ரஜினிகாந்த் உடலில் முன்னேற்றம்-ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம்

Tags:


சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் அனுமதிக்கப்பட்டுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் டிஜி நல்லமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நடிகர் ரஜினி தற்போது சாதாராண வார்டில் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இல்லை.

நுரையீரலில் தொற்று பாதிப்பு குறித்து அவருக்கு முழு பரிசோதனை நடைபெறுகிறது. தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உடல்நலம் சீராகும் வரை, ரஜினி முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவரை கவனித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமையன்றே இங்கு சேர்க்கப்பட்டு விட்டார். ஆனால் அதை ஏதோ மறைப்பது போல அவரது மனைவி லதா வீட்டில்தான் இருக்கிறார், நன்றாக இருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் குறித்து மீண்டும் தவறான செய்தி பரவியது. இதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையே முன்வந்து விளக்கம் அளித்துள்ளது.
 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ.சி திடீர் தேர்வு

Tags:


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அதிமுக ஆதரவு எஸ்.ஏ.சந்திரசேகர் திடீரென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் புதிய பூகம்பம் வெடித்துள்ளது. திமுககாரரான ராம.நாராயணன் முதல் ஆளாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அதேபோல செயலாளர் சிவசக்தி பாண்டியனும் விலகினார். பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் விலகினார்.

இருப்பினும் பிற நிர்வாகிகள் இதுவரை விலகவில்லை. அவர்கள் அத்தனை பேரும் பதவிகளை விட்டு ஓடிப் போய் விட வேண்டும் என்று மூத்த தயாரிப்பாளர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் ராம.நாராயணன் மீது சரமாரியான புகார்கள் கூறப்பட்டது. அவர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார். கட்டப் பஞ்சாயத்து செய்து வந்தார். ரூ. 15 கோடி மோசடி செய்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களைக் கூறினர் தயாரிப்பாளர்கள்.

விரைவில் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைவராக
பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேர்தல் நடைபெறுமா அல்லது எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் தொடர்ந்து சங்கம் செயல்படுமா என்பது தெரியவில்லை.

திமுகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரமும் செய்தார். அதிமுக ஆட்சியைப் பிடித்ததும், திரையுலகிலிருந்து முதல் நபராக அவரும், நடிகர் விஜய்யும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

கேயார் விதிக்கும் 2 நாள் கெடு

இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் அனைவரும் இன்னும் 2 நாட்களில் பதவி விலக வேண்டும் என்று இயக்குநர் கேயார் கெடு விதித்துள்ளார்.
 

தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னை அடிக்க அலைவது என்ன நியாயம்?-வடிவேலு

Tags:


மதுரை: தேர்தலில் ஜெயித்து விட்டால் மக்களுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து யோசிக்க வேண்டும். அதுதான் நல்ல தலைவருக்கு அடையாளம். ஆனால் தேர்தலில் ஜெயித்து விட்டதால் என்னையும், எனது குடும்பத்தினரையும் அடிக்க அலைவது என்ன நியாயம். இனிமேலாவது விஜயகாந்த் நல்ல தலைவராக நடக்க முயற்சிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார் வடிவேலு. அப்போது அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை குறிப்பிட்டு கடுமையாக பிரசாரம் செய்தார். அவரை மிகக் கடுமையாகவும் விமர்சித்தார். இதனால் தேமுதிகவினர் வெகுண்டனர். இருப்பினும் தேர்தல் சமயத்தில் பிரச்சினையை வளர்க்க விரும்பாமல் அவர்களை அமைதி காக்கச் செய்தார் விஜயகாந்த்.

ஆனால் தற்போது தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தேமுதிகவின் தயவு தேவைப்படாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை அதிமுக பெற்றுள்ளது.

இந்த நிலையில் தேமுதிகவினர் வடிவேலுவைப் பழிவாங்கும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. அவரை வீட்டைத தாக்குவதற்காக சென்னையில் உள்ள வடிவேலுவின் வீட்டுக்கு உருட்டுக் கட்டைகளுடன் பல தேமுதிகவினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வடிவேலு பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.

மதுரையிலும் தேமுதிகவினர் அவரது வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து மிரட்டுவதாக வடிவேலு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பாதுகாப்பு கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுகவை வைத்துத்தான் விஜயகாந்த் ஜெயித்தார்

தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.

ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.

வெளில வாடா, எத்தனை நாளைக்குடா உனக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் என்று பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றார், உனக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. ஆனால் அது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். என் வீட்டில் புகுந்து அடிப்பதற்கோ, என்னை வெட்டுவதற்கோ, என் வீட்டாரை தாக்குவதற்கோ அவர்கள் தீர்ப்பு கொடுக்கவில்லை. அது தப்பான விஷயம்.

தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்?

அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த்தான் முழுப் பொறுப்பும்.

எனது வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்புக்கு இருந்தவர்கள் போய் விட்டார்கள். எனது சென்னை வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து மிரடடியுள்ளனர். எனவே எனக்கும், எனது வீட்டாருக்கும் போலீஸார் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வடிவேலு.
 

கொஞ்ச காலத்துக்குப் பின் அரசியல் பிரவேசம்! - விஜய் பேட்டி

Tags:



சென்னை: கொஞ்ச காலத்துக்குப் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவது நடக்கலாம். ஆனால் இப்போது அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றார் நடிகர் விஜய்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது.

தேர்தல் முடிவு குறித்து விஜய் அளித்த பேட்டி:

அ.தி.மு.க. வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் இந்த அளவு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் என்ன?

சமூகத்தின் பலதரப்பு மக்களும் மாற்றத்தை மாற்றத்தை விரும்பினர். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. மக்கள் ஒட்டு மொத்தமாக அதை நிகழ்த்தி காட்டியுள்ளனர். நான் மட்டுமின்றி மாநில மக்கள் அனைவருமே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உறுதுணையாக இருந்தார்கள்.

உங்கள் ரசிகர்களின் தேர்தல் பணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தேர்தலில் எங்களின் மக்கள் இயக்கமும் ரசிகர்களும் கடுமையாக உழைத்தார்கள். நான் வேண்டுகோள் விடுத்ததற்காக இரவு-பகலாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

முழு நேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

கொஞ்ச காலத்துக்கு பிறகு அது நடக்கலாம். ஆனால் தற்போது அதற்கான திட்டம் இல்லை. ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார் விஜய்.

தேர்தல் நேரத்தில், அதிமுக அணிக்கு ஆதரவு என வெளிப்படையாக எங்குமே அறிவிக்கவில்லை விஜய். அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மட்டுமே அதை சொல்லி வந்தார். பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்

Tags:



திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை.

தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

நான் நியாயமாகவே நடந்து கொண்டேன்-ராம.நாராயணன் விளக்கம்

Tags:



தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நான் நியாயப்படியே நடந்து கொண்டேன். இதை புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் விசாரித்து உண்மையை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று ராம.நாராயணன் கூறியுள்ளார்.

கலைஞர் டிவியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் ராம.நாராயணன், அதிமுக ஆட்சியைப் பிடித்ததுமே தனது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விட்டு ஓடி விட்டார்.

தற்போது அவர் மீது ரூ. 15 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டதாகவும், திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டதாகவும் தயாரிப்பாளர்கள் புகார் கூறுகின்றனர்.

தன் மீதான புகார்களுக்கு ராம.நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை.

இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.

நியாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர்.

சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் கிளம்பியுள்ள இந்தப் பூசல் எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை.

 

ரஜினிக்கு மேலும் இரு தினங்கள் சிகிச்சை! - ஐஸ்வர்யா

Tags:



சென்னை: ரஜினிக்கு மேலும் இரு தினங்கள் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் பின்னர் வீடு திரும்பி ஓய்விலிருப்பார் என்றும் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

கடந்த 29-ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் ராணா படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பியபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக இரு முறை அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் ரஜினிக்கு அஜீரண கோளாறும், நீர்சத்து குறைவும் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சலும் சளியும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பினார்.

அதன் பிறகு போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரஜினி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு மருத்துவ பரிசோதனை நடந்தது.

வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவ நிபுணர் ஒருவர் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தார். பரிசோதனைக்குப் பின் ரஜினிகாந்த் சில நாட்கள் முழுமையாக ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுரை கூறினர்.

இதற்கிடையே ரஜினிகாந்த் மேலும் 2 நாட்கள் போரூர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்று அவரது மகள் ஐஸ்வர்யா கூறினார். அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.