சோனா பப்ளிசிட்டி தேடுகிறார்! - சரண்


சென்னை: விளம்பரத்திற்காக தன் மீது நடிகை சோனா வீண் பழி சுமத்துவதாக தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் கூறியுள்ளார்.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா, மங்கத்தா படத்திற்காக இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தனக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். பாண்டி பஜார் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரும் கொடுத்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, பகிரங்கமாக தன்னிடம் சரண் மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.சரண் சோனா புகாருக்கு மறுப்பு கூறியுள்ளார்.

சோனா தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''விருந்து நிகழ்ச்சியில் நான் எதுவும் முறை தவறி நடக்கவில்லை. சோனாதான் பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் செய்கிறார். படம் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசினேன்,' என்றார்.

இதனிடையே விருந்து நிகழ்ச்சியில் இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று இயக்குனர் வெங்கட்பிரபுவும் மறுத்துள்ளார்.

வெங்கட் பிரபுவும் சரணும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

உறவுக்காரப் பெண் சரண்யாவை மணந்தார் இயக்குனர் சற்குணம்


தஞ்சை: களவாணி புகழ் இயக்குனர் சற்குணம் தனது உறவுக்காரப் பெண்ணான சரண்யாவை மணந்தார்.

களவாணி படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சற்குணம். அவருக்கும், அவரது உறவுக்காரப் பெண்ணான சரண்யாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்கள் திருமணம் நிச்சயி்த்தபடி நேற்று (15-ம் தேதி) தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு தேத்தாடிக் கொல்லை, ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தில் நடந்தது.

வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்ல சற்குணம் மணமகள் சரண்யா கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டினார். அவர்களை பெரியோர்கள் அட்சதைத் தூவி வாழ்த்தினார்கள்.

இந்த திருமணத்திற்கு நடிகர் விமல் தனது மனைவியுடன் வந்திருந்தார். மேலும் நடிகர்-இயக்குனர் பாக்கியராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், நடிகை சரண்யா பொன்வண்ணன், அவரது கணவர் பொன்வண்ணன் உள்பட பலர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமகள் சரண்யா எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். சற்குணத்தின் அடுத்த படம் வாகை சூடவா வரும் 23-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
 

சினேகா, த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!


15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தி உறுப்பினராகாவிட்டால், தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது என நடிகைகள் சினேகா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோருக்கு தெலுங்கு நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கடந்த வாரம் சென்னையில் கூடிய நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 30-ந்தேதிக்குள் உறுப்பினராக கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது போல் தெலுங்கு நடிகர் சங்கமும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பளம் அதிகம் என்பதால் இந்தி, தமிழ், மலையாள நடிகைகள் பலர் தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரை உறுப்பினராகவில்லை இதையடுத்து உறுப்பினராகாத நடிகைகள் பட்டியலை தெலுங்கு நடிகர் சங்கம் தயார் செய்தது.

அவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் உறுப்பினராக வேண்டும் என்று கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகள் த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா, நித்யாமேனன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இவர்கள் தமிழ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி விட்டனர். ஆனால் தெலுங்கில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லையாம். 15 நாட்களுக்குள் உறுப்பினராகாவிட்டால் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

விசித்ராவின் தந்தையைக் கொன்றது ஏன்?- கொள்ளையர்கள் வாக்குமூலம்


ஸ்ரீபெரும்புதூர்: உல்லாசமாக வாழத் தான் நடிகை விசித்ராவின் தந்தையைக் கொலை செய்து நகை, பணத்தைக் கொள்ளையடித்ததாக கைதான 2 வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகை விசித்ராவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் அருகே உள்ள செல்லம்பட்டறை ஆகும். இங்கு அவரது தந்தையின் பூர்வீக நிலங்கள், வீடு ஆகியவை உள்ளன.

இந்த வீட்டில் விசித்ராவின் தந்தை வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா ஆகியோர் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை 3 மணியளவில்
முகமூடி அணிந்த இருவர் ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டில் புகுந்தனர். அவர்கள் வில்லியம்சை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். விசித்ராவின் தாயையும் தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மயங்கி விழுந்தார்.

உடனே கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்கள் விசித்ரா வீட்டில் இருந்த 2 செல்போன்களையும் திருடிச் சென்று பயன்படுத்தினர். செல்போன் டவரை வைத்து கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

நேற்று சுங்குவார்சத்திரத்தை அடுத்த சோகண்டி கூட்டு சாலையில் சென்ற 2 வாலிபர்களைப் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் விசித்ராவின் தந்தையைக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர்.

அவர்கள் இருவரும் செல்லம்பட்டிடையை அடுத்த ஏலபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (29), வேலு (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த வாக்குமூலம் வருமாறு,

நாங்கள் கிராமத்தில் எலி, அணில், பாம்பு ஆகியவைகளை வேட்டையாடி வந்தோம். கிராம மக்கள் கொடுக்கும் வேலைகளை செய்து வந்தோம். அப்போது வில்லியம்ஸ் அவரது மனைவி மேரி வசந்தா பண்ணை வீட்டில் அடிக்கடி வந்து தனிமையில் தங்கி வந்ததை நோட்டமிட்டோம். மேரி வசந்தா நிறைய நகைகளை அணிந்து இருப்பார். எங்களுக்கும் மற்றவர்களை போல் உல்லாசமாக வாழ ஆசையாக இருந்தது.

கடந்த 2.6.11 அன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் உள்ள கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கும்போது அதை தடுத்த வாலிபர் மூர்த்தியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டோம்.

இதையடுத்து வில்லியம்ஸ் வீட்டிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினோம். சம்பவத்தன்று நள்ளிரவு வில்லியம்ஸ் வீட்டில் புகுந்து அவரை கத்தியால் குத்தினோம். அவர் அங்கேயே இறந்தார்.

அவரது மனைவி மேரி வசந்தாவிடம் நகைகளை பறித்துக் கொண்டு அவரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடினோம் என்று கூறியுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளிகளைப் பிடித்த தனிப்படையை ஐ.ஜி. சைலேந்திர பாபு பாராட்டி, பரிசு வழங்கி கௌரவித்தார்.
 

புத்தத் துறவி 'தாமோ'வாக சூர்யா!


ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு ரூ 10 கோடி செலவில் கிராபிக்ஸ் அமைத்துள்ளார்களாம்.

காட்சியின் முக்கியத்துவம் கருதி இந்த காட்சிகளுக்கு மிகுந்த தாராளம் காட்டியுள்ளார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

ரஜினியின் எந்திரனுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை அசத்தலாக அமைத்து பிரமிக்க வைத்த அமெரிக்காவில் உள்ள ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டுடியோவில்தான் இந்தப் பணிகள் நடக்கிறதாம்.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பாக, மொத்தம் 10 நிமிடங்களுக்கு புத்தத் துறவியாக வருகிறாராம் சூர்யா. இந்தப் பாத்திரத்துக்கு 'தாமோ' என்று பெயர். தமிழ்நாட்டில் பிறந்த ஒரு துறவிக்கு சீனாவில் கோவில் கட்டி கும்பிடுவதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கதையின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளாராம் முருகதாஸ்.
 

செல்வராகவன் குடும்பத்தைக் கெடுக்க முயற்சிக்கவில்லை - ஆன்ட்ரியா


செல்வராகவன் குடும்பத்தை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று நடிகை ஆன்ட்ரியா கூறினார்.

செல்வராகவனுக்கும் அவரது முதல் மனைவி நடிகை சோனியா அகர்வாலுக்கும் பிரச்சினை ஏற்பட்டு விவாரத்து வரை போக காரணமானவர் நடிகை ஆன்ட்ரியாதான் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து ஏராளமான செய்திகள் ஊடகங்களில் வந்தன. இதை உறுதிப் படுத்தும் வகையில் ஆன்ட்ரியா, செல்வராகவனின் அனைத்துப் படங்களிலும் ஆஸ்தான நாயகியாக இருந்தார்.

ஆனால் செல்வராகவன் கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அடுத்து, செல்வராகவனின் படங்களிலிருந்து ஆன்ட்ரியா நீக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார்.

"இந்தக் கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் யார் குடும்பத்தையும் கெடுக்கும் எண்ணம் கொண்டவள் அல்ல. திருமணமாகி மனைவியுடன் வாழும் ஒருவரை நான் கெடுக்க முயற்சித்ததாக கூறப்படுவது அநியாயம். செல்வராகவன் அவரது வாழ்க்கையை சந்தோஷமாக வாழட்டும்," என்றார்.
 

லண்டன் மியூசியத்தில் கரீனாவுக்கு மெழுகு சிலை!


லண்டனின் புகழ்பெற்ற மேடம் டுஸாட் மியூசியத்தில் நடிகை கரீனா கபூருக்கு மெழுகுச்சிலை நிறுவப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை அந்த மியூசியம் இன்று வெளியிட்டுள்ளது.

லண்டனில் பிளாக்பூல் பகுதியில் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியமான மேடம் டுஸாட் உள்ளது. இங்கு உலக தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகளின் முழு உருவ மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.

பாலிவுட்டின் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரேஷன், ஐஸ்வர்யா ராய் போன்றோரின் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் உள்ளது.

தற்போது இந்தி நடிகை கரீனாகபூரின் மெழுகு சிலையும் இங்கு நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் இந்த சிலை திறந்து வைக்கப்படுகிறது.

இதுபற்றி கரீனா கபூர் கூறும் போது லண்டன் மியூசியத்தில் எனக்கு மெழுகு சிலை வைப்பது பெருமை அளிப்பதாக உள்ளது என்றார்.

இந்த சிலை மியூசியத்தில் நிறுவப்படுவதற்கு முன் ஹாங் காங், லண்டன், பாங்காக் உள்ளிட்ட 6 சர்வதேச நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைப்பவரும் கரீனாதான்.

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து இந்த மியூசியத்தில் இடம்பெறும் சிலை கரீனாவுடையதுதான்.
 

இந்தியில் காஞ்சனா... உறுதி செய்தார் சல்மான்கான்!


ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தமிழில் பெரும் வெற்றி பெற்ற திகில் காமெடி படமான காஞ்சனாவை இந்தியில் ரீமேக் செய்கிறார் சல்மான்கான். இதற்கான அதிகாரப்பூர்வமனா அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து சல்மான்கான் சகோதரர் சோஹைல் கான் கூறுகையில், "சல்மான் அடுத்து நடிக்க இருந்த ஷெர்கான் படத்தை இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளோம்.

அடுத்து தமிழ்ப் படமான காஞ்சனா ரீமேக்தான். இந்தப் படத்தை நான் இயக்குகிறேன். ராகவா லாரன்ஸ் கதை - திரைக்கதை எழுதுகிறார்," என்றார்.

இந்தப் படம் 3 டியில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சல்மான் இப்போது நடித்துவரும் ஏக்தா டைகர் படப்பிடிப்பு முடிந்ததும் காஞ்சனா துவங்கும். 2012 ரம்ஜானுக்கு இந்தப் படம் வெளியாகிறது.

சமீப காலமாக தமிழ்ப் படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் சல்மான். வான்டட் (போக்கிரி), பாடிகார்ட் (காவலன்) போன்ற படங்கள்தான் அவருக்கு பெரிய வெற்றியைத் தந்துள்ளன என்பது நினைவிருக்கலாம்.
 

கைமாறிய விக்ரமின் ராஜபாட்டை!


விக்ரம் நடிக்க சுசீந்திரன் இயக்கும் ராஜபாட்டை படத்தை பிரபல வர்த்தகர் பிரசாத் வி பொட்லூரி வாங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம் இந்த ராஜபாட்டை. தெலுங்கில் பிரபலமான தீக்ஷா சேத் நாயகியாக அறிமுகமாகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படம் ரமேஷ் பாபுவின் கனகதாரா பேனரில் தயாராகி வந்தது.

இந்த நிலையில், ரமேஷ் பாபு பண நெருக்கடி மற்றும் சில சட்ட சிக்கல்களில் மாட்டிக் கொண்டதால், அவரிடமிருந்து பிரசாத் வி பொட்லூரியின் பிவிபி சினிமாஸ் பேனருக்கு மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 39 கோடியில் தயாராகும் படம் இந்த ராஜபாட்டை. விக்ரமின் அதிகபட்ச பட்ஜெட் படம் இதுதான் என்கிறார்கள். அப்ப கந்தசாமி... 'சும்மா' சாமியா?
 

ரா ஒன்னில் ஷாரூக்கானைக் 'காப்பாற்றும்' ரஜினி!


ரா ஒன் படத்தில் ஷாருக்கானைக் காப்பாற்றும் சூப்பர் பவர் பாத்திரமாக நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.

உடல் நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இயல்பு நிலைக்கு அவர் திரும்பியதும் முதல் முறையாக கேமரா முன் தோன்றும் படம் ரா ஒன்தான் என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக வந்துள்ளது.

ஷாரூக்கின் இந்த ரா-ஒன் படம் ரஜினியின் எந்திரன் படத்தின் அப்பட்டமான காப்பி என்றெல்லாம் செய்திகள் உலா வந்த நிலையில், எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் ஷாருக்கான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ரா-ஒன் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் தோன்றப் போவதாக மும்பை பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன. இதுபற்றி கூறப்படுவதாவது:

ரா ஒன்னில் ஷாரூக்கானை பெரும் ஆபத்திலிருந்து காக்கும் ஒரு சூப்பர் மேன் வேடத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந்தேதி நடக்கிறது. ஷாருக்கான் வில்லன்களிடம் சண்டை போடும் போது ஒரு கட்டத்தில் நிராயுதபாணியாக நிற்பார். அவர் உயிரை வில்லன்கள் பறிக்க ஆயத்தமாகும் தருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சூப்பர் காரில் தனக்கே உரிய ஸ்டைலில் சர்ரென்று வந்து நிற்பார்.

அவரது கார் வில்லன்களின் ஆயுதங்களை தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பாற்றும். அப்போது ஷாரூக்கின் உடனிருக்கும் கதாநாயகி கரீனா கபூர் யார் இவர் என்று ரஜினியை பார்த்து கேட்பார். உடனே ரஜினி தனக்கே உரிய பஞ்ச் வசனம் பேசியடி காரிலிருந்து இறங்குவாராம். அவரை ஷாரூக்கான் மிகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்துவது போன்று இக்காட்சி எடுக்கப்படுகிறதாம்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சியில் ரஜினிபோல வேறு ஒருவருக்கு மேக்கப் போட்டு எடுத்துவிட திட்டமிட்டார்களாம்.

ஆனால் படம் தமிழில், தெலுங்கிலும் வெளியாவதால் ரஜினியே தோன்றினால் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பதால் அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து ரஜினியைத் தொடர்பு கொண்டாராம் ஷாரூக். ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு ரா-ஒன் படம் ரிலீசாகிறது இது தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது.
 

நடிக்க வந்திருந்தால் என்னை ஓரமா உட்கார வச்சிருப்பாங்க! - எல் ஆர் ஈஸ்வரி


திரையுலகில் ஒரு பாடகியாக இருந்ததால் இன்று வரை மரியாதையுடன் இருக்கிறேன். நடிக்க வந்திருந்தால், வயசாயிடுச்சின்னு ஓரமா உட்கார வச்சிருப்பாங்க," என்றார் பின்னணிப் பாடகி எல் ஆர் ஈஸ்வரி.

1958-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பின்னணி பாடகி, எல்.ஆர்.ஈஸ்வரி. 50 வருடங்களை தாண்டி திரையுலகில் இருந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

அவருக்கு வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6-30 மணிக்கு, சென்னை காமராஜர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது.

இதையொட்டி எல்.ஆர்.ஈஸ்வரி, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், "1958-ம் வருடம், 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்துக்காக, ``இவரேதான் அவரு...அவரேதான் இவரு'' என்ற பாடலை முதன்முதலாக பாடினேன். சிவாஜிகணேசன்-சாவித்ரி நடித்த 'பாசமலர்' படத்தில் நான் பாடிய ``வாராயோ தோழி வாராயோ'' என்ற பாடல்தான் என்னை பிரபலமாக்கியது.

அந்த காலத்தில் எனக்கும் சக பாடகியான பி சுசீலாவுக்கும் போட்டி இருந்தது உண்மைதான். ஆனால், எங்களுக்குள் பொறாமை இருந்ததில்லை.

எனக்கு எல்லா இசையமைப்பாளர்களையும் பிடிக்கும். குறிப்பாக, கே.வி.மகாதேவனை ரொம்ப பிடிக்கும். இப்போது பாட வரும் புதிய பாடகிகள், அவர்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள்.

இப்போது வரும் பாடல்களில், பாடல் வரிகளை விட வாத்திய கருவிகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மைதான். எதுவோ தேய்ந்து எதுவோ ஆகிவிட்ட கதை போல் ஆகிவிட்டது.

'சிவந்த மண்' படத்தில் இடம்பெற்ற பட்டத்து ராணி பாடலை கேட்டுவிட்டு, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் என்னை பாராட்டியது இன்றும் பசுமையாக என் மனதில் உள்ளது.

பாடும்போது, உணர்ச்சிகரமாக நான் ஆடிப்பாடுவதைப் பார்த்து படத்தில் நடித்திருக்கலாமே என கேட்கிறார்கள். நான் ஏன் நடிக்கணும்? நடிகையாக இருந்திருந்தால், வயசாகிடுச்சி என்று ஓரமாக உட்கார வச்சிருப்பாங்க. நல்ல வேளை அந்த தப்பை நான் பண்ணலை," என்றார்.
 

இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் திரையைத் தொடுகின்றன.


இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் திரையைத் தொடுகின்றன.

ஜீவா - டாப்ஸி நடித்த வந்தான் வென்றான் மற்றும் ஏ ஆர் முருகதாஸின் முதல் தயாரிப்பான எங்கேயும் எப்போதும் ஆகியவைதான் அந்தப் படங்கள்.

வந்தான் வென்றான் படத்தை 'ஜெயம் கொண்டான்' படத்தை இயக்கிய கண்ணன் இயக்கியுள்ளார். ஜீவாவுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ள இந்தப் படத்தில் சந்தானம் முக்கிய பங்கு வகிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். வணிக ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியைத் தரும் என ஜீவா நம்புகிறார்.

எங்கேயும் எப்போதும் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் முதல் முறையாக ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் இது.

ஜெய்-அஞ்சலி, சர்வானந்த் - அனுயா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே நல்ல ஹிட். ஒரு நல்ல சமூகக் கருத்தை கமர்ஷியலாகச் சொல்லியிருப்பதாக முருகதாஸ் கூறியிருந்தார்.

நல்ல படங்கள் என்று எதுவும் இல்லாத இந்த இடைவெளி, இந்த இரு படங்களின் வெற்றிக்கும் உதவும் என நம்புகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். பார்க்கலாம்!
 

மதுவிருந்தில் பலாத்காரம் செய்தார்: எஸ்பிபி சரண் மீது சோனா புகார்


சென்னை: மதுவிருந்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

பத்துக்கு பத்து, குரு என் ஆளு, குசேலன், கோ உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர், சோனா. சமீபத்தில் கனிமொழி என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சோனாவும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். வெங்கட்பிரபு டைரக்ஷனில், சோனா ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் மீது சென்னை பாண்டிபஜார் போலீசில் சோனா பாலியல் புகார் கொடுத்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண். உன்னை சரண் அடைந்தேன், சென்னை-28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார். உன்னை சரண் அடைந்தேன் படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக நடித்தும் இருக்கிறார்.

மங்காத்தா பார்ட்டியில்...

இதுகுறித்து சோனா நிருபர்களிடம் கூறுகையில், "மங்காத்தா படம் வெற்றி பெற்றதற்காக, அந்த படத்தில் நடித்திருந்த வைபவ் வீட்டில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு, 'பார்ட்டி' நடந்தது. அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அரவிந்த், அஸ்வின், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், டான்ஸ் மாஸ்டர் அஜய்ராஜ் உள்பட 'மங்காத்தா' படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

நடிகர்-தயாரிப்பாளர் எஸ்.பி.சரணும் அந்த 'பார்ட்டி'க்கு வந்திருந்தார். வெங்கட்பிரபு என் நண்பர் என்பதால், என்னையும் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்று நானும் 'பார்ட்டி'யில் கலந்துகொண்டேன்.

அங்கு மது விருந்து நடந்தது. திடீரென்று எஸ்.பி.சரண் என் மீது பாய்ந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் வெட்கத்தாலும், அதிர்ச்சியாலும் கூனிக் குறுகி போய்விட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் ஒரு கவர்ச்சி நடிகைதான். பிழைப்புக்காக நான் கவர்ச்சியாக நடிக்கிறேன். ஆனால், நான் விலை மாது அல்ல. ஏற்கனவே ஒருமுறை, எஸ்.பி.சரண் என்னிடம் தவறாக பேசினார். அதில் இருந்து நான் அவருடன் பேசுவதில்லை.

இதுபற்றி நான் பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்து இருக்கிறேன். போலீஸ் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, எடுக்கட்டும். அதோடு எஸ்.பி.சரண் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இன்னும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், என் சாவுக்கு அவர்தான் காரணமாக இருப்பார்’’ என்று கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக சோனா நேற்று இரவு பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுவை சந்தித்து புகார் கொடுத்தார்.

எஸ்பிபி சரண் பதில்

நடிகை சோனாவின் பாலியல் புகார் குறித்து எஸ்.பி.சரண் கூறுகையில், "வைபவ் வீட்டில் மது விருந்து நடந்தது உண்மை. ஆனால், சோனா சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. நான், சோனாவிடம் 'பிஸினஸ்' பற்றிதான் பேசினேன்.

அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். பிறகு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன். அதனால் வெங்கட்பிரபுவை வைத்து நான் படம் தயாரிக்க முடிவு செய்து, அது தொடர்பாகத்தான் சோனாவிடம் பேசினேன்’’ என்று கூறியுள்ளார்.

சோனாவின் புகார்-வீடியோ