நயன்தாராவுடன் மிக நெருக்கமாக இருப்பது உண்மைதான்! - மனம் திறக்கும் ஆர்யா

I Have Very Close Relationship With Nayan Says Arya

சினிமாவில் எந்த நடிகையுடனும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக நயன்தாராவுடன் பழகி வருவது உண்மைதான். ஆனால் அது திருமணமாக மாறுமா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது நயன்தாரா - ஆர்யா நெருக்கம்தான்.

நயன்தாரா ஏற்கெனவே சிம்பு, தனுஷ், பிரபுதேவா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். சிம்பு - நயன் காதல் மற்றும் மோதல் ரொம்ப பிரபலம். அதேபோல, நயன்தாராவை திருமணம் செய்ய தன் மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபு தேவா. ஆனால் அந்தக் காதலும் முறிந்துவிட்டது.

இப்போது நயன்தாராவின் புதிய காதலன், அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என ஆர்யாவைக் குறிப்பிடுகிறார்கள்.

இதுகுறித்து ஆர்யாவே இப்போது மனம் திறந்துள்ளார்.

அவர் கூறுகையில், "நானும் நயன்தாராவும் நெருங்கிப் பழகுவது உண்மைதான். இந்த இன்டஸ்ட்ரியில் எனக்கு ஏகப்பட்ட நடிகைகளுடன் நல்ல பழக்கம் உள்ளது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, நெருக்கமான உறவு நயன்தாராவுடன் உள்ளது. அவருடன் பல தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

எங்கள் உறவு பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கஷ்டம். எங்கள் நட்பின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்தெல்லாம் இப்போது சொல்ல முடியாது," என்றார்.

 

நடிகர் ஸ்ரீகாந்தின் மேனேஜர் மற்றும் பிஆர்ஓவாக ஜான்!

Srikanth Appoints John As Official Manager And Pro

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுள் ஒருவரான ஸ்ரீகாந்தின் மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக ஏ ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஜாக் கூட்டம் படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மனசெல்லாம், பம்பரக் கண்ணாலே, பூ, கனா கண்டேன், உயிர், நண்பன், பாகன் என குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களில் நடித்தவர், ஸ்ரீகாந்த்.

இப்போது ஓம் சாந்தி ஓம் மற்றும் நம்பியார் ஆகிய இரு பெரிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

அவரது மேனேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளராக ஏ ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் தொடர்பான செய்திகள் மற்றும் அனைத்து தொடர்புகளுக்கும் செய்தியாளர்கள் மற்றும் திரையுலகினர் இனி ஜான் பிஆர்ஓவை அணுகுமாறு இன்று அதிகாரப்பூர்வமாக நடிகர் ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளார்.

 

தண்ணீரில்லாத ஹோலி கொண்டாடுங்கள்: அமிதாப் வேண்டுகோள்

Amitabh Bachchan Appeals Dry Holi

மும்பை: வறட்சி காரணமாக தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து ஹோலி கொண்டாடுங்கள் என மஹாராஷ்டிரா மக்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது கடுமையான வறட்சி நிலவுகின்றது. மார்ச் மாதத்திலேயே மக்கள் தண்ணீரைத் தேடி அலையத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் வண்ணப் பொடிகளை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றி மகிழும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்படவுள்ளது..

இப்போதே தண்ணீர்ப் பஞ்சம் ஆரம்பித்து விட்டதால், அனாவசியமாகத் தண்ணீரைச் செலவு செய்யாமல், ஹோலி கொண்டாடும்படி இந்தித் திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப்பச்சன் வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோன்று அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் தண்ணீர் சிக்கனத்தைப்பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். மாணவர்களும் வீதி நாடகங்கள் மூலமும் வீடு, வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதன் மூலமும் மக்களுக்குத் தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர அரசும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு தண்ணீரைச் செலவழிக்க வேண்டாமென்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

நாக்பூரில், தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் ஆசிரமம் பாபு இடத்தில் ஹோலியின்போது 50,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் செலவு செய்யப்படுவது விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அத்தகைய கொண்டாட்டத்தை அரசு தடை விதித்துள்ளது.

 

மீண்டும் தயாரிப்பில் இறங்கினார் கோவைத் தம்பி!

Kovai Thambi Is Back

எண்பதுகளில் திரைப்படத் தயாரிப்பில் மிகப் பிரபலமாகத் திகழ்ந்தவர் கோவைத் தம்பி. இவரது மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த பயணங்கள் முடிவதில்லை, இளமைக் காலங்கள், நான் பாடும் பாடல், உதயகீதம், இதயக் கோயில், உயிரே உனக்காக போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.

ஆனால் மங்கை ஒரு கங்கை, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் போன்ற படங்கள் ஏமாற்றியதால், தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

இப்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். வேந்தர் மூவீசுடன் இணைந்து உயிருக்கு உயிராக என்ற படத்தை தயாரிக்கிறார் கோவைத் தம்பி.

இந்தப் படத்தில் சரண் சர்மா, சஞ்சீவ் (குளிர் 100 டிகிரி) ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நந்தனா, ப்ரீத்தி தாஸ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிரபு, ஸ்ரீரஞ்சனி, மெரீனா சதீஷ், மைனா நாகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய மனோஜ்குமார் இயக்குகிறார்.

இயக்குநர் விஜய மனோஜ்குமார்?

இவர் வேறு யாருமல்ல... மண்ணுக்குள் வைரம், பச்சைக் கொடி, ராஜ மரியாதை, குரு பார்வை, வானவில், ராஜ்யம், ஜெயசூர்யா உள்பட 25 படங்களுக்கும் மேல் இயக்கிய மனோஜ்குமார்தான், தன் பெயரை விஜய மனோஜ்குமார் என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "பொதுவாக பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் குறித்து மட்டும்தான் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். அதுவே காதல் என்று வந்துவிட்டால் முதல் எதிரிகளாக மாறி வரிந்து கட்டுகின்றனர். இதுதான் நமது சமூகத்தின் அடிப்படைத் தவறு. இந்த மனநிலையை மாற்றிக் கொண்டு, பிள்ளைகளின் காதல், அவர்கள் மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும், என்பதுதான் படத்தின் கதை," என்றார்.

இந்தப் படத்துக்கு ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தகுமார் இசையமைக்கிறார். எடிட்டிங்கை முத்து கவனிக்க, ஸ்ரீதர், பிருந்தா, ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கின்றனர். ரங்கபாஷ்யம் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். மக்கள் தொடர்பு ஏ ஜான்.

 

பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்..திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

Veteran Actress Sukumari Passes Away

சென்னை: பழம்பெரும் திரைப்பட நடிகையான சுகுமாரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.

சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த சுகுமாரி, சில நாட்களுக்கு முன்னர் விளக்கு ஏற்றும்போது, அவரது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுகுமாரியின் நெருங்கிய நட்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்துப் பேசினார். அவரது உறவினர்களிடம் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ், மலையாளத் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாசமலர், பட்டிகாடா பட்டணமா, வசந்த மாளிகை உள்ளிட்ட திரப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், ,இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 74 வயதான சுகுமாரி 1938ம் வருடம் நாகர்கோவிலில் பிறந்தவர் ஆவார். நம்மகிராமம் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்.

  Read in English: Malayalam actress Sukumari passes away
 

தேனியில் சினிமா கேரவன் வாகனம் மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி

தேனி: தேனி அருகே திரைப்படக்குழுவின் வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

தேனியில் இருந்து சினிமா படப்பிடிப்பிற்காக கம்பம் நோக்கிச் சென்ற கேரவன் வாகனம் மீது, எதிர்திசையில் வேகமாக வந்த கார் மோதியது. இதில்,கேரவன் வேனின் அடியில் கார் சிக்கிக்கொண்டது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி காரை மீட்டனர். இதில் காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இரண்டுபேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக கம்பம் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கந்தா - விமர்சனம்

Kandha Movie Review

நடிப்பு: கரண், மித்ரா குரியன், ராஜேஷ், விவேக், சத்யன்

இசை: சத்யசெல்வா

தயாரிப்பு: வி பழனிவேல்

இயக்கம்: பாபு கே விஸ்வநாத்

விவசாயம், எளிய வாழ்க்கை என்று இருந்த தஞ்சை மண்ணை, ரவுடியிசமும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ராஜ்யமும் ரத்தக் களறியாக்குகிறது.

இதற்கெல்லாம் காரணமாக இருப்பவன் ஒரு நல்லாசிரியருக்கு மகனாகப் பிறந்தவன். ஆனால் அதே நல்லாசிரியரால் வளர்க்கப்பட்ட ஹீரோ கரண் எப்படி காந்திய வழியில் அந்த வில்லனை திருத்த முயல்கிறார் என்பது கந்தா படத்தின் சுருக்கமான கதை.

கரண் இதில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். தேவையான இடங்களில் மட்டும் ஆவேசம் காட்டுவது ஆறுதல்.

அவருக்கு ஜோடியாக மித்ரா குரியன். இவருக்கும் கரணுக்கும் காதல் மலரும் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருக்கலாம். சில காட்சிகளில் பயமுறுத்துகிறது மித்ராவின் மேக்கப்.

விவேக் வரும் காட்சிகள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் கூத்துக்களை அம்பலமாக்கினாலும், அவற்றில் நகைச்சுவை ரொம்பவே கம்மி என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ரியாஸ்கான், காதல் தண்டபாணி, சத்யன், ஆர்த்தி ஆகியோர் கேரக்டர்களை உணர்ந்து அளவோடு நடித்திருக்கின்றனர்.

விவேக்கால் தர முடியாத காமெடியை இயக்குநர் க்ளைமாக்ஸில் தந்துவிடுகிறார்.

தஞ்சை கிராம நிலங்கள் எந்த நிலையில் உள்ளன, விவசாயம் எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது என்பதை சில காட்சிகள் உறைக்கிற மாதிரி சொல்கின்றன.

ரொம்ப நாளாக தயாரிப்பிலிருந்த படம். எழுத்தாளராக இருந்து இயக்குநராகியிருக்கும் பாபு கே விஸ்வநாத்துக்கு இது முதல் படம். காட்சிகளைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி தெரிகிறது. ஆனால் அங்கங்கே துண்டாக நிற்கின்றன. முணுக்கென்றால் வரும் பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல க்ளைமாக்ஸை இவ்வளவு நாடகத்தனம் இல்லாமல், புத்திசாலித்தனமாக அமைத்திருக்கலாம்.

-எஸ்எஸ்

 

பிரியங்கா சோப்ராவிடம் வாய்ப்பு கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

Ar Rahman Wants Job From Charan Lady

மும்பை: எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் , பிரியங்கா சோப்ராவை புகழ்ந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் மும்பையில், இந்தி வீடியோ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்பினெட் லவ் என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது. விருதினை இந்தி சினிமா நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா வழங்கினார். இசை உலகில் சிறந்து விளங்குவதற்காக பிரியங்கா சோப்ராவிற்கும் விருது தரப்பட்டது.

பின்னர், பிரியங்கா சோப்ராவிற்கு வாய்ப்பு கொடுப்பீர்களா என்று ரஹ்மானிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் எனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்‘ என்றார்.

பிரியங்கா சோப்ரா நல்ல பாடகியும் கூட என்பது பலருக்குத் தெரியாது. ஒரு ஷோலோ ஆல்பத்தை அவரே பாடி வெளியிட்டுள்ளார்.

 

ஜேம்ஸ் பாண்டை இயக்குகிறார் 'ஸ்லம்டாக் மில்லியனேர்' டேனி பாய்ல்?

Slumdog Millionaire Director Danny

அடுத்து வரும் ஜேம்ஸ்பாண்ட் 007 படத்தை, ஸ்லம்டாக் மில்லியனேர் தந்த டேனி பாய்ல் இயக்குவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பாண்ட் படம் வெளியாவது வழக்கம். கடந்த ஆண்டு இறுதியில் டேனியல் கிரெய்க் நடித்த ஸ்கைபால் வெளியானது. இந்தப் படத்தை சாம் மென்டிஸ் இயக்கியிருந்தார்.

அடுத்த பாண்ட் படத்தையும் இவர்தான் இயக்குவார் என எதிர்ப்பார்த்த நிலையில், அவர் அதிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

எனவே, ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை இயக்கிய டேனி பாய்லுக்கு இந்தப் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பைத் தர முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் பார்பரா ப்ரோகலி. இந்த புதிய பாண்ட் படத்திலும் டேனியல் கிரெய்க்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடந்த எம்பையர் சினிமா விருது விழாவின்போது டேனி பாய்லுடன் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார் ப்ரோகலி.

நிச்சயம் இந்தப் படத்தை டேனி பாய்ல்தான் இயக்குவார் என்று பாண்ட் பட தயாரிப்பாளர்களில் மூத்தவரான மைக்கேல் ஜி வில்சன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படின்னா இசை நம்ம ஏஆர் ரஹ்மான்தானே!