எல்லை கடந்த கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன்-தமன்னா


எதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்கிறார் தமன்னா.

சில வாரங்களுக்கு முன்பு வரை தமன்னாதான் தமிழ் சினிமாவின் ஒய்யார நாயகியாக இருந்தார். அத்தனை ஹீரோக்களும் தமன்னாவுடன் ஜோடி போட அலை மோதிய காலம் அது.

ஆனால் இன்று தமன்னாவை பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. காரணம், இப்போது அவர் தமிழில் அவ்வளவாக நடிப்பதில்லை. மாறாக தெலுங்கில் பிசியாகி விட்டார்.

இருப்பினும் தற்போது ஹரி இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வேங்கை படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.

இதில் சாதாரண கல்லூரி மாணவியாக மகா எளிமையாக நடிக்கிறாராம் தமன்னா. ஏன் கிளாமர் பக்கம் போகவில்லையா என்று கேட்டால், எனக்கு கிளாமர் நடிப்பு, சாதா நடிப்பு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. நல்ல கதையா என்றுதான் பார்ப்பேன். கதை பிடித்திருந்தால் நடிப்பேன்.அது கிளாமருடன் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும்.

அதேசமயம், கிளாமர் காட்டுவதிலும் ஒரு எல்லை உண்டு. எல்லை கடந்தால் அது விரசமாகி விடும். அதற்கு எனது ஓட்டு எப்போதுமே கிடையாது. அதற்காக கிளாமரே கூடாது என்றெல்லாம் இல்லை.

இப்போது கூட பத்ரிநாத் என்ற படத்தில் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். அதேபோல 100பர்சன்ட் லவ் என்ற படத்திலும் கிளாமர் காட்டியுள்ளேன். எல்லாம் எல்லை கடக்காத அழகான கிளாமர்தான் என்று நீண்ட விளக்கமளித்து பெருமூச்சு விட்டார்.

சரி தமிழ் என்னாச்சு என்று கேட்டால், மறுபடியும் நீளமாக பேசினார் தமன்னா. அப்படியெல்லாம் கிடையாது. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை எனக்குப் பிடித்தாற் போல இல்லாததால் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றபடி தமிழை நான் புறக்கணிக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் மறுபடியும் நடிப்பேன் என்று கூறி நிறுத்தினார்.

கார்த்தி கல்யாணத்திற்குப் போவீங்களா தமன்னா…?

 

பின்னழகைப் பிடித்த ரிஹானா!


கவர்ச்சிப் பாடகி ரிஹானா மற்றவர்களின் கவனத்தை கவர என்ன செய்யலாம் என்பதை நன்கு அறிந்தவர். சமீபத்தில் வெளியான அவரது எஸ்அன்ட்எம் என்ற வீடியோ ஆல்பத்தை அனைவரும் பார்க்கக் கூடிய நேரத்தில் ஒளிபரப்பக் கூடாது என்று தடையே போடப்பட்டது. காரணம், அவ்வளவு கவர்ச்சி அந்த ஆல்பத்தில் இருப்பதால்.

இந்த நிலையில் இன்னொரு சில்மிஷத்தை செய்துள்ளார் ரிஹானா. மேடை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பாடி ஆடியபோது தனது பின்னழகை இரு கைககளாலும் பிடித்து அழுத்தி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை உசுப்பேத்தி உற்சாகத்தில் மூழ்க வைத்துள்ளார் ரிஹானா.

மின்னபோலிஸில் நடந்த நிகழ்ச்சியில்தான் இந்த குசும்புத்தனத்தை செய்தார் ரிஹானா.

அத்தோடு நில்லாமல் படு கவர்ச்சியான காஸ்ட்யூமிலும் வந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தையும் சேர்த்துப் பரிமாறினார்.

பார்படாஸ் தீவின் சுற்றுலா அம்பாசடராக ரிஹானா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், பார்படாஸின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாச் சிறப்புகளை அனைவரும் அறிய வேண்டும், அனுபவிக்க வேண்டும். இதற்காக கடுமையாக உழைப்பேன் என்றார்.

பார்படாஸுக்குப் பெயர் சேர்ப்பதற்காக ரிஹானா என்னென்ன கூத்துக்களை அடிக்கப் போகிறாரோ என்ற கவர்ச்சி ‘பீதி’ அலை அலையாக பரவிக் கொண்டிருக்கிறது.

 

தமிழ் நேஷனல் ஜியாகிராபிக்-'புரமோட்டர்' ஷ்ரியா!


நேஷனல் ஜியாகிராபிக் சானலின் தமிழ்ப் பதிப்பை நடிகை ஷ்ரியா தொடங்கியுள்ளார். மேலும் இந்த சானலை பிரபலப்படுத்தும் பணியிலும் ஷ்ரியா ஈடுபடவுள்ளார்.

அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, கலாச்சாரம், இயற்கை, வன வாழ்க்கை உள்ளிட்டவை குறித்த செய்திகளை, டாக்குமெண்டரிப் படங்களை ஒளிபரப்பி வரும் சானள் நேஷனல் ஜியாகிராபிக் சானலாகும். இது தற்போது 24 மணி நேர தமிழ்ப் பதிப்பை தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்குப் பதிப்பை அது தொடங்கியது. அதேபோல பெங்காலியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழையும் தனது பட்டியலில் நேஷனல் ஜியாகிராபிக் இணைத்துள்ளது.

தமிழி்ல் தனது சானலைப் பிரபலப்படுத்த நடிகை ஷ்ரியாவை அணுகியது நேஷனல். அவரும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுள்ளார். இதுதொடர்பான நிகழ்ச்சியில் ஷ்ரியா பேசுகையில், நேஷனல் ஜியாகிராபிக் சானலின் நீண்ட நாள் ரசிகை நான். தற்போது அதன் தமிழ்ப் பதிப்பை தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன் என்றார்.

நேஷனல் ஜியாகிராபிக் சானலின் போட்டியாளரான டிஸ்கவரி சானல், கடந்த ஜனவரி மாதம் தனது தமிழ்ப் பதிப்பை தொடங்கியது நினைவிருக்கலாம்.

 

ஆரோவில்லில் நர்த்தகி படத்திற்குக் கெளரவம்


அரவாணிகளின் மறுபக்கத்தை நெகிழ்ச்சியூட்டும் வகையில் விவரித்த நர்த்தகி திரைப்படம், புதுவை ஆரோவில்லில் குடியிருப்புவர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.

ஆரோவில் மக்கள் சிறந்த, தரமான திரைப்படங்களை மட்டுமே தங்களது மையத்தில் திரையிட்டுப் பார்ப்பது வழக்கம். அந்தவகையில், விஜயபத்மா இயக்கத்தில், அரவாணி கல்கி சுப்ரமணியத்தின் நடிப்பில் உருவான நர்த்தகி திரைப்படம் அங்கு நாளை மாலை 7.30 மணிக்குத் திரையிடப்படுகிறது.

இதில் விசேஷம் என்னவென்றால் கல்கி, ஆரோவில்லில் 2 வருடங்கள் வசித்துள்ளார். இதுவும் கூட நர்த்தகி திரைப்படத்தில் அழகுற விவரிக்கப்பட்டுள்ளது.

ஆரோவிலில் வசித்து வரும் 48 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாட்டினருக்காக பிரத்யேகமாக திரையிடப்படுவது விசேஷமானது.

நாளை இரவு 7.30 மணிக்கு ஆரோவில் டவுன்ஹால், எம்எம்சி ஆடிட்டோரியத்தில் நர்த்தகி திரையிடப்படுகிறது. நிகழ்ச்சியில், இயக்குநர் விஜயபத்மா, நாயகி கல்கி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
 

திரிஷாவை அழைக்கிறது போஜ்பூரி!


திரிஷாவின் சேவை எங்களுக்குத் தேவை என்று போஜ்பூரி திரையுலகிலிருந்து அழைப்பு மேல் அழைப்பு வந்தவண்ணம் உள்ளதாம்.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சான்டல்வுட், மல்லுவுட் என ஏகப்பட்ட மல்லுக்கட்டுகள் இந்தியத் திரையுலகில் கோலோச்சி வருகின்றன. இந்த மாபெரும் மலைகளுக்கு மத்தியில் சின்ன மடுவாக இருந்தாலும், போஜ்பூரி திரையுலகமும் படு பிசியாக இருந்து வருகிறது.

இங்கு நடிக்காத தென்னிந்திய நடிகைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் லீடிங்கில் இருந்த நடிகைகள் எல்லாம் இங்கும் போய் பட்டையைக் கிளப்பியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் நக்மா போஜ்பூரியில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்தார். பின்னர் ரம்பாவும் போய் நடித்தார். இந்த நிலையில் தற்போது திரிஷாவைத் தேடி போஜ்பூரிக்காரர்கள் ஓலை மேல் ஓலை அனுப்பியவண்ணம் உள்ளனராம்.

எல்லாம் தமிழ், தெலுங்கு, இந்தியைத் தாண்டி வேறு படங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு திரிஷா வந்ததுதான் காரணம். சமீபத்தில் அவர் தர்ஷனுக்கு ஜோடியாக கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதையடுத்தே போஜ்பூரி படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளதாம்.

ஆனால் இன்னும் திரிஷா அதுகுறித்து முடிவெடுக்கவில்லை. தென்னிந்தியாவில் பீல்ட் அவுட் ஆனவர்கள்தான் வழக்கமாக போஜ்பூரிக்குப் போகிறார்கள் என்பதால் இப்போதே அந்த நிலைக்கு தான் ஆளாவதை திரிஷா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இனிமேல் தன்னைக் கவரும் கதை இருந்தால் தமிழ், தெலுங்கு தவிர பிற மொழிகளிலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு திரிஷா வந்துள்ளதாக தெரிகிறது.

அதானே, நடிப்புச் சேவைக்கு மொழியேது...!
 

இயக்குநர்கள் சங்கத் தலைவர்-நிர்வாகிகள் தேர்தலில் விறுவிறு வாக்குப் பதிவு


தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று நடந்தது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில், 2,100 இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். கடந்த 2 வருடமாக இயக்குநர் பாரதிராஜாதான் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்த 2 வருடங்களுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செயவதற்கான தேர்தல் இன்று நடந்தது. வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் யூனியன் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை ஓட்டுப் போடலாம்.

கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். காலை முதலே இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், கே.எஸ்.ரவிக்குமார், அமீர், சசிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், தரணி, தியாகராஜன், ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.

தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை எதிர்த்து உதவி இயக்குநர் முரளி போட்டியிடுகிறார்.

செயலாளர் பதவிக்கு அமீர் மற்றும் அவரை எதிர்த்து அப்துல் மஜீத் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு ஜனநாதன், துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

4 இணைச் செயலாளர்கள் பதவிகளுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று இரவு தலைவர், செயலாளர் பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.