அட அதுக்குள்ள படத்தை முடிச்சிட்டாரா மணிரத்னம்!!

கடல் படத்தின் தோல்விக்குப் பிறகு ஏராளமான கதைகளைப் பரிசீலித்து வந்த மணிரத்னம், கடைசியில் சத்தமின்றி ஒரு படத்தை ஆரம்பித்தார்.

அதில் துல்கர் சல்மான், நித்யா மேனன்தான் நாயகன் - நாயகி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அட அதுக்குள்ள படத்தை முடிச்சிட்டாரா மணிரத்னம்!!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'நாயகன்', 'அக்னி நட்சத்திரம்' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.சி.ஸ்ரீராம் மீண்டும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இப்போதுதான் ஆரம்பித்தது போலிருந்த இந்தப் படம், இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தெரிவித்தார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார் மணிரத்னம். இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே படம் வந்துவிடும் என்கிறார்கள்.

 

சமந்தாவுடன் பார்ட்டிக்கு போகணும், அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும்: ராணா

ஹைதராபாத்: ஒவ்வொரு வார இறுதியிலும் சமந்தாவுடன் பார்ட்டிக்கு போக விரும்புவதாக நடிகர் ராணா டக்குபாதி தெரிவித்துள்ளார்.

ராணா என்றதுமே இத்தனை நாட்களாக த்ரிஷாவின் காதலர் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இனியும் அவர் பெயரை த்ரிஷாவுடன் பயன்படுத்த வேண்டியது இல்லை. ஏனென்றால் த்ரிஷாவுக்கும், தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு வீக் எண்டும் சமந்தாவுடன் பார்ட்டிக்கு போகணும்: ராணா ஆசை

ராணா தனது முன்னாள் காதலியான இந்தி நடிகை பிபாஷா பாசுவுடன் சேரவே த்ரிஷாவை பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராணா தெலுங்கு டிவி சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஒவ்வொரு வார இறுதியிலும் நான் சமந்தாவுடன் பார்ட்டிக்கு போக விரும்புகிறேன். நான் சந்தித்த மனிதர்களில் அஜீத் மற்றும் அனுஷ்கா தான் மிகச் சிறந்தவர்கள் என்றார்.

இப்போ என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ராணா?

 

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

சென்னை: திருட்டு விசிடியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சிபிசிஐடி அலுவலகத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் புகார் தரப்பட்டுள்ளது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் விஜயகுமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் ஆகியோர் இன்று எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்று ஏ.டி.ஜி.பி. அஸ்டோஸ் சுகலாவை சந்தித்தார்கள்.

அவர்களுடன் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, டைரக்டர் சங்கம் சார்பில் ரமேஷ் கண்ணா, ரவி மரியா, சண்முக சுந்தரம், பெப்சி சார்பில் சபரி கிரிசன், சுந்தர் ஆகியோரும் சந்தித்தார்கள்.

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

திருட்டு வி.சி.டி.யை ஒழிக்கும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள்.

பின்னர் போலீஸ் டி.ஜி.யிடம் அவர்கள் கொடுத்த மனு விவரம்:

மக்களின் முதல்வர் ஜெயலலிதா திரையுலகினரின் வேண்டுகோளை ஏற்று 2001-2006 ஆண்டுகளில் திருட்டு வி.சி.டிக்கு எதிராக குண்டர் சட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருட்டு வி.சி.டி. புழக்கம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. எனவே குண்டர் சட்டத்தின் துணை கொண்டு திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க வேண்டும்.

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

திரையரங்குகளில் திருட்டு விசிடி

புதிய படம் வெளியானதும் ஏதோ ஒரு திரையரங்கில் திருட்டு வி.சி.டி எடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட திரையரங்குகள் மீதும் அதில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் சோதனை

தமிழகத்தில் உள்ள அனைத்து சி.டி. கடைகளிலும் திருட்டு வி.சி.டி விற்கப்படுகிறது. எனவே அருகேயுள்ள காவல் நிலையங்கள் மூலம் காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்யும் பட்சத்தில் திருட்டு வி.சி.டி. விற்பதை தடுக்கலாம்.

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

லோக்கல் சேனல்களில்

தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள லோக்கல் சேனல்களில் புதுப்படம் வெளியான அடுத்த நாளே அந்த திரைப்படத்தை போட்டு வருகிறார்கள். ஒவ்வொரு சேனலையும் குறைந்தது 10 ஆயிரம் பேர் பார்த்து விடுகிறார்கள். ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட லோக்கல் சேனல்களின் உள்ளன. அப்படி செய்யும் லோக்கல் சேனல்கள் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

திருட்டு விசிடிக்கு எதிராக கடும் நடவடிக்கை வேண்டும் - சரத்குமார், நளினி போலீசில் மனு

சாலையோரங்களில்

காய்கறி விற்பனை போல சாலை ஓரங்களிலும், ரெயில் நிலையங்களிலும், அரசு பேருந்துகள் தவிர தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆம்னி பஸ்களிலும், பஸ் நிலையங்களிலும் பயமின்றி திருட்டு வி.சி.டி. விற்கிறார்கள். இவற்றை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பேசிய சம்பளத்தைக் கொடுக்க மாட்டேங்கறாங்களே... - தயாரிப்பாளர்கள் மீது ஸ்ருதிஹாஸன் புகார்

சம்பள விஷயத்தில் நான் நெருக்கடி தருவதில்லை. ஆனால் சில தயாரிப்பாளர்கள் பேசின சம்பளத்தைக் கூட தருவதில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார் ஸ்ருதிஹாஸன்.

தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ்பாபு என முதல் நிலை நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.

கையில் ஏகப்பட்ட படங்கள் இருப்பதால், புதிய படங்களில் ஒப்பந்தமாக அதிக சம்பளம் கேட்பதாக ஸ்ருதிஹாசன் மீது புகார் கூறப்பட்டது.

பேசிய சம்பளத்தைக் கொடுக்க மாட்டேங்கறாங்களே... - தயாரிப்பாளர்கள் மீது ஸ்ருதிஹாஸன் புகார்

ஆனால் இதனை மறுத்துள்ளார் ஸ்ருதி. அவர் கூறுகையில், "சம்பள விஷயத்தில் நான் இதுவரை எந்தத் தயாரிப்பாளருக்கும் நிர்ப்பந்தம் கொடுத்ததில்லை.

என் திறமை, உழைப்புக்கேற்பத்தான் நான் சம்பளம் பெறுகிறேன். இன்னும் சொல்லப்போனால் சில தயாரிப்பாளர்கள் எனக்கு தருவதாக ஒப்புக் கொண்ட சம்பளத்தை கூட தராமல் பாக்கி வைத்துள்ளனர்.

மகேஷ்பாபு தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார். அவருடன் நடிப்பதற்கு நான் கேட்கும் சம்பளத்தை அந்தத் தயாரிப்பாளர் தர தயாராக இல்லை. எனவே நான் பின்வாங்க வேண்டியுள்ளது. இதனை மனதில் வைத்து எனக்கு எதிராக செய்தி பரப்புகிறார்கள்," என்றார்.

 

செக் மோசடி வழக்கு... நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை, 25 லட்சம் அபராதம்

ஹைதராபாத்: செக் மோசடி வழக்கில் நடிகையும் தயாரிப்பாளருமான ஜீவிதா ராஜசேகருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் 25 லட்சம் அபராதமும் விதித்துள்ளது ஹைதராபாத் நீதிமன்றம்.

நடிகை ஜீவிதா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து, பின்னர் நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து தயாரிப்பாளராக மாறினார்.

செக் மோசடி வழக்கு... நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை, 25 லட்சம் அபராதம்

திரைப்பட இயக்குநர் சேகர் ரெட்டி என்பவருக்கு ரூ 22 லட்சத்துக்கான காசோலைகள் தந்துள்ளார் ஜீவிதா. ஆனால் அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பிவிட்டன.

இதற்கு பதில் பணத்தை திரும்பச் செலுத்தவும் தவறிவிட்டாராம் ஜீவிதா. இதுகுறித்து ஹைதராபாத் எர்ரமன்சில் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார் அந்தத் தயாரிப்பாளர்.

இந்த வழக்கில் அனுப்பப்பட்ட பல சம்மன்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாராம் ஜீவிதா. இதைத் தொடர்ந்து இன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும், ரூ 25 லட்சம் மதிப்புள்ள பிணையப் பத்திரங்களை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

 

‘மாஸ்’ படத்தில் ஆந்திரா மசாலாவை அதிகம் சேர்க்கும் வெங்கட் பிரபு

சூர்யா நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் ‘மாஸ்' படத்தில் ஆந்திரா ஹீரோக்களான பிரபாஸ், டாணா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா, எமிஜாக்சன் நடித்து வருகிறார்கள்.

‘மாஸ்’ படத்தில் ஆந்திரா மசாலாவை அதிகம் சேர்க்கும் வெங்கட் பிரபு

மேலும் இவர்களுடன் பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஆர்.டி.சேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இரண்டு விதமான கெட்டப்புகளில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு இப்படகுழுவினருடன் தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதில் தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தற்போது சூர்யா, வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ் ஆகியோர் இணைந்துள்ள செல்ஃபி புகைப்படம் சமீபத்தில் வெளியானது.

வெங்கட் பிரபு படங்களில் நடிக்கும் நடிகர்களை தவிர்த்து பிற நடிகர்கள் ஒரு சில காட்சிகளில் சிறப்பு தோற்றத்தில் வந்து போவார்கள். அதே போல் இந்தப் படத்திலும் தெலுங்கு பட உலகை சேர்ந்த பிரபல நடிகர்களான ராணா, பிரபாஸ், ரவிதேஜா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் படங்களுக்கு ஆந்திராவிலும் மவுசு அதிகரித்து வருகிறது. கூடுதல் வரவேற்பை அதிகரிக்க, ஆந்திரா காரமசாலாவை சேர்த்து புது பிரியாணியை கிண்டப் போகிறார் வெங்கட்பிரபு.

 

ஆண்ட்ரியாவுக்கு பெரிய்ய பிரேக் கொடுக்கப் போகும் 'வலியவன்'?

சென்னை: வலியவன் ஆண்ட்ரியாவுக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.

பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஆண்ட்ரியா. அதற்கு முன்பு அவர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு காட்சியில் கூட்டத்தோடு கூட்டமாக வந்துவிட்டு சென்றார். அதனால் அதை விட்டுவிடலாம். ஆண்ட்ரியா கமல் ஹாஸன் உள்பட பல நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் அவருக்கு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.

ஆண்ட்ரியாவுக்கு பெரிய்ய பிரேக் கொடுக்கப் போகும் 'வலியவன்'?

இந்நிலையில் தான் அவர் எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணனின் வலியவன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய் ஹீரோவாக நடிக்கும் வலியவன் மென்மையான காதல் கதை படமாம். அதற்காக ஆக்ஷன் இருக்காது என்று நினைக்க வேண்டாம்.

படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்றுள்ளது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். ஒரு பாடல் காட்சியும், கிளைமாக்ஸும் தான் பாக்கியாம். பாடல் காட்சியை குளு மணாலியிலும், கிளைமாக்ஸ் காட்சியை ஹரித்வாரிலும் படமாக்குகிறார்கள்.

இந்த படம் ஆண்ட்ரியாவுக்கு நிச்சயம் திருப்புமுனைாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு டி.இமான் தீயா இசையமைத்துள்ளார். வலியவனை அடுத்த ஆண்டு துவக்கத்தில் திரையிட திட்டமாம்.

 

நாய்கள் ஜாக்கிரதை விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: சிபிராஜ், அருந்ததி, பாலாஜி, மயில்சாமி

ஒளிப்பதிவு: நிஸார் ஷெரீப்

இசை: தரண் குமார்

தயாரிப்பு: நாதாம்பாள் பிலிம் பேக்டரி

இயக்கம்: சக்தி சவுந்தர் ராஜன்

கோவையில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றும் சிபிராஜிடம் ஒரு சந்தர்ப்ப சூழலில் வந்து சேர்கிறது ஒரு நாய். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவமிக்க நாய் அது. ஆரம்பத்தில் அந்த நாயை வெறுத்தாலும், போகப் போக நாயுடன் நெருக்கமாகிவிடுகிறார்.

சிபியால் முன்பு பாதிக்கப்பட்ட ஒரு கடத்தல் கும்பல், அவரைப் பழிவாங்க சிபியின் கர்ப்பிணி மனைவி அருந்ததியைக் கடத்திவிடுகிறார்கள். உயிருடன் அவரை ஒரு சவப்பெட்டியில் வைத்துப் புதைக்கிறார்கள். 6 மணி நேரம்தான் அவர் உயிருடன் இருப்பார் என்ற நிலை. இந்த ஆறு மணி நேரத்துக்குள் அவரை சிபிராஜ் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றினாரா.. அதற்கு நாய் எப்படியெல்லாம் உதவியது என்பதுதான் இந்த நாய்கள் ஜாக்கிரதையின் கதை.

நாய்கள் ஜாக்கிரதை விமர்சனம்

ஹீரோ சிபிராஜுக்கு இது மறுபிரவேசப் படம். அதை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் உயிர்ப்புடன் நடிக்க வேண்டிய சில காட்சிகளில் முகத்தை சலனமின்றி வைத்திருக்கிறார். குறிப்பாக அவர் மனைவி கடத்தப்பட்ட காட்சி.

இரண்டாவது ஹீரோவாக வரும் ஐடா என்ற சுப்பிரமணி நாய் படத்தின் பெரும்பகுதி காட்சியை ஆக்கிரமிக்கிறது. அருந்ததி கடத்தப்படும் போதே, அவரை மீட்பதில் பெரும்பங்கு இந்த நாய்க்குத்தான் என்பது தெரிந்துவிடுகிறது. நாயின் உழைப்பு, பயிற்சியாளரின் உழைப்பு இரண்டுமே மெச்சத்தக்கதுதான்.

நாய்கள் ஜாக்கிரதை விமர்சனம்

அருந்ததிக்கு க்ளைமாக்ஸ் தவிர வேறெங்கும் நடிக்க காட்சிகளோ வாய்ப்போ இல்லை. ஆனால் க்ளைமாக்ஸில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார்.

மயில்சாமியின் நாய் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது. வில்லனாக வரும் பாலாஜியும் குறை வைக்கவில்லை.

நாய்கள் ஜாக்கிரதை விமர்சனம்

ஆனால் குறை, படத்தின் திரைக்கதையில்தான். வழக்கமான ஒரு ஆள்கடத்தல் பழிவாங்கல் கதை. கூடுதலாக கொஞ்சம் நாய் ஜாலம் போதும் என்று நினைத்திருக்கிறார். இன்னும் விறுவிறுப்பாக இந்தக் கதையைச் சொல்லியிக்கலாம். குறிப்பாக முதல் பாதியில் சில காட்சிகள் இழுவை.

நாய்கள் ஜாக்கிரதை விமர்சனம்

தரண்குமாரின் பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம்.

சக்தி சவுந்தர் ராஜாவுக்கு இது முதல் படம். ஹீரோ சிபிராஜை விட நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு த்ரில்லருக்கு முயன்றிருக்கிறார். அதில் பாதி தேறியிருக்கிறார்!

 

"வேதனை தீரலாம்.. வெறும் பனி விலகலாம்"... ருத்ரய்யாவின் முத்திரை மீண்டும் வருமா?

-சுதா அறிவழகன்

சென்னை: இன்றைய சினிமா ரசிகர்களுக்கு தெரியாத பெயர்தான் ருத்ரய்யா.. ஆனால் சினிமாவின் காதலர்களுக்கு, அதுவும் நல்ல சினிமாவின் விசுவாசிகளுக்கு ருத்ரய்யா ஒரு மூச்சுக் காற்று போல... அவர் எடுத்தது இரண்டு படங்கள்தான் என்றாலும், அந்த இரண்டுமே இந்த சினிமா விசுவாசிகளுக்கு இரு கண்கள் போல.

எந்த ஒரு நல்ல படத்தையும் இந்த இரு பட கண்ணாடி கொண்டு பார்த்து பகுத்தறியும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவை இந்த இரு படங்களும். ருத்ரய்யாவின் முகம் கூட பலருக்கு நினைவில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அவள் அப்படித்தான், கிராமத்து அத்தியாயம் ஆகிய அவரது இரு படங்களும் காலத்தால் மறக்க முடியாதவை.

எனக்கு அவ்வளவாக சினிமா ஞானம் இல்லாத அந்த வயதில் இந்த இரு படங்களின் பாடல்களையும் கேட்டபோதெல்லாம் மனதைப் பிசைந்து வலியைக் கொடுத்துள்ளன. ஒரு வேளை இளையராஜாவின் இசைக்காக, இளையராஜாவின் காதலன் என்பதால், அந்த வலி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் காலப் போக்கில் இந்த இரு படங்களையும் பார்க்க நேர்ந்தபோது வலி இன்னும் அதிகமானது. அதிலும் அவள் அப்படித்தான் படத்தைப் பார்த்தபோது அந்த வலி கூடுதலாகிப் போனது.

கதை என்றால் என்றே தெரியாமல் இன்று பலர் படம் எடுக்கிறார்கள். கதையே இல்லாமல் படம் எடுப்பவன் நான் என்று கூட பலர் பெருமையாக சொல்லிக் கொள்ளும் காலம் இது. நாலு பாட்டு, ஐந்து பைட்டு, ஒரு குத்தாட்டம், சில பல பன்ச்சுகள் என்று வணிகமயமாகிப் போன சினிமா காலம் இது. ஆனால் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, இளையராஜா என்று பெரும் பெரும் ஜாம்பவான்களை வைத்துக் கொண்டு அவள் அப்படித்தான் படத்தை உருவாக்கியவர் ருத்ரய்யா.

கிடைத்த நேரத்தில் பார்ட் டைம் நடிகர் போல இந்தப் படத்திற்காக நடித்துக் கொடுத்தவர் கமல்ஹாசன். நட்புக்காக நல்ல இசை.. அல்ல.. அல்ல.. உயிரை ஊடுறுவும் உணர்ச்சி மிக்க இசையைக் கொடுத்தார் இளையராஜா. நல்ல நடிகராக பண்பட்ட நடிப்பில் இதில் வித்தியாசமான ரஜினியைப் பார்க்க முடிந்தது.. ஸ்ரீபிரியாவுக்கு ஒரு புதுமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் இதுதான்.

அந்தக் காலத்தில் இந்தப் படத்தின் கதை கரு புரட்சிகரமானது. நிச்சயம் சந்தேகம் இல்லை. இன்று இப்படிப்பட்ட படத்தை எடுப்பது என்பது நிச்சயம் பெரிய விஷயமில்லைதான். ஆனால் ருத்ரய்யாவின் துணிச்சல்... அவரது உண்மையான "ஆறுமுகத்திற்கு"க் கூட வந்திருக்க வாய்ப்பில்லை. ஆறுமுகமாக இல்லாமல் ருத்ரய்யாவாக அவதாரம் எடுத்ததால்தான் அவள் அப்படித்தான் படத்தை அவரால் தைரியமாக பிரசவிக்க முடிந்தது.

வழக்கமாக நாயகிகளை மையமாக வைத்து புரட்சிகரமான படங்களை எடுப்பவர்களில் கே.பாலச்சந்தர்தான் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார். ஆனால் அவரை விட மிகுந்த துணிச்சலுடன் தனது அவள் அப்படித்தான் படத்தை உருவாக்கியவர் ருத்ரய்யா. நிச்சயம் பாலச்சந்தரே கூட இந்தப் படத்தைப் பார்த்து வியந்திருக்கலாம்.. !

என்னால் கூட இப்படிப்பட்ட படத்தை இயக்க முடியாது என்று பாரதிராஜாவும் கூட பகிரங்கமாக ஒத்துக் கொண்டு பாராட்டிய படம் அவள் அப்படித்தான்.

படத்தில் வந்த வசனங்களும் சரி, காட்சி அமைப்புகளும் சரி பொட்டில் அடித்தது போல பொறி பறப்பதாக இருக்கும். பெண்ணியம், ஆணாதிக்கம், கட்டுப்பாடு, பாலியல் விரக்திகள், காதல், காமம் என பல முக்கிய விஷயங்களை, பட்டென்று போட்டு உரசிப் பார்த்திருப்பார் ருத்ரய்யா.. அதற்கெல்லாம் நிச்சயம் ஒரு தைரியம் வேண்டும். வீரியமான சிந்தனையும் வேண்டும். அது ருத்ரய்யாவிடம் இருந்ததால் சாதனைப் படமாக மாறிப் போனது அவள் அப்படித்தான்.

உறவுகள் தொடர் கதை.. உணர்வுகள் சிறுகதை.. இந்தப் பாடல் வரிகள் நிச்சயம் ருத்ரய்யாவுக்கும் பொருந்தும்.. அவரது படங்களின் எண்ணிக்கை 2 ஆக மட்டுமே இருந்தாலும் கூட இன்னும் இன்னும் பல சகாப்தங்களுக்கு ருத்ரய்யாவின் நல்ல சினிமா சிந்தனையும், அவரது தணியாத, பாதியிலேயே முடங்கிப் போன கலை வேட்கையும் பேசப்படும். சிலாகிக்கப்படும்.. சிந்தினையில் இருத்தி வைக்கப்படும்.

 

போரடிக்குதுங்க.. வேற டாபிக் போங்க! - நிச்சயதார்த்தச் செய்தி குறித்து த்ரிஷா கமெண்ட்

தன்னுடைய திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கைக் குறித்து வரும் செய்திகளைப் படித்து தனக்கே போரடித்துவிட்டதாகவும், வேறு சுவாரஸ்யமான செய்திகளைத் தாருங்கள் என்றும் கமென்ட் அடித்துள்ளார் நடிகை த்ரிஷா.

த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் கம் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக படங்களுடன் தகவல் வெளியானது. இது செய்தியாக பிரபல பத்திரிகைகள், ஒன்இந்தியா உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகின.

போரடிக்குதுங்க.. வேற டாபிக் போங்க! - நிச்சயதார்த்தச் செய்தி குறித்து த்ரிஷா கமெண்ட்

ஆனால் த்ரிஷாவும் அவர் தாயாரும் இந்த செய்தியை மறுத்துவிட்டார்கள். நாங்களே சொல்கிறோம். நீங்களாக எதையும் எழுத வேண்டாம் என்றார்கள்.

இதைத் தொடர்ந்து த்ரிஷாவும் அவர் அம்மாவும் உண்மையை மறைப்பதாக திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களே ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர். எப்படியும் ஜனவரியில் இதே விஷயத்தைச் சொல்லத்தான் போகிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.

போரடிக்குதுங்க.. வேற டாபிக் போங்க! - நிச்சயதார்த்தச் செய்தி குறித்து த்ரிஷா கமெண்ட்

இந்த நிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது திருமணம், சொந்த வாழ்க்கைக் குறித்த செய்திகளைப் படித்தால்.. ஆவ்.. போரடிக்கிறது. ஏதாவது புது டாபிக்கைப் பற்றிப் பேசுங்களேன்," என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

எம்புட்டு பொய், எம்புட்டு பொய்: பிரபல நாளிதழை விளாசிய ரித்திக், அர்ஜுன் ராம்பல்

மும்பை: பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன் மற்றும் அர்ஜுன் ராம்பல் ஆகியோர் முன்னணி ஆங்கில நாளிதழை விளாசியுள்ளனர்.

முன்னணி நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா தீபிகா படுகோனேவின் கிளீவேஜ் பற்றி செய்தி வெளியிட்டது. இதையடுத்து தீபிகா அந்த நாளிதழை விளாசித் தள்ளினார். பதிலுக்கு நாளிதழும் தீபிகாவை விளாசியது.

இந்நிலையில் அதே நாளிதழ் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. அதனால் நெருங்கிய தோழிகளாக இருந்த ராம்பலின் மனைவி மெஹர் ஜெசியாவும், சூசனும் தற்போது பிரிந்துவிட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை பார்த்த ரித்திக் மற்றும் ரம்பல் டென்ஷனாகி ட்விட்டரில் அந்த நாளிதழை விளாசியுள்ளனர்.

ராம்பலின் ட்வீட்,

பாம்பே டைம்ஸ் உங்களுக்கு யார் பணம் கொடுத்தது? குறை கூறும் இந்த முகம் தெரியாத நபர்கள் யார்? துணிச்சல் இருந்தால் அவர்கள் யார் என்று முதலில் கூறுங்கள். என்னையும், என் குடும்பத்தையும் விட்டு தள்ளி இருங்கள்.

ரித்திக் ரோஷனின் ட்வீட்,

எவ்வளவு பொய்யான செய்திகள் அச்சிடப்படுகிறது என்பது மக்களுக்கு தெரிந்தால், பேப்பர்கள் அதை விற்பதை நிறுத்திவிடும். இன்று அருவருப்பாக உணர்கிறேன்.

 

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக உதவியவர் சல்மான்கான்தானாம்!

சென்னை: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலைக்கு உதவியவர் சல்மான்கான் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

2011-ல் கைதான இந்த 5 மீனவர்களும் போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.

தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருந்த 5 பேரும் விடுதலையானது தமிழக மக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக உதவியவர் சல்மான்கான்தானாம்!

தமிழக அரசு

முன்னதாக 5 மீனவர்களையும் மீட்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியது. தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து மத்திய அரசு தூதரகம் மூலம் நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார்.

ராஜபக்சே

மேலும் இலங்கையில் ராஜபக்சே மந்திரி சபையில் உள்ள தமிழ் அமைச்சர்களும் ராஜபக்சேவை சந்தித்து 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு ராஜபக்சே சம்மதித்தார்.

சல்மான்கான் உதவி?

இந்த நிலையில் 5 மீனவர்கள் விடுதலைக்கு நடிகர் சல்மான்கானும் மறைமுகமாக உதவிய தகவல் வெளியாகியுள்ளது.

அழைப்பிதழ் கொடுத்த போது...

சமீபத்தில் சல்மான்கானின் தங்கை திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. இதற்கான திருமண அழைப்பிதழை இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கொழும்பில் உள்ள தனது நண்பரும் பத்திரிகையாளருமான ரஜத் சர்மா மூலம் கொடுத்து அனுப்பினார்.

சல்மான் சார்பில் கோரிக்கை

ரஜத் சர்மா ராஜபக்சேவை நேரில் சந்தித்து சல்மான்கான் தங்கை திருமண அழைப்பிதழை கொடுத்தார். அப்போது ரஜத் சர்மா பத்திரிகையாளர் என்ற முறையில் 5 தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனை பிரச்சினையை எடுத்துக்கூறி அவர்களை விடுதலை செய்ய கேட்டுக்கொண்டாராம். மேலும் இது சல்மான்கானின் கோரிக்கை என்றும் எடுத்துச் சொன்னாராம்.

இப்படி பல வழிகளில் இருந்தும், நட்பு ரீதியாகவும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வந்ததாலேயே மீனவர் விடுதலை சாத்தியமாகியுள்ளது.

ரஜத் சர்மா

சல்மான்கான் பல ஆண்டுகளாகவே ராஜபக்சேயுடன் நெருக்கமாக உள்ளவர். அதேபோல பத்திரிகையாளர் ரஜத் சர்மா நடிகர் சல்மான்கானுக்கு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் ராஜபக்சேக்கு நண்பர். பாராளுமன்ற தேர்தலின் போது மோடியை அவர் டி.வி.க்காக சந்தித்து பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமல் ராஜபக்சே

சல்மான்கான் அழைப்பை ஏற்று அவரது தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொள்ள ராஜபக்சே தனது மகன் நமல் ராஜபக்சேவை அனுப்பி வைத்தார். அவர் மணமக்களை வாழ்த்தி எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சல்மான்கான் தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொண்டது மிகவும் விருப்பமான நிகழ்வாக அமைந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

எக்ஸ்க்ளூசிவ்: ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்தது ரஜினியின் லிங்கா

ரஜினியின் லிங்கா படம் ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியைக் குவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் படம் லிங்கா. இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

எக்ஸ்க்ளூசிவ்: ரிலீசுக்கு  முன்பே ரூ 200 கோடியை குவித்தது ரஜினியின் லிங்கா

படத்தின் அனைத்து மொழி உரிமை மற்றும் உலக உரிமையை ஏற்கெனவே ஈராஸ் நிறுவனம் ரு 165 கோடிக்கு வாங்கி இந்திய சினிமாவை பிரமிக்க வைத்துவிட்டது.

அடுத்து படத்தின் ஆடியோ உரிமை மட்டும் ரூ 7 கோடிக்கு இதே நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இதில் ஐட்யூன்ஸ், ரிங்டோன்கள் உரிமை உள்பட அனைத்தும் அடங்கும்.

இந்தப் படத்துக்குதான் இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் தொகை சேட்டிலைட் உரிமையாகக் கைமாறியுள்ளதாக பேச்சு நிலவுகிறது.

சன் டிவி ரூ 28 கோடி தர முன்வந்தது லிங்காவுக்கு. விஷயம் தெரிந்ததும், அதைவிட அதிகமாகக் கொடுத்து ஜெயா டிவி இந்தப் படத்தைப் பெற்றுள்ளது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி இந்த டீலுக்கு போனஸ். ரஜினியின் சிறப்புப் பேட்டியும் உண்டு என்கிறார்கள்.

ஆக படம் வெளியாகும் முன்பே ரூ 200 கோடியை குவித்திருக்கிறது லிங்கா. படத்தை வாங்கிய ஈராஸ் தெலுங்கு, மலையாளம், கன்னத்தில் பெரும் விலைக்கு விநியோகஸ்தர்களுக்கு விற்றுள்ளது. தெலுங்குப் பதிப்பு மட்டும் ரூ 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தியில் ஈராஸ் நிறுவனமே வெளியிடுகிறது. உலகளாவிய வெளியீட்டை தனது துணை நிறுவனமான ஐங்கரன் மூலம் மேற்கொள்கிறது ஈராஸ்.

 

மாதவனின் தனு வெட்ஸ் மனு 2 படத்தில் கௌரவ தோற்றத்தில் தனுஷ்

டெல்லி: மாதவன் நடித்து வரும் தனு வெட்ஸ் மனு 2 இந்தி படத்தில் தனுஷ் கௌரவ தோற்றத்தில் வருகிறாராம்.

மாதவன், கங்கனா ரனௌத் நடித்த இந்தி படம் தனு வெட்ஸ் மனு. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷை வைத்து ராஞ்ஹனா படத்தை எடுத்த ஆனந்த் எல் ராய் எடுத்து வருகிறார். இரண்டாம் பாகத்திற்காக மாதவன் தாடி, மீசை, நீள முடியை துறந்து கிளீனாக ஷேவ் செய்து அலைபாயுதே படத்தில் வந்தது போன்று இளமையாகிவிட்டார்.

படத்தில் கங்கனா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் கௌரவத் தோற்றத்தில் வருகிறாராம். படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆனந்த் எல் ராய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க தனுஷ் கோவாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அங்கு அவர் தனு வெட்ஸ் மனு படப்பிடிப்பில் ஒரு நாள் முழுக்க இருந்தார்.

ஆனந்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க கோவாவில் இருந்து டெல்லி பறந்த தனுஷ்

இது குறித்து தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

டெல்லியில் தனு வெட்ஸ் மனு 2 படப்பிடிப்பில் உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனரான ஆனந்த் எல். ராயுடன் உள்ளேன். அவரது இயக்கத்தில் நடிப்பதை மிஸ் பண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தனுஷ் ஆனந்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவே டெல்லி வந்தார். அவர் படத்தில் கௌரவத் தோற்றத்தில் வருகிறாரா என்பதை தற்போதே தெரிவிக்க முடியாது என திரைக்கதை ஆசிரியர் ஹிமான்ஷு சர்மா தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பில் தனுஷும், மாதவனும் நட்பாக பேசிப் பழகினார்களாம்.

 

புகழுக்கு உன் இன்றை அழுத்தவும்... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்... இது விரைவில் வரவிருக்கும் ஒரு படத்தின் தலைப்பு.

இந்தப் படத்துக்கு ஒரு வித்தியாசமான பாடல் எழுதியிருக்கிறார் கார்க்கி.

புகழுக்கு உன் இன்றை அழுத்தவும்... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்!

அந்தப் பாடல் பிறந்த கதையை இப்படிக் கூறுகிறார்...

'தன் படத்தின் கதையை என்னிடம் இரண்டு நிமிடங்களில் சொல்லிய ராம் பிரகாஷ், அதன் தலைப்பை முன்னிலைப் படுத்தி ஒரு மூன்று நிமிடப் பாடல் வேண்டும் என்று கேட்டார். ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்ற தலைப்பைப் பாடலுக்குள் எப்படிக் கொண்டு வருவது என்று தமனின் ஒலிப்பதிவுக் கூடத்தின் வரவேற்பறையில் வீற்றிருக்கும் புத்தர் சிலையோடு பேசிக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன்.

‘தமிழ்' ‘எண்' ‘ஒன்று' ‘அழுத்து' என்ற நான்கு சொற்களும் என் விரல்களுக்கும் மடிக் கணினி விசைப் பலகைக்கும் நடுவே நடனமாடிக் கொண்டிருக்க, மொழிகளை மையப்படுத்தலாமா? எண், எழுத்து என்று பட்டியலிடலாமா? ஒன்று, இரண்டு மூன்று என்று எதையாவது வரிசைப் படுத்தலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த என்னை இழுத்தது ‘அழுத்து'.

புகழுக்கு உன் இன்றை அழுத்தவும்... தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்!

‘எது கிடைக்க எதை அழுத்த வேண்டும்' என்பதைச் சூத்திரமாகக் கொண்ட வரிகளை அமைக்க நினைத்தேன். தமனிடமும் ராம் பிரகாஷிடமும் இந்த எண்ணத்தைச் சொன்னவுடன் இருவருக்கும் பிடித்துப் போனது. எழுதச் சொன்னார்கள். நான் எழுதிய வரிகள்:

அலைவரிசை மாற்றவே
தொலை இயக்கி அழுத்தவும்!
தலை எழுத்தை மாற்றவே - உன்
மூளையை நீ அழுத்தவும்!

வேகத்தை எடுக்க
முடுக்கியை அழுத்து!
நியாயத்தை உரைக்க
சொற்களை அழுத்து!

பணம் உடனே வேண்டுமா?
தானியங்கி வங்கி சென்று - உன்
இரகசியத்தை அழுத்தவும்!
காதல் செலுத்த வேண்டுமா?
தானியங்கி இதழ்களின் மேலே
முத்தத்தை அழுத்தவும்!

குறுஞ்செய்தி அனுப்பவே
விசைப்பலகை அழுத்தவும்!
பெருஞ்செய்தி எழுதவே - உன்
ஆயுளை நீ அழுத்தவும்!

புகழுக்கு உன் இன்றை அழுத்தவும்!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்!

எழுதி முடித்த சில நிமிடங்களில், வரிகளை பொருள் சிதையாத ஒரு மெட்டில் பூட்டினார் தமன். பாடலைப் பதிவு செய்தோம். ‘ஆரோமலே' அல்ஃபோன்ஸ் அவர்களின் மந்திரக் குரலுக்கு நடுவில் ஓர் எந்திரக் குரலாக கேட்பது என் குரலே. அழுத்தமான ஒரு பாடலை உருவாக்கியதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.

-இவ்வாறு கூறினார் மதன் கார்க்கி.

 

5 காஸ்ட்யூமர், 4 ஸ்டன்ட் மேன்...- இது விஜய்யின் அடுத்த படத்துக்கு!

சென்னை: விஜய் நடிக்கும் பெரிடப்படாத சிம்பு தேவன் படத்துக்காக 5 காஸ்ட்யூம் டிசைனர்கள், 4 சண்டைப் பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக பொருட் செலவு, இந்தியாவே எதிர்ப்பார்க்கும் நட்சத்திர நடிகர்கள் என பார்த்துப் பார்த்து செய்து வருகின்றனர். விஜய்யுடன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், சுதீப் போன்றவர்கள் நடிக்கிறார்கள்.

5 காஸ்ட்யூமர், 4 ஸ்டன்ட் மேன்...- இது விஜய்யின் அடுத்த படத்துக்கு!

இந்தப் படம் பேன்டசி வகைக் கதை என்பதால், இதில் விதவிதமான ஒப்பனைகள், உடைகள் தேவைப்படுகின்றன. எனவே உடையலங்கார நிபுணர்கள் மட்டும் ஐந்து பேர் இதில் பணியாற்றுகின்றனர். மணீஷ் மல்கோத்ரா, தீபாலி நூர், சைதன்யா ராவ், சிவா மற்றும் சாய் ஆகியோர் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல சண்டைப் பயிற்சிக்கென நான்கு பேர் பணியாற்றுகிறார்கள். ரெட் க்ளிப், ட்ரான்ஸ்போர்டர் படங்களில் பணியாற்றிய சேங் லின், தி லாஸ்ட் மெடல்லியன் படத்தில் பணியாற்றிய ப்ரதித் சீலியம், இந்தி சிங்கம் படத்தில் பணியாற்றி சுனில் ரோட்ரிக்ஸ் மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோர் விஜய்க்கு ஸ்பெஷல் ஸ்டன்ட் காட்சிகள் அமைக்கின்றனர்.

 

மேற்கு தொடர்ச்சி மலை.. இளையராஜா இசையில் விஜய் சேதுபதி தயாரிக்கும் அடுத்த படம்

விஜய் சேதுபதி தன் அடுத்த சொந்தத் தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு 'மேற்கு தொடர்ச்சி மலை' என்று பெயரிடப்பட்டுள்ளார். இசை.. வேறு யார்... அந்த மேற்குத் தொடர்ச்சி மலை தந்த இசைஞானி இளையராஜாதான்!

'புறம்போக்கு', 'நானும் ரவுடிதான்' உள்ளிட்ட பணிகளில் பிஸியாக இருந்தாலும், 'ஆரஞ்சு மிட்டாய்' எனும் படத்தில் நடித்து, தயாரித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை.. இளையராஜா இசையில் விஜய் சேதுபதி தயாரிக்கும் அடுத்த படம்

அப்படத்தின் இறுதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து இசை வெளியீடு நடைபெற இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 'மேற்கு தொடர்ச்சி மலை' எனும் படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி.

இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய லெனின் பாரதி, 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இளையராஜா இசையமைக்க, காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்கிறார்.

டிசம்பர் 2ம் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது!

 

வசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சிட்டாங்க.. இது ஆர்யா - ராஜேஷ் படத்தின் தலைப்பு

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா என வித்தியாச - சற்று நீண்ட - தலைப்புகள் வைப்பது இயக்குநர் ராஜேஷின் பாணி.

அந்த வகையில் தன் அடுத்த படத்துக்கு வசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சிட்டாங்க என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க, தமன்னா ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திலும் சந்தானம்தான் பிரதான காமெடியன் கம் இரண்டாவது நாயகன்.

வசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சிட்டாங்க.. இது ஆர்யா - ராஜேஷ் படத்தின் தலைப்பு

ஆர்யாவின் ஷோ பீப்பிள் நிறுவனம்தான் படத்தைத் தயாரிக்கிறது.

'தாமிரபரணி' படத்தில் கதாநாயகியாக நடித்த பானு இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் வெண்ணிற ஆடை முர்த்தி, ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யு லேகா, மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

நீரவ் ஷா ஒளிபதிவு செய்ய, ஜாக்கி கலை வண்ணத்தில், இமான் இசை அமைக்க உள்ள இந்த படம் சென்னையில் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.

படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், 'இந்த படம் வெறுமனே சிரித்து விட்டு போகக் கூடிய படமாக இருக்காது. சிந்திக்க மற்றும் சிரிக்க வைக்கும் கதையின் கரு, கண் கவரும் நேர்த்தியான ஒளிபதிவு மற்றும் செவிக்கினிய இசை என்று படத்தின் வெற்றிக்கு தேவையான அதனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.

ஆர்யா- சந்தானம்- மற்றும் என்னுடைய கூட்டணியில் வெளி வந்த எங்களது முந்தைய படமான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் வெற்றியையும் தரத்தையும் இந்த படத்திலும் தருவோம்', என்றார் நம்பிக்கையுடன். வெல்கம் பேக்!

 

ஹூட் ஹூட் புயலுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி கொடுத்த சமந்தா

ஹைதராபாத்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகை நடிகை சமந்தா ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார்.

ஹூட் ஹூட் புயலுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி கொடுத்த சமந்தா

ஆந்திர மாநிலத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இதில் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. விசாகப்பட்டினம் பெருமளவில் சேதமடைந்தது. இதில் 50 பேர் பலியானார்கள், பலஆயிரக்கணக்கானோர் இருப்பிடங்களை இழந்தனர். பல கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்தன.

ஹூட் ஹூட் புயலுக்காக நடிகர் சூர்யா, கார்த்திக், விஷால் உட்பட பல திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழிலதிபர்கள் நிதியுதவி வழங்கினர். இதற்கு நடிகை சமந்தாவும் ரூ. 10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை ஹைதராபாத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சமந்தா சந்தித்தார். அப்போது ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

 

கமல் ரசிகர்களுக்காக தனி யூடியூப் சேனல் ... 'உலகநாயகன் டியூப்'

சென்னை: கமல் ஹாஸன் ரசிகர்களுக்கு என்று பிரத்யேகமாக யூடியூப் சேனல் துவங்கப்பட்டுள்ளது. அதன் பெயர் உலகநாயகன் டியூப்.

உலக நாயகன் கமல் ஹாஸன் ரசிகர்களுக்கு என்று பிரத்யேக யுடியூப் சேனல் துவங்கப்பட்டுள்ளது. அதற்கு உலகநாயகன் டியூப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த உலகநாயகன் டியூப் அண்மையில் துவங்கப்பட்டது. அதை இதுவரை 50 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 2 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

இந்த யூடியூப் சேனலை வாய் மொழி குழு நிர்வகித்து வருகிறது.

கமல் ரசிகர்களுக்காக தனி யூடியூப் சேனல் ... 'உலகநாயகன் டியூப்'

முதல் நிகழ்ச்சியாக எழுத்தாளரும், இயக்குனருமான ஆர்.சி. சக்தி மற்றும் இசையமைப்பாளர் கிப்ரான் ஆகியோர் கமலுடன் பங்கேற்ற கேள்வி, பதில் நிகழ்ச்சி வெளியிடப்பட்டது.

அடுத்த வாரம் நடிகர் நாஸரை கமலிடம் கேள்விகள் கேட்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து வாய் மொழி குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,

இது கமல் சாரின் ஐடியா. இந்த சேனல் மூலம் அவர் தனது படங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். மேலும் அவர் தனது கட்டுரைகள், கவிதைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். எதிர்காலம் டிஜிட்டல் மயம் என்பதால் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க இது தான் சரியான வழி என்று கமல் நினைக்கிறார் என்றார்.

உலகநாயகன் டியூப்