"வெத்தல போட்ட ஷோக்குல".. மீண்டும் வரும் அமரன்.. களம் குதிக்கும் கார்த்திக்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் தனது நடிப்பால் கொடிகட்டிப் பறந்த நவரச நடிகர் கார்த்திக் மீண்டும் பல வருடங்கள் கழித்து, கதையின் நாயகனாகக் களமிறங்குகிறார்.

தனது துள்ளல் மற்றும் காமெடி நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கட்டி போட்டு வைத்திருந்த கார்த்திக், தற்போது மகன் கவுதம் நடிக்க வந்ததைத் தொடர்ந்து குணச்சித்திர நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

KARTHIK’ ‘AMARAN PART 2′   READY TO START ON JUNE

தற்போது இவரின் நடிப்பில் 1992 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில், மீண்டும் கதாநாயகனாக களத்தில் குதிக்கிறார். அமரன் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய ராஜேஷ்வரே இந்தப் பாகத்தையும் இயக்குகிறார். அமரன் படத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நடிகை பானுப்பிரியா நடித்திருந்தார்.

இவர்களுடன் இணைந்து சில்க் ஸ்மிதா, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் ராதாரவி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது எடுக்க விருக்கும் அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கின் ஜோடியாக இரண்டு நாயகிகளை நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளதாக இயக்குனர் ராஜேஷ்வர் நேற்று நடந்த படத்தின் அறிமுக விழாவில் கூறினார்.

அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் படப்பிடிப்பைத் தொடங்கி அடுத்த வருடம் கோடைவிருந்தாக படத்தைத் திரைக்கு கொண்டுவர நடிகர் கார்த்திக்கும், இயக்குநர் ராஜேஷ்வரும் திட்டமிட்டுள்ளனர்.

மகன் கூட போட்டியா.. கார்த்திக்!?

 

விருதில் மட்டுமல்ல வசூலிலும் நம்பர் 1 தான்- காக்கா முட்டை

சென்னை: இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை திரைப்படத்திற்கு தொடர்ந்து தியேட்டர்களில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இரண்டு சிறுவர்களின் பீட்சா சாப்பிடும் ஆசையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட காக்கா முட்டை திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது.

Kaaka Muttai  Movie – Houseful shows In Theaters

கடந்த வெள்ளிகிழமை இந்தியா முழுவதும் இந்தப் படம் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் சுமார் 100 தியேட்டர்களில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் வெளியான அன்று, பல தியேட்டர்கள் அதிசயமாக ஹவுஸ்புல் காட்சிகளால் நிரம்பி வழிந்தன. பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு கூட இந்த வரவேற்பு இல்லாத நிலையில் இந்தப் படம் தொடர்ந்து நன்றாக ஓடிவருகிறது.

இதனைப் பார்த்து சந்தோசமடைந்த பல தியேட்டர் அதிபர்கள் படத்தை கூடுதல் காட்சிகளுக்கு மாற்றி உள்ளனர், மேலும் பல தியேட்டர்களில் படமானது திரையிடப்பட்டிருக்கிறது. விருது பெற்ற படங்கள் வசூலில் சோடை போய்விடும் என்ற கருத்தை காக்கா முட்டை தகர்த்து விட்டிருக்கிறது. படம் வெளியான முதல் நாளே சுமார் 1 கோடி ரூபாயை வசூலித்த இப்படம் இதுவரை 5 கோடியை வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைப் போன்ற தரமான படங்களை மற்றவர்களும் எடுப்பதற்கு காக்கா முட்டை ஒரு வழியைக் காட்டியிருக்கிறது என்று திரையுலகைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காக்கா முட்டை - நம்பிக்கை!

 

தொடர்ந்து 7 வெற்றிகள்... 'நேரம்' ஹீரோவுக்கு கைகொடுக்கும் நேரம்!

திருவனந்தபுரம்: அப்படி என்ன வசியம் இருக்கிறது என்று தெரியவில்லை தொடர்ந்து நடித்த 7 படங்களும் ஹிட்டடித்து இந்த ஹீரோவின் மார்க்கெட்டை உச்சத்தில் உயர்த்தி விட்டுள்ளது.

நேரம் படத்தின் ஹீரோ நிவின் பாலியின் படங்களில் அப்படி என்ன இருக்கிறதோ கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து விடுகின்றனர். நேரம் படத்தின் ஹீரோ நிவின் பாலி தற்போது மலையாள திரை உலகின் முன்னணி ஹீரோவாக உயர்ந்து விட்டார்.

New Star Nivin Pauly Salary Increased

கடந்த வருடம் 4 படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வருடம் இதுவரை நிவின் நடித்து வெளிவந்த3 படங்களுமே தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை நிவினுக்கு பரிசளித்து இருக்கிறது. ஆக மொத்தம் 7 படங்கள் வெற்றி பெற்று உள்ளதால் நிவினின் சம்பளம் கணிசமாக உயரும் என்று கூறுகிறார்கள். நிவின் இதுவரை ஒரு படத்திற்கு 45-50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் என்று மலையாள திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.

தற்போது அடைந்துள்ள வெற்றிகள் மூலம் மேலும் நிவின் தனது சம்பளத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிவின் சம்பளத்தை அதிகரிக்கா விட்டாலும், இந்தத் தயாரிப்பாளர்கள் அவர் கேட்காமலேயே சம்பளத்தை உயர்த்தத் தயாராக உள்ளனர்.

ஏனெனில் கடந்த வாரம் நிவினின் நடிப்பில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் இதுவரை வெளியான ஒரு வாரத்திலேயே சுமார் 10.3 கோடியை வசூலில் குவித்து பெங்களூர் டேஸ் மற்றும் திரிஷ்யம் படங்களின் வசூலைப் பின்னுக்குத் தள்ளி விட்டது. இது ஒன்று பத்தாதா நிவினின் சம்பளம் உயர்வதற்கு?

தமிழ் சினிமாவில இந்த மாதிரி நடந்திருந்தா சம்பளமா பல கோடிகள் கேட்டிருப்பாங்க......

 

ப்ளீ்ஸ் சண்டை போடாதீங்க: அஜீத், விஜய், சூர்யா ரசிகர்களுக்கு வெங்கி வேண்டுகோள்

சென்னை: சண்டை போடாதீர்கள் என அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

யார் சண்டை ஓய்ந்தாலும் ஓயும் இந்த அஜீத், விஜய் ரசிகர்கள் சண்டை மட்டும் ஓயவே ஓயாது போல. அவர்கள் எப்பொழுது மோதுவார்கள் என்றே யாராலும் கூற முடியாது. இருக்கவே இருக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் என்று அதன் மூலம் தற்போது மோதிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கண்டமேனிக்கு மோதிக் கொண்டனர். இந்த சண்டையில் மாஸ் படம் தொடர்பாக சூர்யாவின் ரசிகர்களும் சேர்ந்து கொண்டனர். ஒருவரையொருவர் ஆசை தீரும் வரை திட்டித் தீர்த்தனர். இவர்கள் சண்டை போட்டதால் அது குறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தயவு செய்து ஒருவரையொருவர் வெறுப்பதை நிறுத்துங்கள்!! இறுதியில் நாம் எல்லாம் ஒரே குடும்பம்!! சினிமாக்காரர்கள்!! அதனால் வெறுப்பை விட்டுவிட்டு சினிமாவை ரசியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

முதல் நாளே 10 கோடியை வசூல் செய்தது "தில் தடக்னே தோ"

மும்பை: பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் நடிப்பில் கடந்த வெள்ளிகிழமை வெளியான தில் தடக்னே தோ திரைப்படம் ரிலீசான முதல் நாளே சுமார் 10.53 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைதுள்ளது.

இயக்குநர் சோயப் அக்தரின் கைவண்ணத்தில் வெளிவந்த இப்படம் இந்த ஆண்டின் இரண்டாவது மிகப் பெரிய ஓபனிங் படமாக அமைந்துள்ளது.

Dil Dhadakne Do earns Rs 10.53 crore on day one

அக்சய் குமார் நடிப்பில் வெளிவந்த கப்பர் இஸ் பேக் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஓபனிங் படமாக பாலிவுட்டில் அமைந்தது. படம் வெளியான முதல் நாளே 13 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. அதற்கு அடுத்த இடத்தில் தில் தடக்னே தோ திரைப்படம் 1 கோடி ரூபாயை குறைவாக வசூல் செய்தது இரண்டாம் இடத்தில் உள்ளது.

குடும்ப பின்னணி மற்றும் செண்டிமெண்ட், காதல் என எல்லாம் கலந்த கலவையாக அமைந்த இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உள்ளது. 85 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முதல் நாளே 10.53 கோடியை வசூல் செய்திருக்கிறது.

வார இறுதி நாட்களான நேற்று மற்றும் இன்று இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இந்தித் திரையுலகில் அதிகரித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் இந்த வருடத்தின் 100 கோடி வசூல் செய்த படங்களில் தில் தடக்னே தோ வும் இடம்பெறலாம்.

 

கமல் படத்தில் “அவன் இவன்” மது ஷாலினி

சென்னை: கமலின் புதிய படமான தூங்காவனம் படத்தில், அவன் இவன் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த நடிகை மது ஷாலினி தற்போது நடித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் பாலா இயக்கி வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவின் ஜோடியாக நடித்தவர் அழகு நடிகை மது ஷாலினி. அந்த ஒரே படத்துடன் தமிழ் திரையுலகில் இருந்து காணாமல் போன மது ஷாலினியைத் தற்போது தெலுங்கு உலகம் தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

Madhu shalini in kamal haasan’s thoongaavanam

மது ஷாலினிக்கு தற்போது ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆமாம் 'நாயகன்' கமலின் தூங்காவனம் திரைப்படத்தில் தற்போது வாய்ப்புக் கொடுத்துள்ளார். படத்தில் த்ரிஷா தான் நாயகி என்றாலும் ஒரு முக்கியமான வேடத்தை மது ஷாலினிக்கு கொடுத்திருக்கிறாராம் கமல். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் தூங்காவனத்தில் நாள்தோறும் யாராவது ஒருவரை புதிதாக நடிக்க வைக்கிறார் கமல்.

படத்தில் முதலில் வில்லனாக நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நாயகியாக நடிகை த்ரிஷா என இருந்த நிலையில் தற்போது மற்றொரு வில்லனாக கன்னட நடிகர் கிஷோர் மற்றும் இன்னொரு நாயகியாக மது ஷாலினி சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நயன் வழியில் சமந்தா... ச்சமத்து!

சென்னை: நயனதாரா வழியில் சமந்தாவும், தனது முன்னாள் காதலருடன் இணைகிறார் - படத்துக்காக.

நடிகர் சிம்புவை உருகி உருகிக் காதலித்துப் பிரிந்த நடிகை நயன்தாரா, அதற்குப் பின் அவரிடம் எந்தத் தொடர்பும் இல்லாமலேயே பார்த்துக் கொண்டார். இடையில் சிலபல காரணங்களால் சில வருடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்த நயனிடம், சிம்புவுடன் ஜோடியாக நடிக்க முடியுமா என்று தூண்டிலை வீசினார் இயக்குநர் பாண்டிராஜ்.

Samantha And Siddharth In Aranmanai Part-2?

பழைய கதைகளை கிண்டிக் கிளறாமல் கேட்ட பணத்தை கொடுங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிய நயன், தொடர்ந்து அதே போன்று கால்ஷீட் எதுவும் சொதப்பாமல் சொன்னபடி நடித்துக் கொடுத்தார்.

தற்போது இதே வழியில் செல்கிறார் நடிகை சமந்தா, நடிகர் சித்தார்த்துடன் பல வருடங்களாக தொடர்ந்த காதல் தற்போது முடிவுக்கு வந்து விட்டது.

இதனால் மன வருத்தத்தில் இருந்த சமந்தா அது எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் தற்போது நடிகர் சித்தார்த்துடன் அரண்மனை பார்ட் 2 வில் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். நிஜ வாழ்க்கை வேறு நடிப்பு வேறு என்பதைத் தற்போதைய நடிகைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர்.

ஒரு செடியில ஒரு பூ மட்டும் தான் பூக்கனுமா என்ன?

 

"நீ வெட்கம் கெட்டவன்... நீ மென்டல்".. டிவிட்டரை "மெர்சலாக்கும்" விஜய் - அஜீத் ரசிகர்கள்!

சென்னை: சூரியன் மேற்கில் உதிப்பது எப்படி சாத்தியமில்லையோ அதே போன்று அஜித், விஜய் ரசிகர்கள் மோதலை நிறுத்துவதும் சாத்தியமில்லை போல.

ஆமாம் தினம் தினம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சமூக வலைதளங்களில் சண்டையைத் தொடரும் இவர்கள் ட்விட்டர் போன்ற வலைதளங்களின் வரவால் அந்த சண்டையையும் இந்திய அளவில் டிரெண்டாக்கி விடுகின்றனர்.

கடந்த வாரத்தில் மாசு என்ற மாசிலாமணி படத்தில் நடிகர் சூர்யா அஜித் மற்றும் விஜய் படங்களின் வசனங்களைப் படத்தில் பேசியதைக் கண்டித்து, சமூக வலைதளங்களில் மோதிக் கொண்ட அஜித், விஜயின் ரசிகர்கள் நேற்று மீண்டும் ட்விட்டர் மூலமாக மோதிக் கொண்டுள்ளனர். வேறு எந்த நடிகர்களின் ரசிகர்களும் இந்த அளவுக்கு மோதிக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நேற்று நடந்த மோதலுக்கும் காரணம் சூர்யாவின் மாசு படம் தானாம். சூர்யாவின் மாசு படத்தைக் கிண்டலடித்து மோதிக் கொண்ட அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள், தங்கள் மோதலுக்கு வைத்த தலைப்புக்கள் இவைதான். #WhyVijayAndHisFansAreShameless என்று அஜித் ரசிகர்களும் #WhyAjithAndHisFansAreMentals என்று விஜய் ரசிகர்களும் மோதலுக்கு தங்கள் தலைப்பிட்டு டிவிட்டரை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் சமாதானம் சொல்லிக் கொள்ளுங்கள் ரசிகர்களே!