பு குதிரை' ஆகிய படங்கள் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.