அனுமதியில்லாமல் அஜீத் படப்பிடிப்பு... இயக்குநரை விட்டுவிட்டு லைட்பாயைக் கைது செய்த போலீஸ்!

சென்னை: அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக அஜீத் படக்குழுவைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை விட்டுவிட்டனர்.

அனுமதியில்லாமல் அஜீத் படப்பிடிப்பு...  இயக்குநரை விட்டுவிட்டு லைட்பாயைக் கைது செய்த போலீஸ்!

வீரம்' படத்துக்கு பின் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜீத். இன்னமும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில், அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றிலும் நடக்கிறது.

பாலவாக்கத்தில் உள்ள வி.ஜ.பி. லேஅவுட் காலனியில் கடந்த சில நாட்களாக அஜீத் படப்பிடிப்பு நடந்தது. பெரும்பாலும் இரவில்தான் படப்பிடிப்பு.

ஷூட்டிங்குக்காக சாலையில் நிறைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதிக வெளிச்சம் பொருந்திய விளக்குகளை வைத்து படப்பிடிப்பை நடத்தினர்.

இரைச்சல் மற்றும் அதிக வெளிச்சத்தால் அப்பகுதி மக்கள் எரிச்சல் அடைந்தார்கள். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மேல்தட்டு மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர். எதற்கெடுத்தாலும் போலீஸுக்குப் போகிறவர்கள் அல்லது ஆங்கிலுப் பத்திரிகைகளின் லெட்டர் டு த எடிட்டர் பகுதியின் பங்களிப்பாளர்கள்.

எனவே படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, நீலாங்கரை போலீசிலும் புகார் கொடுத்தனர்.

போலீசார் நேரில் சென்று படப்பிடிப்பு குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதையடுத்து படப்பிடிப்பை போலீசார் நிறுத்தினர்.

அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக தயாரிப்பு மேலாளர் பிரேம், லைட் பாய் ரமேஷ் மற்றும் உதவியாளர் ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். படத்தின் தயாரிப்பாளர் ரத்னத்தையோ, இயக்குநர் கவுதம் மேனனையோ ஒரு கேள்வி கூட கேட்கவில்லை போலீசார்!

 

நடிகர் ஷாருக்குக்கு மம்தா பானர்ஜி கொடுத்த “மீன்வறுவல்” விருந்து

நடிகர் ஷாருக்குக்கு மம்தா பானர்ஜி கொடுத்த “மீன்வறுவல்” விருந்து

கொல்கத்தா: கொல்கத்தா அணியின் வெற்றியை தொடர்து மம்தா பானர்ஜியை சந்தித்த ஷாருக்கான் அவரது வீட்டில் மீன் வறுவல் சாப்பிட்டுள்ளார் இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளராக இருக்கிறார். இந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதையடுத்து ஷாருக்கான் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வீட்டுக்கு சென்றார். அங்கு மம்தாவை சந்தித்து பேசினார். அப்போது, ஷாருக்கானுக்கு இறுதி போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற வாழ்த்து கூறினார்.

பின்னர், ஷாருக்கானுக்கு மம்தா பானர்ஜி விருந்து கொடுத்தார். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வறுவல் மீனை சாப்பிட கொடுத்தார். விருந்து குறித்து ஷாருக்கான் டுவிட்டரில் கூறும்போது, ‘‘மம்தா பானர்ஜி வீட்டில் மீன்வறுவல் சாப்பிட்டது இனிமையாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.

மேலும், மம்தா பானர்ஜி பேஸ் புக்கில், ‘‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டியில் வெல்ல வேண்டும். அதற்காக என் வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார்.

 

'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்!

எண்கள் எனப்படும் நம்பர்களுக்கு உருவம் மட்டுமல்ல.. உணர்ச்சிகளும் உண்டு என்பதைச் சொல்ல வரும் அனிமேஷன் படம் '0 29'.

பூஜ்யம் முதல் 9 வரையிலான எண்களுக்கு உருவம் கொடுத்து, அவற்றை காமெடிப் பாத்திரங்களாக படத்தில் உலவிட்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் நிஷா.

'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்!

நிஷா கூறுகையில், "குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் பெரியோர்களும் பார்த்து மகிழும் படமாக இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக எண்களை கொண்டு உருவாகப் பட்ட முதல் படம் இந்த '0 2 9' தான்," என்கிறார்.

'0 29'... வரப்போகுது அடுத்த அனிமேஷன் படம்!

இதில் 2-ம் எண்ணுக்கும் 7-ம் எண்ணுக்குமிடையே காதல் எல்லாம் உண்டாம். அப்ப டூயட்டும் இருந்தாகணுமே!

டிஎப்எஸ்எஸ் மீடியா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் ரமேஷ் இசையமைக்கிறார். மிராக்கில் பீட்டர் அனிமேஷன் செய்துள்ளார்.

 

அமெரிக்காவில் கோச்சடையான் கட்டணம் பாதியாகக் குறைப்பு!

வாசிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் 104 அரங்குகளில் தமிழில் வெளியான ரஜினியின் கோச்சடையான், புதன்கிழமை வரை 535 ஆயிரம் டாலர்களை வசூல் செய்து, அதிக வசூல் செய்த தமிழ் சினிமாக்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இரண்டாவது வாரத்தில் 58 திரையரங்குகளில் தமிழ்ப் படம் தொடர்கிறது.

அமெரிக்காவில் கோச்சடையான் கட்டணம் பாதியாகக் குறைப்பு!

இந்த இரண்டாவது வாரத்தில் டிக்கெட் விலையை ஹாலிவுட் பட டிக்கெட் அளவுக்கு குறைத்துள்ளார்கள். பொதுவாக தமிழ்த் திரைப்படங்களுக்கு ஹாலிவுட் பட டிக்கெட் விலையை விட அதிக அளவில் வசூலிக்கப்படும். ரஜினி படத்திற்கு இன்னும் கூடுதல் விலை வைப்பார்கள்.

அமெரிக்க வினியோகிஸ்தர்களான அட்மஸ் நிறுவனத்திற்கு, ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் விலையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து வெள்ளிக்கிழமை மே 30ம் தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்கள்.

குழந்தைகளையும் சேர்த்து ஒரு குடும்பத்தில் சராசரியாக 4 பேர் என்பதால், இந்த விலைக் குறைப்பு பெருமளவில் பலனுடையாதாக இருக்கும். கடந்த வாரத்தை விட, பகல் காட்சிகள் பாதி விலையிலும், மாலை, இரவுக் காட்சிகள் 30 முதல் 50 சதவீதம் குறைவாகவும் இருக்கும்.

'அனைத்து தமிழ்க் குடும்பங்களுக்கும் கோச்சடையான் 3D அனுபவத்தை பெரிய திரையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விலைக்குறைப்பு செய்துள்ளதாக' அட்மஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு பதிப்பான விக்ரமசிம்ஹா அமெரிக்கா முழுவதும் 11 தியேட்டர்களில் இரண்டாம் வாரம் திரையிடப்படுகிறது.

அமெரிக்காவில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்ப் படங்களில் அதிக வசூல் செய்தவை, எந்திரன், விஸ்வரூபம், சிவாஜி, தசாவதாரம். இந்த நான்கு படங்களுக்கும் அடுத்து கோச்சடையான் அதிக வசூல் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தை குசேலன் பெறுகிறது.

 

தனுஷின் இந்திப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா?

தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படத்துக்கு ஷமிதாப் என தலைப்பு சூட்டியுள்ளார் இயக்குநர் பால்கி.

ராஞ்ஜனாவுக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் புதிய இந்திப் படம் இது. அமிதாப் பச்சன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அக்ஷரா ஹாஸன் தனுஷுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

தனுஷின் இந்திப் படத்துக்கு தலைப்பு என்ன தெரியுமா?

இசையமைப்பவர் இளையராஜா.

படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டாலும், இதற்கு தலைப்பு மட்டும் வைக்காமல் இருந்தனர்.

இப்போது படத்துக்கு ஷமிதாப் என தலைப்பு வைத்துள்ளனர்.

இதுகுறித்து இயக்கநர் பால்கி கூறுகையில், "இந்தப் படத்துக்கு ஷமிதாப் என்று தலைப்பு சூட்டியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அமிதாப் - தனுஷ் - அக்ஷரா கூட்டணி மிகச்சிறப்பாக வந்துள்ளது," என்றார்.

அமிதாப் பச்சன் கூறுகையில், "இந்தப் படத்தின் தலைப்புக்கும் என் பெயருக்கும் சம்பந்தமில்லை. ஏன் இப்படி ஒரு தலைப்பு வைத்துள்ளார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்," என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் கதை சுவாரஸ்யமானது. பேச முடியாத ஒருவன் பெரிய நட்சத்திரமாக விரும்புவதுதான் கதையின் ஒன்லைன்!

 

ஹாலிவுட் பட பிரிமியரில் பிராட் பிட் முகத்தில் குத்துவிட்ட இளைஞர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: மாலெபிசியன்ட் என்ற படத்தின் பிரிமியர் ஷோ பார்க்க வந்த நடிகர் பிராட் பிட் முகத்தில் திடீரென குத்துவிட்டார் ஒரு இளைஞர். அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

பிராட் பிட்டின் 'பார்ட்னர்' ஏஞ்சலீனா ஜோலி நடித்த மாலெபிசியன்ட் படத்தின் சிறப்புக் காட்சி, ஹாலிவுட்டில் உள்ள எல் கேபிடன் திரையரங்கில் புதன்கிழமை மாலை நடந்தது.

ஹாலிவுட் பட பிரிமியரில் பிராட் பிட் முகத்தில் குத்துவிட்ட இளைஞர்

இந்தக் காட்சிக்கு பிராட் பிட்டும், ஏஞ்சலீனாவும் ஜோடியாக வந்தனர். இருவரிடமும் ஆட்டோகிராப் வாங்க வந்திருந்த ரசிகர்கள் முயன்றனர்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஒரு இளைஞர் திடீரென தடுப்பு வளையத்தைத் தாண்டி குதித்து பிராட் பிட் முன்பு நின்றார். என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் பிராட் பிட் முகத்தில் பலமாகக் குத்துவிட்டார். நிலை தடுமாறிப் போனார் பிராட் பிட்.

அதற்குள் போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரைக் கைது செய்தனர். 25 வயதான அவர் பெயர் விடாலி செடூயிக். இவர் சில தினங்களுக்கு முன்பு நடந்த கேன்ஸ் விழாவில் ஹவ் டு ட்ரெயின் யுவர் ட்ராகன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்த நடிகை அமெரிக்கா பெர்ராராவின் கவுனுக்குள் நுழைய முயன்று போலீல் பிடிபட்டவர் என்பது பின்னர் தெரியவந்தது.

 

கோச்சடையான் வசூல்... 5 நாளில் ரூ 51 கோடி!

கோச்சடையான் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இதில் முதல் 5 நாட்களுக்கான கலெக்ஷன் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. இதுவரை தியேட்டர்கள் மூலம் ரூ 51 கோடியை வசூலித்துள்ளது இந்தப் படம்.

இதன் மூலம் படத்தின் மொத்த வருவாய் ரூ 100 கோடியைத் தாண்டியது.

மேலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் ரூ 50 கோடியைத் தாண்டிய முதல் படம் கோச்சடையான்தான்.

கோச்சடையான் வசூல்... 5 நாளில் ரூ 51 கோடி!

ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் கடந்த 23-ம் தேதி உலகெங்கும் வெளியானது. 6 மொழிகளில், 3000-க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியானது. முதலில் 6000 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டவர்கள், பின்னர் கடைசி நேர நெருக்கடி காரணமாக அதில் பாதி அளவு தியேட்டர்களில்தான் வெளியிட்டனர். வெளிநாடுகளில் எக்ஸ் மேன் படம் ரிலீசானதால், கோச்சடையானுக்கு அதிக அரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது.

படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்றுள்ளது இந்தப் படம்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் 42 கோடியை வசூலித்த கோச்சடையான், அடுத்த இரு தினங்களில் மேலும் 9 கோடியை வசூலித்துள்ளது. இவை வார நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் ரூ 15 கோடியும், உள்நாட்டில் ரூ 36 கோடியையும் ஈட்டியுள்ளது இந்தப் படம்.

இன்றிலிருந்து வார விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் மேலும் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்தப் படத்தின் வசூல் தொகை விவரம்:

அமெரிக்கா: ரூ 2.56 கோடி

மலேசியா: ரூ 1.12 கோடி

பிரிட்டன் (அயர்லாந்து உள்பட) : ரூ 80 லட்சம்

ஆஸ்திரேலியா: 65 லட்சம்

 

இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

சென்னை: இயக்குனர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் என கண்டனம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அமரர் மணிவண்ணன் இயக்கிய 50 வது படம் அமைதிப்படை 2. இந்தப் படத்தைத் தயாரித்தவர் வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி. தற்போது கங்காரு என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

மறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ (அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை அறிமுகப்படுத்திப் பேசியும் உள்ளார்.

அமைதிப்படையைத் தொடர்ந்து தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார் சுதர்சன்.

இப்பொழுது பார்த்திபன், தான் இயக்கி வெளிவர இருக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் மணிவண்ணன் அய்யா முறையாக அறிமுகப்படுத்தவில்லையா?

இயக்குனர் மணிவண்ணனை அவமானப்படுத்திவிட்டார் பார்த்திபன்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்

50 படம் இயக்கிய மணிவண்ணன் அறிமுகப்படுத்திய ஒரு தொழில்நுட்ப கலைஞனை மீண்டும் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்று அழிப்பிதழில் அச்சிட்டிருப்பது மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை முறை தவறி அறிமுகப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகிறது.

இது பார்த்திபனின் முறையற்ற செயல். பெருமைக்காக மாவிடிப்பதில் பார்த்திபனை மிஞ்ச ஆள் இல்லை. ஓதுவது வேதம்: இடிப்பது பிள்ளையார் கோயில் என்பதாகத்தான் இருக்கும் அவர் நடத்தை போலும். வெளியில் தன்னை ஒரு அறிவாளியாகவும், மனிதாபிமானமுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஏன் இந்த வேலை? இது முழுக்க முழுக்க அவரது கசட்டு எண்ணத்தைத்தான் காட்டுகிறது. அதை இந்த 'முறையாக' என்ற ஒரு வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டதே.

இன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது சாமானியமான விஷயம் அல்ல... எவ்வளவு பெரிய சாதனை? மணிவண்ணன் தனது 50 வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை... இயக்குவதில் 20 படத்தைக் கூடத் எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா?

அடுத்தவரின் அறிமுகத்தை தனது அறிமுகம் என பறைசாற்றி கொள்வது முறையா?

தைரியம் இருந்தால் ஒரு உதவி படத் தொகுப்பாளரை அவர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே படத் தொகுப்பாளராக வேலை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவரை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதை எங்கள் நிறுவனம் கடுமையாகக் கண்டிக்கிறது. பார்த்திபன் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

தாம் எதையாவது புதுமையாக செய்கிறோம், எழுதுகிறோம் என்பதற்காக இந்த விஷயத்தையும் சாதாரணமாக அல்லது புதுமைக் கிறுக்குகளில் இதையும் ஒன்றாக எடுத்துக்கொண்டாரோ என்னவோ? ஆனால் அந்த புதுமைக் கிறுக்கு, படிக்கும் வாசகர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் பிடிக்காமல் இருந்தால் சரிதான்!!

-இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

 

சரவணன் என்கிற சூர்யா... எதற்கு இப்படி தலைப்பு வைக்கணும்.. பிறகு மல்லுக் கட்டணும்!!

சரவணன் என்கிற சூர்யா... இப்படி ஒரு தலைப்பில் படமெடுத்திருக்கும் ஒரு புது இயக்குநர், இப்போது அதை வெளியிட முடியவில்லை என்று உதவி கேட்டு பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலைக்குக் காரணம், அந்தப் பெயர் நடிகர் சூர்யாவைக் குறிப்பதாக இருப்பதுதான். சூர்யாவின் நிஜப் பெயர் சரவணன் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியுமோ...

சரவணன் என்கிற சூர்யா... எதற்கு இப்படி தலைப்பு வைக்கணும்.. பிறகு மல்லுக் கட்டணும்!!

தமிழ் சினிமாவில் ஒரு பொது விதி இருக்கிறது.. உயிரோடு உள்ள எந்த கலைஞரின் பெயரையும் தலைப்பாக வைக்க வேண்டும் என்றால், அவர்களின் ஆட்சேபணை இல்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பிறகுதான் அந்தத் தலைப்புக்கே அனுமதி தரப்படும்.

இப்படி ஒரு தலைப்பு வைத்தால், நிச்சயம் அது நடிகர் சூர்யாவைக் குறிக்கும் என்பது தெரிந்தும், ஆரம்பத்திலேயே அவர்களிடம் அனுமதி கேட்காமல், படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதை வெளியிட சிவகுமார் குடும்பம் தடையாக உள்ளது என்ற ரீதியில் அறிக்கை வெளியிடுவது பப்ளிசிட்டிக்கு வேண்டுமானால் உதவலாம். படத்துக்கு உதவாது.

இந்தப் பிரச்சினையில் சூர்யா தரப்பில் நியாயம் உள்ளது. காரணம், தன் பெயரை பயன்படுத்தி படம் எடுத்திருப்பவர் ஏற்கெனவே தன்னை சினிமாவில் நிரூபித்தவராக இருந்தால் கூட, அவர் அனுமதிக்க தயங்க மாட்டார். இந்த ராஜா சுப்பையாவோ புதியவர். எப்படி எடுத்திருப்பார்... தன் பெயரைக் கெடுத்திருப்பாரோ, மோசமான காட்சிகளை வைத்திருப்பாரோ என, முதல் நிலை நடிகரான சூர்யா யோசிப்பதில் தவறு இல்லையே!

அதுவும் ஒரு நடிகனைப் பற்றி கதை இது. அதே பெயரில் மிகப் பிரபலமாக இருக்கும் சூர்யா எப்படி இதை அனுமதிப்பார் என யோசிக்காமல் எதற்கு இப்படி தலைப்பு வைக்க வேண்டும்.. பிறகு மல்லுக்கட்ட வேண்டும்!

தலைப்பும் படமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பிரபலமாக இருப்பவரின் பயன்படுத்துவது வழக்கம்தான், ஆனால் அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில்.

புதிதாக ஆர்வத்துடன் படம் பண்ண வந்தால் மட்டும்போதாது.. சில அடிப்படை விஷயங்களையும் புரிந்து கொண்டால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் ராஜா சுப்பையாக்கள்!

இன்னொன்று, இதுபோன்ற பிரச்சினைகள் எழாமலிருக்க ஒரு வழி... பிரபலங்களின் பெரைப் பயன்படுத்தி படத் தலைப்பைப் பதிய வரும்போதே, ஆட்சேபணை இல்லா சான்றுடன்தான் வரவேண்டும் என ஒரு புதிய கட்டுப்பாட்டை தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர் அல்லது கில்டு விதிக்க வேண்டும்!