'தலைவர்' ரெடி... விரைவில் ராணா - சௌந்தர்யா தகவல்


சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது உடல் ரீதியாக பக்காவாகத் தயாராகிவிட்டார். விரைவில் ராணா படப்பிடிப்புத் தொடங்கும் என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தகவல் வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் உடல் நிலை காரணமாக அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட படமான ராணா வரும் வராது என அடிக்கடி வதந்திகள் கிளம்பியபடி இருந்தன.

இந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிசம்பரில் படம் தொடங்குவது குறித்து அறிவிப்பு வரும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் இந்தப் படம் தள்ளிப் போவதாக சில இணையதளங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், ரஜினியின் இளைய மகளுமான சௌந்தர்யா கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது பக்காவாகத் தயாராகிவிட்டார். எங்கள் வசதிப்படிதான் ஷூட்டிங்கை சீக்கிரம் வைத்துக் கொள்ளுமாறு அவர் கூறி வருகிறார். ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அப்பா நன்றாக பழையபடி நிகழ்ச்சிகளுக்கு போகத் தொடங்கிய பிறகே ஷூட்டிங்கைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.

அதன்படி இப்போது தலைவர் பக்காவாகத் தயாராகிவிட்டார். விரைவில் அவரே ஷூட்டிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்," என்றார்.

ஆஹா... ரஜினி ரசிகர்களுக்கு பத்தாயிரம் வாலா செய்தியல்லவா இது!
 

மேலும் ஒரு கன்னட நடிகர் மீது மனைவி வரதட்சணை புகார்


மேலும் ஒரு நடிகர் மீது வரதட்சணைப் புகார் எழுந்துள்ளது. கன்னட நடிகர் பிரசாந்த் தன்னை வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்துவதாக அவர் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இது போல் இன்னொரு கன்னட நடிகரான பிரசாந்தும் வரதட்சணை புகாரில் சிக்கியுள்ளார். ஓரட்டா ஐலவ்யூ, வெங்கி, அஞ்சதிரு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் அவரால் பெரிய இடத்தைப் பிடிக்க முடியவில்லை. படத் தயாரிப்பிலும் இறங்கினாராம். இதனால் பணக் கஷ்டம் ஏற்பட்டது. மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவரது மனைவி சசிரேகா மாநில மகளிர் நல ஆணையத்தில் பிரசாந்த் மீது புகார் மனு அளித்துள்ளார்.

அதில் எனது கணவர் வரதட்சணை கேட்டு என்னை தினமும் சித்ரவதை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரசாந்தும் சசிரேகாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மீண்டும் இந்திப் பட வாய்ப்பைப் பிடிப்பேன்! - த்ரிஷா


காட்டா மீட்டா தோல்விக்குப் பிறகு கொஞ்ச காலம் சட்டி சுட்டதடா என்று தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் த்ரிஷா.

இப்போது அவருக்கு இந்திப் பட ஆசை மீண்டும் வந்துவிட்டது. ஒரு படம் தோற்றால், மீண்டும் அந்த மொழியில் நடிக்காமல் போவதா என்று சிலிர்த்துக் கிளம்பியுள்ளார் த்ரிஷா.

இதுபற்றி அவர் கூறுகையில், "எந்த மொழியாக இருந்தாலும் படம் தோற்றால் மனசு கஷ்டப்படுகிறது. காட்டாமீட்டா இந்திப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சந்தோஷப்பட்டேன். அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய இந்திப் பட வாய்ப்புகள் வந்தன. அட்வான்ஸோடு தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள்.

ஆனால் நான் எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. காட்டாமீட்டா ரிலீஸ் ஆனபிறகு தான் புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாவேன் என்று கூறிவிட்டேன்.

படம் நன்றாக போகாததால் என்னைத் தேடிவந்தவர்கள் காணாமல் போனார்கள். இதுதான் சினிமா என்றாலும், இந்த ஏமாற்றத்தை என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் மீண்டும் இந்திப்பட வாய்ப்பைப் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்போது ஒரு தமிழ் மற்றும் இரு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறேன்," என்றார்.
 

மலையாள நாவலைப் படமாக்கும் பாலா!


வழக்கமாக தன் சொந்தக் கதைகளை மட்டுமே இயக்கும் பாலா இந்த முறை மலையாள நாவல் ஒன்றைப் படமாக்குகிறார்.

பாலாவின் படங்களில் பிரபலமான எழுத்தாளர்கள் பணியாற்றினாலும் அவர்களை வசனம் எழுத மட்டுமே அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் அவன் இவன் படம் சொல்லிக் கொள்ளுமளவு போகாத காரணத்தால், இந்த முறை அவர் நாவலைப் படமாக்கும் முயற்சியொன்றில் இறங்கியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான நாவல் ஒன்றை தமிழில் எரியும் தணல் எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளனர். இந்த நாவலைத்தான் சினிமாவாக எடுக்கிறார் பாலா. இரண்டு குழந்தைகளின் பெற்றோர் படும் பாடுகளைச் சொல்லும் கதை இது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தக் கதையில், கமர்ஷியல் ஹீரோக்கள் நடித்தால் சரிவராது என்பதால், தனது வழக்கமான நாயகர்களை விட்டுவிட்டு அதர்வாவை நாயகனாக்கியிருக்கிறார் பாலா.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் படம் குறித்து முழுமையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
 

நவம்பர் 7 முதல் மிஷ்கினின் முகமூடி ஷூட்டிங் ஆரம்பம்!


மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் 7-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

யுத்தம் செய் படத்துக்குப் பிறகு, மிஷ்கின் இயக்கும் புதிய படம் முகமூடி. சூப்பர் மேன் மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ கதை இது.

ஜீவா நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இரண்டாவதாக வந்த பூஜா ஹெக்டேவும் நடிக்கின்றனர்.

மிஷ்கினால் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நரேன், முதல் முறையாக இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். யுத்தம் செய் படத்தின் பின்னணி இசையைக் கவனித்த கே, முகமூடியில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நவம்பர் 7-ம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் முகமூடி என்பது குறிப்பிடத்தக்கது.
 

லேகாஃபுட்ஸ் விளம்பரத்தில் 'அம்புலி' நாயகி சனம் ஷெட்டி!


அம்புலி 3 டி படத்தின் நாயகியான சனம் ஷெட்டியின் முதல் தமிழ்ப் படம் வெளி வரும் முன்பே விளம்பரப்படம் வந்துவிட்டது. அது லேகா ஃபுட்ஸுக்காக அவர் நடித்துள்ள புதிய விளம்பரம்!

விளம்பரம், சினிமா, இசை என பல தளங்களில் இயங்குபவர் லேகா ரத்னகுமார். வழக்கமாக படத்தின் பெயரால்தான் நடிகைகள் அறியப்படுவார்கள். ஆனால் லேகா புண்ணியத்தால், நல்லெண்ணெய் சித்ரா என ஒரு தயாரிப்பின் பெயரால் பிரபலமானவர் சித்ரா.

இவர் மட்டுமல்ல, ஜோதிகா, சினேகா, பாக்யராஜ், பூர்ணிமா என அத்தனை பிரபலங்களையும் தனது விளம்பரப் படங்களில் நடிக்க வைத்த லேகா ரத்னகுமார், இப்போது புதிதாக உணவுகள், அதன் செய்முறை என பக்காவான தகவல்கள் அடங்கிய இணையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

லேகாஃபுட்ஸ் எனும் இந்த இணையதளத்தில் உலகின் அத்தனை விதமான உணவு வகைகள், அதைச் செய்யும் முறைகள் ஆகியவற்றை செய்முறை விளக்கங்கள் மற்றும் படங்களுடன் வெளியிட்டுள்ளனர்.

இந்த தளத்துக்காகத்தான் விளம்பர மாடலாக நடித்துள்ளார் சனம் ஷெட்டி.

என்ன திடீர்னு சமையல், இணையதளம்னு இறங்கிட்டீங்க? என்று ஆரம்பித்தோம்.

இது திடீர் யோசனை அல்ல. பல ஆண்டுகளாக மனதில் இருந்த திட்டம். என்னுடைய ஆரம்ப நாட்களில் சமையல் பொருள்கள், பருப்புப் பொடி போன்றவற்றை பேக் செய்து விற்பனை செய்தோம். அப்போதே ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினோம்.

ஆனால் விளம்பரப் படங்கள், இசை, சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என பரபரப்பாகிவிட்டோம்.

ஆனால் மனசுக்குள் இந்த சமையல் - ஹோட்டல் இரண்டும் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருந்தது. நான் இயக்கும் விளம்பரப் படங்களும் கூட சமையலுடன் தொடர்புடையவைதான். சரி, இப்போதைக்கு, நல்ல உணவுகள் எவை என்பதை மக்களுக்கு எழுத்தில் காட்டுவோம். இதை பெரிய அளவில் செய்யலாம் என்றுதான் லேகாஃபுட்ஸ் எனும் இந்த தளத்தை தொடங்கியுள்ளேன்.

இதில் வரும் உணவுக் குறிப்புகள் அத்தனையும் ஒரிஜினலானவை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ரெஸிபிகளை எங்களுக்கு எழுதிக் கொடுக்கிறார்கள்.

விரைவில், இந்த தளத்துக்காகவே சமையல் செய்முறை விளக்கங்களை வீடியோவாக எடுத்து நேரடியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

இந்த தளத்துக்காக எடுக்கப்பட்ட 3 நிமிடங்கள் ஓடக்கூடிய அசத்தலான விளம்பரப் படத்தில்தான் சனம் ஷெட்டி நடித்துள்ளார். இந்த விளம்பரம் யு ட்யூப்பிலும் ரிலீசாகிறது.

விரைவில் உலகளாவிய சமையல் போட்டியொன்றை நடத்தவிருக்கும் லேகா, ஐபோன் மற்றும் ஐபேட்களை அதற்குப் பரிசாக அறிவிக்கப் போகிறாராம்.
 

வேலாயுதத்துக்கு 'யு' சான்றிதழ்!


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்துக்கு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

விஜய் - ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம், சரண்யா மோகன் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தை, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வரும் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாகிறது. படத்தை தணிக்கைக் குழுவினருக்கு நேற்று திரையிட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த பிறகு, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருப்பதாகக் கூறிய அதிகாரிகள், படத்தில் சண்டைக் காட்சிகளில் மட்டும் சில வெட்டுக்களைக் கொடுத்தனர். பின்னர் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என யு சான்று அளித்தனர்.

இந்தப் படம் திங்களன்றுதான் சென்சாருக்கு திரையிடுவதாக இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, நேற்றே திரையிடப்பட்டுவிட்டது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே வேலாயுதம் அரங்குகளுக்கு வருகிறது.