சென்னை: கந்து வட்டி வாங்கியதற்காக, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மகள் மீது ஆசிட் வீசப்போவதாக விடுப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை கௌரி என்கிற சிந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இவர் பரதேசி படத்தில் கங்காணியின் மனைவியாக நடித்தவர் ஆவார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், கூறியுள்ளதாவது:
''நான் 'ஐ.நா.' என்ற திரைப்படம் எடுப்பதற்காக புரசைவாக்கத்தை சேர்ந்த சாந்தி, அமுலு, ஈஸ்வரி, சுகந்தி, குட்டிமா (எ) வசந்தி ஆகியோரிடம் சுமார் ரூ.4 லட்சம் கந்து வட்டியாக வாங்கியிருந்தேன். வாங்கிய பணத்திற்கு காலம் தவறாமல் வட்டியை, வாங்கிய பணத்தை விட அதிகமாக தந்து விட்டேன். மேற்படி 'ஐ.நா.' படம் சூட்டிங் குறுகிய காலம்தான் எடுத்தோம். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் வெளிநாடு சென்று இருப்பதால் படம் தற்போது எடுக்காமல் காலதாமதாமாகி இருக்கிறது. இதனால் வாங்கிய பணத்தை என்னால் கொடுக்க முடியவில்லை.
இதனால், மேற்படி நபர்கள் தொடர்ந்து தொலைபேசியிலும், என்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கு வந்து, அடியாட்களை வைத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு, அயனாவரத்தில் இருக்கும் எனது சகோதரி வீட்டிற்கு சென்று அவர்களையும் மிக அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, 'உங்களை கொன்று சாட்சியில்லாமல் எரித்து விடுவேன்' என்று கூறி மிரட்டுகிறார்கள்.
மேலும், எனது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று குழந்தையை கடத்தி கொன்று விடுவேன் என்றும், சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என் மீது ஆசிட் ஊற்றி விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள். அதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
மேலும் இதன் காரணமாக தொடர்ந்து மனஉளைச்சல் ஏற்பட்டு கடந்த 6ஆம் தேதி மதியம் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அருகில் உள்ளவர்கள் என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், 'ஐ.யூ.சி. வார்டில் வைத்து உன்னை கொலை செய்து விடுவேன்' என்றும், 'எனக்கு எல்லா பக்கமும் ஆட்கள் இருக்கிறார்கள்' என்றும் போனில் மிரட்டுகிறார்கள். இவர்களுக்கு பயந்து எனது போனை சுவிட்ச் ஆப் செய்ததினால், என் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தால் நான் எப்படி கடனை அடைப்பது. நான் பணம் தரவில்லை என்று கூறவில்லை. எனக்கு போதிய கால அவகாசம் தர வேண்டுமாய் கேட்கின்றேன்.
எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும், சாந்தி, அமுலு, ஈஸ்வரி, சுகந்தி, குட்டிமா (எ) வசந்தி ஆகியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.