அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது கமலின் உத்தம வில்லன்?

கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிங்குசாமியும் கமல் ஹாஸனும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது கமலின் உத்தம வில்லன்?

கமல் ஜோடிகளாக ஆன்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர். பார்வதி மேனனும் இதில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் என்றார்கள். ஆனால் இப்போது அதில் மாற்றம்.

ஆனால் இதுவரை படத்தின் இசை வெளியீட்டுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை.

படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடலாமா என லிங்குசாமி தரப்பில் யோசித்து வருகிறார்களாம்.

 

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை... பிரமிக்க வைக்கும் ரஜினிகாந்த்!

வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல- என்று படையப்பாவில் ரஜினியைப் பார்த்துப் பேசுவார் ரம்யா கிருஷ்ணன்.

லிங்காவைப் பொறுத்தவரை, இந்த வசனம் நூறு சதவீதம் பொருந்தும்.

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை... பிரமிக்க வைக்கும் ரஜினிகாந்த்!

ரஜினியின் தோற்றம், அவரது ஸ்டைல், தன் உடல் நிலையை மீறி அவர் காட்டும் ஆர்வம் அனைத்துமே இந்த வசனத்தைத்தான் நினைவூட்டுவதாக லிங்கா குழுவினர் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தின் வசனக் காட்சி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளில் அடுத்த வாரம் படமாக்கப்படுகிறது.

இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுப்பதில் மும்முரமாகியுள்ளார் ரஜினி.

காலை 9 மணிக்கு ஷார்ப்பாக டப்பிங் தியேட்டருக்கு வந்துவிடும் ரஜினி, இரவு 9 மணி வரை டப்பிங் பேசுகிறார். சரியாக 8.55-க்கே வந்துவிடும் ரஜினி, என்ன சரியான டைமுக்கு வந்துட்டேனா என ஒரு புதிய நடிகரைப் போல கேட்பதைப் பார்த்து வாயடைத்துப் போகிறார்களாம் ஒலிப்பதிவுக் கூட கலைஞர்கள்.

மதிய உணவுக்கு அரை மணி நேரம்தான். இடையில் எதற்கும் பிரேக் கேட்காமல் பேசி முடித்துவிட்டே கிளம்புகிறாராம்.

இந்த வேகத்தில் போனால் இன்னும் சில தினங்களில் அவரது காட்சிகளுக்கான டப்பிங் முடிந்துவிடும் என்கிறாரகள்.

ரஜினியின் பிறந்த நாளன்று படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்பதால், மிகப் பெரிய வரவேற்புக்கு ரசிகர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஒரு சீனுக்கு எத்தனை டேக்கு: இயக்குனருடன் மல்லுக்கட்டிய நடிகை

சென்னை: டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் அந்த நடிகை தான் நடித்து வரும் தமிழ் படத்தின் இயக்குனர் மீது கடுப்பாகி சண்டை போட்டாராம்.

டோலிவுட்டில் வெற்றி நாயகியாக உள்ள அவருக்கு கோலிவுட்டில் தான் ஹிட் படம் அமைய மாட்டேன் என்கிறது. அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு தமிழ் படத்தையும் பெரிதும் எதிர்பார்ப்பதும், அது ஊத்திக் கொள்வதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் நடித்துள்ள படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.

இந்த படமும் ஊத்திக் கொண்டால் கோலிவுட்டில் அவரது பாடு கஷ்டம் தான். இந்நிலையில் தான் அவர் தன் கையில் உள்ள ஒரே தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகை நடிக்க இயக்குனருக்கு அது பிடித்தது போன்று அமையவில்லையாம். இதனால் இயக்குனர் அந்த குறிப்பிட்ட காட்சியை மீண்டும் மீண்டும் எடுத்துள்ளார். இதனால் கடுப்பான நடிகை எத்தனை ரீடேக் என்று இயக்குனரிடம் மல்லுக்கு பாய்ந்துள்ளார்.

ஏற்கனவே தமிழில் அவருக்கு படம் ஓடாத நிலையில் இயக்குனருடன் பிரச்சனை வேறா என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

 

ஆக்கம் படத்தில் சென்னை தாதாவாக நடிக்கிறார் பவர் சீனிவாசன்!

சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ஆக்கம் என்ற பெயரில் படமாக எடுக்கிறார் மு களஞ்சியத்தின் உதவி இயக்குநராக இருந்த ஞானசம்பந்தன்.த

இப்படத்தின் கதாநாயகனாக சதீஷ் ராகவன் என்ற புதுமுகம் நடிக்கிறார். வைதேகி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பிரபல நடிகர் ரஞ்சித், தருண்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஆக்கம் படத்தில் சென்னை தாதாவாக நடிக்கிறார் பவர் சீனிவாசன்!

பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பிரபல ரவுடியாக நடித்துள்ளார். ஜெயிலுக்குள் ரவுடியாக உருவாவதுபோல் இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை முழுக்க முழுக்க வடசென்னையிலேயே படமாக்கியுள்ளனர்.

இரண்டு கட்டப் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பிசியாக உள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் கூறுகையில், "சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை எடுத்திருக்கிறோம். ஆக்ஷன், காதல் கலந்த கதை.

முழுக்க முழுக்க வடசென்னையில் நடக்கும் கதை என்பதால் ராயபுரம், புளியாந்தோப்பு, வியாசர்பாடி, எண்ணூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம்.

பொங்கலுக்கு முன்பு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஜி.ஏ.சிவசந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனெவே களஞ்சியம் இயக்கத்தில் உருவான ‘கருங்காலி' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்.

 

ஜீன்ஸ் சர்ச்சை: கே ஜே யேசுதாசுக்கு நடிகர் சலீம் குமார் ஆதரவு

பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என்று கூறி சர்ச்சைக்குள்ளான கே ஜே யேசுதாஸுக்கு, பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஜீன்ஸ் அணிந்து ஆண்களுக்கு தொல்லை தரக்கூடாது என்றும் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார் ஜேசுதாஸ். இந்த சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

ஜீன்ஸ் சர்ச்சை: கே ஜே யேசுதாசுக்கு நடிகர் சலீம் குமார் ஆதரவு

பெண்கள் இயக்கங்கள் யேசுதாசை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. போலீசிலும் புகார் செய்துள்ளனர். யேசுதாஸ் குடும்ப பெண்கள் ஜீன்ஸ் அணிந்து இருப்பது போல் கம்ப்யூட்டர் கிராபிக்சில் படங்களை உருவாக்கி அவற்றை பேஸ்புக், ட்விட்டரில் பரவ விட்டனர்.

இன்னொரு பக்கம் யேசுதாசின் சர்ச்சை பேச்சுக்கு ஆண்கள் அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். பெண்கள் சங்கங்களைச் சேர்ந்த சில அமைப்பினரும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதைத் தவிர்த்தனர்.

இந்த நிலையில் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று யேசுதாஸ் பேசியதற்கு பிரபல மலையாள நடிகர் சலீம்குமார் ஆதரவு தெரிவித்தார். பொது நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, 'யேசுதாஸ் சொன்ன கருத்து தவறானது அல்ல. நல்ல விஷயம்தான். அவருக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்,' என்றார்.

 

தன்னுடைய பிரமாண்ட வெண்கலச் சிலையை தானே திறந்து வைத்த அர்னால்ட்

கொலம்பஸ் நகரில் நடந்த அர்னால்ட் விளையாட்டுத் திருவிழாவில் தனது பிரமாண்ட வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட்.

பாடி பில்டிங் எனப்படும் உடற்கட்டமைப்பு கலையில் ஆறு முறை 'மிஸ்டர் ஒலிம்பியா' பட்டம் பெற்று சாதனைப் படைத்தவர் அர்னால்ட். அவரது கை சாதாரணமாக ஒருவர் தோளில் பட்டாலே, அப்படி வலிக்குமாம். இந்த வயதிலும் அத்தனை பலசாலி.

தன்னுடைய பிரமாண்ட வெண்கலச் சிலையை தானே திறந்து வைத்த அர்னால்ட்

அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, வட அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரத்தில் ஒரு பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இங்கு அர்னால்ட் பெயரில் விளையாட்டுத் திருவிழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால் இந்த விழாவின் சிறப்பு புரிந்திருக்கும்.

இந்தப் போட்டி நடக்கும் மெமோரியல் ஹாலில், ஏற்கெனவே அர்னால்டுக்கு சின்னதாக ஒரு வைத்திருந்தார்கள்.

இப்போது 8 அடி உயரம் மற்றும் 600 பவுண்ட் எடை கொண்ட (273 கிலோ) வெண்கலச் சிலையை அமைத்துப் பெருமைப்படுத்தி இருக்கிறது விளையாட்டுத் திருவிழா குழு.

சமீபத்தில் கொலம்பஸில் நடந்த சிலைத் திறப்பு விழாவில், அர்னால்ட கலந்துகொண்டு, தன்னுடைய சிலையைத் தானே திறந்துவைத்தார்.

2015 மார்ச் 5 முதல் 8 வரை நடக்க இருக்கும் 24-வது அர்னால்டு விளையாட்டுத் திருவிழாவில் 2 லட்சம் பேர் வரை திருவிழாவுக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

 

ரஜினிகாந்த்- இளையராஜா- பஞ்சு அருணாச்சலம்... ஒரு அபூர்வ சந்திப்பு!

தமிழ் சினிமாவில் கண்ணதாசனின் அடியொற்றி வந்தவர்களில் பஞ்சு அருணாச்சலம் முக்கியமானவர். தயாரிப்பாளராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக, சிறந்த பாடலாசிரியராக என்று எல்லாத் துறைகளிலும் தன்னை நிருபித்தவர். அதுமட்டுமில்லாமல் பி.ஏ.ஆர்ட்ஸ் மூலம் ரஜினி, கமல் என்ற இரண்டு திரைக்குதிரைகளை ஒரே வேகத்தில் ஓடவைக்கும் கலையைக் கற்ற சரியான ஜாக்கி இவர்.. ரஜினி கமலின் இருவரின் அதிக வெற்றிப்படங்ளை தயாரித்த தயரிப்பாளரும் கூட. இந்தவகையில் இரண்டு நட்ச்சத்திரங்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

இந்த இருவரின் அன்பிற்கு அடையளமாக கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும். இது சில இடங்களில் கேட்ட தகவலாக இருந்தாலும் சுவராஸ்யம் கருதி எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்.

ரஜினிகாந்த்- இளையராஜா- பஞ்சு அருணாச்சலம்... ஒரு அபூர்வ சந்திப்பு!

ரஜினி கமல் இணைந்து நடித்த பல படங்கள் நூறு நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது ஒரு தயாரிப்பாளராக இருவரும் சேர்ந்து நடிக்க ஒரு படத்தை தயாரிக்க பஞ்சு அவர்கள் முடிவு செய்து இருவரிடமும் கால்ஷீட் கேட்கிறார். தங்களுக்கு ஹிட் படங்கள் கொடுத்த தயாரிப்பாளர் என்ற மரியாதையில் இருவரும் அவர் தயாரிக்கும் படத்தில் சேர்ந்து நடிக்க முடிவு செய்து ஒப்பந்தத்தில், கையெழுத்திடுகிறார்கள். நினைத்ததை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியில் படவேலைகளில் ஈடுபட்டு வருகிறார் பஞ்சு அவர்கள். சில மாதங்கள் ஓடுகின்றன. ரஜினி, கமல் நடித்து அப்போது சில படங்கள் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்த்- இளையராஜா- பஞ்சு அருணாச்சலம்... ஒரு அபூர்வ சந்திப்பு!

‘நினைத்தாலே இனிக்கும்' படப்பிடிப்பில் ரஜினிக்கும் கமலுக்கும் காட்சிகள் இல்லாத நேரத்தில் இருவரும் ரிலாக்ஸாக புல் தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கமல் ஒரு முடிவெடுத்து ரஜினியிடம் சில விஷயங்களை மனம் விட்டு பேசுகிறார். "ரஜினி நீயும் வளர்ந்து பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டே. நானும் ஒரு லெவலுக்கு வந்திட்டேன். உனக்கும் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கும் ரசிகர்கள் இருக்காங்க.. அப்படியிருக்கும்போது நாம் இனியும் சேர்ந்து நடித்தால் நமக்கான சம்பளத்தை உயர்த்திக் கேட்க முடியாது. உனக்கும் குறைவாகவே சம்பளம் கிடைக்கும். இதைத் தவிர்க்க நாம் இன்மேல் சேர்ந்து நடிக்காமல் தனித்தனி ஹிரோவாகவே நடிக்கலாமே," என்ற யோசனையை ரஜினிக்கு சொல்லியிருக்கிறார் கமல்.

இத்தனைக்கும் கமல் அப்போது ரஜினியை விட பெரிய ஹீரோவாக இருந்தவர். சக நடிகரின் வளர்ச்சிமேல் கொண்ட அக்கறை காரணமாக இந்த ஐடியாவை ரஜினிக்கு சொன்னார் கமல். இந்த யோசனைக்கு ரஜினியும் சம்மதிக்க அடுத்தடுத்த படங்களில் ரஜினி தனி ஹீரோவாகவும் கமல் தனியாகவும் நடிக்க ஆரம்பித்தனர்.

ரஜினிகாந்த்- இளையராஜா- பஞ்சு அருணாச்சலம்... ஒரு அபூர்வ சந்திப்பு!

இந்த நிலையில் இருவரையும் சேர்ந்து நடிப்பதற்காக ஒப்பந்தம் போட்டுச் சென்ற தயாரிப்பாளர் பஞ்சு படத்தை ஆரம்பிக்க இருவரையும் சந்தித்துப் பேச வருகிறார். அப்போதுதான் அவரிடம் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இப்படி வேறு யாரிடமாவது சொல்லியிருந்தால் அவர்கள் திகைத்துப் போய் திரும்பியிருப்பார்கள். ஒரு படைப்பாளியாக இருந்த காரணத்தால் பஞ்சு அவர்கள் சிரித்துக் கொண்டே "அதனாலென்ன இருவரும் சேர்ந்துதானே நடிக்க மாட்டீர்கள். பரவாயில்லை ஒப்பந்தபடி இருவரும் தனித்தனியாக ஆளுக்கு ஒரு படம் செய்து கொடுத்து விடுங்கள்," என்றிருக்கிறார்.

"ரஜினி ஓகே என்றால் நானும் ஓகே" என்று கமல் சொல்லியிருக்கிறார். ஆனால் எதிர்பாரத விதமாக ரஜினியும் ஓகே சொல்லி விட்டார். அவர்கள் இருவரும் வைத்த ஒரே நிபந்தனை படத்தை ஆரம்பிக்க ஒரே வாரம்தான் கெடு. ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் எடுத்து முடித்து விட வேண்டும்.

பஞ்சு அவர்களும் சளைக்காமல் ஏழு நாள் கெடுவோடு இரண்டு படங்களுக்கான கதைகளை எழுத உட்காருகிறார். இரண்டு கதைகளையும் எழுதி முடித்து விட்டு படப்பிடிப்பிற்கு செல்கிறார். இரண்டு படங்களையும் எஸ்.பி முத்துராமன் இயக்க, இளையராஜா இசையமைப்பில் பாடல்களை பஞ்சு அருணாச்சலமே எழுத, படப்பிடிப்புகள் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. படங்களும் வெளிவந்தன.

படத்தின் கதையமைப்பிலும் பாடல்கள் கொடுத்த வெற்றியிலும் இரண்டு படங்களும் நூறு நாள் படங்களாக வெற்றி விழாக்களைக் கண்டன. அந்த இரண்டு படங்கள் ஆறிலிருந்து அறுபது வரை, கல்யாணராமன்!

இப்படி படைப்புச் சாதுர்யத்தால் தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதித்தவர் பஞ்சு அருனாச்சலம் அவர்கள்.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு பஞ்சு அருணாச்சலம் அவர்கள் உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியிருந்தார். இந்தகவல் இளையராஜா அவர்களுக்கு தெரிந்ததும் அவர் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க ஆவலானார். ஆனால் அந்த நேரத்தில் ஒரு படத்தின் பாடல் பதிவிற்காக இளையராஜா பிஸியாக இருந்த நேரத்தில் அவரைப் பார்க்க சூப்பர் ஸ்டார் ரஜினி திடீரென ஸ்டுடியோவிற்கே வந்து விட்டார்.

அப்போது இளையராஜா அவர்கள் பஞ்சு அவர்களின் நிலை பற்றிச் சொல்லவும் "அவரை எப்படியாவது பார்க்கணுமே சாமி" என்று ரஜினி பரபரக்க, "நாளை நான் போய பார்க்கப்போகிறேன் சாமி" என்று பதிலுக்கு இளையராஜா சொல்லியிருக்கிறார்.

"அப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்துபோய் பார்த்து விட்டு வரலாம் சாமி" என்று இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போது இளையராஜா "நானே என் காரை அனுப்புகிறேன் சாமி" என்று சொல்ல "இல்லை சாமி நான் என் காரில் உங்கள் வீட்டிற்கே வந்து விடுகிறேன் இருவரும் சேர்ந்து போகலாம்" என்று சொல்லவும் ராஜாவும் அம்மதம் சொல்லியிருக்கிறார்.

ரஜினிகாந்த்- இளையராஜா- பஞ்சு அருணாச்சலம்... ஒரு அபூர்வ சந்திப்பு!

மறுநாள் காலையில் ரஜினியின் கார் இளையராஜாவின் வீட்டின் முன் நிற்கிறது. வெள்ளை குர்தா, கரும் பச்சை கலர் காவி வேஷ்டியில் வந்திறங்கினார் ரஜினி. ராஜாவை ஏற்றிக்கொண்டு கார் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் இருக்கும் பாகீரதி அம்மன் தெருவிற்கு பறக்கிறது. அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் போய் நின்றது கார். முதலில் ரஜினி இறங்க, அடுத்து இறங்கினார் இளையராஜா இரட்டை சூரியனை வீட்டின் முன் பார்த்த அப்பார்ட்மெண்டின் காவலாளிக்கு பதற்றம், மகிழ்ச்சி, கொண்டாட்டம். இருவரும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே பஞ்சு சார் இருக்கும் முதல் தளத்திற்கு செல்கிறார்கள்.

வீட்டில் இருவரையும் ஒருசேரப் பார்த்த பஞ்சு சாருக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி. வரவேற்று இருவரையும் அமர வைக்கிறார். சம்பிரதாய விசாரிப்புப் பேச்சுக்கள் முடிந்ததும் மூவரும் மனம் திறந்து உரையாட ஆரம்பிக்கிறார்கள். சில விஷயங்கள் அவர்கள் மூவரின் தனிப்பட்ட நிகழ்வுகள் அதனால் அதை இங்கு பதிவு செய்ய முடியாது.

அப்புறம் ரஜினி, தான் மருத்துவமனையிலிருந்து காலங்கள் பற்றியும் அது தொடர்பான சில நிகழ்வுகளையும் சொல்கிறார். சூடான டீயும் தட்டு நிறைய பிஸ்கட்டுகள், பழங்கள் வருகிறது. மூவரும் ருசித்துக்கொண்டே ரசித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியே பேச்சு சினிமா பக்கம் திரும்புகிறது. அப்போதுதான் ரஜினி மனம் திறந்து சில தகவல்களை பஞ்சு சாரிடம் பகிர்ந்து கொள்கிறார். "என்க்கு இப்ப வேற மாதிரி படங்கள் பண்ண ஆசையாக இருக்கு. ஆனால் சூழ்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. ஹிந்தியில் அமிதாப்ஜி பண்ணும் கதாபாத்திரங்களை போல் நானும் பண்ணனும் போல் இருக்கு. என்னோட அடுத்த படமே அப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஆச்சரியமில்லை," என்று சொல்லியிருக்கிறார்.

அமிதாப்பின் 'பா' படம் பற்றியும் சிலாகித்துப் பேசியிருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவிற்கான கதையில் இல்லாமல் எளிமையான கதையமைப்பில் அமிதாப் மாதிரியான கதாபாத்திரங்களில் இனி சில படங்கள் நடிக்கலாம் என்ற ரஜினி முடிவை பஞ்சு அருணாச்சலம் ஆமோதித்து உற்சாக[ப்படுத்த இளையராஜாவும் அதை வரவேற்றிருக்கிறார்.

மூவரும் பேசி முடித்து புறப்பட்டனர் இளையராஜாவை அவர் வீட்டில் இறக்கிவிட்ட ரஜினியின் கார் பறந்தது புதிய பாதையில்...

-தேனி கண்ணன்