கோடம்பாக்கத்தில் இன்றைக்கு சத்தமின்றி முன்னணிக்கு வந்து கொண்டிருப்பவர்... விஜய் சேதுபதி!
பிரபு சாலமன் இயக்கிய லீ படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வந்திருப்பார் விஜய் சேதுபதி. அதற்கு முன் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, புதுப்பேட்டை போன்ற படங்களில் துணை நடிகராக வந்திருப்பார்.
அடுத்து வெண்ணிலா கபடி குழுவில் சின்ன வேடத்தில் நடித்தார்.
அவருக்கு பெரிய திருப்பத்தைத் தந்தது சீனு ராமசாமி இயக்கத்தில் வந்த தென்மேற்கு பருவக்காற்று.
பின்னர் வந்த சுந்தரபாண்டியனில் வில்லனாக நடித்தார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சுந்தரபாண்டியன் வந்த நேரத்திலேயே வெளியான பீட்சா விஜய் சேதுபதியை முக்கிய ஹீரோவாக்கியது.
தொடர்ந்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம் தமிழ் சினிமாவை விஜய் சேதுபதி பக்கம் திரும்ப வைத்தது.
இதோ... கடந்த வாரம் வெளியான அவரது சூது கவ்வும், ஹாட்ரிக் வெற்றி தந்த ஹீரோ என அவரது அந்தஸ்தை பாக்ஸ் ஆபீஸில் உயர்த்தியுள்ளது.
இன்றைக்கு அவர் கையில் ஏழு படங்கள். வசந்தகுமாரன், பண்ணையாரும் பத்மினியும், சங்குத் தேவன், ரம்மி, இதற்காகத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பெங்களூர் தமிழன் மற்றும் சீனுராமசாமி படம் என அத்தனையும் வித்தியாசமான தலைப்புகள். கதைகளும் வித்தியாசமானவைதான் என்கிறார் விஜய் சேதுபதி.
இவர் படத்தை இயக்குபவர்களும் பிரபலங்கள் அல்ல... பெரும்பாலும் குறும்பட இயக்குநர்கள் அல்லது உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள்.
பாக்ஸ் ஆபீசில் இன்று விஜய் சேதுபதி படம் என்றால் நம்பிக்கையோடு வாங்கத் தயாராக இருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள், இயக்குநர்களிடம் மாட்டாமல், தனக்கேற்ற இயக்குநர்கள், சிறு தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதை தன் பாணியாக வைத்துள்ளார் விஜய் சேதுபதி.