வதந்தியில் உயிர் தப்பி.. விபத்தில் பலியான பால்வாக்கர்!

வதந்தியில் உயிர் தப்பி.. விபத்தில் பலியான பால்வாக்கர்!

லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் இறந்து விட்டதாக வெள்ளிக்கிழமைதான் வதந்தி பரவியிருந்தது. ஆனால் அவர் அப்போது உயிருடன்தான் இருந்தார். ஆனால் மறு நாளே அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது ரசிகர்களை சிதறடித்துள்ளது.

உலகெங்கும் பெருமளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ள பால்வாக்கரின் இந்த அகால மரணம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ரசிகர்கள் பெரும் துயரத்தில் மூழ்கியள்ளனர்.

இந்த துயரத்திற்குக் காரணம், வெள்ளிக்கிழமைதான் பால் வாக்கர் குறித்து வதந்தி பரவியது. அவர் இறந்து விட்டதாக அந்த வதந்தி கூறியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பின்னர் இது வதந்தி என்று தெரியவரவே அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால் அடுத்த நாளே பால்வாக்கர் விபத்தில் மரணமடைந்தது அவர்களை அதிர வைத்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று ஒரு சமூக வலைத்தளத்தில் 'R.I.P. Paul Walker' என்று போட்டு சிலர் வதந்தி கிளப்பியிருந்தனர். இந்தப் பக்கத்தை கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பார்த்து லைக் கொடுத்திருந்தனர். அந்த பக்கத்தில் நவம்பர் 30ம் தேதி முற்பகல் 11 மணிக்கு பால்வாக்கர் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து செய்தியும் அதில் வெளியிட்டிருந்தனர். ஆனால் பின்னர் இது வதந்தி என்று தெரிய வந்தது.

பால்வாக்கரின் பிரதிநிதிகள், இது வதந்தியான செய்தி. யாரும் நம்ப வேண்டாம் என்று உடனடியாக மறுத்திருந்தனர். ஆனால் அடுத்த நாளே பால் வாக்கரின் மரணச் செய்தியை அதே பிரதிநிதிகள் வெளியிட்டபோது ரசிகர்கள் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.

 

திருவல்லிக்கேணி கோயில் தங்கத் தேரைப் பார்வையிட்ட ரஜினிகாந்த்!

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் ரஜினி சாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி. அங்கு தயாராகியுள்ள தங்கத் தேரைப் பார்வையிட்டார்.

ரஜினி நடித்த ‘கோச்சடையான்' பட வேலைகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டன. இந்தப் படத்தில் தன் பங்கை முடித்துவிட்ட ரஜினி , வெளிநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

திருவல்லிக்கேணி கோயில் தங்கத் தேரைப் பார்வையிட்ட ரஜினிகாந்த்!

வரும் 25-ம் தேதி இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடக்கிறது.

இந்த நிலையில் ராகவேந்திரா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார் ரஜினி. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் இந்தக் கோயிலுக்கு வருகிறார். முன்பெல்லாம் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வந்தச ரஜினி, தான் வருவதை அறிந்து கூடும் கூட்டத்தைக் கண்டு, வருவதைத் தவிர்த்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோவில் வாசலில் காரில் வந்து இறங்கினார். பின்னர் கோவிலுக்குள் நுழைந்த அவரை ஊழியர்கள் வரவேற்றனர்.

ராகவேந்திரா கோவிலுக்கு புதிதாக தங்கதேர் செய்யப்பட்டு உள்ளது. அந்த தேரை சிறிது நேரம் சுற்றி பார்த்தார். பின்னர் கருவறைக்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார்.

அரை மணி நேரம் கோயிலில் இருந்த அவர், பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

 

'தோல் நோயெல்லாம் இல்லை... தொடர் ஷூட்டிங்கால் கொஞ்சம் சூடாகிடுச்சி!' - சமந்தா விளக்கம்

சென்னை: எனக்கு தோல் நோய் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. தொடர்ந்து ஷூட்டிங்கில் இருந்ததால் உடம்பு சூடாகிவிட்டது, என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை சமந்தா.

நடிகை சமந்தாவுக்கு மீண்டும் சரும வியாதி வந்ததால், சூர்யா படப்பிடிப்பு ரத்தானதாக செய்திகள் பரவின.

ஆனால் படப்பிடிப்பு ரத்தாகவில்லை என்றும், எங்கள் பட ஹீரோயின் சமந்தாதான் என்றும் இயக்குநர் லிங்குசாமி நேற்று அறிவித்தார்.

'தோல் நோயெல்லாம் இல்லை... தொடர் ஷூட்டிங்கால் கொஞ்சம் சூடாகிடுச்சி!' - சமந்தா விளக்கம்

இப்போது தன் பங்குக்கு சமந்தாவும் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "என்னைப் பற்றி பரவிய செய்திகளில் உண்மை இல்லை. லிங்குசாமி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறுவதும் தவறு. கடுமையான உடல் நலக்குறைவு எனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவி உள்ளது.

நான் தற்போது 5 படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். ஒரே நேரத்தில் இந்த படங்களில் தொடர்ந்து நடிப்பதால் உடல் சூடாகிவிட்டது. இதனால் சோர்வடைந்துவிட்டேன். வேறொன்றுமில்லை.

இயக்குநர் லிங்குசாமியிடம் அனுமதி பெற்று இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தேன். தற்போது நலமாக இருக்கிறேன். வரும் 7-ந்தேதி முதல் மும்பையில் சூர்யாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்," என்றார்.

 

சமந்தாதான் சூர்யாவின் ஜோடி- இதில் மாற்றமில்லை: லிங்குசாமி

தோல் நோய் பாதிப்பு காரணமாக சூர்யாவின் படத்தில் சமந்தா நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவரை படத்திலிருந்து மாற்றவில்லை என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் கடல், ஐ போன்ற படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவற்றிலிருந்து விலகினார் சமந்தா.

பின்னர் அவர் நடித்த ஒரே படம் நீதானே என் பொன்வசந்தம்.

சமந்தாதான் சூர்யாவின் ஜோடி- இதில் மாற்றமில்லை: லிங்குசாமி

இந்தப் படத்துக்குப் பின் சிகிச்சை மேற்கொண்டு, முற்றிலும் குணமாகி சூர்யா படத்தில் நடித்த ஒப்புக் கொண்டார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கிய நிலையில், மீண்டும் உடலில் சிகப்பு கொப்பளங்கள் தோன்ற ஆரம்பித்தன. படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் அதியுயர் வெளிச்ச விளக்குகளின் வெப்பம் அவரது சருமத்தை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இனி சூர்யா படத்தில் அவர் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ட்விட்டரில் இதுகுறித்து பதிலளித்துள்ள லிங்குசாமி, "நான் இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தாதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. வரும் டிசம்பர் 7-ம் தேதி இருவரும் ஜோடியாக நடிக்கும் காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கும்," என்று கூறியுள்ளார்.

 

பிரேஸ்லெட் சர்ச்சை: சுங்க அதிகாரிகளுடன் நடிகர் கலாபவன் மணி மோதல்

பிரேஸ்லெட் சர்ச்சை: சுங்க அதிகாரிகளுடன் நடிகர் கலாபவன் மணி மோதல்

கொச்சி: நடிகர் கலாபவன் மணி அணிந்திருந்த பிரேஸ்லெட் பற்றி கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேக கேள்விகளை எழுப்பியதால், நடிகருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி, தமிழ் திரைப்படங்களிலும், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிறன்று கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

அவர் கையில் அணிந்திருந்த கனமான தங்க பிரேஸ்லெட் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், விசாரித்தனர்.

இதனால் கோபம் அடைந்த கலாபவன் மணி, பிரேஸ்லெட்டை கழற்றி கவுண்ட்டரில் வீசிவிட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் கலாபவன் மணி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், சுங்க இலாகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டினை கலாபவன் மணி, மறுத்துள்ளார். அடிப்படை ஆதாரமில்லாமல் தன்மீது சுங்க இலாகாவினர் குற்றம் சாட்டியதாக தெரிவித்தார். நான் தங்க பிரேஸ்லெட்டினை கடத்தி வந்திருக்கலாம் என்றும் அதிகார் சந்தேகக் கேள்விகள் எழுப்பியதாக அவர் கூறினார்.

சமீப காலமாகவே போலீசாரும், சுங்க இலாகாவினரும் தன்னை வேண்டும் என்றே துன்புறுத்தி வருவதாக தெரிவித்தார். "பிரேஸ்லெட்டினை பல ஆண்டுகளாக அதை அணிந்திருப்பதாக பதில் அளித்தேன். அதிகாரிகளிடம் நான் முரட்டுத்தனமாக பேசவில்லை. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் அதுபற்றி தெளிவாக தெரியும்" என்றும் மணி கூறினார்.

அதேசமயம் பிரேஸ்லெட் குறித்து விளக்கம் அளிக்கும்படி, நடிகர் மணிக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்படும் என்று, சுங்க இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் அவருடைய காரை சோதனை போட்டபோதும் நடிகர் கலாபவன் மணி இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.