விஸ்வரூபம் முதல்கட்ட மீட்டிங் ஓவர்... மாலை முத்தரப்பு கூட்டம்.. பிரச்சினை தீருமா?

Final Meeting On Viswaroopam Row At 6 Pm

சென்னை: விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான முதல்கட்ட சந்திப்பு முடிந்துவிட்டது. மாலை 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கமல்ஹாசன் இல்லாமல் காட்சிகளை வெட்டுவது சாத்தியமாகாது என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறி விட்டன. இதையடுத்து பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கமல்ஹாஸனின் விஸ்வரூபத்தில் பல காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டதால், படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து தினங்களாக இந்தப் படம் தொடர்பான சர்ச்சை உச்சபட்ச பிரச்சினையாக மீடியாவில் வலம் வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் படத்தில் உள்ள ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்க கமலுக்கு சம்மதமென்றால் படத்தை வெளியிட அரசு உதவும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளுடன் சமாதானம் பேச ஆரம்பித்துள்ளனர்.

கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாஸனும், இயக்குநர் அமீரும் இஸ்லாமிய அமைப்புகளுடன் முதல்கட்ட பேச்சுகள் நடத்திவிட்டனர். மாலையில் நட்சத்திர ஹோட்டலில் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் 2வது கட்டப் பேச்சு நடப்பதாக இருந்தது.

இதில் 24 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், கமலின் அண்ணன் சந்திரஹாஸன், அமீர் மற்றும் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலர், அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.

முதல் கட்டப் பேச்சுவார்த்தையின்போது, விஸ்வரூபத்திலிருந்து 30 நிமிடக் காடசிகளை நீக்க இஸ்லாமிய அமைப்புகள் கோரியிருந்தனர். இதுகுறித்து சந்திரஹாசன், கமல்ஹாசனிடம் தெரிவித்ததாக தெரிகிறது. அதற்கு கமல் ஹாசன் நான் வந்து பார்த்த பிறகு காட்சிகளை வெட்டுவது குறித்து முடிவு செய்யலாம் என்றார். தற்போது கமல்ஹாசன் மும்பையில் உள்ளார். நாளைதான் அவர் சென்னை திரும்புகிறார்.

கமல்ஹாசன் இல்லாமல் பேச்சுவார்த்தையை தொடருவது சரியாக இருக்காது என்று இஸ்லாமிய அமைப்புகளும் கருத்து தெரிவித்தன. இதையடுத்து பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்துறைச் செயலர் சந்திப்பு இதனிடையே கமலின் அண்ணன்

முன்னதாக சந்திரஹாஸனை இன்று தமிழக உள்துறைச் செயலர் சந்தித்துப் பேசினார். ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர் கேட்டதற்கு சம்மதம் தெரிவித்தார் சந்திரஹாஸன்.

 

விஸ்வரூபம் எப்போ ரிலீஸாகும்? கவலையில் ஷாருக்கான்

Now Shahrukh Khan Worries Fo Vishwaroopam Release

மும்பை: விஸ்வரூபம் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற கவலையில் உள்ளாராம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் விஸ்வரூபம் படம் எப்பொழுது தமிழகத்தில் ரிலீஸ் ஆகும் என்று கமல் மட்டுமல்ல இன்னொரு பிரபலமும் கவலையாக உள்ளாராம். அவர் வேறு யாருமல்ல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான். கமல் படம் ரிலீஸாவது பற்றி அவருக்கு என்ன கவலை என்று நீங்கள் நினைக்கலாம்.

விஸ்வரூபத்திற்கு ஷாருக்கின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் கிராபிக்ஸ் செய்து கொடுத்துள்ளது. அதனால் தான் மனிதர் கவலையில் உள்ளார். இந்நிலையில் விஸ்வரூபம் பிரச்சனை தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் கமலின் அண்ணன் சந்திரஹாசன் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறுகிறது.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இந்நிலையில் தமிழக அரசு அப்படத்திற்கு 2 வார தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினியின் சிம்மாசனம் விஜய்க்கா, அஜீத்துக்கா?

 

'கடல் உள்வாங்கிருச்சாமே!!'

Viewers Comments On Kadal Movie

மணிரத்னத்தின் கடல் படத்தைப் பார்த்த பலரும் அடித்துள்ள கமெண்ட் இதுதான்.

ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களின் கிண்டலுக்குள்ளான, எதிர்ப்பார்ப்பைக் கிளறாத படமாகத்தான் கடல் பார்க்கப்பட்டது.

இன்று படம் வெளியான சில மணி நேரங்களில் இந்தப் படத்தின் ரிசல்ட் வந்துவிட்டது. சிலர் இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் படத்துக்கு எதிர்மறையான கமெண்டுகளைக் கூறியுள்ளனர்.

க'டல்' என ரொம்ப சிக்கனமாக விமர்சனம் எழுதிவிட்டவர்களும் உண்டு!

படத்தில் அர்ஜுன் மற்றும் அரவிந்தசாமிக்குதான் முக்கிய வேடம் என்றும், ஹீரோ - ஹீரோயின் எனப்பட்ட கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி சும்மா ஊறுகாய் மாதிரிதான் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விஸ்வரூபத்துக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகள்தான் இந்தப் படத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், ரஹ்மானின் பாடல்களை ரசித்துக் கேட்டதுதான் என்றனர்.

 

கார் விபத்து வழக்கு: சல்மான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனைக்கு வாய்ப்பு!

Car Accident Case Salman Khan May Get 10 Yr Jail

மும்பை: கார் விபத்து வழக்கில் சிக்கியுள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி மும்பை அதிகாலை பந்த்ரா பகுதியில் நடிகர் சல்மான்கான் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ரோட்டோரத்தில் தூங்கிய 5 பேர் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நடிகர் சல்மான் கான் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 304(1) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

இதனிடையே மகாராஷ்டிரா மாநில அரசு நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தது. சல்மான் கான் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2) பிரிவின்கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு சல்மான் கான் மீது 304(2)-வது சட்டப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

சட்டப்பிரிவு 304(2)-ன் கீழ் வழக்கு விசாரணை நடந்தால் நடிகர் சல்மான் கானுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்க வாய்ப்புள்ளது.

அதிகபட்ச குற்றம் செய்திருப்பதாக இந்த வழக்கு மாற்றப்படும் பட்சத்தில், இந்த வழக்கு விசாரணை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெறும். மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வரும் 11-ந்தேதி நடிகர் சல்மான்கான் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்ய நடிகர் சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.

மான் வேட்டை வழக்கு

1988-ல் ராஜஸ்தானில் படப்பிடிப்புக்குச் சென்ற போது மான் வேட்டையாடிய வழக்கில் வசமாக சிக்கியுள்ளார் சல்மான் கான். வனவிலங்குகள் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும். விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் கார்விபத்து வழக்கும் சல்மான் கானுக்கு சிக்கலாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இஸ்லாமிய தலைவர்களுடன் கமல் அண்ணன் சந்திரஹாஸன் பேச்சு

Chandra Hassan Talk With Islamic Leaders

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் சுமூக முடிவுக்கு வரும் பொருட்டு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறார் கமல் அண்ணன் சந்திரஹாஸன்.

கமல் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்' படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு தடை விதித்தது.

இதனால் கமல் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி தடையை நீக்கினார். ஆனால் அன்று இரவே அப்பீல் செய்து அடுத்த நாள் மீண்டும் தடை பெற்றுவிட்டது அரசு. வழக்கு விசாரணை வருகிற 6-ந்தேதி நடக்க உள்ளது.

இந்த நிலையில் ‘விஸ்வரூபம்' வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அரசு உதவும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கமல்ஹாசனும் முஸ்லிம் அமைப்புகளும் முன் வந்து பேசி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு சுமூக தீர்வு கண்டால் இப்படம் திரையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துவிட்டார்.

இதனை கமல் தரப்பிலும் முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இன்று பிற்பகல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிகிறது.

இஸ்லாமிய கூட்டமைப்பில் 24 சங்கங்கள் உள்ளன. அவற்றின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்கள். கமல் தற்போது மும்பையில் இந்தி ‘விஸ்வரூபம்' வெளியீட்டில் உள்ளதால், அவரது அண்ணனும் ராஜ்கமல் பிலிம்ஸ் உரிமையாளருமான சந்திரஹாசன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இயக்குநர் அமீரும் கமல் சார்பில் கலந்து கொள்கிறார்.

அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பேச்சுவார்த்தை நடப்பதால், இது முத்தரப்பு பேச்சுவார்த்தையாக மாறியுள்ளது.

 

'ஸ்டூடியோ 6': ஜீ தமிழ் சேனலில் நட்சத்திரங்களின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள்

Zee Tamil New Film Based Show Studio 6

சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள், சினிமா செய்திகளை வழங்குவதற்காகவே ஜீ தமிழ் சேனல் ஸ்டூடியோ 6 என்ற நிகழ்ச்சியை புதிதாக தொடங்கியுள்ளது.

ஒவ்வொருவாரமும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர்களின் கலாட்டா பேட்டிகள் இடம் பெறுகின்றன.

இந்தவாரம் முதல் நிகழ்ச்சியில் கடல் திரைப்பட நாயகி துளசியின் அசத்தலான பேட்டி இடம் பெறுகிறது. மணிரத்னம் அறிமுகம் செய்தது, நாயகன் கவுதம் கார்த்திக் உடனான நடிப்பு, அக்கா கார்த்திகா உடனான போட்டி, அம்மா ராதாவின் செல்ல கொஞ்சல்கள் என பகிர்ந்து கொள்கிறார் துளசி.

கடலின் தாக்கம் இனி கொஞ்சநாளைக்கு எல்லா சேனல்களிலும் அலையடிக்கும் என்பதால் ஜீ தமிழ் சேனல் தனது புதிய நிகழ்ச்சிக்கு துளசியை பேட்டி கண்டுள்ளது. ஞாயிறு இரவு 8 மணிக்கு ஸ்டூடியோ 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

 

விஜய் டிவியில் ஜோடியாக சமைத்து அசத்தும் சின்னத்திரை நட்சத்திரங்கள்!

Vijay Tv Kitchen Super Star Doubles

சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பாடல், நடனம் மட்டுமல்லாது சமைத்தும் அசத்துகின்றனர் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

விதம் விதமான சமையல், அதற்காக அவர்கள் மெனக்கெடும் பாங்கு சுவாரஸ்யமானவை. ஒருமணிநேரத்தில் சமைத்து அசத்தவேண்டும்.

இதுநாள்வரை கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தனியாக சமைத்து அசத்திய சின்னத்திரை பிரபலங்கள் இப்போது தங்களின் தாயார், மனைவி, சகோதரி என ஜோடியாக சமைக்கின்றனர்.

திங்கட்கிழமை முதல் புதிதாக தொடங்கியுள்ள கிச்சன் சூப்பர் ஸ்டார் டபுள்ஸ் நிகழ்ச்சியில் பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் டாக்டர் ஷர்மிளா, ராகவி, ராணி, பூஜா, நீபா, சுக்ரன்,பாலாஜி, லக்ஷ்மி, கோபிடா உள்ளோட்டோர் தங்களின் தாயார், மனைவி சகிதமாக களம் இறங்கியுள்ளனர்.

தனியாக சமைப்பதை விட துணையோடு சமைப்பது எளிதானது என்பதால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் அதிகரிக்கிறது. சைவம் மட்டுமல்ல அசைவமும் சமைக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியை நடிகர் சுரேஸ் தொகுத்து வழங்குகிறார் செஃப் தாமு, செஃப் வெங்கட் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று சமைக்கும் சின்னத்திரை நட்சத்திரங்களை உற்சாகப்படுத்துகின்றனர்.

 

'விஸ்வரூபத்தில் 30 நிமிட காட்சிகளையாவது வெட்டி எறிய வேண்டும்!' - இஸ்லாமிய அமைப்புகள் உறுதி

Islamic Organisations Want Chop Atleast 20 Scenes

சென்னை: விஸ்வரூபம் படத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டினால்தான் இணக்கமான முடிவை எட்ட முடியும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

அவர்கள் சொல்வதுபோல வெட்டினால் 30 நிமிட காட்சிகளை தூக்கி எறிய வேண்டியிருக்கும்.

படத்ததில் ஆப்கன் குழந்தைகள் கைகளை துப்பாக்கியைப் பயன்படுத்துவது போல பாவித்து விளையாடுவது, மனித வெடிகுண்டு கடைசியாக தொழுவது, குரான் ஒலிப்பது, உமர் முல்லா வசனங்கள் போன்றவற்றை முழுமையாகவே நீக்குமாறு கூறியுள்ளனர் இஸ்லாமிய தலைவர்கள்.

இதுபோல் முஸ்லிம்கள் தொழுகை செய்வதிலும் சில முரண்பட்ட காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றையும் நீக்கச் சொல்கிறார்கள்.

கமல் சார்பில் அவரது அண்ணன் பேசினாலும், காட்சிகளை வெட்டுவதில் இறுதி முடிவெடுக்க கமல் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறாராம்.

அப்படியென்றால் இந்த பேச்சுவார்த்தையில் அர்த்தம் இல்லையே. அவரை முதலில் வரச்சொல்லுங்கள். பிரச்சினையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர எங்களுக்கல்ல, என்று தெரிவித்துள்ளனர் இஸ்லாமிய அமைப்பினரும், இந்த பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்கும் அதிகாரிகளும்.

இரு தரப்பினருக்கும் சுமூக உடன்பாடு ஏற்பட்டால் ஒரிரு நாட்களில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.

 

வட இந்தியாவில் 600 திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியீடு!

Viswaroopam Gets 600 Plus Theaters

மும்பை: விஸ்வரூபம் படத்தின் இந்திப் பதிப்பு இன்று வட இந்தியாவில் வெளியாகிறது. 600 அரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் வெளியாவதாக கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ‘விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதிக்கப்பட்டு, அந்தப் பிரச்னை இன்னும் முடியாத நிலையில், இந்தியில் அப் படத்தை ரிலீஸ் செய்கிறார் கமல். அதனுடன் தமிழ்ப் பதிப்பையும் வட இந்தியாவில் வெளியிடுகிறார்.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 600 தியேட்டர்களுக்கும் மேல் இந்தப் படம் ரிலீசாகிறது.

டெல்லி, புறநகர் பகுதிகளான நொய்டா, குர்கான், பரீதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் 20 தியேட்டர்களில் இந்தப் படம் வெளியாகிறது. மத்தியபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா மாநிலங்களிலும் குறிப்பிட்ட நகரங்களில் படம் வெளியாகிறது.

உத்தரப்பிரதேசத்தில் இந்தப் படத்துக்கு மாநில அரசே தடை விதிக்கக் கூடும் என்று கூறப்பட்டுள்ளதால், அங்கு படம் வெளியாவது குறித்து எந்தத் தகவலும் இல்லை.