லிங்காவில் இடம்பெற்றுள்ள முத்தான பத்து வசனங்கள் இவைதான்...!

சென்னை: இன்று திரைக்கு வந்துள்ள லிங்கா திரைப்படத்தில் ஈர்க்கும் பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் ரஜினிகாந்த் மற்றும் சந்தானம் சார்ந்த வசனங்களாகவே அவை உள்ளன.

லிங்காவில் கவனம் ஈர்க்கும் வசனங்கள், காமெடி டயலாக்குகள் இவைதான்:

லிங்காவில் இடம்பெற்றுள்ள முத்தான பத்து வசனங்கள் இவைதான்...!

*ஒரு வேள சாப்பிடலன்னா பிரச்சினை இல்லை. ஒரு வேளை கூட சாப்பிடலன்னா அது பிரச்சினை.

*ஐடியாவும் அப்பளமும் ஒன்னு.. ஆறவிட்டா நமத்து போயிடும்.

*ஆந்திராவுக்கு போடுவோமா , அங்க என் 'மாமா வேலை' செய்ராரு. என்ன வேல செய்யுராரு? அதான் சொன்னனே (!)

* நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்.. முடியாததுல இறங்க மாட்டேன்.

*எந்த தொழில் செஞ்சாலும் தூங்கலாம், ஆனா தூங்காம செய்ற ஒரே தொழில் திருட்டுத்தொழில்.

*ஒரு காரியம் முடியுரதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க. ஆனா அந்த அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்.

*நீ வேணாம், வேணாம்னா கூட மக்கள் விட மாட்டாங்க போல. ஊரே உனக்கு மரியாதை கொடுக்குது (சந்தானம் டூ ரஜினி).

*ஸ்பெஷல் டீ குடிச்சும் தூக்கம் வருதுன்னா உங்க மூஞ்சிய மூதேவி லீசுக்கு எடுத்துருக்கான்னு அர்த்தம்.

*வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை! முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை.

*அரண்மனையில் இருப்பவங்க எல்லாம் ராஜா இல்லை. எங்க இருந்தாலும் தன்கிட்ட இருப்பதை இல்லாதவர்களுக்கு தர்ற எல்லோரும் மனதளவில் ராஜாதான்.

 

ரஜினிக்கு ஹேப்பி பர்த்டேயோடு ‘தேங்க்ஸ்’ம் சேர்த்துச் சொன்ன லிங்கா நாயகி சோனாக்‌ஷி !

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டுவிட்டர் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. அதோடு தனது தமிழ் அறிமுகத்தை சிறப்பாக்கியதற்காக அவர் ரஜினிக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ளனர். இப்படம் ரஜினியின் 64வது பிறந்தநாளான இன்று ரிலீசாகி உள்ளது.

ரஜினிக்கு ஹேப்பி பர்த்டேயோடு ‘தேங்க்ஸ்’ம் சேர்த்துச் சொன்ன லிங்கா நாயகி சோனாக்‌ஷி !

ரஜினியின் பிறந்தநாளுக்கும், அவரது லிங்கா வெற்றி பெறுவதற்கும் கட்சித் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துக்கள்...

இந்நிலையில், லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹாவும் ரஜினிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.

நன்றி... நன்றி... நன்றி...

மேலும், தனது முதல் தமிழ் படமான லிங்காவை இந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்ததற்காக ரஜினிக்கு தனது நன்றிகளையும் அவர் கூறியுள்ளார்.

ரஜினிக்கு ஹேப்பி பர்த்டேயோடு ‘தேங்க்ஸ்’ம் சேர்த்துச் சொன்ன லிங்கா நாயகி சோனாக்‌ஷி !

வரவேற்பு...

ரஜினியின் நெருங்கிய நண்பரான சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்‌ஷிக்கு இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாராட்டுகள்...

லிங்கா படத்தைப் பார்த்த பலரும் சோனாக்‌ஷியைப் பாராட்டி வருகின்றனர். தமிழில் முதல் படம் என்ற சுவடே தெரியாத அளவிற்கு சூப்பராக நடித்துள்ளதாக சோனாக்‌ஷிக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மூன்றெழுத்துச் சூரியனே... உன்னையெழுதும் வரலாறு…!

64 வது பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிக்கு அமெரிக்க தமிழ் பெண் கவிஞர் மகித்ராவின் வாழ்த்துக் கவிதை.

மூன்றெழுத்துச் சூரியனே... உன்னையெழுதும் வரலாறு…!

மூன்றெழுத்தில் முழு சூரியனே!
முழு நிலவினொளி மன்னவனே!
பித்தாக்கும் நடை வித்தகனே!
முத்தான புதுத் தத்துவனே!
படபடப் பேச்சில்
பட்டாம்பூச்சியாய்...
கடகடச் சிரிப்பில்
கட்டிப்போடும்...
குட்டிக் கதை சொல்லும்
புதுவத் கீதனே!

சிந்திப்பதின் அழுத்தம்
சிரிப்பில் கூட உதிக்கும்!
நட்பில் காட்டும் உருக்கம்
கற்பை போலச் சிறக்கும்!
ஆழப் பதியுமுன்னுள்
அனுபவங்கள்! அவை
ஆழப்பதிக்குமெம்முள் புதுத்துவங்கள்!
ஆர்ப்பரிக்கும் அலைகளில்லா
ஆழக்கடல்....
நீ ....
செல்லும் பாதைகள்
சொல்லும் பல கீதைகள்!
ஆன்மீக வெளிச்சம்
நேர்மையின் உச்சம்
பார்வையில் சுத்தம்
எதிர்ப்புகள் துச்சம்
வெற்றிகள் மொச்சும்
போற்றிகள் கொஞ்சும்
உந்தன் இதயம் தான்
ரசிகர்தன் இமயம்!
உற்சாகத்தின் உற்சவமே
உன்னையெழுதும் வரலாறு...
இமயம் என்ன? - உன்
உதயம் மட்டும் போதும்!
இதயம் வாழ்த்திப்பாடும்!

தலைவா! நீ...
ஆளுயர மாலையிலும்
அர்த்தப்படும் எளிமை
6 முதல் 60 வரை
ஆசைப்படும் புதுமை!
புதியதோர் ஆண்டில் புறப்படும் ராஜா லிங்கேஸ்வரனே!
புண்ணியப்படக் காத்திருக்கும்
பாதைகள் பல...

மகிழ்வுடன்

மகித்ரா

 

”காவ்ரி ஆறும், கைக்குட்டல் அர்சியும்” - சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்தினை ரசித்த “ஜப்பான்” ரசிகர்கள்

சென்னை: இன்று சூப்பர் ஸ்டாரின் ஆக்‌ஷன் திரைப்படமான லிங்கா திரைப்படம் வெளியானதை ஒட்டி ஜப்பானைச் சேர்ந்த நான்கு ரஜினி ரசிகர்கள் சென்னைக்கு வந்து படத்தினை முழுவதுமாக ரசித்தனர்.

சென்னை, காசி தியேட்டரில் லிங்கா படத்தினை ரசித்த யாசுடா ஹிட்டாய்ச்சி என்பவர் உட்பட மேலும் மூன்று ரஜினி ரசிகர்கள் ஒசாகாவில் இருந்து வந்திருந்தனர்.

”காவ்ரி ஆறும், கைக்குட்டல் அர்சியும்” -  சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்தினை ரசித்த “ஜப்பான்” ரசிகர்கள்

ரஜினியின் படம் போட்ட டிசர்ட், கையில் லிங்கா பட கார்டுகளுடன் வந்து லிங்கா படத்தின் முதல்நாள் ஷோவினை ரசித்தனர்.

யாசுடா தமிழும் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட ரஜினியின் திரைப்படங்களை ரசித்துள்ளாராம் அவர். "எனக்கு ரஜினி காந்தின் ஸ்டைல், ஆக்‌ஷன், ஹூயூமானிட்டி எல்லாமே பிடிக்கும். நான் லிங்கா பார்ப்பதற்காகவே சென்னை வந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

”காவ்ரி ஆறும், கைக்குட்டல் அர்சியும்” -  சூப்பர் ஸ்டாரின் லிங்கா படத்தினை ரசித்த “ஜப்பான்” ரசிகர்கள்

நான்கு பேரில் இருவர் பெண்கள். இவர்கள் நால்வரும் இணைந்து சிவாஜி படத்தின் சூப்பர் ஹிட் பாட்டான காவிரி ஆறும், கைக்குத்தல் அரிசியும் பாட்டினை கொஞ்சிக் கொஞ்சி பாடி ஆடிப் பாடினார்கள். "ஹேப்பி பர்த்டே தலைவா" என்றும் கோஷமிட்டார்கள்.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி மற்றும் அனுஷ்கா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மூன்றெழுத்துச் சூரியனே... உன்னையெழுதும் வரலாறு…!

64 வது பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிக்கு அமெரிக்க தமிழ் பெண் கவிஞர் மகித்ராவின் வாழ்த்துக் கவிதை.

மூன்றெழுத்துச் சூரியனே... உன்னையெழுதும் வரலாறு…!

மூன்றெழுத்தில் முழு சூரியனே!
முழு நிலவினொளி மன்னவனே!
பித்தாக்கும் நடை வித்தகனே!
முத்தான புதுத் தத்துவனே!
படபடப் பேச்சில்
பட்டாம்பூச்சியாய்...
கடகடச் சிரிப்பில்
கட்டிப்போடும்...
குட்டிக் கதை சொல்லும்
புதுவத் கீதனே!

சிந்திப்பதின் அழுத்தம்
சிரிப்பில் கூட உதிக்கும்!
நட்பில் காட்டும் உருக்கம்
கற்பை போலச் சிறக்கும்!
ஆழப் பதியுமுன்னுள்
அனுபவங்கள்! அவை
ஆழப்பதிக்குமெம்முள் புதுத்துவங்கள்!
ஆர்ப்பரிக்கும் அலைகளில்லா
ஆழக்கடல்....
நீ ....
செல்லும் பாதைகள்
சொல்லும் பல கீதைகள்!
ஆன்மீக வெளிச்சம்
நேர்மையின் உச்சம்
பார்வையில் சுத்தம்
எதிர்ப்புகள் துச்சம்
வெற்றிகள் மொச்சும்
போற்றிகள் கொஞ்சும்
உந்தன் இதயம் தான்
ரசிகர்தன் இமயம்!
உற்சாகத்தின் உற்சவமே
உன்னையெழுதும் வரலாறு...
இமயம் என்ன? - உன்
உதயம் மட்டும் போதும்!
இதயம் வாழ்த்திப்பாடும்!

தலைவா! நீ...
ஆளுயர மாலையிலும்
அர்த்தப்படும் எளிமை
6 முதல் 60 வரை
ஆசைப்படும் புதுமை!
புதியதோர் ஆண்டில் புறப்படும் ராஜா லிங்கேஸ்வரனே!
புண்ணியப்படக் காத்திருக்கும்
பாதைகள் பல...

மகிழ்வுடன்

மகித்ரா

 

ரஜினியை வாழ்த்தி 'ஜோதி'யில் ஐக்கியமாகிய அஜீத், விஜய்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விஜய் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அஜீத் சார்பாக அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரை விட அவரது ரசிகர்கள் தான் அவரது பிறந்தநாளை ஜமாய்த்துவிட்டார்கள். அவருக்கு பிரதமர், திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினியை வாழ்த்தி 'ஜோதி'யில் ஐக்கியமாகிய அஜீத், விஜய்!

இந்நிலையில் இளையதளபதி விஜய் ரஜினிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்,

இளையதளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் இனிய 64வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி சர்..

அஜீத் சமூக வலைதளங்களில் இல்லை. அதனால் அவரது சார்பில் அவரது ரசிகர்கள் கவனித்து வரும் ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டுள்ளதாவது,

அஜீத் ரசிகர்கள் சார்பில் சூப்பர்ஸ்டார் ரஜினி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். லிங்கா வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் நலமுடன், மகிழ்ச்சியாக வாழ பிரார்த்திக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு ரஜினி தந்த பிறந்தநாள் பரிசு

"நினைத்தாலே இனிக்கும்" உட்பட பல படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே.

மேலும் லிங்கா படத்தின் தயார்ப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார்.

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு ரஜினி தந்த பிறந்தநாள் பரிசு

சில தினங்களுக்கு முன்பு ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படபிடிப்பின் போது சந்தித்துள்ளார். அப்போது தான் தயாரித்து கொண்டிருக்கும் "உயிரே உயிரே" படத்தின் முன்னோட்டத்தை காண்பித்துள்ளார். படத்தை வெகுவாக பாரட்டிய சூப்பர்ஸ்டார் உயிரே உயிரே படத்தின் முன்னோட்டத்தை தன் படம் லிங்கா வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பு தரப்பிடம் கேட்டுள்ளார்.

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு ரஜினி தந்த பிறந்தநாள் பரிசு

சூப்பர்ஸ்டாரின் பெருந்தன்மையை கண்டு பெரு மகிழ்ச்சியுற்ற நடிகை ஜெயப்பிரதா தனது நன்றியை தெரிவித்தார்.

உயிரே உயிரே படத்தில் நடிகை ஜெயப்பிரதா அவர்களின் மகன் சித்து கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஆ ஆர் ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.

 

ரஜினி வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து வாழ்த்திய நடிகர் பார்த்திபன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாள் விழாவை அவரது ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஜோதியில் கலந்துள்ள நடிகர் பார்த்திபன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

இன்று பிறந்திருப்பது நாளல்ல ஒரு நட்சத்திரம்! தேர் இழுக்கவே ஊர் கூட வேண்டும் ஊருக்குள் பேரெடுக்க நூறு தேராது இழுக்கவேண்டும்

ரஜினி வீட்டுக்கு நள்ளிரவு 11.59 மணிக்கு போன் செய்து வாழ்த்திய நடிகர் பார்த்திபன்

ஒருவர். உலகம் முழுக்க ஒருவரின் 'லிங்கா' தரிசனம் காண முன் பதிவு செய்கிறதென்றால் அவர் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருத்தல் வேண்டும். (அ'பூர்வ ஜென்ம கர்மா)

என் மகர் ராக்கி எந்த பிரமாண்டத்தையுமே பிரமித்து பாராமல் எதையுமே மிக சாதாரண பார்க்கும் இயல்புடையவர். என்னையெல்லாம் அரைக்கால் சட்டை அணிந்து கோலி ஆடும் பையனாகவே குனிந்து பார்ப்பார். நானும் அதை அலாதியாய் ரசிப்பேன்.

நேற்றிரவு அவரின் fb பதிவில் "3 mins more..."என்றிருந்தது. மணி பார்த்தேன் 11.57pm.

அப்போதுதான் ரஜனி சாரின் அற்புதம் விளங்கியது எனக்கு. ஒரு நிமிடம் இருக்கும் தருவாயில் திருமதி ரஜனியை அழைத்து சாருக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்கள் என்றேன்.

தலையணையில் post செய்தால் தலைவனிடம் deivery ஆகிடுமே!

இவ்வாறு தமக்கே உரித்தான குறும்புடன் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

 

லிங்கா... ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது கிங்கா! - இது வாட்ஸ் அப் விமர்சனம்!

சென்னை : வாட்ஸ் அப்பில் லிங்கா பட விமர்சனம் படு சூடாக வலம் வந்து கொண்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. ரஜினியின் பிறந்த தினமான இன்று அப்படம் ரிலீசாகியுள்ளது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்து வெளிவரும் படம் என்பதால் ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. இந்நிலையில், இக்கதை என்னுடையது தான் என சிலர் லிங்காவுக்கு எதிராக வழக்கு தொடர பரபரப்பு மேலும் அதிகமானது.

இவற்றின் காரணமாக அணை பற்றிய கதை தான் லிங்கா என்று ஏற்கனவே ரசிகர்கள் யூகித்து விட்ட நிலையில், தற்போது படமும் ரிலீசாகி விட்டது. எனவே, இன்று காலை முதல் வாட்ஸ் அப்பில் லிங்கா பட விமர்சனம் உலா வர ஆரம்பித்துள்ளது.

லிங்கா... ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது கிங்கா! - இது வாட்ஸ் அப் விமர்சனம்!

அந்த விமர்சனம்:

சோலையூர் கிராமத்தில் ஊர் தலைவராக இருந்து வருகிறார் விஸ்வநாத். இவரை அந்த ஊர் மக்கள் அனைவரும் மதித்து, இவருடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் எம்.பியான ஜெகபதி பாபு அரசு அதிகாரியான பொன்வண்ணனை கொலை செய்கிறார். இதில் பொன்வண்ணன் உயிர் பிரிவதற்குமுன் விஸ்வநாத்திடம் ஊரில் பல ஆண்டுகளாக மூடியிருக்கும் கோயிலை திறக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.

அந்த கோயிலை திறக்க வேண்டுமானால் கோயிலை கட்டிய லிங்கேஸ்வரனின் வாரிசுகள் தான் திறக்க வேண்டும். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் விஸ்வநாத்தின் பேத்தியான அனுஷ்கா லிங்கேஸ்வரனின் வாரிசான லிங்கா என்னும் ரஜினியை தேடி செல்கிறார்.

சென்னையில் ரஜினி தன் நண்பர்களான சந்தானம், கருணா ஆகியோருடன் திருட்டு தொழில் செய்து வருகிறார். இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு ஜெயிலிலுக்கு செல்கிறார்கள். இவர்களை அனுஷ்கா தன் முயற்சியால் ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார். அதன்பின்பு ரஜினியிடம் லிங்கேஸ்வரனின் பேரனான நீங்கள் சோலையூர் கிராமத்து வரவேண்டும் என்றும் கோவிலை திறக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு ரஜினி என் தாத்தா எனக்காக ஏதும் செய்யவில்லை ஆதலால் நான் வரமாட்டேன் என்று கூறி மறுக்கிறார்.

அதன்பின்பு ரஜினி தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு 1.5 கோடி மதிப்புள்ள ஒரு நகையை திருடுகிறார். இந்த நகையை சேட்டான மதன்பாப்பிடம் கொடுக்கிறார். இவரை போலீசில் சிக்க வைக்கிறார் அனுஷ்கா. இதையறியும் ரஜினி, மதன்பாப்பால் நாமும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து அனுஷ்காவுடன் சோலையூர் கிராமத்திற்கு செல்கிறார்.

அங்கு ஊர் தலைவரான விஸ்வநாத், ரஜினியிடம் இந்த கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல்லால் செய்யப்பட்டது. இதை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறார். பல கோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை திருடி விற்றால் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று எண்ணி கோயிலுக்கு செல்கிறார். அங்கு கோயிலுக்கு யாரோ சென்று விட்டார்கள் என்று நினைத்து மக்கள் கோயிலை சுற்றி வளைக்கிறார்கள். இதிலிருந்து தப்பித்தற்காக ரஜினி கோயிலை திறந்து பூஜை செய்கிறார். அப்போது மக்களிடம் விஸ்வநாத், ரஜினியின் தாத்தா லிங்கேஸ்வரனின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். இதைக்கேட்ட ரஜினி, தன் தாத்தாவின் உயர்ந்த எண்ணத்தையும் உள்ளத்தையும் எண்ணி வருந்துகிறார். இதனால் இந்த ஊரை விட்டு செல்ல நினைக்கிறார்.

அப்போது விஸ்வநாத், அரசு அதிகாரியான பொன்வண்ணனை யாரோ கொலை செய்து விட்டதாகவும், இந்த ஊரில் உள்ள பாலத்திற்கும், கோயிலுக்கும் ஆபத்து இருக்கிறது என்றும் கூறுகிறார். நீங்கள் கொலை செய்தவர்களையும், இந்த ஊரையும் காக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அதன்பிறகு இந்த ஊரின் எம்.பி.யாக இருக்கும் ஜெகபதிபாபு, ஊரில் உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டி அதில் ஊழல் பண்ணலாம் என்று திட்டமிட்டு வருவது ரஜினிக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஜெகபதிபாபுவின் திட்டத்தை முறியடித்தாரா? பாலத்தை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

அறிமுகப் பாடல் :

சூப்பர்ஸ்டாரின் அறிமுக பாடல் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் தன் தோளில் மொத்தப் படத்தையும் சுமந்து கொண்டு ரசிகர்களை திருப்தி செய்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய ஸ்டைலில் அசத்தியிருக்கிறார். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையில் தீ பறக்கிறது. அந்த சின்ன சின்ன ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் அருமையாக செய்திருக்கிறார்.

மற்ற கதாநாயகிகள் போல் பாடல் காட்சிகளுக்கு வந்து செல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார் அனுஷ்கா. இரண்டாம் பாதியில் அழகாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா.

சந்தானத்தின் காமெடி படத்தில் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ரஜினியுடன் இவர் சேர்ந்து திருடும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

குறுகிய காலத்தில் கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றார் போல் சூப்பரான படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே இயக்கு முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது அனுபவம் திரையில் ஒவ்வொரு காட்சிகளிலும் நன்றாகவே தெரிகிறது. 6 மாத காலத்தில் நிறைய கதாபாத்திரங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து பிரம்மாண்டான பாடல் காட்சிகளை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.

பிரம்மாண்டம் :

ரத்தினவேலு என்னும் ராண்டி, ராட்டினம் போல் அணையின் பிரம்மாண்ட காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார். ரெயில் சண்டை காட்சிகள் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். இரண்டு காலத்திற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவை திறமையாக கையாண்டிருக்கிறார்.

பிரம்மாண்டத்திற்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்திருக்கிறது ஏ.ஆர்.ரகுமானின் இசை. இந்தியனே... பாடல் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘லிங்கா' ரசிகர்கள் மனதில் நிற்கிறார் கிங்கா.

இவ்வாறு அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.

 

லிங்கா விமர்சனம்

Rating:
3.5/5
எஸ் ஷங்கர்

நடிப்பு: ரஜினிகாந்த் (இருவேடங்கள்), சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், ராதாரவி, விஜயகுமார், இயக்குநர் விஸ்வநாத்

ஒளிப்பதிவு: ரத்னவேலு

கதை : பொன் குமரன்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பு: ராக்லைன் வெங்கடேஷ்

இயக்கம்: கே எஸ் ரவிக்குமார்


இந்தியாவில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ரஜினியின் லிங்கா, சரித்திரமும் சமகாலமும் கலந்த ஒரு சுவாரஸ்யமான கதை. அரங்குக்கு வரும் ஒவ்வொரு ரசிகனையும் அனைத்து விதங்களிலும் திருப்திப்படுத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு பிரமாண்டம்.

லிங்கா விமர்சனம்

கதை மிக அழுத்தமானது. ஊருக்கு ஆறு என ஒன்று இருந்தாலும், அந்த ஆறால் எந்தப் பயனுமின்றி, பஞ்சத்தில் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் சோலையூர் மக்களுக்காக ஒரு அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன் (ரஜினி). இந்த அணைக்காக தான் வகிக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசின் கலெக்டர் பதவியைத் துறக்கிறார். சொத்து முழுவதையும் இழக்கிறார். ஆனால், எந்த மக்களுக்காக அணை கட்டினாரோ அதே மக்களால் விரட்டப்படுகிறார் ஒரு பிரிட்டிஷ் அதிகாரின் நயவஞ்சகம் மற்றும் நம்ம ஊர் எட்டப்பன்களால். எழுபதாண்டு காலம் ஓடுகிறது. மீண்டும் அந்த ஊர் மக்களுக்கும் அவர் கட்டிய அணைக்கும் ஆபத்து நேர்கிறது, அரசியல்வாதி ரூபத்தில். எப்படி இவர்களைக் காக்கிறார் ராஜாவின் வாரிசு (இன்னொரு ரஜினி) என்பது திரையில் பார்க்க வேண்டிய மீதி.

வாரே வா... என்ன ஒரு அருமையான கதை, அதற்கேற்ற திரைக்கதை. பாராட்டுகள். குறிப்பாக அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் அத்தனை கச்சிதம். இவற்றை மட்டும் தனியாகப் பிரித்தால் கூட ஒரு முதல் தரமான வரலாற்றுப் படம் கிடைத்துவிடும் எனும் அளவுக்கு அற்புதமான பகுதி அது. ரஜினிக்கு மட்டுமே இப்படி அற்புதமான ப்ளாஷ்பேக்குகள் அமைகின்றன.

லிங்கா விமர்சனம்

அடுத்து ரஜினி. படம் முழுவதையும் சுமப்பவர் ரஜினிதான். அறிமுகமாகும் அந்த முதல் காட்சி பிரமிக்க வைக்கிறது. இந்த மனிதருக்கு திரையில் மட்டும் வயதே ஆகாது என்று கற்பூரம் அடித்துச் சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் அந்த ஸ்டைலும் அழகும் இளமையும் அவரது உடல் மொழியும் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. அந்த ரயில் சண்டையில் கிரிக்கெட் மட்டையால் அவர் ஸ்டன்ட் ஆட்களைப் பந்தாடும் ஸ்டைல் அருமை.

இரண்டு வேடங்களிலுமே ரஜினி தன் ரசிகர்களை வசியம் செய்துவிட்டார் என்றால் மிகையல்ல. ரஜினிக்கு மேக்கப் போட்டவர்கள், காஸ்ட்யூம் பார்த்தவர்கள் அனைவருக்குமே பாராட்டுகள். லீ விட்டேகரின் அந்த ரயில் சண்டைக் காட்சி உறைய வைக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் அத்தனை நேரமும் சலிப்பின்றி ரஜினியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவு மனிதர் வசீகரிக்கிறார்!

லிங்கா விமர்சனம்

ரஜினியின் நாயகிகளாக வரும் சோனாக்ஷி மற்றும் அனுஷ்கா இருவருக்குமே நடிக்க வாய்ப்புடன் கூடிய பாத்திரங்கள். அருமையாக நடித்துள்ளனர். அந்த மரகத நெக்லஸ் திருடும் காட்சியில் அனுஷ்காவும் ரஜினியும் ரசிகரின் உள்ளங்களைக் கொள்ளையடிக்கின்றனர். ரஜினியிடம் அனுஷ்கா தன்னைப் பறிகொடுக்கும் நெருக்கமான காட்சிகளில் காதல் ரசம்..!

ஜாக்கெட் போடாத காலத்துப் பெண்ணாக வரும் சோனாக்ஷி சிறப்பாக நடித்துள்ளார். ஒரு காட்சி... எல்லாம் இழந்த ரஜினியிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார் சோனாக்ஷி. பின்னர் ஊர்க்காரர்கள் எங்கெங்கோ தேடி ஒரு நாள் அவர்களைக் கண்டுபிடித்து ஊருக்கு அழைக்கிறார்கள். மீண்டும் ராஜவாழ்க்கையை வாழச் சொல்கிறார்கள். அதை சிம்பிளாக மறுத்துவிட்டு, இந்த வாழ்க்கை எப்படி என மனைவி சோனாக்ஷியைப் பார்ப்பார். அதைப் புரிந்து, நிறைந்த மனசு முகத்தில் எதிரொலிக்க சோனாக்ஷி பார்க்கும் பார்வையில் அவரது பக்குவ நடிப்பு தெரிகிறது.

லிங்கா விமர்சனம்

முந்தைய படங்களில் ரஜினியுடன் கொஞ்சம் எட்ட நின்றே காமெடி செய்த சந்தானம் இந்த முறை, மிக நெருங்கிய 'நண்பேன்டா' தோழனாக (கவனிக்க நண்பேன் மட்டும் சந்தானம் சொல்ல, டா என முடிப்பார் ரஜினி.. மரியாதை மரியாதை!!) வருகிறார். முதல் பாதி முழுக்க ரஜினியுடன் சந்தானம் கலக்குகிறார்.

வில்லனாக வரும் ஜெகபதி பாபு, கருணாகரன், விஜயகுமார், ராதாரவி, அனுமோகன், பொன் வண்ணன், ஜெயப்பிரகாஷ், அந்த பிரிட்டிஷ் கலெக்டர் மற்றும் அவர் மனைவி என அனைவருமே சரியாகச் செய்துள்ளனர்.

படத்தின் அத்தனை காட்சிகளுமே பிரமாண்டம்தான். அதுவும் அந்த அணை கட்டும் காட்சியும், கூடவே வரும் ஆயிரக்கணக்கான துணை நட்சத்திரங்களும்.. இவ்வளவு பெரும்படையைக் கட்டியாள ரவிக்குமார் மாதிரி இயக்குநர்களால்தான் முடியும்.

லிங்கா விமர்சனம்

ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் 'வந்தா மட்டும் போதும்'தான். ஆனால் மற்றவர்களுக்கு...?

படத்தின் ஆகப் பெரிய குறை.. அநியாயத்துக்கு நீளும் அந்த க்ளைமாக்ஸ் துரத்தல், பவர் ரேஞ்சர்ஸ் கேம் மாதிரி ஆகிவிட்ட அந்த பலூன் சண்டை... (ஆதவன் ராக்கெட் லாஞ்சர் மேட்டரை விட மாட்டேங்குறாரே டைரக்டர்!) இத்தனை நம்பகமான வரலாற்று ரீதியான கதையை உருவாக்கியவர்கள், எதற்காக இத்தனை சினிமாத்தன க்ளைமாக்ஸை வைத்தார்கள்? இவற்றை நிச்சயம் தவிர்த்துவிட்டு, தரையிலேயே நடப்பது போல ஒரு அழுத்தமான காட்சியை வைத்திருக்கலாம்.

முத்து, படையப்பா, அருணாச்சலம், சிவாஜி படங்களில் ரஜினி எல்லா சொத்துகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவார். இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சி. சென்டிமென்ட் என்றாலும், கதையின் போக்கை எளிதில் யூகிக்க முடிகிறது.

லிங்கா விமர்சனம்

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பிரமிப்பை பல மடங்காக்குகிறது. ரஜினியை ஏக ஸ்டைல், இளமை, அழகுடன் படம்பிடித்திருக்கிறார். கலை இயக்குநருக்கு செம வேலை. அந்த பிரமாண்ட அணையை இவ்வளவு குறுகிய காலத்துக்குள் கட்டி, படமாக்கியது அசர வைக்கிறது.

ஏ ஆர் ரஹ்மான் இன்னொரு ஹீரோ. அனைத்துப் பாடல்களும் பிரபலம். மன்னவா, இந்தியனே.. பாடல்கள் இனிமை. மோனா கேசோலினாவில் ரஜினியின் ஸ்டைல், நடனம், அனுஷ்காவின் அழகு கிறங்கடிக்கிறது. துவக்கப் பாடல் இன்னும் கூட நன்றாக ட்யூன் செய்திருக்கலாம். அதே போல, ரஜினி படங்களில் அவர் நடந்து வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பொதுவாகவே கலக்குவார் ரஹ்மான். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். ஆனால் அந்தக் குறையைப் போக்குகிறது ரஜினியின் நடனம். அதே பழைய உற்சாகம், துடிப்பு, துள்ளல்!

இதுவரை ரஜினியைக் காட்டாத அளவுக்கு இந்தப் படத்தில் புதிதாகக் காட்டிவிட வேண்டும் என்ற மெனக்கெடல் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு. அதற்கான பலனும் திரையில் தெரிகிறது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி, க்ளைமாக்ஸை நச்சென்று முடித்திருந்தால், லிங்கா வெறும் படமல்ல, சரித்திரமாய் மனதில் பதிந்திருக்கும்.

ஆனால் ரஜினியை, அவர் படத்தை ரசிக்க இது ஒரு பெரும் தடையல்ல.. என்ஜாய்!

 

ஏழை வீட்டுப் பெண்ணை மருமகளாக எடுத்ததற்காக பெருமைப்படுகின்றேன் – நடிகர் வடிவேலு

சென்னை: என் மகனுக்கு நான் ரகசியமாக திருமணம் நடத்தவில்லை. ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று நடிகர் வடிவேல் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்கும், திருப்புவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரிக்கும், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்துக்கு, நடிகர், நடிகைகள், சினிமா உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

ஏழை வீட்டுப் பெண்ணை மருமகளாக எடுத்ததற்காக பெருமைப்படுகின்றேன் – நடிகர் வடிவேலு

மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மண்டபத்துக்கு வெளியே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் வடிவேலுவின் பெயரோ, படமோ இடம்பெறவில்லை.

இந்த நிலையில், மகன் திருமணத்தை இவ்வளவு ரகசியமாக நடத்தியது ஏன் என்று தினத்தந்திக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் விளக்கியுள்ளார் வடிவேலு.

அதில், "சுப்பிரமணியன் எனக்கு மூத்த மகன். தலைமகன் என்பதால் தை மாதம் திருமணம் நடத்தக்கூடாது என்று சொன்னார்கள். மாசி மாதம் அவனுடைய பிறந்த மாதம் என்பதால், மாசியிலும் திருமணம் நடத்தமுடியாது. அதனால்தான் இந்த மாதத்தில் திருமணத்தை நடத்தினோம். இதில் ரகசியம் எதுவும் இல்லை.

குறுகிய காலத்தில் என் மகன் திருமணத்தை நடத்தியதால், சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்கமுடியவில்லை. அப்படி அழைக்கவேண்டுமானால், குறைந்தபட்சம் 6 மாதகால அவகாசம் வேண்டும்.

அதனால்தான் சொந்தபந்தங்களை மட்டும் அழைத்து, திருமணத்தை நடத்தினேன். என் மகனையும், மருமகளையும், சொந்தபந்தங்கள் அனைவரும் மனதார வாழ்த்தினார்கள்.

மருமகள் புவனேஸ்வரி, என் மனைவி விசாலாட்சி வழியில் உறவுப்பெண். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு பந்தல் தொழிலாளி. நான் ஏழையாக பிறந்ததால், ஏழை வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறேன்.

அன்னை மீனாட்சி அம்மன் அருளில், நான் பிறந்த மண்ணில்தான், என் மகள், மகன் இருவருக்கும் சம்பந்தம் செய்திருக்கிறேன். என்னை பெற்ற தாய் 80 வயதை தாண்டிவிட்டார். அவரால் நடக்கமுடியவில்லை.

பேரன் திருமணத்தை பார்க்க ஆசைப்பட்டார். நடக்கமுடியாததால், திருமண மண்டபத்துக்குக்கூட அவரால் வரமுடியவில்லை. அதனால் திருமணம் முடிந்தபின், மகனையும், மருமகளையும் மணக்கோலத்தில் அழைத்துப்போய், என் அம்மாவிடம் ஆசிபெற செய்தேன்.

நான் ஒரு கிராமத்தை தத்து எடுக்க ஆசைப்பட்டேன். முடியவில்லை. இப்போது ஒரு ஏழை குடும்பத்தை தத்து எடுத்திருக்கிறேன். ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக ஆக்கிக்கொண்டதில் பெருமைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, அப்படியொரு வறுமைநிலையில் இருந்த குடும்பத்தில் சம்பந்தம் செய்துகொண்டதில் சந்தோஷம்.

திருமண மண்டபத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் என் பெயரும், படமும் இடம்பெறாததற்கு காரணம் இருக்கிறது. அப்படி வைத்திருந்தால், ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாது.

என் மருமகள் புவனேஸ்வரி திருமண வயதை அடையவில்லை என்று யாரோ செய்த புகாரின்பேரில், போலீசார் மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். புவனேஸ்வரிக்கு 19 வயது நிறைவடைந்து, 7 மாதங்கள் ஆகிறது.

இதை ஆதாரத்துடன் நிரூபித்ததும் போலீசார் வருத்தம் தெரிவித்தார்கள். என்னுடனும், மணமக்களுடனும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார் வடிவேல்.

 

ஒரு ஜீரோவை தொழிலதிபராக்கிய இளையராஜா மீது சேறு பூசும் அகி மியூசிக்!

அகி மியூசிக்... தமிழ் சினிமா இசைத் துறையில் கடந்த சில தினங்களாக இளையராஜாவை மோசடி செய்து, நீதிமன்ற தண்டனைக்கும் ஆளான ஒரு நிறுவனம்.

சட்டப்படி இந்த நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த இளையராஜா, இனி அகி மியூசிக் தனது இசையை, பாடல்களை எந்த வடிவிலும் விற்கக் கூடாது என தடை பெற்றுள்ளார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து இளையராஜா சிடிக்களை விற்பனை செய்து வந்த அகி, கிரி ட்ரேடிங் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக மீண்டும் இளையராஜா புகார் தர, சேலையூரில் உள்ள இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி, அங்கிருந்து இளையராஜாவின் இசை - பாடல் ஆல்பங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரு ஜீரோவை தொழிலதிபராக்கிய இளையராஜா மீது சேறு பூசும் அகி மியூசிக்!

இந்த வழக்கு முழுவதுமாக இளையராஜாவுக்கு சாதகமாக முடிந்துள்ள நிலையில், அகி மியூசிக் இப்போது இளையராஜாவைக் குற்றம்சாட்டி சில செய்தியாளர்களிடம் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக இளையராஜா தரப்பு கூறுகிறது. இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. அகி மியூசிக்கின் பொய்யான குற்றச்சாட்டுகளை செய்தியாக்கியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் முடிவு செய்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்... யார் இந்த அகி மியூசிக்.. எங்கிருந்து வந்தது? இந்த நிறுவனம் தோன்றக் காரணம் யார்... இதனை நடத்தும் அகிலன் என்பவர் எப்பேர்ப்பட்டவர்...?

இதற்கான விடையை இளையராஜா சொல்வதைவிட அகி மியூசிக் அகிலனே சொல்வதுதான் பொருத்தமானது என்கிறது ராஜா தரப்பு. அதற்கு ஆதாரமாக அகிலன் தன் கைப்பட எழுதி, தனது ப்ளாக்கில் பதிவு செய்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இதோ..

ஒரு பூஜ்யமாக, சமூகத்தில் இனி வாழவே முடியாது என்ற நிலையில் இருந்த, சொந்த மனைவி உள்ளிட்ட உறவினர்களாலேயே விரட்டப்பட்ட அகிலன் என்பவரை, ஒரு பைசா கூட பெற்றுக்கொள்ளாமல் தனது இசை உரிமையை கொடுத்து வளர வைத்தவர்தான் இந்த இசைஞானி. அப்பேர்ப்பட்ட மனிதருக்கு ஒரு முறை கூட ஒழுங்காக காப்புரிமைத் தொகை செலுத்தியதில்லை என அகிலனே தனது கைப்பட கட்டுரை எழுதிய நீண்ட பதிவுகளின் சில பகுதிகளை இங்கே தருகிறோம். இந்தக் கட்டுரைகளின் பக்கங்களை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்தும் வைத்துள்ளோம்.

இனி கட்டுரை...

அகி மியூஸிக் தொடங்கி இப்பொழுது ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்த ஐந்து வருடமும் மிகப்பெரிய போராட்டக் காலங்கள். இன்னமும்தான். எப்படி இந்த இசைக் கனவு எனக்கு நனவானது என்பது ஒரு சுவாரசியமான கதை. இளையராஜா அவர்களை தவிர்த்து சொல்லிவிட முடியாத கதை. இளையராஜாவை எனது வாழ்விலிருந்து அகற்ற முடியாது. அதேபோல் அகி மியூஸிக்கின் வளர்ச்சியையும், இளையராஜாவை தவிர்த்து என்னால் நினைவுக்கூற முடியாது.

எனக்கு இளையராஜாவின் இசை 90களில்தான் அறிமுகமாகியது.

90களில், அம்மா பள்ளிக்கு செல்ல தரும் பணத்தை பட்டினி கிடந்தும், சில சமயம் வீட்டிலிருந்து காலை சிற்றுண்டியை பள்ளிக்கு எடுத்துக் கொண்டு சென்றும், அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி, ஒரு வாரத்திற்கு ஒரு கேசட் என்று வாங்குவேன். அம்மா எப்பொழுதும் திட்டுவார். நாம் இருக்கும் நிலமையில் இந்த செலவு அவசியமா என்று. தினம் தினம் ஏச்சு. காசெல்லாம் இப்படி கரையுதே என்று. இத்தனைக்கும் வாரம் ரிங்கிட் மலேசியா 3.50 மட்டும்தான். மாதம் நான்கு கேசட். எனது பிறந்த நாள் அல்லது எதற்காவது யாராவது எனக்கு பரிசு தர எண்ணியிருக்கிறார்களா என்று முன் கூட்டியே கேட்டு, அப்படி ஆம் என்று பதில் வந்தால், ஒரு கேசட் வாங்கித் தரும்படி கேட்டுக்கொள்வேன். எனது வறுமையில், எனக்கு போதையாகவும் மதமாகவும் ஆகியிருந்தது இசை, அதிலும் இளையராஜாவின் இசை.

அம்மா ஒரு முறை படுமோசமாகத் திட்டிய போது, மனதுக்குள் ஒரு வைராக்கியம் எழுந்தது. எந்த இசைக்கு நான் இப்படி பணத்தையெல்லாம் அழிப்பதாக அம்மா சொல்கிறார்களோ அந்த இசையையே நான் காசாக்கிக் காட்டுகிறேன் என்று முடிவெடுத்தேன்.

பிறகு இசை வியாபாரத்தில் கால் வைக்கலாம் என்று முடிவு பண்ணினேன். அது சுத்தமாக எனக்கு பரீட்சயம் இல்லாதது. எனது மனதில் தோன்றும் அத்தனை உணர்வுகளையும் இசையாக வெளிக் கொண்டு வருவது, நிறைய இசைத் தொகுப்புகளை வெளியிடுவது என்று கனவு கண்டேன். அது கனவு என்பதைவிடவும் ஆசையாகவே அதிகம் வளர்ந்து வந்தது. எல்லா துன்பங்களுக்கும் ஆதாரம் ஆசைதான் என்று புத்தர் கூறியது அப்பொழுது நினைவுக்கு வரவில்லை. கனவுகள் கண்டிருக்கிறேன், இளையராஜாவுடன் பேசுவதுபோல், இளையராஜாவின் இசையை வெளியிடுவதுபோல். இங்கு கனவு என்று நான் சொல்வது அப்துல் க‌லாம் குறிப்பிடும் க‌ன‌வு அல்ல‌. சாதார‌ண‌மாக‌த் தூங்கும் போது வந்தக் கனவைதான். அது ஆழ்மனத்தின் ஆதீத ஆசையின் வெளிபாடு என்பதும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய வறுமையான குடும்ப நிலையில் இதெல்லாம் சாத்தியம் ஆகக் கூடிய ஒன்றா என்ற சந்தேகத்தை என் மனம் எப்பொழுதுமே எழுப்பி வந்திருக்கிறது.

ஒரு ஜீரோவை தொழிலதிபராக்கிய இளையராஜா மீது சேறு பூசும் அகி மியூசிக்!

சட்டென்று நிகழவில்லை எதுவும்..

எனது கனவுகளை நினைவாக்க சில முன்முயற்சிகள் தொடங்கினேன். எம். நாசீர் என்ற மலாய் இசை கலைஞருடன் வேலை செய்தது, அதன் காரணமாக வர்னர் மியூசிக்கில் (Warner Music) வேலைக் கிடைத்தது என்று தொடர்ந்தது எனது பயணம். வ‌‌ர்னரில் சேர்ந்த இரண்டாவது வருடமே இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காப்புரிமை பற்றிய விழிப்புணர்வை இந்திய படைப்பாளிகளிடம் ஏற்படுத்தி, காப்புரிமை மூலமாக இசைத்துறையின் இன்னொரு தொழில் வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கிட வர்னர் முயற்சிகள் செய்தது. அதற்கு அதன் மலேசிய சீன முதலாளிகள் தலைசிறந்தப் படைப்பாளிகளாகத் தேர்ந்தெடுத்தது இளையராஜாவையும் ஏ.ஆர். ரஹ்மானையும். அந்தப் பயணத்தில் நானும் ஒரு ஆள். அப்பாய்ண்ட்மெண்ட் ஏற்படுத்தி தந்ததும் நான் தான். இந்தியாவில் வர்னர் தொடங்கப்போகும் நிறுவனத்தில் நான் மிக உயர்ந்தப் பதவியில் அங்கம் பிடித்துவிட வேண்டும் என்று அதிகமாக வேலைகள் செய்து, எனது அதிகாரத்திற்கு வெளியேயும் வேலை செய்து, வர்னர் எதிர்ப்பார்க்காத பல உதவிகளையும் செய்து தந்தேன்.

இளையராஜாவை வர்னரின் சார்பாக, ஆசியா வர்னரின் ஒரு சீனத் தலைமை இயக்குனருடன் 2001இல் சந்தித்தேன். சின்ன, கட்டையான, கருப்பான தேகம். இத்தனை பிரமாண்ட இசை இந்த உடம்புக்குள் இருந்தா வருகிறது. என்னால் நம்ப முடியாத தோற்றம். தாடியும் உருத்தராச்சமுமாக ஒரு வகையில் கொஞ்சம் அந்நியமாக தெரிந்த உருவம். வர்னர் அதற்கு முன்பாகவே ஏ.ஆர். ரஹ்மானுடைய திருடா திருடா, இந்திரா போன்ற படப்பாடல்களை மலேசியாவில் அதுவும் ஏ.ஆரை வரவழைத்து வெளியீடு செய்திருந்ததால் அவர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏ.ஆராகத்தான் இருந்தது. ஆனால் அந்த எண்ணங்களையெல்லாம் வர்னர் இளையராஜாவை சந்தித்த ஓரிரு நிமிடங்களில் கைவிட்டிருந்தது. இளையராஜாவின் தி மியூசிக் மெசய்யா என்ற இசையின் ஒரு சில நிமிட இசை, வர்னர் தலைமை இளையராஜாவை ஆச்சரியத்துடன் பார்க்கவைத்தது.

இளையராஜாவுடன் புகைப்படம் எடுக்ககூடாது, ஆட்டோகிராப் வாங்கக்கூடாது என்று எனக்கு கட்டளையிட்டிருந்தவர், இளையராஜா இசையமைக்கும் வேகத்தைப் பார்த்து வியந்து அவருடன் நான் படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் வர்னர் ஆசியாவின் தலைமை இயக்குனர் திரு. கே சி லோவ் (K C Low). ஆனால், அந்த வருட இறுதியிலேயே எனது அத்தனைக் கனவும் இடிந்து விழுந்தது. வர்னரின் ஆசியாவின் பல அலுவலகங்கள் மூடப்பட்டன. செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு அமெரிக்காவின் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி பலரை வேலையில் இருந்து நீக்கியது நிறுவனம். மலேசியாவிலிருந்து மட்டும் 30 பேரை வேலை நிறுத்தம் செய்தது. ஆனால் என் வேலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்றாலும், எனது சொந்த இசை நிறுவனம் தொடங்கும் வேலைகளில் நான் மும்முரமாக ஈடுபட எனக்குள் ஒரு பொறியை அது ஏற்படுத்தியிருந்தது. பிறரின் தலைமையில் நல்ல வருமானத்தில் வேலை செய்தாலும், அவர்களுக்கு வேண்டாம் என்று தோன்றும் போது தூக்கி எறிந்து விடுவார்களே என்ற எண்ணம் மேலோங்கியது.

வியாபாரம் சார்ந்த எல்லா பயிற்சிகளிலும் கலந்து கொண்டேன். ஏறக்குறைய 40 தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என்று எனது வியாபாரத் திட்டங்களை காட்டி முதலீடு தேடிவந்தேன். அவமானங்கள்தான் மிஞ்சியது. அசிங்கப்பட்டேன். பல வருடங்கள் மன உளைச்சலில் இருந்தேன். பணம் அற்றவன் தொழில் பற்றி நினைப்பது தவறு என்று எனக்கு விளங்கியது. மூலதனம் இல்லாது தொழில் என்பது சாத்தியமற்றதாய் இருந்தது. தினம் தினம் காலையில் காரில் வர்னருக்கு வேலைக்கு செல்லும்போது இளையராஜாவின் 'அம்மா ஜனனி, சரணாலயம் நீ, என் ஆன்மாவின் சங்கீதம் நீ அருள் நீ' என்ற பாடல் மட்டுமே எனக்கு மந்திரமும், பிரார்தனையுமாக இருந்தது.

யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்று எனது நட்பு வட்டங்களைக் கூட நான் விட்டுவைக்கவில்லை. எனது இசைக் கனவிற்கு முதலீடு செய்ய முடியாத நிலைதான் எல்லோரிடமும். இளையராஜாவை அதுவரை அணுகாததற்கு காரணம் அவர் முன்னமே பலரால் தொழில் ரீதியாக ஏமாந்து நட்டம் அடைந்திருக்கிறார் என்று அவருடைய நெருங்கிய வட்டங்கள் கூறியிருந்ததோடு, அவர் உதவுவார் என்பது இந்த ஜென்மத்தில் நடக்காத ஒன்று என்று கூறினார்கள்.

2004 இல் இளையராஜா ரமணர் கான ரதம் என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார், அது திருவண்ணாமலையில் மட்டுமே கிடைக்கும் என்று சில நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டேன். அவரிடம் ஏன் முயற்சி செய்துப் பார்க்ககூடாது என்று தோன்றியது. பெரும் தயக்கத்துக்குப் பிறகு அவரிடம் பேசினேன். பிரசாத் ஸ்டியோவிற்கு போன் செய்து, ரமணர் இசைத்தொகுப்பைப் பற்றிக் கேட்டபோது, அது ரமணாஸ்ரமத்தின் நிதிக்காக அவரால் தயார் செய்து தரப்பட்டது என்றும், அதைக்கொண்டு அவர்கள் ஆஸ்ரமத்தின் பலத்திட்டங்களுக்கு நிதி திரட்டிக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

தயங்கி தயங்கி சொன்னேன், 'சொந்த இசை நிறுவனம் தொடங்கப் பல வருடங்களாக முயற்சிக்கிறேன். எனக்கு முதலீடு செய்யும் அளவுக்கு பண வசதியில்லை. முதலீட்டாளர்களும் புதிய, அனுபவம் இல்லாதவனுக்கு எப்படி முதலீடு செய்வது என்று அஞ்சுகிறார்கள். நீங்கள் இந்த ஆல்பத்தை எனக்கு கொடுத்தால் அதையே மூலதனமாகக் கொண்டு நான் என் கனவை அடைவேன்' என்றேன். சத்தியமாக இதில் இருப்பதுபோல் தெளிவாகவும் நிதானமாகவும் வார்த்தைகள் வரவில்லை. எனக்கு பேசுவதில் எப்பொழுதும் சில அசெளகரியங்கள் இருப்பதுண்டு, வார்த்தைகள் தெளிவில்லாமல் வரும்.

'சரி, ஆனால் ஒரு தொகையை முன்பணமாக ரமணாஸ்ரமத்திற்கு தந்துவிட்டு அவர்களிடமிருந்து நீங்கள் அதன் மாஸ்டர் காப்பியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவ்வளவு தர முடியும்?' என்றார். நான் எதிர்பார்க்காத ஒன்றுபோல் மனம் குதித்தது. மலேசிய ரிங்கிட் பத்தாயிரம் என்றேன். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு அழைக்கிறேன் என்றேன்.

இப்பொழுது இந்த வாய்ப்பைக் காரணம் காட்டி முதலீடு தேடினேன். ரமணரின் மீது பெரும் ஈடுபாடு கொண்ட அதே சமயம் எனக்கு வழிகாட்டியாகவும் என் நலவிரும்பியாகவும் இருக்கும் டாக்டர் சண்முக சிவா அவர்கள் உதவ முன்வந்தார். பிறகு நிறுவனம் அமைப்பது, சிடி தயாரிப்பது, விநியோகம் என்று எல்லா செலவுகளும் மலைப்போல் தெரிந்தது. மீண்டும் இளையராஜாவிற்கு போன் செய்து, பத்தாயிரம் வெள்ளி எனக்கு சிரமமாக உள்ளது. ஐந்தாயிரம் வெள்ளி தருகிறேன் என்றேன். வேறெதுவும் சொல்லாமல் சரி என்றார்.

ஆனால் ஒரு சில நாட்களில் அதுவும் சிரமம் என்றுத் தெரிந்தது. பிறகு மறுபடியும் அவருக்கு போன் செய்து 'மன்னிக்கனும் ஆயிரம் வெள்ளிதான் என்னால் கொடுக்க முடியும், என்னால் பணம் புரட்ட முடியவில்லை' என்றேன். சிரித்துக் கொண்டே 'சரி, வாங்க பார்த்துக்கலாம்' என்றார். மறுநாள் பெரிய சந்தேகத்தினால் திரும்பவும் அழைத்தேன். 'சரி, வாங்க பார்த்துக்கலாம் என்றால் என்ன அர்த்தம், எனக்கு பயமா இருக்கு, வந்த பிறகு, பத்தாயிரம் வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளிக்கு குறைத்து என்னை கேவலப்படுத்துகிறீர்களா, இதெல்லாம் சரிவராது என்று கூறி வெறும் கையோடு அனுப்பி விடுவீர்களா? பயண செலவுகள் நட்டமாகிவிடும் என்று பயமாய் இருக்கிறது' என்று தயங்கியபடி கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, 'வர சொல்லி விட்டு, காரணம் சொல்லி உங்களை திருப்பி அனுப்புவது, அவமானப்படுத்துவது போன்றது. நான் அதை செய்ய மாட்டேன், பயப்படாமல் வரவும்' என்றார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கிளம்பினேன். அகி மியூஸிக் என்ற பெயரை திடீரென முடிவு செய்தேன். என்னுடைய வியாபாரத்திட்டதில் நான் தொடங்கப் போகும் நிறுவனத்திற்கு யாழ் ரெக்கார்ட் என்றுதான் பெயரிட்டு இருந்தேன். நிறுவனம் தொடங்க ஏற்பாடு ஆனதும் அகி மியூசிக் என்று சிந்தையில் தோன்றியது. பதிவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு, அவரை சந்தித்தேன். அகி மியூசிக்கின் திட்டத்தையும் எவ்வளவு ராயல்டி வரும் சாத்தியங்கள் உள்ளது என்பதையும் நான் தயாரித்திருந்த வியாபார திட்டத்தைக்காட்டி விளக்கினேன். எனக்கு வியாபாரம் தெரியாது, நீங்கள் சொல்வதுபோல் நடந்துக்கொண்டால் போதும் என்றார். பணத்தை ரமணாஸ்ரமத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து மாஸ்டர் ஆடியோ கேசட்டை வாங்கிக்கொள்ளும்படியும், இது ரமணருக்காக செய்தது தனக்கு பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். நிறுவனத்தில் பங்குதாரராக நீங்கள் ஆவதென்றால் அதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றேன். அதையும் மறுத்துவிட்டார்.

நான் ரமணாஸ்ரமம் சென்றேன். எனக்கு திருவண்ணாமலைப் பற்றித் தெரியாது, ரமணரைப் பற்றித் தெரியாது. இப்பொழுது நினைத்தால் இளையராஜாவின் 'அண்ணாமலையெனை தன்னால் அழைத்தது, சொன்னால் அதிசயம் அம்மா அம்மா' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. திருவண்ணாமலை சேர்ந்ததும் ரமணாஸ்ரமத்தில் ஒப்பந்தங்கள் கையெழுத்தான சில நிமிடங்களில் ரமணாஸ்ரம தலைவருக்கு இளையராஜா போன் செய்து, 'அந்த கேசட்டை ரமணர் சமாதியில் வைத்து பூஜை செய்து அகிலனிடம் கொடுங்கள்' என்று கூறிவிட்டு, என்னிடம் 'ரமணரிடம் ஆசீர்வாதம் பெற்று இதை நீங்கள் தொடங்குங்கள்' என்று கூறிவிட்டார். ரமணாஸ்ரமம் எனக்கு வேறு சில அனுபவங்களைத் தந்தது. இங்கு அதை சொல்வது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சென்னை திரும்பியதும், சினிமாக்காரர்களைப் பற்றி பரவியிருந்த ஒரு மோசமான கருத்து எனது மனதிலிருந்து விலகியிருந்தது. அந்த நம்பிக்கையில் இளைய‌ராஜாவிட‌ம், வர்னர் மியூசிக்கில் இருந்து நாங்கள் வந்தபோது நீங்கள் போட்டு காண்பித்த இசையையும் தர முடியுமா என்று கேட்டு வேறு ஒரு திட்டத்தைக் காட்டினேன். 'இரவு வீட்டுக்கு வாங்க, தருகிறேன்' என்று வழியனுப்பி விட்டார். 5 நிமிடம் மட்டுமே இருந்தது அந்த சந்திப்பு. பெரும்பாலான அவருடனான எனது சந்திப்பு அதிக பட்சம் 15 நிமிடங்கள் தான்.

இரவு அவரது வீட்டில் நவராத்திரி பூஜை. 10.30 மணி வரை அவர் வரவில்லை. எனக்கு பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. திடீரென்று வந்தவர் என்னை பார்த்து எதுவும் பேசவோ, புன்னகைக்கவோ இல்லை. நேரே மாடிக்கு சென்றார். கொஞ்ச நேரத்தில் கையில் ஒரு கேசட்டுடன் கீழ் இறங்கி, பூஜை அறை நுழைந்தவர், ஆராத்தி காட்டி என் கையில் கொடுத்தார். நான் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று அதை வாங்கிக் கொண்டேன். எனது முதல் வெற்றி என்று மனம் கொண்டாடியது.

அவரைப் பலர் ஆணவக்காரர், கோபக்காரர் என்று பலவாறு என்னிடம் குறைக்கூறியிருக்கிறார்கள். உங்களின் மூலம் இப்பொழுது பணம் பண்ணப் பார்க்கிறார், என்றெல்லாம் நகைத்திருக்கிறார்கள். எதுவும் இல்லாமல் சென்ற, அவருடன் எந்த நெருங்கிய உறவோ, நட்போ இல்லாத எனக்கு, யாரிடமிருந்தும் சிபாரிசோ, அறிமுகமோ இல்லாத எனக்கு நம்பிக்கைத் தந்து, ஆல்பம் தந்து என் கனவுகளுக்கு வழியமைத்துக் கொடுத்த அந்த இளையராஜா, நான் கேள்விப்படாத, படித்திராத, இளையராஜா.

மார்ச், 2005 இல் நான் மீண்டும் சென்னை சென்றேன். ரமணாஸ்ரமத்திற்கு ராயல்டி தரவும், கொஞ்சம் சீடிகள் தரவும். அதுவரையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் நான் நுழைந்ததில்லை. முதல் முறை சென்ற போதுக்கூட அவசரமாக ரமணாஸ்ரமம் சென்று அவசரமாக சென்னை திரும்பி விட்டேன். அன்று ஏழுமலை என்ற ரமணாஸ்ரம நண்பர் என்னை வற்புறுத்தி திருவண்ணாமலை கோவிலுக்கு அழைத்தார். இவ்வளவு தூரம் வந்து தமிழ் நாட்டின் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலையை தரிசிக்காது செல்வது பெரிய இழப்பு என்றார்.

அப்பொழுது நான் வைணவத்தில் அதிக நம்பிக்கையும் பிடிப்பும் உள்ளவன். மறந்தும் பிற தெய்வம் தொழாதவன். எனக்கு வர மனமில்லை என்று சொல்ல மனம் வரவில்லை. அவரின் அன்பு வற்புறுத்தல் அத்தகையது. முதல் முறைவந்தபோதும் அவர் இதுபோல் வற்புறுத்தி, பிறகு மலையை சுற்றிப் பார்க்க ஒப்புக்கொண்டேன். காரிலேயே சுற்றிவிட்டு வந்துவிட்டேன். இன்றோ முதல் முறையாக திருவண்ணாமலை கோவிலுக்குள் செல்கிறேன். எனக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. உள்ளே அழைத்து பெரிய லிங்கத்தின் முன் அமர சொன்னார்கள். அனைத்தும் எனக்கு வேடிக்கையாகவும் பொருளியலாகவும் தெரிந்தது. ஆனால் சிவ லிங்கத்தின் முன் அமர்ந்தவுடன், காரணம் தெரியாமல் கண்கள் நனைந்தன. இதுவரை எங்கெல்லாமோ, யார் யாரிடமோ நான் தேடிய அன்பு இங்கே கல்லாய் இறுகிப் போய், இத்தனை நாள் என் வரவிற்காக காத்திருப்பது போல் இருந்தது. என்னால் விளங்கிக் கொள்ள‌ முடியாத உணர்வு. எல்லாவற்றுக்கும் காரணம் தேடும் மனம், என் கண்ணீருக்கு அறிவியல் அல்லது உளவியல் காரணம் காண முடியாமல் திணறியது.

இத்தனை உணர்வுகளையும் நான் முன்னமே அனுபவித்திருக்கிறேன், இதே போல் கண்ணீர் விட்டிருக்கிறேன் என்பது மட்டும் நிச்சயமாக என்னால் உணர முடிந்தது. சட்டென்று என் சிந்தை முழுவதும் பரவியது ஹவ் டு நேம் இட் என்ற இசையின் நாதம். திருவண்ணாமலையில் நான் உணர்ந்தது 10 வருடங்களுக்கு முன் ஹவ் டூ நேம் இட் என்ற இசையை நான் முதல் முறை கேட்ட போது எழுந்த அதே உணர்வு நிலை. அது ஏன் என்ற காரணம் எனக்கு விளங்கவில்லை. ஆனால் அந்த அனுபவம் இளையராஜாவின் மீதான விளக்கமுடியாது சில நம்பிக்கைகளையும் மரியாதையையும் என்னுள் உருவாக்கியது. மதம், கடவுள் என்று நான் கொண்டிருந்த அத்தனை நம்பிக்கைகளையும் கட்டுடைத்து விட்டது. ஏதோ ஒரு சக்தி என்னிலிருந்து இந்த இசையை வெளிக்கொண்டுவருகிறது என்று அவர் எப்பொழுதும் கூறுவது அர்த்தம் நிறைந்ததாய் நான் உணர்ந்த நாள் அது.

பிதற்றத் தொடங்கியிருக்கிறான் அகிலன் என்று பலர் நினைக்ககூடும். ஆனால் இன்னமும் இந்த அனுபவம் என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. முற்பிறவி தொடர்பு, ஆன்மீகம் என்றெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்கள் மறந்துபோன இசை ஏன் என் நினைவிற்கு வரவேண்டும்? பரீட்சயம் இல்லாத சைவ தள‌த்தில் நான் ஏன் அளவிட முடியா அன்பால் அரவணைக்கப்பட வேண்டும்? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இளையராஜாவின் ஆன்மீகம் போலியல்ல, அவரின் திருவண்ணாமலை பயணமும் அவர் ஏற்றுக்கொண்ட தோற்றமும் நாடகமல்ல என்பதை நான் நம்பத் தொடங்கிய, எனக்கு விளங்கத்தொடங்கிய நாட்கள் அவை.

ooo

இளையராஜாவின் குரு ரமண கீதம், இத்தாலி இசைப் பயணம், திருவாசகம், மியூசிக் மெசய்யா, அம்மா பாமாலை என்று 3 வருடத்தில் மொத்தம் 6 ஆல்பங்கள் மட்டுமே வெளியிட்டிருந்தேன். காரணம், பெரிய முதலீடு இல்லாமல் வரும் பணத்தை அலுவலக நிர்வாகத்திற்கு செலவு செய்வதும், வியாபாரத்திற்காக வாங்கிய கடனை செலுத்துவதிலும், மீதப் பணத்தில் ஆல்பம் வெளியிடுவதும், இப்படிதான் எனது தொழில் போய் கொண்டிருந்தது. திருவாசகத்தைக் கூட மிக சொற்ப முன்பணத்திற்குதான் இளையராஜா தந்தார். தமிழ் மையத்தின் அனுமதியோடு, அகிலன் தான் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையோடு. அதற்கும் டாக்டர் சண்முகசிவாதான் எனக்கு உதவி செய்தார். 2006ல் ஏ.ஆரின் காட்பாதரையும் ரிலீஸ் செய்திருந்தேன்.

2007க்குள் வியாபாரத்தை விஸ்தாரமாக்க இயலாமல், முதலீடும் இல்லாமல், குடும்பம் நடத்த போதிய வருமானமும் இல்லாம், பொருளாதாரம் மோசமாகி, கடனாகி, மீண்டு வர முடியாத அளவு நான் நிலைகுலைந்து போனேன். தன்முனைப்பு அற்று, விரக்தியடைந்திருந்தேன். எனது வாழ்வின் இருண்ட காலங்கள் அவை. குடும்பத்திலிருந்து தனித்து விட்டேன். உறவினர்கள் கூடி அவமானப்படுத்தினார்கள். மனைவியுடன் விவாகரத்துக்கும் முயற்சி செய்தேன். எல்லோராலும் நம்பிக்கை இழக்கப்பட்டு கைவிடப்பட்டவனாகவே இருந்தேன். ஒன்றரை வருடங்கள் இளையராஜாவிற்கு ராயல்டி எதுவும் தரவில்லை. காரணம் சொல்லி வந்தேன். மே மாதம் சிங்கப்பூர் வந்திருந்தவர் என்னை தொடர்புக்கொள்ள முடியாமல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மலேசியாவில் உள்ள அவருடைய சில தொடர்புகள் மூலம் என்னைத் தொடர்பு கொண்டு, கோபித்து கொண்டு, உடனே என்னை சிங்கப்பூர் வந்து அவரைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அவரிடம் என் நிலையை விளக்க மனமில்லை.

சிங்கப்பூர் போகும் போது எனது போதாத நேரம் அவரை பார்ப்பதாக இருந்த நேரத்தைவிட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றேன். அவரைச் சந்தித்து, என்னால் இந்த சில காலமாக ராயல்டி தர முடியவில்லை, காரணம் சில பணப் பிரச்சனைகள் என்றேன். அவர் என் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் எனது இயலாமையை முடிந்தளவு மறைத்தேன். முடிந்த அளவு அகி மியூசிகின் நம்பகமான சில திட்டங்களை விளக்கி அது நமக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்று விளக்கினேன். எனது தோல்வி அவரை என் மீது நம்பிக்கை இழக்க செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஏதும் பேசாமல் என்னையே பார்த்திருந்தவர், பிறகு வழியனுப்பிவிட்டார். அன்று அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.

பிறகு மலேசியாவில் ஜொகூருக்கு கிளம்பி இரவு அங்கு தங்கினேன். சிங்கப்பூரில் தங்க பணமில்லை. முடிந்தது எனக்கும் அவருக்குமான உறவு என்று நினைத்தேன். மறுநாள் காலையில் என்னை அழைத்து, மீண்டும் ஹோட்டலுக்கு வரும்படி கூறினார். எனக்கு விளங்கவில்லை. போனேன். மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதம். எனக்கும் இளையராஜாவிற்கும் இருக்கும் உறவு இன்றோடு முடிந்தது என்பது உறுதியானது போல் இருந்தது. எனது கடைசி நம்பிக்கையும் விட்டுப் போனது. நான் அவரை சந்தித்தபோது, அவர் மதியம் சாப்பிடாமல் காத்திருந்தார். கூட இருந்த இரண்டு பேர் என்னை ஏதோபோல் பார்த்தார்கள். உங்களுக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறேன் என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு போனார். வழியில் காரில் வந்த அவருடைய நண்பரிடம் என்னை அறிமுகம் செய்துவிட்டு இவரிடம் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன். உங்கள் தொழிலில் இவர் முதலீடு செய்வார் என்று கூறினார். அந்த நண்பரும் பல கேள்விகள் கேட்டு இறுதியில் முதலீடு செய்ய சம்மதித்தார். உணவு முடிந்து ஹோட்டலுக்கு சென்றபின், 'உங்களுக்கு என்னால் ஆன உதவி, நீங்கள் முன்னுக்கு வருவதை பார்க்கனும்' என்று சுருக்கமாக சொல்லி கிளம்பிட்டார். என் கண்கள் ஈரமாகியது. நான் சம்பாதித்த எல்லாவற்றையும் இழந்திருந்தேன். எல்லோருடைய நம்பிக்கையையும் இழந்திருந்தேன். குடும்பமும் என்னை கைவிட்டிருந்தது. எந்த நம்பிக்கையில் இளையராஜா எனக்கு இந்த உதவியை செய்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இன்னும் என்னிடம் அவர் எந்த காரணத்தால் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அதிலும் நான் எனது நிலைப் பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. என்னிடம் ஏன் இந்த தனிப்பட்ட அக்கறை என்று மனம் பலமிழந்து நின்றிருந்தேன்.

இளையராஜாவின் முன்பு எல்லாவற்றிற்கும் ஒத்துக்கொண்ட அந்த நண்பர், பல்வேறு காரணங்களை சொல்லி முதலீடு செய்வதை தவிர்த்து வந்தார். அதை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தி விட்டு, வேறு வழிகளில் முயற்சித்து வந்தேன். இது நடந்த ஒரு ஐந்து மாதங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்தையும் காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வந்துவிட்டது. வேலையாட்களை எல்லாம் நிறுத்தினேன். நான் மட்டும் தனிமையில் எனது அலுவலகத்தில் இருண்டுப் போய் இருந்தேன். 31 டிசம்பர் 2007. வருடத்தின் கடைசி நாள். வியாபாரத்திலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைத்தேன். எங்காவது போய் ஒளிந்து கொள்ளலாம் போலிருந்தது. போராடியது போதும் என்று தோன்றியது. கேப்பிடலிஸத்தின் (Capitalism) நிதர்சணமாய், பணக்காரர்கள் மட்டுமே பணம் பண்ண முடியும் என்று நம்பத் தொடங்கினேன். அப்பொழுது ஒரு குரியர் வருகிறது. தனது எல்லா உரிமத்தையும் அகி மியூசிக்கிற்கு ஒப்படைத்து ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் இளையராஜா. என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நாள் அது. எந்த முன் பணமும் செலுத்தவில்லை. அவர் அறிமுகப்படுத்திய முதலீட்டாளரும் மறுத்திருந்த நிலையில், என்னை தூக்கிவிடுவது போல் ஒரு குரியர், அவரிடமிருந்து. மர ப் படுக்கையில் இருந்தவனுக்கு முதலுதவிப் போல் இருந்தது. நிமிர்ந்து மீண்டு வர இன்னொரு வாய்ப்பு. ஒருமுறை அவரை சந்தித்து, ஒவ்வொரு முறையும் எனது வாழ்வின் முக்கியமானத் தருணங்களில் அவருடைய இசைதான் என்னை ஆட்கொண்டது, நிதானப்படுத்தியது என்றபோது. 'எல்லாம் ரமணரிடமிருந்துதான் வருகிறது. என்னுடைய இசையால்தான் என்று நீங்கள் கருதினால், அந்த இசையும் ரமணரிடமிருந்து வருவதுதானே. நான் ஒரு கருவிதான்' என்றார். இதில் நான் எதையும் எனது கற்பனையில் எழுதவில்லை. நிகழ்ந்தவை. நான் பார்த்த இளையராஜாவின் இன்னொரு முகம். நான் பழகிய, மீடியாக்களுக்குத் தெரியாத இன்னொரு மனம்.

ஜெயமோகனிடம் ஒரு முறை அகி மியூசிக் உருவானதை நான் கூறிய போது, சினிமாத் துறையில் இளையராஜாவிற்கு மட்டும்தான் இப்படியொரு முகம் இருப்பதாக தான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று இயக்குனர் பாலாவின் அனுபவத்தை சொன்னார். நடிகர் நாசரும் அவருடைய அவதாரம் படம் பணமில்லாது முடங்கிய போது, பணம் பெறாமல் இசையமைத்ததை தி மியூசிக் மெசைய்யா வெளியீட்டு விழாவில் கூறினார்.

இன்று அகி மியூசிக் அடைந்திருக்கும் உயரம், கிடைத்திருக்கும் வெளிச்சம், இளையராஜா என்ற ஒருவரை கொண்டே அடையப்பட்டது. இன்றைய சினிமா சூழல் பலப் படைப்பாளிகளை வியாபார ரீதியாக முன்னிறுத்தினாலும், இசையில் இளையராஜாவின் இடம் இன்னும் யாராலும் நெருங்க முடியாத உச்சத்தில் நிரந்தரமாக இருக்கிறது. இசை மேதமையில் மட்டுமல்ல, வியாபார ரீதியாகவும்.

இத்தனை வருடங்கள் தாண்டியும் தமிழ் மனங்களை அரவணக்கும் ஒரு இசையென்றால் அது இளையராஜாவின் இசையாக தலைமுறைகள் தாண்டி இன்றுவரை நீண்டு வருவதற்கு காரணம், அவரால் வெளிப்படையாக வெளிக்காட்டப்படாமல் இருக்கும் அன்புதான். அதுதான் அவரது இசையின் ஆதாரமாக இருந்து வருகிறது. எனது முந்தைய ஒரு கட்டுரையில் தமிழர்கள் அவர்களுடைய அடையாளங்களை இளையராஜாவின் இசையில் மீட்டெடுக்கிறார்கள் என்றேன். ஆனால் உணர்வு நிலையில் இருந்து யோசிக்கும் போது, இளையராஜாவின் இசை நம்மை அரவணைக்கிறது, ஆறுதல் அளிக்கிறது என்றுதான் சொல்ல தோன்றுகிறது, பலரும் சொல்வதும் இதைதான். அதுதான் அவருடைய நிஜ இயல்பு.

-இப்போது சொல்லுங்கள்.. இளையராஜா மோடிக்காரரா? ஒரு நயா பைசா பெறாமல் ஒருவரை முன்னுக்குக் கொண்டுவர, தனது 40 ஆண்டு உழைப்பை இலவசமாகத் தந்தவரை இழிவுபடுத்துவது எத்தகைய பாவம்..? சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். நினைவிருக்கட்டும், இசையின் கடவுள் சிவன்!

 

'எதிர் நீச்சல்’ பட ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன் காலமானார்

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் காலமானார்.

சிவந்த மண், இருகோடுகள், பூவா தலையா, எதிர் நீச்சல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பாலகிருஷ்ணன். இவர் இயக்குநர் விசுவின் பெரும்பாலான படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

'எதிர் நீச்சல்’ பட ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன் காலமானார்

84 வயதான பாலகிருஷ்ணன் சமீபகாலமாக உடல் நலக் குறைபாடால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

மறைந்த பாலகிருஷ்ணனுக்கு ராதா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அன்னாரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

 

நடிகர் ரஜினிக்கு "44"வது பிறந்த நாள்.. தன் 'ஸ்டைலில்' வாழ்த்திய நடிகர் கமல்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாளையொட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சமூக வலைதளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் ரஜினி நடித்த லிங்கா திரைப்படமும் வெளியாவதால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே ரஜினிகாந்தின் நண்பரான கமல்ஹாசன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சமூக வலைதளம் மூலமாக பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கமல் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

ஹாய் ரஜினி! இனிய 44வது பிறந்த நாள் வாழ்த்துகள்.. லிங்காவின் அபார வெற்றிக்கும் எனது வாழ்த்துகள்.. என்ன இப்படி வாழ்த்து சொல்றீங்கன்னு பார்க்கிறீங்களா..நான் ஊரில் இல்லை.. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறேன்.. போன மாசம் நீங்க எனக்குப் போன் பண்ணி 42வது வயசுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்னு சொன்னீங்க..

இது பதில் இல்லை.. நம்முடைய நட்பின் வயசு இதுவா இருக்கும்னு நினைக்கிறேன்.. ஊருக்கு வந்தோ அல்லது இங்கேயோ படம் பார்த்துவிடுகிறேன்.. நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

எப்படி இருக்கிறது லிங்கா...? ஒரு விமர்சன ட்ரைலர்!!

சென்னை: டபுள் கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.. நேற்று இரவு முதல் ரஜினியின் பிறந்த நாளையும், அவரது லிங்கா பட வெளியீட்டையும் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். லிங்கா படம் ரசிகர்களை முழு அளவில் திருப்திப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது... அவர்கள் பேசுவதைப் பார்த்தால்.

எந்திரனுக்கு பிறகு வந்துள்ள முதல் முழுமையான ரஜினி படம் என்பதால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். அதிலும் கிட்டத்தட்ட 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் வந்துள்ள லிங்கா, ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டது.

எப்படி இருக்கிறது லிங்கா...? ஒரு விமர்சன ட்ரைலர்!!

சரி படம் எப்படி இருக்கிறது....!

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க, கே.எஸ். ரவிக்குமார் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஷெட்டி என இரு நாயகிகளுடன் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் லிங்கா. தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்துள்ளது.

லிங்கா ஒரு, ஆக்ஷன் திரில்லர் - வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கதை.

நடிப்பு எப்படி?

ரஜினி அசத்தியுள்ளார். அதே ஸ்டைல், அதே வேகம், அதே பிரமிப்பு.. நடிப்பு, சண்டைக் காட்சி, நடனம்.. என அசத்தியுள்ளார். இந்த மனிதருக்கு திரையில் வயதே ஆகாதா என ஆச்சர்யப்படுத்துகிறார். வருகிற அத்தனைக் காட்சிகளிலும் வசீகரிக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டியும், சோனாக்ஷியும் கலக்கியுள்ளனர். அதிலும் சோனாக்ஷியின் கவர்ச்சி இல்லாத நடிப்பு பார்க்கவே அழகாக இருக்கிறது. அனுஷ்கா, ரஜினி ஜோடி, இன்னொரு ரஜினி - மீனா என்று கூடச் சொல்லலாம். அத்தனை அம்சமாக அமைந்திருக்கிறது பொருத்தம்.

இரண்டு பீரியட் கதையை கே.எஸ்.ரவிக்குமார் திறமையாக கையாண்டிருக்கிறார். காமெடியில் சந்தானம் கவருகிறார். ரத்னவேலுவின் கேமரா அசத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் ஆச்சரியப்படுத்துகிறார் - பாடல்களிலும், பின்னணி இசையிலும்.

இன்னும் சில மணி நேரங்களில் நமது விரிவான விமர்சனம்.. காத்திருங்கள்!