தீர்ந்தன வழக்குகள்.. விரைவில் வரும் வாலு.. சிம்பு டிவிட்!

சென்னை: நடிகர் சிம்பு - ஹன்சிகா நடிப்பில் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியிருக்கும் வாலு படம் விரைவில் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன்பு அறிவித்திருக்கிறார் நடிகர் சிம்பு.

இந்த முறையாவது வாலு வெளியாகுமா? என்று சந்தேகத்துடன் இனிமேல் இருக்க வேண்டாம் வாலு மீதான வழக்குகள் அனைத்தும் தீர்க்கப் பட்டுவிட்டன, எனவே இந்த முறை படம் கண்டிப்பாக திரையைத் தொடும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

வழக்குகள் அனைத்தும் தீர்க்கப் பட்டு விட்டாலும் வெளியீட்டுத் தேதியை நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வந்தவுடன் தான் அறிவிக்க வேண்டும் என்பதால் தேதியை குறிப்பிடாமல் அதிவிரைவில் என்ற வாசகங்களுடன் தற்போது படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.


ஆகஸ்ட் 14ம் தேதியில் படம் வெள்ளித்திரைகளில் வெளியாக இருக்கிறது இதனால் சந்தோஷமாக இருக்கும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் " வாலு படத்தின் வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன, கடவுளுக்கு நன்றி. மேலும் எனக்காக வேண்டிக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் " என்று ட்வீட்டி இருக்கிறார்.

மேலும் ஆகஸ்ட் 14 ல் படம் வெளியாகும் என்று மீடியாக்கள் வெளியிட்ட செய்தியையும் ரீட்வீட் செய்து மகிழ்ந்திருக்கிறார் சிம்பு, சிம்பு இப்போ ஹேப்பி அண்ணாச்சி...


சுதந்திர தினத்தில் வாலுவுக்கு ரிலீஸ் கிடைத்திருக்கிறது...

 

1995 ல் வெளியான கன்னட படம் 2015ல் 10 கோடிக்கு விற்பனையான அதிசயம்

பெங்களூர்: 1995 ம் ஆண்டில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் - பிரேமா நடிப்பில் வெளியான திரைப்படம் ஓம், சாண்டல்வுட்டின் பவர்புல்லான நடிகரும் இயக்குனருமான உபேந்திரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

படம் வெளியாகி இந்த 2015 ம் ஆண்டில் 20 வருடங்களைத் தொட்டு இருக்கிறது ஆனால் ஆச்சரியப்படும் விதமாக இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை இதுவரைக்கும் யாருக்கும் விற்கப் படாமலே இருந்தது.

Upendra's Om Satellite Rights Sold for Rs 10 crore?

எத்தனையோ பேர் முட்டி மோதியும் பலன் இல்லாததால் வெறுத்துப் போய் இந்தப் படத்தை வாங்கும் உரிமையை கைவிட்டு விட்டனர், ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை தற்போது சுமார் 10 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது.

இந்த 20 வருடங்களில் இதுவரை சுமார் 632 முறை ரசிகர்கள் கண்டுகளித்த இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல கன்னட சேனல் ஒன்று 10 கோடியை கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

ரசிகர்களின் தணியாத ஆர்வத்தால் 10 கோடிக்கு விலைபோயிருக்கும் ஓம் திரைப்படத்தின் தயாரிப்புத் தொகை, இந்த சாட்டிலைட் உரிமையில் நான்கில் இல்லை இல்லை ஐந்தில் ஒரு பங்கு கூட ஆகியிருக்காது.

என்னத்தைச் சொல்லுவது உபேந்திராவின் அதிர்ஷ்டம் அப்படி...

 

யாருக்காகவும் உன்னை மாத்திக்காதே - சூரிக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்

நீ கடைசிவரை நீயாகவே இரு. யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே என பரோட்டா சூரிக்கு அறிவுரை கூறியுள்ளார் அஜீத்.

ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்த சூரி, அடுத்து சிவா இயக்கும் படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார்.

இதுகுறித்து சூரி கூறுகையில், "இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இந்தப் படத்தில் நிறைவேறிவிட்டது.

Ajith's advice to Soori

படப்பிடிப்பில் அஜித் என்னிடம் கூறியவை மறக்க முடியாதவை. 'நீ எப்போதும் நீயாகவே இருக்க வேண்டும். யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. உன் வாழ்க்கைத் தரத்தை வேண்டுமானால் மாற்றிக் கொள். ஆனால் உன்னுடைய சுபாவத்தை மாற்றாதே,' என்று கூறினார். அதை நிச்சயம் நான் கடைப்பிடிப்பேன்," என்றார்.

பரோட்டா சூரியின் அடுத்த ஆசை ரஜினி படத்தில் நடிப்பதுதானாம். அஜீத் அட்வைஸ்படி நடந்தா அந்த வாய்ப்பும் கைகூடப் போகுது!

 

ஆக 8-ல் மலேசியாவில் பிரஷாந்தின் சாஹசம் பட பிரமாண்ட இசை வெளியீடு!

பிரஷாந்த் நடித்துள்ள சாஹசம் படத்தின் இசை வெளியீடு மலேஷியாவில் பிரமாண்டமாய் வெளியாகிறது.

வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி கோலாலம்பூரில் மாலை 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிராஷாந்துக்கு ஜோடியாக அமென்டா என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். அருண்ராஜ் வர்மா இயக்கியுள்ளார். எஸ்எஸ் தமன் இசையில் அனைத்துப் பாடல்களையும் லட்சுமி மேனன், சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் பாடியுள்ளனர்.

Saahasam audio launch on Aug 8th at Kuala Lumpur

இசை வெளியீடு நிகழ்ச்சி கோலாலம்பூர் நகரில் உள்ள ப்ரிக்ஃபீல்ட் அரங்கில் வண்ணமயமாய் நடக்கவிருக்கிறது. மாலை 7 மணிக்குத் தொடங்கி 9 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியை டிடி எனும் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'சாயாங் கு...' என்ற பாடலுக்கு மேடையிலேயே நடனம் ஆடுகிறார் பிரஷாந்த். அவருடன் ரசிகர்களும் இணைந்து நடனமாடுகின்றனர்.

இதற்காக நாளை வெள்ளிக்கிழமை மலேசியாவுக்கு பிரஷாந்த், தியாகராஜன் உள்ளிட்ட குழுவினர் புறப்படுகின்றனர்.

 

அஜீத்தின் 57 வது படத்தை இயக்கப் போவது யார்?- சிறப்புச் செய்தி

அஜீத்தின் 56வது படம் பெயர் வைக்கப்படாமலேயே இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு வரம், வெட்டி விலாஸ் என்றெல்லாம் தலைப்புகள் மீடியாவில் உலவுகின்றன.

இந்த நிலையில் அஜீத்தின் 57வது படம் குறித்து பல தகவல்கள், யூகங்கள் வர ஆரம்பித்துள்ளன.

இந்தப் படத்தை அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிக்கவில்லை. மாறாக மூன்றாம் பிறை, பார்த்திபன் கனவு போன்ற படங்களைத் தந்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Vikram Kumar to direct Ajith 57?

படத்தை யாவரும் நலம், இப்போது சூர்யா நடிக்கும் 24 போன்ற படங்களின் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இருமுறை அஜீத்தைச் சந்தித்துப் பேசியுள்ள விக்ரம் குமார், இந்தப் படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகளில் இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், சதுரங்க வேட்டை படம் தந்த வினோத்தும் அஜீத்துக்காக ஒரு ஸ்கிரிப்ட் தயாரித்து வைத்துள்ளதாகவும், அதை சத்யஜோதி பிலிம்ஸ் ஓகே செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கும் வழக்கம் போல அஜீத் 57 என பெயரிட்டிருக்கிறார்களாம்.

 

"பெட்டிங்"கிலிருந்து தப்பி சினிமாவில் விழுந்த ஸ்ரீசாந்த்.. ஹீரோவாகிறார்!

திருவனந்தபுரம்: ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சினிமாவில் குதிக்கிறார். ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டவர் ஸ்ரீசாந்த். இந்த வழக்கிலிருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

Cricket Player Sreesanth to act in a Big Budget Movie

இருப்பினும் அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டதால் மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்பிப் பார்க்க முடியாத நிலையில் ஸ்ரீசாந்த் உள்ளார்.

இந்த நிலையில் சினிமா வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. ஒரே சமயத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இப்படம் தயாரிக்கப்படுகிறது.

தயாரிப்பாளர் சனாயாடி ரெட்டி இயக்கும் இந்தப்படம், ஐ.பி.எல். மற்றும் கிரிக்கெட் வீரரைப் பற்றிய கதைக்கருவை மையமாகக் கொண்டு உருவாகிறது.

ஸ்ரீசாந்த் நடிக்க உள்ள இப்படம் செப்டம்பரில் தொடங்கி 6 மாதத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டிருப்பதாக ரெட்டி தெரிவித்திருக்கிறார். மேலும் இப்படம் 14 இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

படத்தைப் பற்றி ஸ்ரீசாந்த் கூறும்போது தென்னிந்தியாவில் தனக்கு இது முதல் படம் என்று கூறிய ஸ்ரீசாந்த், இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிப்புத்துறையில் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீசாந்த் ஏற்கனவே ஒரு நல்ல டான்ஸர், நல்ல பாடகரும் கூட. எனவே சினிமாவில் அவர் சகலகலாவல்லவனாக வலம் வருவாரா என்பதை (வழக்கம் போல) பொறுத்திருந்து பார்ப்போம்.

 

பெரிய படங்களால் சாகடிக்கப்படும் சிறிய படங்கள்!- இது கலைப்புலி சேகரனின் குமுறல்

சில பெரிய படங்களால் பல சிறிய படங்கள் சாகடிக்கப்படுகின்றன, என்றார் கலைப்புலி ஜி சேகரன்.

பசவா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கமல்தீப் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி யுள்ள படம் 'பானு'. இது 2002-ல் உண்மையில் நடந்த கதையாம்.

இப்படத்தில் நாயகனாக நடித்து ஜீ.வி. சீனு இயக்கியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த நந்தினிஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். கே.அப்துல் ரகுமான் ஒளிப்பதிவு செய்ய உதயராஜ் இசையமைத்துள்ளார்.

'பானு ' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட தமிழ் டிஜிட்டல் பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி. சேகரன் பெற்றுக் கொண்டார்.

Big movies destroy small movies, says Kalaipuli Sekaran

நிகழ்ச்சியில் கலைப்புலி ஜி.சேகரன் பேசும்போது, "ஒரு காலத்தில் திரையுலகில் எல்லாருமே தென் சென்னைக்காரர்களாக இருந்தார்கள். அப்போதுதான் எஸ்.தாணு, நான் எல்லாம் வட சென்னையிலிருந்து வந்தோம். தாணு, நான் எல்லாம் வண்ணாரப் பேட்டைதான். இவர்களும் வட சென்னையிலிருந்து இப்போது வந்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் எந்தப் படம் போட்டாலும் திரையரங்கில் ஓடும். இப்போது நிலைமை மாறிவிட்டது. சின்ன படம் ஓடுமா, பெரிய படம் ஓடுமா என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. சில நேரம் ஒரு சின்ன படம் ஒடுகிறது. 10 படங்கள் ஓடுவதில்லை . சில நேரம் ஒரு பெரிய படம் ஓடுகிறது. எல்லாரும் படம் எடுத்து விட்டு விளம்பரம் எப்படி செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம். இந்த விளம்பரச் செலவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரு ஊரில் இரண்டு ரயில்வே ட்ராக் இருந்ததாம். ஒன்று ரயில் ஒடும் ட்ராக், இன்னொன்று ரயில் போகாத பழுதுபட்ட ட்ராக். ரயில் ஓடும் ட்ராக்கில் ஒரே ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததாம். பழுதுபட்ட பாதையில் பல குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாம். ரயில் அருகில் வரும் போது எந்த ட்ராக்கில் போவது ஒரு குழந்தையா பல குழந்தைகளா என ஓட்டுநர் தவித்த போது பல குழந்தைகள் தான் முக்கியம் என்று முடிவெடுத்தாராம். அப்போது ஒருவர் சொன்னாராம் அந்த ஒரு குழந்தை ரயில்வே மந்திரியின் குழந்தை என்றாராம். உடனே பழுதுபட்ட ட்ராக்கில் ரயிலை ஏற்றி பல குழந்தைகளைக் கொன்று விட்டாராம். அதுமாதிரி இன்று ஒரு பெரிய படத்தைக் காப்பாற்ற பல சின்ன படங்கள் செத்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில படங்கள் பாதிக்கப்படுகின்றன, ' 'என்றார்.

அபிராமி ராமநாதன் பேசும் போது, ''தியேட்டர்களுக்கு படம் கொடுப்பது சின்ன படத் தயாரிப்பாளர்கள்தான். ஆண்டுக்கு 160 படங்கள் வந்தால் 20 படங்கள்தான் பெரிய படங்கள். மற்றவை எல்லாம் சிறிய படங்கள்தான். பெரிய படங்களை மட்டும் நம்பினால் சினிமாத் தொழிலாளர்கள் என்ன ஆவார்கள்? சினிமாவை மட்டும் நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வு கொடுப்பவை சின்ன படங்கள்தான்.

எவ்வளவோ பேர் படமெடுக்க வருகிறார்கள். பணம் சம்பாதிப்பதை விட நல்ல படம் எடுத்தோம் என்கிற பெயரைச் சம்பாதிக்க, வாழ்த்தைச் சம்பாதிக்கவே பலரும் படமெடுக்க வருகிறார்கள். டிவியில் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் சினிமாவை நம்பித்தான் ஓட்டுகிறார்கள். ஒருவர் 10 சின்ன படங்கள் எடுத்தால் அதில் ஒரு படம் ஓடினால் போதும். அதைவைத்து 20 படங்கள் எடுப்பார் ஆனால் பெரிய படம் எடுப்பவர் ஒரு படம் எடுத்து அதுவும் ஓடவில்லை என்றால் காணாமல் போய்விடுவார். 'பானு' மாதிரியான சின்ன படங்கள் ஒடவேண்டும்," என்றார்.

விழாவில் நாயகன் ஜீவி.சீனு,நாயகி நந்தினிஸ்ரீ, ஒளிப்பதிவாளர் அப்துல் ரகுமான் , இசையமைப்பாளர் உதயராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், சாந்திலால், டாக்டர் காளிதாஸ், டிஜிட்டல் மேஜிக் அருள் மூர்த்தி.,பி,ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜயமுரளி ஆகியோரும் பேசினார்கள்.

 

”டாக்டர் எனக்கு பல்லு வலி”- ஜின் பட ஹீரோயின் மாயாவிற்கு போனில் வந்த பேய்!

சென்னை: கோலிவுட்டில் பெருகி வருகின்ற பேய்ப் படங்களின் வரிசையில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் "ஜின்". இப்படத்தின் அறிமுக நாயகியும், பல் டாக்டருமான மாயாவிடம் படப்பிடிப்பின்போதே ஒரு பெண் பேய் பல் வலிக்கு மருத்துவம் பார்க்க கேட்டதால் அவர் அலறிவிட்டாராம். இச்செய்தி கோலிவுட்டில் தற்போது உலா வருகின்றது.

இதுகுறித்து அவர், " படப்பிடிப்பில் ஒரு வித்தியாசமான அனுபவம் எனக்கு கிடைத்தது. ஒருநாள் நள்ளிரவு படப்பிடிப்பில் இருந்தபோது தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. தெரியாத எண் என்பதால் சற்றே தயங்கித்தான் அழைப்புக்கு செவி சாய்த்தேன்.

Jinn film actress fevered with a ghost in Phone

யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே பேசினால் நடுங்கும் குரலில் ஒரு பெண். என்னவென்று விசாரித்தால் எனக்கு பல் வலி , வைத்தியம் பார்ப்பிங்களா என்றுக் கேட்டது.

என்ன பிரச்சனை என்றுக் கேட்டேன். நான் ரத்த காட்டேரி, எனக்கு பல் வலி. இதனால் மற்றவர்கள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க இயலவில்லை என்று கேட்டுவிட்டு கட கட என சிரிக்க ஆரம்பித்தது.

நான் அவ்வளவுதான், அம்மா என்று பயத்தில் கத்தி விட்டேன். பயத்தால் காய்ச்சல் வந்து விட்டது. விளையாட்டுக்கு யாராவது செய்து இருப்பார்கள் என்பது புரிகிறது. ஆனால் அந்த நிமிடத்தில் வந்த பயம் நிச்சயம் மறக்க முடியாதது. அதை செய்தது யார் என்று இன்னமும் தெரியவில்லை. இனிமேலாவது சொல்கிறார்களா பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

 

செப்டம்பர் 17-ம் தேதி மலேசியா புறப்படுகிறார் ரஜினி.. 18-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது!

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 18-ம் தேதி மலேசியாவில் தொடங்குகிறது. அதற்கு ஒரு நாள் முன்பாகவே மலேசியா புறப்படுகிறார்கள் ரஜினியும் படக்குழுவினரும்.

ரஞ்சித் இயக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் முதல் வாரமே தொடங்கிவிடும் என்று முதலில் கூறப்பட்டது.

மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தத் தேவையான இடங்களையெல்லாம் ஏற்கெனவே பார்த்து முடிவு செய்துவிட்டனர்.

Rajinikanth's new movie to start on Sep 18th

இந்த நிலையில் படப்பிடிப்பை ஒரு மாதத்துக்கு தள்ளிப் போட்டுள்ளார் ரஜினி. இப்போது வெளிநாடு சென்றிருக்கும் இயக்குநர் ரஞ்சித், திரும்பி வந்ததும், படத்தின் நடிகர் நடிகைகளை இறுதி செய்யவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தேவும், முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், நாசர், கலையரசன், தினேஷ் போன்றவர்களும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 17-ம் தேதி மலேசியா புறப்படுகிறார் ரஜினி. அவருக்கு முன்பே படக்குழுவின் ஒரு பகுதி மலேசியா செல்கிறது. ரஜினியுடன் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவும் பயணிக்கிறது.

40 நாட்கள் அங்கு முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று தெரிகிறது.

 

ராஜமவுலி தந்தையின் இயக்கத்தில் ரஜினி?

எந்திரன் 2 படத்தை ரஜினி முடித்த பிறகு, அவரை வைத்து புதிய படம் இயக்கப் போவதாக எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

வசூலில் சாதனை படைத்து வரும் பாகுபலியின் கதையை எழுதியவர்தான் இந்த விஜயேந்திர பிரசாத்.

இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள பாகுபலி படம் உருவாக முக்கிய காரணமான விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.

Baahubali writer Vijayendra Prasad to direct Rajinikanth

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ரஜினி, பாகுபலி படம் பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டி விஜயேந்திர பிரசாத்துக்கு பொன்னாடை போர்த்தினார் ரஜினி.

இந்த சந்திப்பின்போது, ரஜினியை வைத்து ஒரு படம் தமிழ் - தெலுங்கில் எடுப்பது குறித்து பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து விஜயேந்திர பிரசாத்திடம் கேட்ட போது, "ரஜினிசார் எனக்கு ஒரு படம் நடித்து தர சம்மதித்திருப்பது உண்மைதான். அந்தப் படத்தை நான் கதை எழுதி இயக்குவேன். இது என் நெடுநாள் விருப்பம்," என்றார்.

இந்தியில் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையை எழுதியவரும் இதே விஜயேந்திர பிரசாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அப்துல் கலாம் ஆகிறார் அமிதாப் பச்சன்.. படமாகிறது கலாம் வாழ்க்கை வரலாறு

மும்பை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 27 ம் தேதியன்று மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மத்தியில் பேசும்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

 Abdulkalam Biopic Movie Amitabh Bachchan to play Dr Kalam?

நாடே துக்கத்தில் மூழ்கிய அந்த நிகழ்வில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை, அவரின் பெயரில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏராளமான மக்கள் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்ற உத்வேகம் பெற்று உள்ளனர்.

குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முன்வந்திருக்கிறார் இயக்குனர் நிலா மதாப் பாண்டா.

ஒடிசாவைச் சேர்ந்த இந்த இயக்குநர் ஏற்கனவே ஐ ஆம் கலாம் (நான்தான் கலாம்) என்ற பெயரில், 2011 ம் ஆண்டு சிறுவன் ஒருவனின் கனவுகளை மையமாகக்கொண்டு இந்தப் படத்தை எடுத்தார்.

ஒரு தேசிய விருது உட்பட மொத்தம் 11 விருதுகளை வென்றது இந்தப் படம், தற்போது கலாம் அவர்களின் மறைவையொட்டி அப்துல்கலாம் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் பாண்டா.

பாண்டா இயக்கும் இந்தப் படத்தில் கலாமாக நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார், இயக்குநர் பாண்டா இந்த படத்தைப் பற்றிக் கூறும்போது " தற்போது கலாம் அவர்கள் நம்முடன் இல்லை.

அவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியமான ஒரு செயல், நான் எனது படத்தின் வேலைகளைத் தொடங்கி விட்டேன். கலாம் அவர்கள் நமது அனைவரின் மனதிலும் என்றும் உயிர்ப்புடன் இருப்பார்" என்று கூறியிருக்கிறார்.

தற்போது அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பாண்டா அப்துல்கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் பொருத்தமாக இருப்பார், என்று படத்தின் நாயகனைப் பற்றிய கேள்விக்கும் விடையளித்திருக்கிறார்.

நல்ல முயற்சி படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

 

தீபாவளிக்கு அஜீத் படம்... அதுக்குள்ள பேர் வச்சிடுவீங்களா?

இந்த ஆண்டும் 'தல தீபாவளி'தான் என்ற குஷியில் குதிக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். காரணம், தீபாவளிக்கு வருமா வராதா என்ற கேள்விக்கு உறுதியான விடை கிடைத்துவிட்டது.

ஆம், சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதுப் படம் வரும் தீபாவளிக்கு உலகெங்கும் அமர்க்களமாய் வெளியாகப் போகிறதாம்.

கொல்கத்தாவில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்துவிட்டது படக் குழு. இதுவரை முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

Ajith's new movie to release on Diwali

அடுத்தகட்டப் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் சென்னையில் தொடங்கவிருக்கிறது. அதில் மொத்தப்படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

படத்தை நவம்பர் பத்தாம்தேதி தீபாவளியன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.

அதெல்லாம் சரிதான்... படத்துக்கு பேரு என்னாங்க... தீபாவளிக்குள்ளேயாவது சொல்லிடுவீங்களா?!

 

ஸ்ருதிஹாசனின் இன்னொரு அவதாரம்.. இனி படமும் எடுப்பார்!

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நாயகியாக விளங்கும் நடிகை சுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பாடகி, இசையமைப்பாளர் மற்றும் நடிகை என பன்முகங்களைக் கொண்ட சுருதிஹாசன் அடுத்து தயாரிப்புத் துறையிலும் கால் பதித்திருக்கிறார்.

'இசிட்ரோ' எனப் பெயரிடப்பட்டுள்ள இவரது புரடக்‌ஷன் நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக குறும்படங்கள் எடுக்கவிருக்கிறார். வித்யாசமான, அதே சமயம் கொஞ்சம் அனிமேஷன் மற்றும் கிராஃபிக் சார்ந்த குறும்படங்களாக அதிகம் எடுக்க முடிவெடுத்திருக்கிறார் சுருதி.

Shruti Haasan Launches her Own Production Company

தயாரிப்பாளர் என்றாலும் கூட சுருதியின் இசை இந்தப் படங்களில் இருக்காதாம் முற்றிலும் இளம் படைப்பாளிகளை தேர்வு செய்து அவர்களின் இசையில் படங்கள் எடுக்க முடிவெடுத்திருக்கும் சுருதி அதற்காக ஆடிஷனை நடத்தி வருகிறார்.

மகளின் இந்த முயற்சிக்கு தந்தை கமலும் ஆதரவு தெரிவித்திருக்கிறார் மேலும் "நிறுவனம் ஆரம்பிப்பது பெரிதல்ல எந்த மாதிரியான படைப்புகளைத் தருகிறோம் என்பதுதான் முக்கியம்" என்று மகளுக்கு அறிவுரையும் வழங்கியிருக்கிறார் கமல்.

Shruti Haasan Launches her Own Production Company

சுருதிஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரான "இசிட்ரோ", சத்தியமாக தமிழ் மொழி அல்ல இது ஒரு அக்மார்க் கிரேக்க மொழி.

தந்தை எட்டடி பாய்ந்தால் மகள் பதினாறடி பாய்கிறாரே...

 

"நெகட்டிவ்" பாதைக்குத் திரும்பும் சூர்யா....!

சென்னை: சூர்யாவின் கைவசம் தற்போது அரைடஜன் படங்கள் இருந்தாலும் சாரின் மார்க்கெட் சர்ரென்று இறங்கிக் கிடக்கிறது தமிழ்நாட்டில், இதனால் எப்படியும் தனது மார்க்கெட்டை முன்னணிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் இருக்கிறார் சூர்யா.

தொடர்ந்து நல்ல பையனாக நடித்து வரும் சூர்யா இனிமேல் எல்லாம் கலந்த கேரக்டர்களில், நடித்தால் மட்டுமே மார்க்கெட்டில் தாக்குப் பிடிக்கலாம் என்று நினைக்கத் தொடங்கி விட்டார்.

Surya Like Negative Subjects?

தற்போது விக்ரம்குமாரின் 24 படத்தை முடித்திருக்கும் சூர்யா அடுத்து ஹரியின் இயக்கத்தில் சிங்கம் 3 யில் களமாட இருக்கிறார். இந்த 2 படங்களையும் முடித்து விட்டு அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா.

தற்போது புதிதாக தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நெகட்டிவ் ரோல்களில் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தை எடுத்துக் கூறி, நெகட்டிவ் கதைகளில் தான் நடிக்கத் தயார் என்று இயக்குனர்களிடம் தனது ஆசையை வெளிபடுத்தியிருக்கிறார்.

குறிப்பாக நடிகர் சத்யராஜ் ஏற்று நடித்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை கொண்டிருக்கிறார் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

 

ராதிகா ஆப்தே ஹீரோயின்... அப்படின்னா ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவது யார்?

ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில், ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி உலாவர ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினி ஒரு தாதா வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். ஜோடியா இல்லையா என்பதை சஸ்பென்ஸில் வைத்திருக்கிறார் ரஞ்சித்.

Who is going to play as Rajini daughter?

படத்தில் ரஜினிக்கு வயது வந்த மகள் கேரக்டர் உள்ளதாம். இந்த வேடத்தில் சாதரணமாக ஒரு புதுமுகம் நடிப்பசதை விரும்பவில்லையாம் ரஜினி. பிரபல இளம் நடிகைகளில் ஒருவரை நடிக்க வைக்குமாறு ரஞ்சித்திடம் கூறியுள்ளாராம்.

கதைப்படி இந்தப் பாத்திரம் உணர்ச்சிகரமானது என்பதால் நடிக்கத் தெரிந்த நடிகையைத் தேடிக் கொண்டிருக்கிறாராம் ரஞ்சித்.

அடுத்த வாரத்தில் யார் அந்த நடிகை என்பது முடிவாகிவிடும் என்கிறார்கள்.