மணிரத்னம் படத்துக்கு யுஏ.. ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறார்!

மணிரத்னம் இயக்கியுள்ள ஓ காதல் கண்மணி படத்துக்கு தணிக்கைக் குழு யு ஏ சான்று அளித்துள்ளது. இதனை எதிர்த்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளார்.

துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்துள்ள இந்தப் படத்தை நேற்று முன்தினம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டுக் காட்டினர்.

மணிரத்னம் படத்துக்கு யுஏ.. ரிவைசிங் கமிட்டிக்குப் போகிறார்!

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் சில காட்சிகள் வரம்பு மீறுவதாகவும், ஆபாசமாக இருப்பதாகவும் கூறி யு ஏ சான்றளித்தனர்.

இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெற முடிவு செய்துள்ளார் மணிரத்னம்.

அதே நேரம் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்தும் உள்ளார்.

 

ஜெயம் ரவிக்கு எதிராக அப்பா டிஆர் கேஸ் போடறாரு.. மகன் சிம்பு பாட்டுப் பாடறாரு!

அப்பாடக்கர்.. இந்தப் படத்துக்கு டி ராஜேந்தர் பேமிலியே பெரிய விளம்பரம் தேடிக் கொடுத்துவிடும் போலிருக்கிறது.

ஒரு பக்கம் இந்தப் படத்தில் டன்டனக்கா வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக படத்துக்கு எதிராக டி ராஜேந்தர் வழக்கெல்லாம் போட்டுள்ளார்.

ஜெயம் ரவிக்கு எதிராக அப்பா டிஆர் கேஸ் போடறாரு.. மகன் சிம்பு பாட்டுப் பாடறாரு!

இன்னொரு பக்கம் படத்தின் ஹீரோவான ஜெயம் ரவிக்காக பின்னணிப் பாடல் பாடிக் கொடுத்துள்ளார் சிம்பு.

தமன் இசையில் 'ஹிட் சாங்குதாண்டி...' என்று தொடங்கும் பாடலை சிம்பு பாடியுள்ளார். ஒரே இரவில் இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்துவிட்டாராம் சிம்பு.

படத்தில் இந்தப் பாடலுக்கு ஜெயம் ரவி, த்ரிஷா நடனமாடவிருக்கின்றனர்.

அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குகிறார் சுராஜ்.

 

வில்லன் நடிகர் பொன்னம்பலம் மீது மோசடிப் புகார்- வழக்கு!

வில்லன் நடிகர் பொன்னம்பலம் மீதான மோசடி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த முருகன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், 2011-இல் புதிதாக வாங்கிய காரை நடிகர் பொன்னம்பலம் நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு மாதம் ரூ.1500 மாத வாடகைக்கு வழங்கினேன். 2 மாதம் மட்டும் வாடகை தந்தனர். காரை திரும்ப கேட்டதற்கு ரூ.1.50 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர்.

வில்லன் நடிகர் பொன்னம்பலம் மீது மோசடிப் புகார்- வழக்கு!

இது தொடர்பாக சிவகாசி போலீஸில் 2014 அக்.14இல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.

இம்மனு நீதிபதி எம்எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

 

சகாப்தம் - விமர்சனம்

Rating:
1.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜயகாந்த் (கெஸ்ட் ரோல்) சண்முகப்பாண்டியன், நேகா ஹிங்கி, சுப்ரா, ஜெகன், தேவயானி, பவர் ஸ்டார்
இசை: கார்த்திக் ராஜா
தயாரிப்பு: எல்கே சுதீப்
இயக்கம்: சுரேந்திரன்

சினிமாவில் தன் இடத்துக்கு ஒரு வாரிசை தயார்ப்படுத்திவிட வேண்டும் என்பது எல்லா 'ரிடயர்ட் ஹீரோ'க்களின் கனவு என்பது புரிந்து கொள்ளக் கூடியதுதான். தாம் ஆண்டு அனுபவித்ததை தம் வாரிசுகளும் அனுபவிக்கட்டும் என்ற ஆசை. ஆனால் அப்படி வரும் வாரிசுகள் சினிமாவில் தாக்குப் பிடிக்குமளவுக்கு சரக்கு இருக்க வேண்டுமல்லவா... இதை இம்மியளவு கூட மனதில் கொள்ளாமல் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக இறக்கியிருக்கிறது விஜயகாந்த் குடும்பம்.

சகாப்தம் பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களில் மனதில் தோன்றியது இதுதான்.

சகாப்தம் - விமர்சனம்

கிராமத்தில் வேலை வெட்டியில்லாமல் நண்பன் ஜெகனோடு சுற்றிக் கொண்டிருக்கிறான் தாயற்ற பிள்ளையான சண்முகப் பாண்டியன். மலேசியாவிலிருந்து வந்த பவர் ஸ்டாரின் பீலாக்களை நம்பி, ப்ளஸ் தேவயானியின் காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கும் கடமையோடு, ஒரு நாள் திடுதிப்பென்று மலேசியாவுக்கு விமானமேறுகிறார்கள்.

அங்கே விமான நிலையத்தில் இறங்கி திக்குத் தெரியாமல் திருதிருவென விழிக்க, அங்கிருக்கும் அதிகாரி தலைவாசல் விஜய் உதவுகிறார். அவரிடம் பவர் ஸ்டார் தங்களுக்குத் தந்த முகவரியைத் தர அங்கே போனால், பவரு ரொம்ப புவராக புரோட்டா கடையில் மாவு பிசைந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறார்கள். பவரு இவர்களை வேறு ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆனால் அதில் இருவருக்கும் பிடிப்பில்லை.

சகாப்தம் - விமர்சனம்

சில பல காட்சிகளுக்குப் பிறகு ஒரு துப்பறியும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, மருந்துக் கலப்பட கும்பலைக் கண்டுபிடித்து, அவர்களிடம் அடிமையாக இருக்கும் தமிழர்களையெல்லாம் மீட்டு... ஸ்ஸப்பா, முடியல!

முதல் படம்.. நடிச்சா ஸ்ட்ரெயிட் ஹீரோதான்... வேறு ரோலே வேணாம்.. இதுதான் வாரிசுகளின் பிரச்சினை. சண்முகப் பாண்டியன் நெகு நெகுவென வளர்ந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு ஓகே.. ஆனால் ஹீரோவாய் டான்ஸாட, நகைச்சுவை பண்ண, டூயட் பாட தோதான உடல் மொழி, அதாங்க பாடி லாங்வேஜ்.. அது ரொம்பவே மிஸ்ஸிங் அவரிடம்.

சகாப்தம் - விமர்சனம்

நேஹா ஹிங்கி, சுப்ரா அய்யப்பா என இரண்டு ஹீரோயின்கள். சுமார்தான். கொடுத்த வேலை, ஹீரோவைச் சுற்றிப் பாட்டுப் பாடுவது. அதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் பேசுவதற்கு அவர்களுக்கு கிடைத்த வாய்ப்போ உதட்டசைவு பொருந்தாமல் அம்பேலாகிறது!

ஜெகன், பவர் ஸ்டார், சிங்கம் புலி ஆகியோரை இன்னும் நன்றாகப் பயன்படுத்தியிருந்தால் சில காட்சிகளில் சிரிக்கவாவது முடிந்திருக்கும். மற்ற நடிகர்கள் வந்து போகிறார்கள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் சண்முகப் பாண்டியனை பாராட்டுகிறார்கள். சண்முகப்பாண்டியனுக்கு உதவும் கிராமத்து ஆன்ட்டியாக வருகிறார் தேவயானி.

சகாப்தம் - விமர்சனம்

எதிர்ப்பார்த்த மாதிரியே ஒரு காட்சியில் விஜயகாந்த் தோன்றுகிறார். அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே மனதில் கொள்ள வேண்டியதுதான்.

பூபதியின் ஒளிப்பதிவு, 'எட்றா ஒரு டிக்கெட்டை மலேசியாவுக்கு' எனத் தூண்ட வைக்கிறது.

சகாப்தம் - விமர்சனம்

கார்த்திக் ராஜா இன்னொரு ப்ளஸ். இரண்டு பாடல்கள் உண்மையிலேயே இனிமை. படம் பார்த்து பேஜாராகி பின்னணி இசையில் கோட்டை விட்டுவிட்டார் போலிருக்கிறது.

நல்ல கதை. அதை சுவாரஸ்ய முடிச்சுக்கள், யதார்த்தக் காட்சிகளோடு சொல்லியிருந்தால், முதல் படத்திலேயே சகாப்தம் படைக்காமல் போனாலும் சறுக்காமலாவது இருந்திருப்பார் கேப்டன் மகன்!

 

விஜய சேதுபதியை மீண்டும் இயக்குகிறார் நலன் குமாரசாமி

சூது கவ்வும் டீம் மீண்டும் இணைகிறது. அந்தப் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி, தனது புதிய படத்தை விஜய் சேதுபதியுடன் தொடங்குகிறார்.

படத்துக்கு பொருத்தமான கதாநாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

விஜய சேதுபதியை மீண்டும் இயக்குகிறார் நலன் குமாரசாமி

சூது கவ்வும் மாதிரி ப்ளாக் காமெடிப் படமாக இல்லாமல், இதனை காதல் காமெடி படமாக உருவாக்குகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தை திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

சூர்யாவின் 24... சண்டைக்கு வர்றார் அனில் கபூர்!

சூர்யா தற்போது நடித்து வரும் 24 படத்துக்கு இப்போதே ஒரு எதிர்ப்பு கிளம்பிவிட்டது.

எதிர்ப்பவர்.. முன்னால் பாலிவுட் ஹீரோ அனில் கபூர்.

சூர்யாவின் 24... சண்டைக்கு வர்றார் அனில் கபூர்!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 24 பட தலைப்பு மற்றும் லோகோ டிசைன் அப்படியே தனது டிவி தொடர் 24 மாதிரியே இருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அனில் கபூர். இதற்கான உரிமையை அவர் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளாராம்.

ஆனால் விக்ரம் குமார் 2010-ம் ஆண்டிலேயே இந்தப் படத்தைத் தொடங்கி 24 என்ற தலைப்பையும் வைத்துவிட்டாராம். எனவே மாற்ற முடியாது என்று கூறி வருகிறார். இதுகுறித்து சூர்யாவுடன் அனில் கபூர் பேசியுள்ளார்.

அனில் கபூர் கூறுகையில், "இது சட்ட ரீதியான சண்டையாகி விடும் முன்பு பிரச்சினையைப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, சூர்யுடன் பேசி வருகிறேன். பிரச்சினை தீரும் என நம்புகிறேன்," என்றார்.