இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி

சென்னை: விஜய் நடித்த படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் விஜய் நடித்த ஜில்லா படத்துக்குத்தான் என்று தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி தெரிவித்தார்.

ஜில்லா படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்கள் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியும் இயக்குநர் ஆர் டி நேசனும்.

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூல் ஜில்லாவுக்குதான்!- ஆர்பி சவுத்ரி

படத்தின் ரிசல்ட் குறித்து ஆர்பி சவுத்ரி கூறுகையில், "படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெளியான விஜய்யின் படங்களிலேயே மிகப் பெரிய ஆரம்ப வசூல் ஜில்லாவுக்குக் கிடைத்துள்ளது என்னை பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜில்லா மட்டுமல்ல, உடன் வெளியான அஜீத்தின் படமும் வெற்றியடைந்துள்ளது ஒரு தயாரிப்பாளராக என்னை சந்தோஷப்பட வைத்துள்ளது.

ஆரம்ப காலங்களில் தியேட்டர் விசிட் போவேன். பின்னர் போவதை விட்டுவிட்டேன். ஆனால் 85 படம் எடுத்த பிறகு இப்போது இந்தப் படத்துக்கு ரசிகர்கள் செய்திருந்த ஏற்பாடுகளுக்காக போயிருந்தேன்.

அதிகாலையிலேயே அவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தனர். அந்த காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கும் போவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்ல... கேரளாவில் நேரடி மலையாளப் படங்களை மிஞ்சும் அளவுக்கு நேற்று வசூல். எனக்கு மிகப் பெரிய சந்தோஷம்," என்றார்.

 

வீரம் - விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.5/5

நடிப்பு - அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம், பாலா, அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத், முனீஷ், சோஹைல்

ஒளிப்பதிவு - வெற்றி

எடிட்டர் - மு காசி விஸ்வநாதன்

வசனம் - சிவா, பரதன்

தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ்

எழுத்து, இயக்கம் - சிவா

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் வெற்றி ஃபார்முலாவான அண்ணன் - தம்பி பாசம், காதலை கமகம பொங்கல் மசாலாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் சிவா.

படத்தில் அதிகபட்ச, நம்ப முடியாத ஹீரோயிசம் இருந்தாலும், ஏன் எதற்கு என்று கேட்க வைக்காமல் பரபரவென காட்சிகளை நகர்த்தியிருப்பது ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட வைக்கிறது.

மதுரை ஒட்டன்சத்திரம்தான் கதைக் களம். இங்கு தானிய கிடங்கு வைத்திருக்கும் விநாயகம் பிரதர்ஸ் ஐவரில் மூத்தவர் அஜீத். அவருக்கு நான்கு பாசக்கார தம்பிகள். ஐந்தாவது தம்பியாக சேர்ந்து கொள்கிறார் ஜாமீன் வக்கீல் சந்தானம். விநாயகம் பிரதர்ஸின் முழு நேர பணியே தப்பு எங்கே நடந்தாலும், அதை அதிரடியாக தட்டிக் கேட்பதுதான்.

வீரம் - விமர்சனம்

திருமணம் செய்து கொண்டால் மனைவியாக வருபவள் தம்பிகளைப் பிரித்துவிடுவாள் என்ற பயத்தில் பெண் வாடையே வேண்டாம் என தம்பிகளுக்காக வாழ்கிறார் அஜீத்.

ஆனால் தம்பிகளோ ஆளுக்கொரு காதலியைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால் பின்னர் தங்களுக்காகவே அனைத்தையும் துறந்து வாழும் அண்ணனுக்கு திருமணம் செய்யாமல், நாம் காதலிப்பதில் அர்த்தமில்லை எனப் புரிந்து, திருமண முயற்சியில் இறங்குகிறார்கள்.

அஜீத்துக்கு கோப்பெருந்தேவி என்ற பெயர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதைப் புரிந்து, அதே பெயரைக் கொண்ட அழகி தமன்னாவை வீட்டுக்குப் பக்கத்தில் குடிவர வைக்கிறார்கள். அஜீத்துக்கும் அவருக்கும் காதல் ஏற்பட பல முயற்சிகளைச் செய்கிறார்கள். அப்போதுதான் தமன்னாவுக்கும் அவர் குடும்பத்துக்கும் அடிதடி வன்முறை என்றாலே பிடிக்காது என்பது தெரிகிறது. இருந்தாலும் பலவித பொய்களச் சொல்லி காதல் ஏற்பட வைக்கிறார்கள். தமன்னாவின் அப்பா நாசரிடம் சம்மதம் வாங்க, அவர்கள் ஊருக்குச் செல்ல, ரயிலில் பகை துரத்துகிறது. ஒரு பயங்கர சண்டை தமன்னா கண் முன்னே நடக்கிறது. அதிர்ந்து நிற்கிறார் மென்மையான தமன்னா...

வீரம் - விமர்சனம்

(வீரம் படங்கள்)

ஆனால் அந்த விரோதம் பின் தொடர்வது அஜீத்தை அல்ல.. என்ற உண்மை பின்னர் தெரிகிறது. எதற்காக இந்த விரோதம்.. அஜீத் வன்முறையை விட்டாரா... அஹிம்சாவாதி தமன்னாவை கைப்பிடித்தாரா என்பது மிச்சமுள்ள ஒரு மணி நேரப் படம்!

இந்தப் படத்தில் எத்தனை குறைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும்... இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அஜீத் போன்ற அண்ணன், விதார்த், பாலா, முனீஷ், சோஹைல் மற்றும் சந்தானம் போன்ற தம்பிகள் உலகத்தில் எங்காவது இருப்பார்களா... இருக்க மாட்டார்களா என ஏங்க வைக்கின்றன ஒவ்வொரு காட்சியும். ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதி வரை அத்தனை பாஸிடிவான பாசம். எங்கே இந்தத் தம்பிகள் துரோகிகளாகிவிடுவார்களோ என பதைக்கிறது மனசு. நல்லவேளை... கடைசி வரை அந்தத் தப்பை செய்யாமல், நேர்த்தியாக நேர்மறைக் காட்சிகளாகவே வைத்த இயக்குநர் சிவாவைப் பாராட்ட வேண்டும்.

ஒரு மாஸ் ஹீரோவுக்கு எப்படி காட்சிகள் அமைக்க வேண்டும் என்பதை சிவாவிடம் இளம் இயக்குநர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் அப்படி கச்சிதமாக அமைத்திருக்கிறார். பிரதீப் ராவத் தன் தம்பிகளை துரத்தும்போது, ஆல மர ஊஞ்சலில் சாவகாசமாய் ஆடிக் கொண்டு, பின்னர் தம்பிகளுக்கும் சண்டை சொல்லிக் கொடுத்து எதிரிகளைப் புரட்டியெடுப்பாரே அஜீத்... அடேங்கப்பா, பிரமாதம். தொன்னூறுகளில் ரஜினி படங்களில் பார்த்தவைதான் என்றாலும், இப்போது மீண்டும் பார்க்கும்போது நன்றாகத்தான் உள்ளது!

வீரம் - விமர்சனம்

தமன்னாவுக்கும் அஜீத்துக்கும் காதல் வர வைக்க தம்பிகள் எடுக்கும் முயற்சிகளும், அவர்களுக்கு கூடவே இருந்து ஐடியா கொடுத்தபடி கலாய்க்கும் சந்தானமும் செம செம! இருந்தாலும் ஒரு மாவட்ட கலெக்டரை, இப்படி மாமா வேலை பார்க்கும் அளவுக்கு இறக்கியிருக்க வேண்டாம் (அதான் பள்ளிக் கூட நட்புன்னு சொல்லிட்டாருல்ல இயக்குநர்!).

அஜீத்துக்கு ஏன் நரைமுடி கெட்டப் என்பதற்குக் கூட ஒரு காட்சி வைத்து அத்தனை பேரையும் ஏற்க வைத்திருக்கிறார் சிவா.

'என்னை என்ன சாதின்னா கேக்குற... நீ தேவர்னா நான் தேவர்... நாடார்னா நானும் நாடார்.. தலித்னா நானும் தலித்... அய்யர்னா நான் அய்யர்.. எனக்கு எந்த மதமும் இல்ல... நீ எப்படிப் பார்க்கறியோ அப்படித்தான் நான்!" கைத்தட்டலும் விசில் சத்தமும் அடக்க ரொம்ப நேரமாகிறது அரங்கில். மாஸ் சீன்-னா அது இதான்!

வீரம் - விமர்சனம்

'சோறு போட்டவ தாய்... சொல்லிக் கொடுத்தவன் தந்தை.. இந்த ரெண்டையும் இந்தக் குடும்பம் எனக்குக் கொடுத்தது...' - இந்த வசனத்தை அஜீத் பேசும்போது அத்தனை நெகிழ்ச்சி.

முதல் முறையாக அஜீத்தைச் சுற்றி நிறைய குழந்தைகள்... அதுவும் மிக இயல்பாய், வலிந்து திணிக்காமல்.

அடுத்து பாராட்ட வேண்டிய விஷயம்... மாட்டு வண்டி, காளைகள், ஆடு மாடுகள் என தமிழ் சினிமா காட்ட மறந்த கிராமிய அடையாளங்களை அஜீத் மூலம் காட்டியிருப்பது.

இடைவேளைக்குப் பின், தாடியை எடுத்துவிட்டு கொஞ்சம் மீசையும் (அதில் ஏன் கஞ்சத்தனம்... இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மீசையை வைத்திருக்கலாம்.. கலக்கலாக இருந்திருக்கும்!), அளவான புன்னகையுமாக அஜீத் வந்து நிற்கும்போது, பத்து வயது குறைந்த இளைஞனைப் பார்க்க முடிகிறது.

வீரம் - விமர்சனம்

தமன்னா, அவரது அப்பா, குடும்பத்தினருக்குத் தெரியாமலேயே தன் தம்பிகள் துணையுடன் அவ்வளவு பயங்கரங்களையும் அவர் சமாளிக்கும் விதத்தை, கேள்விகளின்றி ஏற்க வைக்கிறார் இயக்குநர்.

முக்கியமாக, எந்தக் காட்சியிலும், வாய்ப்புகள் இருந்தும் அநாவசிய துதி பாடலோ, பில்ட் அப்போ இல்லாமல் பார்த்துக் கொண்டதற்காக அஜீத் - சிவா இருவருக்குமே பாராட்டுகள்.

அஜீத்... இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அவருக்குப் பிடித்தமாதிரி காட்சிகள் என்பதாலோ என்னமோ, விநாயகமாகவே வாழ்ந்திருக்கிறார். அத்தனை ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும். அவர் அடித்தால் அது நிஜமான அடியாகவே தெரிகிறது பார்ப்பவர்களுக்கு. காதல், நகைச்சுவை, அதிரடி, தம்பிகள் மீது பாசம் என நவரசங்களையும் வஞ்சனையின்றி காட்டுகிறார் மனிதர். வில்லன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அதிகம் கவர்ந்தார் அஜீத்!

சண்டைக் காட்சிகளில் அநியாயத்துக்கு ரிஸ்க் எடுத்திருக்கிறார் அஜீத். குறிப்பாக அந்த ரயில் சண்டைக் காட்சி. எந்த ஹீரோவும் செய்யத் தயங்கும் காட்சி இது.

வீரம் - விமர்சனம்

தமன்னா... சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அழகான மறுவரவு. அழகு, நடிப்பு எதிலும் குறைவைக்கவில்லை. வெல்கம் பேக்!

இந்தப் படத்தில் கடைசி வரை கலகலப்பு குறையாமல் பார்த்துக் கொண்டதில் சந்தானத்தின் பங்கு கணிசமானது. மனிதர் செம பார்மில் இருக்கிறார். வாயைத் திறந்தால் நமக்கு வயிற்று வலி நிச்சயம், சிரிப்பில். 'அண்ணே என்னையும் உங்க பிரம்மச்சரிய தம்பிக லிஸ்டில் சேத்துக்கங்க' எனும் சந்தானத்தை, 'வாடா செல்லம்... வாடா..' என அஜீத் அணைத்துக் கொள்ளும் விதம்... இனி சந்தானத்துக்கு ஏறுமுகம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது!

தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனீஷ், சோஹைல் ஆகிய நால்வருக்குமே சம வாய்ப்பு. ஆமாம்... எல்லா இடங்களிலும நால்வருமே நீக்கமற நிற்கிறார்கள். ஆனால் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவிலாவது இப்படி அண்ணன் தம்பிகளைப் பார்க்கிறோமே என்று!

தமன்னாவின் தந்தையாக வரும் நாசர் பாத்திரம் அருமை. பிரதீப் ராவத் ஏதோ பெரிசாக செய்யப் போகிறார் என்று பார்த்தால், பாட்ஷா படத்தில் வரும் சேது விநாயகம் மாதிரி பம்மிவிட்டு வடக்குப் பக்கம் ஜூட் விடுகிறார்.

இடைவேளைக்குப் பின் வரும் அதுல் குல்கர்னி செம டெர்ரர். நாசர் குடும்பத்துக்காக அஜீத் செய்த அத்தனை தியாகங்களையும் அதுல் குல்கர்னி தன் வாயாலேயே சொல்வதுபோல காட்சி அமைத்தது நல்ல புத்திசாலித்தனம். வேறு எந்த வகையிலும் அந்த முடிச்சை அவிழ்க்கவும் வழியில்லை!

குறைகள்... அதற்குப் பஞ்சமில்லை. முக்கியமான குறை... எதிரி நினைக்கும் முன்பே ஹீரோ அவரை மடக்குவது போன்ற சூப்பர் ஹீரோ சாகஸங்கள். ஆனால் அதை மறக்கடிக்கும்விதமாக திரைக்கதை அமைப்பதுதானே இன்றைய சினிமா? அதில் ஜெயிக்கிறது வீரம்!

வீரம் - விமர்சனம்

வெற்றியின் ஒளிப்பதிவு மிகக் கச்சிதம். ரசிகர்களை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரு திருவிழா மனநிலையிலேயே வைத்ததில் இவரது கேமராவுக்கும் தேவி ஸ்ரீ பிரசாதின் பின்னணி இசைக்கும் பெரும் பங்குள்ளது. இரண்டு பாடல்கள் பரவாயில்லை.

அஜீத்தை ஒரு இயக்குநராக மட்டும் பார்க்காமல், அவரது ரசிகராகவும் பார்த்ததால்தான் தன்னால் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடிந்தது என்றார் இயக்குநர் சிவா. அது நூறு சதவீதம் உண்மை. அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களை, முதலில் ரசிக்கத் தெரிந்தால்தான் அவர்களுக்கான அட்டகாசமான திரைக்கதையை ஒரு படைப்பாளியால் உருவாக்க முடியும்.

அந்த வகையில் வீரம்... செம மாஸ்.. பொங்கல் பண்டிகை உற்சாகத்தை ஒரு படி அதிகமாக்கியிருக்கிறது!

 

தயாரிப்பாளருடன் பேசாமலிருந்த மோகன்லாலைப் பேச வைத்த ஜில்லா வெற்றி!

தயாரிப்பாளருடன் பேசாமலிருந்த மோகன்லாலைப் பேச வைத்த ஜில்லா வெற்றி!

சென்னை: ஜில்லா படத்தின் வெற்றியை கண்கூடாக உணர்ந்த பிறகு, பல ஆண்டுகள் பேசாமலிருந்த தனது தயாரிப்பாளருக்கு போன்போட்டு பேசியுள்ளார் நடிகர் மோகன்லால்.

அரண் என்ற பெயரில் ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். இந்தப் படத்தின் ஹீரோ மோகன்லால். கார்கில் போர் பின்னணியில் வந்த இந்தப் படம் மலையாளத்தில் கீர்த்தி சக்கரா என்ற பெயரில் வெளியானது.

டப்பிங்கின் போது தமிழில் மோகன்லாலுக்கு குரல் கொடுத்தவர் ராஜீவ்.

ஆனால் உண்மையில் இந்தப் படத்துக்கு தமிழிலும் மோகன்லாலே பேச வேண்டும் என்று விரும்பினாராம் படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. ஆனால் மோகன்லால் பேச மறுத்துவிட, அவருக்கு தமிழில் குரல் கொடுத்தவர் நடிகர் ராஜீவ்.

இதனால் மோகன்லாலுக்கும் ஆர்பி சவுத்திரிக்கும் பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டதாம்.

ஜில்லா கதையை உருவாக்கும்போதே மோகன்லாலை மனதில் வைத்து உருவாக்கியதாக இயக்குநர் ஆர்டி நேசன் சொல்ல, அதற்கு விஜய்யும் சம்மதித்துவிட்டதால் அமைதியாக இருந்துவிட்டாராம் ஆர்பி சவுத்ரி.

ஜில்லா படம் உருவாகும்போதுகூட, மோகன்லாலுடன் நேரடியாக எதுவுமே பேசியதில்லையாம் சவுத்ரி. எல்லாம் இயக்குநர் மூலம்தானாம்.

இப்போது படம் வெளியாகி, உலகெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்ததும், மோகன்லாலே ஆர்பி சவுத்ரிக்கு போன் செய்தாராம். பழையதை மறந்துவிடுவோம் என்று கூறியதோடு, ஜில்லா மாதிரி வெற்றிப் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததற்கும், அந்தப் படத்தை கேரளாவில் விநியோகம் செய்ய உரிமை தந்ததற்கும் நன்றி தெரிவித்தாராம்.

இதனை தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியே இன்று நிருபர்களிடம் கூறினார்.

"மோகன்லால் ஜில்லா படத்தின் ஹீரோக்களில் ஒருவர் மட்டுமல்ல, கேரள விநியோகஸ்தரும்கூட. அதனால் அவருக்கு இந்த வெற்றியின் பிரமாண்டம் புரிந்திருக்கிறது. அதை என்னுடன் பேசும் போதும் கூறினார். ஜில்லா வெற்றி எங்கள் இருவரையும் சேர்த்துவிட்டது," என்றார் ஆர்பி சவுத்ரி.

 

ஜில்லா, வீரம் வெளியீடு... கடும் ட்ராபிக்கால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை: ஜில்லா, வீரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் சென்னையில் கிண்டி கத்திப்பாரா தொடங்கி கே கே நகர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜில்லா மற்றும் வீரம் ஆகிய இரு படங்களும் சென்னை மற்றும் புறநகர்களில் ஏராளமான அரங்குகளில் வெளியாகின.

சென்னை அண்ணா சாலையின் தென்பகுதியான கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஜோதி திரையரங்கில் இரு படங்களுமே வெளியிடப்பட்டுள்ளன.

ஜில்லா, வீரம் வெளியீடு... கடும் ட்ராபிக்கால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி!

அடுத்து இரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசி திரையரங்கில் ஜில்லா திரையிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சில மீட்டர் தூரத்தில் உள்ள உதயம் காம்ப்ளெக்சில் ஜில்லா, வீரம் படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

இந்த மூன்று அரங்குகளுமே கிட்டத்தட்ட நெடுஞ்சாலையில் உள்ளன.

இந்தப் படங்களுக்கு அதிகாலையிலிருந்தே சிறப்புக் காட்சிகள் போடப்பட்டதால், விஜய், அஜீத் ரசிகர்கள் திரண்டு வந்து மேள தாளம், பாலாபிஷேகத்தோடு முதல் காட்சி பார்த்தனர். சாலைகளில் பட்டாசுகள் கொளுத்தினர்.

சாலையை அடைத்துக் கொண்டு ரசிகர்கள் நின்றதால் காலையில் 11 மணி வரை இந்த சாலை திணறியது.

 

7 வது எடிசன் விருது விழா- மலேசிய கவர்னர் பங்கேற்கிறார்!

சென்னை: அடுத்த மாதம் நடக்கும் ஏழாவது எடிசன் விருது விழாவில் மலேசிய கவர்னர் பங்கேற்கிறார்.

கடந்த 6 ஆண்டுகளாக உலக தமிழர்கள் இணையம் மூலமாகவும், வாக்கு சீட்டு மூலமாகவும் தமிழ்திரை உலகினரை தேர்ந்தெடுத்து எடிசன் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக 2013 ஜனவரி முதல் 2013 டிசம்பர் 27 வரை வெளிவந்த திரை படங்களின் தேர்வு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதில் 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருது பெறுவோற்வோர்க்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

7 வது எடிசன் விருது விழா- மலேசிய கவர்னர் பங்கேற்கிறார்!

இந்த பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அம்பிகா எம்பையர் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பங்கேற்றார்.

தமிழ் திரைப்பட பின்னனி பாடகர் வேல்முருகன், நடிகை சஞ்சனா சிங், கனா படத் தயாரிப்பாளர் தமீம், எடிசன் விருது நிறுவனர் ஜெ செல்வகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதில் சிறந்த நடிகர் நடிகைகள், இயக்குநர், கேமராமேன், இசை அமைப்பாளர் போன்றோர் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்வு பட்டியலில் இன்று தொடங்கி பிப்ரவரி 5 ம் தேதி வரை ஆன்லைனில் வாக்களிக்க முடியும்.

அவ் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு பிப்ரவரி 16 ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4 மணி முதல் 8.30 வரை நடைபெற உள்ள எடிசன் விருதுகள் விழாவில் விருதுகள் வழங்கப்படும். இவ்விழாவில் திரைதுறை சார்ந்த நடன கலைஞர்கள் மற்றும் மலேசிய, சிங்கப்பூர், கனடா நாட்டு நடனகலைஞர்கள் நடனமாடுகிறார்கள்.

இவ்விழாவிற்கு மலேசிய நாட்டில் உள்ள மலாக்கா மாநில கவர்னர் கலந்து கொண்டு விருதுகள் வழங்க உள்ளார். மேலும் இவர் மலேசிய நாட்டு மலாய்காரராய் இருந்தாலும் நம் நாட்டு தமிழ் திரைப்படங்களை மிகவும் நேசிக்க கூடியவர், நாம் அனைவரும் போற்ற கூடிய புரட்சிதலைவர் எம்ஜிஆர் நடிப்பின் ஈர்ப்பால் இன்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக செல்லும் போது மேடையில் தமிழ் பாடல்களை பாடக் கூடியவர்.

இந்திய சினிமாவையும், தமிழ் சினிமாவையும் அதிகம் நேசித்ததால் அந்நாட்டில் வழங்கப்படும் டத்தோ பட்டத்தை நடிகர் ஷாருக்கானுக்கும், ராதாரவிக்கும் வழங்கி இந்திய சினிமாவிற்கு ஒரு அங்கிகாரம் அளித்தவர் என்பது பெருமைக்குரியது.

இவ்விழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள கான்சர்ட் ஹாலில் நடைபெற உள்ளது.

வாசகர்கள், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுக்க www.edisonawards.in இணையம் மூலம் வாக்களிக்கலாம்.

 

நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார்: அண்ணன் மகனே குற்றச்சாட்டு

நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார்: அண்ணன் மகனே குற்றச்சாட்டு

சென்னை: பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள பூர்வீக சொத்துக்களை அபகரித்து விட்டதாக நடிகை மனோரமா மீது அவரது அண்ணன் மகன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார். அவர் மீது அவரது அண்ணன் மகன் காசிநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழக மக்களால் நேசிக்கப்படும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் நடிகை மனோரமா எனது அத்தை ஆவார். எங்களது பூர்வீகம் மன்னார்குடி. மனோரமாவுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற 2 அண்ணன்கள் உண்டு. அண்ணன்கள் இருவரும் தற்போது இறந்து விட்டார்கள்.

நான் கிட்டுவின் மகன். எனது உடன் பிறந்தவர்கள் 4 பேர் உள்ளனர். சென்னை கேளம்பாக்கத்தில் நான் குடும்பத்துடன் வசிக்கிறேன். நாங்கள் அனைவரும் மிகவும் ஏழ்மையில் இருக்கிறோம். நான் வாடகை கார் ஓட்டி பிழைக்கிறேன். எனது தங்கை வீட்டு வேலை செய்கிறாள். எனது அண்ணன் கொத்தனார் வேலை செய்கிறான். மனோரமா அத்தை மிகவும் நல்லவர். எங்கள் குடும்பத்திற்கும், எங்கள் பெரியப்பா குடும்பத்திற்கும் நிறைய நல்லது செய்துள்ளார்.

எங்கள் பாட்டி ராமாமிர்தம் பெயரில் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் ஆறரை கிரவுண்டு நிலம் இருந்தது. அந்த நிலம் 1965-ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிலம் பல கோடி மதிப்புடையது. கார் சர்வீஸ் நிறுவனம் அதில் உள்ளது. அதை மாதம் ரூ.1 லட்சத்திற்கு அத்தை மனோரமா வாடகைக்கு விட்டுள்ளார்.

பாட்டி பெயரில் இருந்த அந்த நிலம் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் சொந்தமானது. அந்த நிலத்தை யாருக்கும் சொல்லாமல், அத்தை மனோரமா அவரது பெயரில் மாற்றிக்கொண்டார். இது சட்ட விரோதமானது. பாட்டி பெயரில் அந்த நிலம் இருந்ததற்கான ஆதாரங்கள், உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. எனவே அத்தை மனோரமா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளேன்.
நான் போலீசில் புகார் கொடுத்தது தெரிந்து, எனக்கு போனில் பேசி நிறைய கொலை மிரட்டல் வருகிறது. போலீசார்தான் எங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு காசிநாதன் தெரிவித்தார். அவர் கொடுத்துள்ள புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காசிநாதன் கொடுத்த புகார் மனு பற்றி நடிகை மனோரமாவிடம், செய்தியாளர்கள் கேட்டபோது அவர் ஆக்ரோஷமாக பதில் அளித்தார்.

காசிநாதன் எனது அண்ணன் மகன்தான். நான் சம்பாதித்த சொத்தை, நானே அபகரித்து விட்டேன் என்று சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். யாரும் நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் பணம் பறிப்பதற்காக, இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்று நடிகை மனோரமா தெரிவித்தார்.

 

ஜில்லா- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம்

இசை - டி இமான்

ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு

தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி

இயக்கம் - ஆர்டி நேசன்


ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆனால் அதற்காக இப்படியா? என்ற கேட்க வைக்கிற, கற்பனையை தோற்கடிக்கும் போலீஸ் ஸ்டோரி, விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா.

மதுரையின் அசைக்கமுடியாத தாதா மோகன்லால். தன்னை எதிர்க்க வேண்டும் என்ற நினைக்கு ஒருவனுக்கு எழுந்தாலே அவனை அழித்துவிடும் சிவன்.

ஜில்லா- விமர்சனம்

(ஜில்லா படங்கள்)

அவரது வளர்ப்பு மகன்தான் விஜய். தன் ஒரிஜினல் அப்பாவை கண்ணெதிரிலேயே போலீஸ் சுட்டுக் கொன்றதைப் பார்த்த பிறகு, காக்கிச் சட்டை என்றாலே மகா வெறுப்பு.. எந்த அளவு தெரியுமா, தான் விழுந்து விழுந்து காதலிப்பவள் ஒரு போலீஸ் என்று தெரிந்ததும், அவளைக் கைகழுவும் அளவுக்கு.

ஆனால் சூழ்நிலை, விஜய்யை காக்கிச் சட்டை போட வைக்கிறது. தன் அப்பாவுக்கு சாதகமான போலீசாக ஜாலியாக சுற்றும் விஜய், ஒரு கோர விபத்தைப் பார்த்த பிறகு அப்பாவின் தாதாயிசத்தை அடியோடு ஒழிக்க முடிவு கட்டுகிறார். மோகன்லாலுக்கும் விஜய்க்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கிறது... அது எப்படி முடிவுக்கு வருகிறது என்பதை திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

பல லாஜிக் ஓட்டைகளில் சிக்கித் தவிக்கும் இந்தப் படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுபவர்கள் இருவர்.. ஒருவர் விஜய். அடுத்தவர், சந்தேகமென்ன.. மோகன்லால்தான். இந்த இருவரையும் பார்ப்பதற்காக மட்டும்தான் கடைசி வரை இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.

ஜில்லா- விமர்சனம்

அதிலும் விஜய்... அல்டிமேட். இந்தப் படத்தில் தன் உடல் மொழியை மொத்தமாக மாற்றியிருக்கிறார் (ஆனால் அந்த வசன உச்சரிப்பு, சொதப்பிபைய்ங்!). சுழன்று சுழன்று அடிக்கும் அந்த சண்டைக் காட்சி, கற்பூரம் மாதிரி அடுத்து நடப்பதை யூகித்து வியூகம் வகுக்கும் மின்னல் வேகம்... என மாஸ் ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் சர்வ சாதாரணமாய் செய்கிறார்.

அந்த கண்டாங்கி கண்டாங்கி பாடலில் விஜய் மனசை அள்ளுகிறார்... ஷங்கர் ஸ்டைல் பிரமாண்டம், அழகு... காஜலும், அந்த அட்டகாச லொகேஷனும் கூடத்தான்! சினிமாக்காரர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளான கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸுக்கெல்லாம் அர்த்தம் தெரியணும்னா... இந்தப் பாட்டைப் பார்க்கலாம்!

மோகன் லால் கம்பீரமாக வருகிறார். மகனோடு விளையாடும் காட்சியிலும் சரி, மோதும் காட்சியிலும் சரி... மகா இயல்பு. ஆனால் இந்த மாபெரும் கலைஞனை, ஏதோ கோயில் யானையைப் போல ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் கட்டி முடக்கிவிட்டது போலத்தான் காட்சிகள் அமைந்துள்ளன. சும்மா சும்மா அவர் உறுமிக் கொண்டே இருந்தால் போதுமா... அவர் பலத்தை, புத்திசாலித்தனத்தைக் காட்டும் காட்சி, அட்லீஸ்ட் ஒன்றாவது வேண்டாமா?

ஜில்லா- விமர்சனம்

இவருக்கு என்ன சிக்கலென்றாலும், அதைத் தீர்க்க விஜய் மட்டும்தான் வரவேண்டியிருக்கிறது. இது மோகன்லால் பாத்திரத்தை டம்மியாக்குகிறதே!

துப்பாக்கிக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் காஜல். கண்டாங்கி கண்டாங்கி பாடல், அந்த என்சிசி கேம்ப், அப்புறம் இரண்டு 'பேக் டு பேக்' மசாஜ் காட்சிகளில் மட்டும் மனசில் நிற்கிறார். மற்ற காட்சிகளில் முகத்தில் ஒரு முதிர்ச்சி.. அவரை விட விஜய் இளமையாகத் தெரிகிறார்!

சூரிக்கு படம் முழுக்க வரும் காமெடியன் வேடம். ஆனால் அடிக்கடி முன்பக்கத்தில் அடிவாங்கி, வாயில் புகைவிடும் பரிதாப கேரக்டர். அவரது வேலையையும் விஜய்யே செய்துவிடுவதால், இவர் சும்மா வந்து போக வேண்டியுள்ளது.

பூர்ணிமா பாக்யராஜ், இறுதிவரை ஒரு நல்ல அம்மாவாக வருகிறார். பெறாத மகன் என்றாலும் கடைசி வரை மாறாத பாசம் காட்டி மனதில் பதிகிறார். அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்கு பூர்ணிமா என்ற 'நல்ல அம்மாவை' தொடர்ந்து திரையில் பார்த்து நெகிழலாம்.

இப்படி ரசிக்கும்படியான காட்சிகள், திறமையான கலைஞர்களின் பங்களிப்பு இருந்தாலும்... மோசமான ஓட்டைகள் நிறைந்ததாக உள்ளது ஜில்லா.

ஜில்லா- விமர்சனம்

ஒரு நேர்மையான கமிஷனர்... அவர் கையை நடுரோட்டில் வெட்டுகிறார் ரவுடியான விஜய். அவரை போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவரோ, ஜாலியாக போலீஸ் ஆகிறார். யாரை வெட்டினாரோ அவர் மூலம் பதவி உயர்வே பெறுகிறார்!

ஒரே நேரத்தில் தந்தையைப் பறிகொடுத்த விஜய்யும் சம்பத்தும் மோகன்லால் வீட்டில் வளர்கிறார்கள். இளமையில் ஒரே வயதுக்காரர்களாய் இருக்கும் இவர்கள் வளர்ந்த பிறகு, சம்பத்துக்கு மட்டும் அவ்வளவு வயசாகிவிடுவது எப்படி என்று புரியவில்லை.

என்னதான் மோசமான தாதாவாக இருந்தாலும், பெற்ற மகனை (மகன்) ஏவி நகரம் முழுக்க வன்முறையைத் தூண்டை வைப்பாரா.. அதுவும் அத்தனை சேனல்களிலும் பப்பரப்பே என படமெடுத்து வெளியிடும் அளவுக்கு?

அடுத்தடுத்து இரண்டு டூயட்டுகள். அதில் ஒன்று ரசிக்க வைத்தாலும், அடுத்த பாடலில் (எப்ப மாமா ட்ரீட்), நடனத்தில் இணையற்ற விஜய்யை கேவலமாக, ஏதோ உடற்பயிற்சி செய்ய வைப்பது போல், ஆட வைத்து கடுப்பேற்றியிருக்கிறார் இயக்குநர் நேசன். அதை மன்னிக்கவே முடியாது!

ஜில்லா- விமர்சனம்

3 மணி நேரம் படத்தை இழுப்பது இன்னொரு கொடுமை. இந்தப் படத்தை இரண்டே கால் மணி நேரத்துக்குள் சுருக்கியிருக்க முடியும். எடிட்டர் டான் மேக்ஸ் தூங்கிவிட்டார் போலிருக்கிறது.

ஆர்கேவை வீணடித்திருக்கிறார்கள். அவரை வைத்து இன்னும் சுவாரஸ்யமான இரு காட்சிகளை வைத்திருக்கலாம், தனக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பு எப்பேர்ப்பட்ட மகத்தானதென்ற நினைப்பு இயக்குநருக்கு இருந்திருந்தால்!

விஜய்யின் தம்பி, தங்கையாக வரும் மகத், நிவேதிதா இருவரும் விஜய்க்கு ஆகாதவர்களைப் போல காட்டிவிட்டு, திடீரென்று இருவருக்கும் அவர் மீது பாசம் பொங்குவது எடுபடவில்லை.

கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. அந்த நெடுஞ்சாலைக் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளது. கண்டாங்கி கண்டாங்கி பாடலில் வண்ணமயம். இமானின் இசையும் அந்தப் பாட்டில்தான் ஓஹோ. மற்றவற்றில் பெரிதாக ஒன்றுமில்லை.

ஆனால், தலைவாவோடு ஒப்பிடுகையில் 100 சதவீதம் பார்க்கலாம் ரக படமே. பொங்கல் லீவில் வெட்டு வெட்டென்று உட்கார்ந்திருப்பதை விட அல்லது மொக்கையான டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு, இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம் (இப்போது 10 நிமிட காட்சிகளை தூக்கிவிட்டார்களாம்)!

 

ஜில்லா படத்தின் நீளம் குறைப்பு- 10 நிமிட காட்சிகள் கட்!

விஜய்யின் ஜில்லா படத்தின் நீளம் குறைப்பு- 10 நிமிட காட்சிகள் கட்!  

முக்கியமாக விமர்சனங்கள் அனைத்திலுமே படத்தின் நீளம்தான் முக்கிய குறையாக முன் வைக்கப்பட்டது.

தேவையில்லாத காட்சிகளைக் குறைத்து விறுவிறுப்பாக்கியிருந்தால் படத்தின் லாஜிக் மிஸ்டேக் பெரிதாக தெரியாது என கருத்துக் கூறியிருந்தனர்.

எனவே படத்தின் நீளம் 10 நிமிடம் குறைக்கப்பட்டு நேற்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டது.

இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை, இன்னும் கூட 20 நிமிட காட்சிகளை, இரண்டு பாடல்களை பாரபட்சமின்றி குறைக்கலாம்!