கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் அமெரிக்க உரிமை விற்பனை

லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் வட அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு வெளியீட்டு உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பிரைம் மீடியா மற்றும் ராஜ்கமல் ஃப்ரைம் டைம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை வெளியிடுகின்றன.

படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் அமெரிக்க உரிமை விற்பனை

கமல் ஹாஸன் இரு வேடங்களில் நடிக்க, அவருடன் கே பாலச்சந்தர், கே விஸ்வநாத், பூஜை குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், வரும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகிறது.

வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அவர்களிடமிருந்து அமெரிக்க மற்றும் கனடா உரிமையை மேற்கண்ட நிறுவனங்கள் பெற்றுள்ளன.

உத்தம வில்லன் வெளியாகும் அதே தேதியில் விஜயகாந்த் மகன் நடித்த சகாப்தமும், உதயநிதி - நயன்தாரா நடித்த நண்பேன்டா படங்களும் வெளியாகவிருக்கின்றன.

 

ஏப்ரலில் சிம்பு- செல்வராகவன் படம்!

செல்வராகவனும் சிம்புவும் இணைந்து புதிய படம் செய்யப் போவதாக ரொம்ப நாட்களுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்தவண்ணமிருந்தன.

ஆனால் இடையில் இந்தப் படம் கைவிடப்பட்டது என்றும், எல்லாம் தனுஷ் நடத்திய நாடகம் என்று கூட சிலர் கூறிவந்தனர்.

ஆனால் அப்படியெல்லாம்.. இதோ படத்தை ஆரம்பித்துவிடுகிறோம் என்று கூறியுள்ளனர் இருவரும்.

ஏப்ரலில் சிம்பு- செல்வராகவன் படம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போகிறார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டைதான் இருவரும் இணைந்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மது அம்பாட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறார். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அவர் ஏற்கெனவே நடித்து ரொம்ப நாள் கிடப்பில் உள்ள வாலு இந்த மாதம் வெளியாகிறது.

 

குடும்ப ரசிகர்களை குறிவைக்கும் மசாலா படம்

சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கபடுகின்றன. இந்தியாவிற்கே உரித்தான மசாலா படங்களை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் குமார் இயக்கும் ‘ மசாலா படம்'.

"வெற்றி பெரும் மசாலா படங்கள் எதற்காக வெற்றி பெறுகிறதென்று எவராலும் சுட்டி காட்டுதல் கடினம். அப்படிப்பட்ட மசாலா படங்களை அடிப்படையாக வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று நானும் தயாரிப்பாளர் விஜய் முடிவு செய்து எடுக்க ஆரம்பித்ததே மசாலா படம்," என ஆரம்பித்தார் லஷ்மன்.

குடும்ப ரசிகர்களை குறிவைக்கும் மசாலா படம்

"படத்துல ஒவ்வொரு பிரதான கதாப்பாத்திரமும் மசாலா படங்களில் வரும் காதல், செண்டிமெண்ட் , ஆக்ஷன், காமெடி என ஒரு விஷயத்தைச் சொல்லும். குறும்பும் நகைச்சுவையும் கொப்பளிக்க நடிக்கும் மிர்ச்சி சிவா காமெடிக்கும், சிம்ஹாவின் ஆக்ஷன் பகுதிக்கும், மற்றும் காதல் காட்சிகள் குடும்ப ரசிகர்களை கூட்டி வரும் என நம்புகிறோம்.

"ஜிகர்தண்டா, சூது கவ்வும் போன்ற படங்களை புதுயுக சினிமாக்கள் என்று குறிப்பிடுவார்கள். அத்தகைய சினிமாக்களின் பாணியில் மசாலா கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தயாரிப்பாளர் முதல் நடித்த நடிகர்கள் வரை அனைவரும் நண்பர்களே. படம் எடுத்ததே ஒரு டூர் போல் இருந்தது," என்றார் லஷ்மன்.

 

கார் விபத்தில் உயிர்தப்பினார் நடிகை சாரதா

நடிகை ‘ஊர்வசி' சாரதா, ஐதராபாத்தில் நடந்த கார் விபத்தில் உயிர் தப்பினார். கடவுள் அருளால் பிழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

‘துலாபாரம்' படத்தில் நடித்ததன் மூலம் அகில இந்திய சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘ஊர்வசி' விருது பெற்றவர் சாரதா.

கார் விபத்தில் உயிர்தப்பினார் நடிகை சாரதா

எம்.ஜி.ஆர். நடித்த, ‘நினைத்ததை முடிப்பவன்' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்துவரும் சாரதா, குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா சென்றார். நிகழ்ச்சி முடிந்து அவர் காரில் ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய காருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென்று விபத்துக்குள்ளாகி, தலைகுப்புற புரண்டது. பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த ‘ஊர்வசி' சாரதாவின் கார் விபத்துக்குள்ளான கார் மீது மோதியது.

இந்த விபத்து பற்றி அவர் கூறுகையில், "சினிமாவில்தான் நான் கார் விபத்துக்குள்ளாவதை பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் நடந்த முதல் விபத்து இது. முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது என் கார் மோதியதும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். என்றாலும், தலைகுப்புற புரண்டு கிடந்த காரை நோக்கி நான் ஓடினேன்.

அந்த காருக்குள் ஒரு கணவனும், மனைவியும் சிக்கிக்கொண்டார்கள். அவர்களை வெளியே எடுத்து தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தேன். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.

எல்லோரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து கணவன்-மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். கடவுள் அருளால்தான் நான் உயிர் பிழைத்ததாக கருதுகிறேன்," என்றார்.