குவைத்தில் இன்று இரவு 9.30-க்கு லிங்கா முதல் காட்சி!

குவைத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரஜினியின் லிங்கா பட வெளியீடு ரொம்ப ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

குவைத்தில் இன்று இரவு முதல் காட்சிகள் ஆரம்பமாகின்றன.

காட்சிகள் விபரம்:

360 மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் தெற்கு சுர்ரா - 12:00, 15:30, 19:00, 22:30

குவைத்தில்  இன்று இரவு 9.30-க்கு லிங்கா முதல் காட்சி!

அஜியால் மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் பஹாஹீல் - 15:00, 15:15, 15:30, 18:00, 18:15, 18:30, 18:45, 21:30, 21:45, 22:30

பனார் மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் சால்மியா - 14:30, 18:00, 21:30

அவேன்யூஸ் மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளெக்ஸ் - அல்ராய் 14:30, 18:00, 21:30

நாளை அரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அங்குள்ள ரஜினி ரசிகர்கள் ஒரு முழு காட்சியையும் ரசிகர்கள் ஷோவாக எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து குவைத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் வசீர் கூறுகையில், "டிக்கெட்டுகள் கிடைக்குமா என ஏங்குகின்றன ரசிகர்கள். இப்படி ஒரு வரவேற்பை ஹாலிவுட் படத்துக்குக் கூட நாங்கள் பார்த்ததில்லை," என்றார்.

 

லிங்கா பார்க்கப் போறேன்... அலுவலகங்களில் குவியும் லீவ் லெட்டர்கள்!

சார்.. டிசம்பர் 12-ம் தேதி லீவ் வேணும்...

காரணம்?

அன்னிக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் பிறந்த நாள்.. லிங்கா ரிலீஸ்.. ரெண்டையும் கொண்டாடணும்!

-மேலே நீங்கள் படித்தது கற்பனையான ஒன்றல்ல... கடந்த ஒரு வாரமாக உலகமெங்கும் உள்ள பல்வேறு ரஜினி ரசிகர்கள் தங்கள் அலுவலகங்களில் விண்ணப்பித்த விடுமுறைக் கடிதம். அவை பேஸ்புக்கிலும் வாட்சப்பிலும் வெளியாகி கலக்கி வருகின்றன.

லிங்கா பார்க்கப் போறேன்... அலுவலகங்களில் குவியும் லீவ் லெட்டர்கள்!

ஒரு பக்கம் மிகுந்த ஆச்சர்யம் தந்தன இக்கடிதங்கள். ஒரு காலத்தில் சினிமா பார்க்கப் போறேன் என்று கேட்டு விடுமுறைக் கேட்டால் எத்தனை கேவலமாகப் பார்ப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஆனால் ரஜினி அந்த நிலையை அடியோடு மாற்றியிருக்கிறார். ரஜினி படத்தைப் பார்க்கணும்.. அவர் பிறந்த நாள் கொண்டாடணும்... லீவ் கொடுங்க என்று அதிகாரப்பூர்வமாக, அதுவும் எழுத்து வடிவில் கேட்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார். அழிவின் விளிம்பிலிருப்பதாக சிலர் சொல்லிக் கொண்டிருக்கும் சினிமாவுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது.

ஐடி ஊழியர், கல்வித் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், சினிமாக்காரர்கள் என அத்தனை துறை சார்ந்தவர்களும் லிங்கா வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். பல அரங்குகளில் கார்ப்பரேட் நிறுவனங்களே லிங்கா படத்தின் காட்சிகளை மொத்தமாக முன்பதிவு செய்து வைத்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் அடுத்த வெள்ளி வரை இப்படி மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள ஷோக்கள் பல.

தமிழ் சினிமா வரலாற்றில் இந்த நிகழ்வுகள் ஒரு அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

'ரஜினி படங்கள் விடுமுறை நாளை முன்வைத்து வெளியாவதில்லை. காரணம், ரஜினி படங்கள் வெளியாகும் எந்த நாளும் பொதுவி்டுமுறை நாள்தான்' என ரஜினி குறித்து வெளியான ஒரு கருத்து, இப்போது உண்மையாகிவிட்டது!

 

வா தலைவா!.... லிங்காவை கொண்டாடத் தயாராகும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

சென்னை: உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு நாளைதான் தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ், ரம்ஜான்... இன்னபிற பண்டிகைகளும் நாளைதான்!

ஏனெனில் நாளைதான் ரஜினி நடித்த லிங்கா படம் உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் 700 தியேட்டர்களில் லிங்கா வெளியாகிறது. இதற்கான புக்கிங் நடைபெற்ற சில மணிநேரங்களிலேயே மூன்று நாட்களுக்கான டிக்கெட் விற்று தீர்ந்து விட்டதாம்.

வா தலைவா!.... லிங்காவை கொண்டாடத் தயாராகும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

லிங்கா படத்தின் ரிலீஸ் மட்டுமல்ல இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் அல்ல! நாளை தங்களின் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதும் கூட இந்த கொண்டாட்டத்திற்கு கூடுதல் சிறப்பம்சம். ஏனெனில் ரஜினியின் பிறந்தநாளன்று அவரது திரைப்படம் ரிலீஸ் ஆவது இதுதான் முதன் முறை.

வடபழனியின் பூஜை

லிங்கா படத்தின் வெற்றிக்காக வடபழனி முருகன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தியாகராயநகர் ராகவேந்திரா ஆலயத்தில் கனகாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

வெற்றிபெறச்செய்வேண்டும்

இதனிடையே லிங்கா படத்தை வெற்றிபெறச் செய்வதற்காக ரஜினி மன்றங்களைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள் ரஜினி ரசிகர்மன்றங்களின் முன்னாள் பொறுப்பாளர் சத்யநாராயணாவும் இன்றைய பொறுப்பாளர் சுதாகரும்.

உங்கள் பொறுப்பு

ரஜினிகாந்த் மன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் மன்றங்களைவிட்டு ஒதுங்கி இருக்கும் முன்னாள் பொறுப்பாளர்களிடமும் லிங்காவை வெற்றிப் படமாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று சத்யநாராயணாவும் சுதாகரும் பேசியிருக்கிறார்கள்.

தலைவரின் தரிசனம்

அப்போது பேசிய ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள், தலைவர் எங்களைச் சந்தித்துப் பேசி வெகுநாட்களாகிவிட்டது. எனவே அவர் எங்களைச் சந்திக்க வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தினார்களாம். மேலும் விருப்பமிருந்தால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் விருப்பமில்லாவிட்டால் நற்பணி இயக்கம் தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் மன்ற பொறுப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

லிங்கா ரிலீஸ்க்கு பின்னர்

லிங்கா படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் ரஜினிகாந்த், ரசிகர்களை சந்தித்து பேசுவார் என்று சத்தியநாராயணாவும், சுதாகரும் தெரிவித்துள்ளனர். இப்போதிருக்கிற சூழலில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் 32 மாவட்ட பொறுப்பாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. ரஜினி சந்திக்கும்போது இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்போம் என்கின்றனர் ரசிகர்கள்.

களை கட்டிய தியேட்டர்கள்

இந்த சந்திப்பில் 'லிங்கா' படத்தை வெற்றி பெற வைக்கும் நோக்கத்தில் தலைமை நிர்வாகிகளின் பேச்சும், ஆலோசனையும் அமைந்திருந்ததாம். தலைமையிலிருந்து அழைத்துப் பேசியிருப்பதால், கட் -அவுட்கள், தோரணங்கள், கொடிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் என பழைய உற்சாகத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். குடம் குடமாக கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்யவும் தயாராக உள்ளனர்.

சென்னையில் திருவிழா கோலம்

சென்னையில் உள்ள மிக முக்கிய திரையரங்குகளான, சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, தேவிபாரடைஸ், தேவிகலா, எஸ்கேப், உட்லண்ட்ஸ், அபிராமி, மகாராணி, உள்ளிட்ட பல தியேட்டர்களிலும் லிங்கா படம் திரையிடப்பட உள்ளது. இதனால் இந்த தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள்

காசி தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சைதை ஜி. ரவி தலைமையில் கேக் வெட்டுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

மிகப்பெரிய விருந்து

எந்திரன் படத்திற்குப் பின்னர் லிங்கா படம் மூலம் மிகப்பெரிய விருந்து கொடுத்திருப்பார் சூப்பர் ஸ்டார் என்று நம்புகின்றனர் ரசிகர்கள். ரஜினிகாந்த் உடல் நலம் குன்றியிருந்த போது பாலபிஷேகம், பால்குடம், மண்சோறு என நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர்கள் ஒருவழியாக மீண்டும் தங்கள் தலைவரை வெள்ளித்திரையில் பார்க்க தவமிருக்கின்றனர். தவமிருக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன வரம் தரப்போகிறார்?.

 

திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் சிக்கல்- ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்த முடிவு

திருச்சி: விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்ததெந்த தியேட்டர்களில் படம் ரீலஸ் ஆகிறது என்று தெரியாமல் தவிக்கும் ரசிகர்கள், மதியத்துக்குள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படம் தமிழகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ளது. ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை நாளை வெளியிட முடிவு செய்யப்பட்டு, தமிழகத்தின் பெரும்பாலானப் பகுதிகளில் தியேட்டர்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் சிக்கல்- ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்த முடிவு

லிங்கா படம் வெளியாகும் தியேட்டர்களில், பேனர் கட்டுவது, கட்டவுட் வைப்பது உள்ளிட்டப் பணிகளில் ரஜினி ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருச்சி மாநகர ரஜினி ரசிகர்கள் மட்டும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். திருச்சி மாநகரில் மட்டும் படம் ரிலீசாகும் தியேட்டர்கள் இன்னும் முடிவாகாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையின் காரணமாக நாளிதழ்களில் இன்று வெளியாகியுள்ள லிங்கா பட விளம்பரத்திலும் தியேட்டர்கள் பற்றிய அறிவிப்பில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இன்று மதியத்துக்குள் படம் வெளியாகும் தியேட்டர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்டப் போராட்டங்களில் ஈடுபடவும் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ்ப் படங்கள் தேர்வு

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்ப் படங்கள் உள்பட 170 படங்கள் திரையிடப்படுகின்றன.

இது திரைப்பட விழா சீஸன். சமீபத்தில்தான் கோவா மற்றும் பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடந்து முடிந்தன.

இப்போது சென்னையில் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தமிழ் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ்ப் படங்கள் தேர்வு

இந்த ஆண்டும் வருகிற டிசம்பர் 18-ந்தேதி 12-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் தொடங்குகிறது.

8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 45 நாடுகளிலிருந்து 170 திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. இதில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்பட விழாக்களில் விருது பெற்ற படங்களும் அடங்கும். இந்த படங்கள் சென்னையில் 8 இடங்களில் திரையிடப்படுகின்றன. உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ், ஐநாக்ஸ், கேசினோ தியேட்டர், ரஷியன் கலாச்சார மையம் ஆகிய இடங்களில் இப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

சென்னை சர்வதேச திரைப்பட விழா.. 12 தமிழ்ப் படங்கள் தேர்வு

இந்த 170 படங்களில் 12 தமிழ் படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அவை என்னதான் பேசுவதோ, மெட்ராஸ், பூவரசம் பீப்பீ, சதுரங்க வேட்டை, வெண்நிலா வீடு, சலீம், முண்டாசுப்பட்டி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சிகரம் தொடு, பண்ணையாரும் பத்மினியும், தெகிடி, குற்றம் கடிதல்.

 

ஆர்யாவின் “மீகாமன்” – கிறிஸ்துமஸுக்கு ரிலீஸ்!

சென்னை: ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மீகாமன் திரைப்படம் வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அருண் விஜய்யின் நடிப்பில் தடையறத் தாக்க படத்தினை இயக்கிய மகிழ் திருமேனிதான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தினை ஹிதேஷ் ஐபக் தயாரித்துள்ளார்.

ஆர்யாவின் “மீகாமன்” – கிறிஸ்துமஸுக்கு ரிலீஸ்!

இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். சேட்டை படத்திற்கு பின்னர் இரண்டாவதாக மீண்டும் இப்படத்தில் ஆர்யாவும், ஹன்சிகாவும் ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"மீகாமன்" என்றால் மாலுமி (Captain of the Ship) என்று பொருள் என்று மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

"தடையற தாக்க" படத்திற்கு இசையமைத்த தமன் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆர்யா அசத்துவீங்களாய்யா?

 

புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் 'அலங்காரம்'.. ஜிகே வாசன் வெளியிட்டார்!

புற்று நோய் பற்றிய விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் அலங்காரம்.

இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை 4.30 மணியளவில் வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் 'அலங்காரம்'.. ஜிகே வாசன் வெளியிட்டார்!

விழாவில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன் அவர்கள் பேசியபோது, "இந்த குறும்படத்தைப் பார்த்தேன் நான்றாக எடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தாமரை.

புற்றுநோய் விழிப்புணர்வு இன்னும் நிறைய மக்களுக்கு தெரியாமலே இருக்கிறது. ஆனால் இந்த குறும்படத்தின் மூலம் அனைத்து மக்களையும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சென்றடையும்.

புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் 'அலங்காரம்'.. ஜிகே வாசன் வெளியிட்டார்!

புற்றுநோய் விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும். இந்த விழிப்புணர்வை எங்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூலமாக அனைத்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் என்றார்.

செந்தாமரை இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ராஜ் கவி இசையமைத்துள்ளார். பேட்டா நாகராஜ் தயாரித்துள்ளார்.

புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் 'அலங்காரம்'.. ஜிகே வாசன் வெளியிட்டார்!

பேட்டாநாகராஜ், ஹரிசேகர், அம்பேத்கார், ஷர்மிளா, ஸ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

ரஜினியின் லிங்கா முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு!

சென்னை: ரஜினியின் லிங்கா படத்தின் முதல் காட்சி இன்று நள்ளிரவு, அதாவது படம் வெளியாகும் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது.

சென்னையில் காசி திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இதில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் அவரது குழுவினர் மட்டுமே 350 பேர் பார்க்கிறார்கள். நடிகர்கள் பலரும் இந்த காட்சிக்கு வரவிருக்கிறார்கள்.

ரஜினி மனைவி லதா, மகள்கள் ஆகியோரும்கூட இந்த காட்சிக்கு வரக்கூடும் என்கிறார்கள்.

ரஜினியின் லிங்கா முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு!

சைதை ராஜ் தியேட்டரிலும் நள்ளிரவுக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பெருமளவிலான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கியுள்ளனர். இந்த இரு தியேட்டர்களிலும் ரஜினி பிறந்த நாளுக்கு கேக் வெட்டி, வாண வேடிக்கை நடத்தி காட்சிகளை ஆரம்பிக்க உள்ளனர். இந்த கொண்டாட்டங்களில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் பங்கேற்கிறார்.

புறநகர் பகுதிகளிலும் பல அரங்குகளில் நள்ளிரவுக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னைக்கு வெளியே உள்ள பல நகரங்களிலும் நள்ளிரவுக் காட்சி நடைபெறுகிறது. ரசிகர்கள் இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கியுள்ளனர். விலை சராசரியாக ரூ 500. சில அரங்குகளில் இது ரூ 1000 வரை போயுள்ளது.

காசி, ராஜ், எஸ்எஸ்ஆர் பங்கஜம், தேவி கருமாரி, வில்லிவாக்கம் ஏஜிஎஸ், குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா உள்ளிட்ட அரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு லிங்கா சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகின்றன.

மாயாஜால், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் அரங்குகளில் காலை 7 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது.

வெளிநாடுகளில்...

தமிழகத்துக்கு இணையாக வெளிநாடுகளிலும் ஒரு நாள் முன்னதாகவே லிங்கா திரையிடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இன்று மாலையே சிறப்புக் காட்சி தொடங்குகிறது.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழகத்துக்கு நிகரான கொண்டாட்டங்களுடன் முதல் நாள் முதல் காட்சி நடக்கிறது.

 

முதல் முறையாக லிங்காவுக்கு தமிழகத்தில் மட்டும் 700 அரங்குகள்!

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ரஜினியின் லிங்கா படம் தமிழகத்தில் 700 அரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமா இதுவரை காணாத பிரமாண்டம் மற்றும் கோலாகலத்துடன் லிங்கா நாளை டிசம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.

முதல் முறையாக லிங்காவுக்கு தமிழகத்தில் மட்டும் 700 அரங்குகள்!  

‘லிங்கா' படத்துக்கு எதிராக சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. லிங்கா கதை தங்களுடையது என்று வழக்கு தொடர்ந்தவர்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

ஆனால் ‘லிங்கா' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுத்துவிட்டன. இரு வழக்குகளுமே ஒத்திப் போடப்பட்டுவிட்டன.

இதையடுத்து உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா' நாளை வெளியாகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் சில தினங்களாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தமே 968 அரங்குகள்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலைக்குள் அனைத்து தியேட்டர்களிலும் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும் போது, "டிசம்பர் மாதம் பொதுவாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து மந்தமாகவே இருக்கும். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா' படம் வருவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு வரப் பிரசாதமாகும். ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. அனைத்து தியேட்டர்களும் நாளை முதல் நிரம்பி வழியப்போகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ரஜினிக்கு திரையுலகம் நன்றி செலுத்த வேண்டிய நேரம் இது," என்றார்.

சென்னையில்...

சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், சிசன், தேவி, தேவி பாரடைஸ், தேவிகலா, தேவிபாலா, எஸ்கேப், வீனஸ், ஸ்ட்ரீக், ஸ்பாட், வேவ், உட்லண்ட்ஸ், சிம்பொனி, ஐநாக்ஸ் ஸ்கிரீன் 1,2,3,4, சாந்தி, சாய்சாந்தி, ஆல்பட், பேபி ஆல்பட், அபிராமி, ஸ்வர்ணசக்தி அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, சங்கம், பத்மம், ரூபம், பி.வி.ஆர் (4 அரங்குகள்), எஸ் 2 பெரம்பூர் (4 அரங்குகள்), கமலா, கமலா மினி, உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன், ஐ டிரீம்ஸ், மகாராணி, பாரத், காசி, ஸ்ரீபிருந்தா, சைதை ராஜ் போன்ற தியேட்டர்களில் ‘லிங்கா' படம் திரையிடப்படுகிறது.

காசி தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு ரஜினி ரசிகர்கள் சைதை ஜி.ரவி தலைமையில் ரஜினி பிறந்த நாள் ‘கேக்‘ வெட்டுகின்றனர். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், சூர்யா, ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் ரஜினி கட்அவுட்கள் வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

நடிகர், நடிகைகள் பலர் சிறப்பு காட்சியில் ‘லிங்கா' படம் பார்க்க தயாராகிறார்கள். நடிகர் தனுஷ் மாரி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ‘லிங்கா' படம் பார்க்க சென்னை வந்துள்ளார்.

சிவகார்த்திகேயன், சிவா, சிம்பு, சந்தானம் போன்றவர்களும் நள்ளிரவுக் காட்சியைக் காணத் தயாராகிறார்கள்.

 

திட்டுபவர்களைத் தான் நாம் அதிகம் திருப்தி படுத்த வேண்டும்... லிங்குசாமிக்கு கமல் சொன்ன அட்வைஸ்

சென்னை: அஞ்சான் படம் குறித்த விமர்சனங்களால் மனம் நொந்து போயிருந்த இயக்குநர் லிங்குசாமிக்கு நடிகர் கமல், ‘நம்மைத் திட்டுபவர்களைத் தான் நாம் அதிகம் திருப்தி படுத்த வேண்டும்' என ஆறுதல் கூறினாராம்.

லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அஞ்சான். சூர்யா நாயகனாக நடித்திருந்த இப்படம் முன்னதாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அதற்குத் தகுந்தாற்போல், 'தான் கற்ற மொத்த வித்தையையும் இப்படத்தில் இறக்கியிருக்கிறேன்' என லிங்குசாமி பேட்டி பரபரப்பை அதிகப் படுத்தியது.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அஞ்சான் ரசிகர்களால் அங்கீகரிக்கப் படவில்லை. மாறாக வலைதளப் பக்கங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானார் லிங்குசாமி.

திட்டுபவர்களைத் தான் நாம் அதிகம் திருப்தி படுத்த வேண்டும்... லிங்குசாமிக்கு கமல் சொன்ன அட்வைஸ்

இந்நிலையில், தி இந்து நாளிதழுக்கு அவர் சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மன காயங்கள் மற்றும் அடுத்த படம் குறித்து அவர் கூறியுள்ளார்.

அடுத்த பட வேலைகள்...

அஞ்சானுக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

எனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். நாம் செய்யும் வேலை மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை நான் நம்புகிறேன். நடிகர் கார்த்தியை நாயகனாக வைத்து ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன். அதே நேரத்தில், விஷால் நடிக்கவிருக்கும் சண்டக்கோழி 2-ஆம் பாகத்தின் திரைக்கதை முடியும் தருவாயில் உள்ளது. அந்த வேலைகள் முடிந்தவுடன் உடனடியாக படப்பிடிப்பு துவங்கப்படும்.

கமல் அட்வைஸ்...

மிகவும் காட்டமான விமர்சனங்களை உங்கள் படம் சந்தித்தது. இதை எந்த கணத்திலாவது எதிர்பார்த்தீர்களா?

ரசிகர்களுக்கு நம்மிடம் என்ன பகை இருக்கிறது? எந்த நிலத் தகராறும் கிடையாதே (சிரிக்கிறார்). என்னிடம் அதிகமாக எதிர்பார்த்துவிட்டனர். என்னிடம் அதிகமான மரியாதை வைத்துள்ளனர். இது என்னுடைய பொறுப்பை அதிகப்படுத்துகிறது. 'நம்மை திட்டுபவர்களைத்தான் நாம் அதிகம் திருப்திபடுத்த வேண்டும்' என சமீபத்தில் கமல் என்னிடம் கூறினார். அதைத் தான் நான் தற்போது செய்துவருகிறேன். என் படங்களைத் தொடர்ந்து ரசிப்பவர்களை நான் ஏமாற்றியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடுத்து சிறந்த படத்தை தர விரும்புகிறேன்.

என்னைக் காயப்படுத்தியது...

'லிங்கு மீம்கள்' சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவ ஆரம்பித்தன. நீங்கள் அதைப் பார்த்தீர்களா? உங்களை அது காயப்படுத்தியதா?

என்னால் அவர்களின் உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. என்னை மிகவும் காயப்படுத்தியது என்னவென்றால், அது என் பிள்ளைகள் வரை போய் சேர்ந்துவிட்டது. ஒரு நாள் என் பிள்ளைகள் பள்ளியிலிருந்து திரும்ப வந்தபோது, 'அய்யா, உங்கள பத்தி இப்படி பேசறாங்க' என்று கூறியபோது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. 'அதெல்லாம் கண்டுக்க வேண்டாம் அய்யா' என பதிலளித்தேன்.

முக்கியமானவை மட்டும்....

உலகளவில் தமிழ் ரசிகர்கள் உங்களைப் பற்றியும் உங்கள் படங்கள் பற்றியும் பேசுவது குறித்து உங்களுக்கு தெரிய வருகிறதா?

எனது உதவியாளர்களும், விளம்பரங்களைப் பார்த்துக் கொள்பவர்களும் அவற்றை கவனித்துக் கொள்கிறார்கள். முக்கியமானவற்றைத் தவிர எல்லாவற்றையும் என் பார்வைக்கு எடுத்து வருவதில்லை.

எதிரிகளையும் திருப்தி படுத்த வேண்டும்...

எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பாராட்டோ, எதிர்மறையோ அதிகப்படியான விமர்சனங்கள் இயக்குநர்களுக்குத் தடையே. உங்களை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் அவை தடுக்கும். ஆனால் ஒரு திரைப்பட இயக்குநராக, இரண்டு வகையான விமர்சனங்களையும் நான் சந்தித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு முறை எதிர்மறை விமர்சனம் வரும்போதும், பொறுப்புணர்வை உணர்கிறேன். எனது முந்தைய படைப்புகளில் ரசித்த ஒன்று, இந்த படைப்பில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனது படைப்புகள் என் எதிரிகளைக் கூட திருப்திபடுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

எனது எதிரிகள்...

எதிரிகளா? திரைத்துறையில் உங்களுக்கு எதிரிகள் உண்டா?

எனக்கு துறையில் நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆனால் ஒரு மோசமான படத்தை எடுக்கும்போது, அவர்களில் சிலர் என்னை நிராகரிக்க ஆரம்பிப்பார்கள். எனது தொலைப்பேசி அழைப்புகளை அவர்கள் எடுப்பதில்லை, மீண்டும் அழைப்பதும் இல்லை. அப்படி அழைக்கும் போது 'மாப்ள, எனக்கு படம் புடிச்சிருக்கு' என்பார்கள். அந்த 'எனக்கு' என்ற வார்த்தையில் இருக்கும் அழுத்தம் எனக்குப் பிடிப்பதில்லை. அப்படியென்றால் அவர்களை சுற்றியுள்ள பத்து பேருக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை என்றே அர்த்தம்.

புதிய இயக்குநர்கள்...

இப்போது இருக்கும் கமர்ஷியல் சினிமா, புதிய இயக்குநர்களின் சினிமா பற்றி?

கடலில் பெரிய மீன்களும், சிறிய மீன்களும் இருப்பது போல, நமக்கு இரண்டுமே முக்கியம். நான்கு - ஐந்து கோடிகளில் தயாராகும் சினிமாக்களை வைத்து திரையரங்குகளை நடத்த முடியாது. லிங்கா போன்ற பெரிய திரைப்படங்கள் வரவேண்டும். எம்ஜிஆர் காலத்திலிருந்தே இதுதான் நடைமுறை. பெரிய, சிறிய படங்கள் இரண்டுமே தேவை.

சிறிய படங்கள்...

ஆரம்பத்திலிருந்தே, மாதவன், அஜித், விக்ரம் போன்ற பெரிய நட்சத்திரங்களோடுதான் பணியாற்றி வருகிறீர்கள். புதியவர்களோடு, சிறிய படங்கள் இயக்கும் எண்ணம் இல்லையா?

எனது தயாரிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் சதுரங்க வேட்டை, கோலி சோடா போல தரமான படங்களாகவே இருக்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம். ஆனால், இப்போதுள்ள பரபரப்பு குறைந்து, சற்று அமைதியான பிறகு சிறிய படங்களை இயக்குவேன்.

இளைப்பாறும் நிலையில் இல்லை...

அப்படியென்றால் நீங்கள் இப்போது அமைதியாக இல்லையா?

இல்லை. நான் சரியான இடத்தில் தான் இருக்கிறேனா எனத் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் எனது வாழ்க்கை தற்போது உள்ளது. உட்கார்ந்து இளைப்பாறும் நிலையில் நான் இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அப்படி தெரியலாம். ஆனால் நான் இன்னும் அந்த இடத்தை சென்றடையவில்லை. நடிகர்களைப் போல, இயக்குநர்களிடமும் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

கற்றுக் கொண்ட பாடம்...

நீங்களும், உங்கள் சமகால இயக்குநர்கள் பலரும் உங்களுடைய முன்னோடிகள் பற்றியும், உங்கள் படைப்புகளில் அவர்களது பாதிப்பு பற்றியும் பேசுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமரசாமி போன்ற இளைய தலைமுறை இயக்குநர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா?

நாங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்கிறோம். புதிய இயக்குநர்கள் எவரும் திடீரென வந்தவர்கள் அல்ல. தொடர்ந்து இளம் இயக்குநர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள். மூத்தவர்களாக, அலட்சியத்தோடும், பொறாமையோடும் அவர்களை நாங்கள் நடத்தக் கூடாது. நாங்கள் கற்றுக் கொள்ளத் தவறிய எது இவர்களிடம் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிலைக்க முடியும். பல ஜாம்பவான்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சப்தம்...

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கிறிஸ்டோபர் நோலனின் சகோதர் எழுதிய திரைக்கதையை இயக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். இங்கு, பாலா அண்ணன் நலன் குமரசாமியுடன் கதை விவாதம் செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்தை பாட வைக்கிறார். இவர்கள் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும்? ஏனென்றால் இன்று அவர்களிடம் ஒரு சப்தம் இருக்கிறது. (ஈர்ப்பு உள்ளது). ரசிகர்களுக்கு அவர்களைப் பிடித்துள்ளது. எனவே நாமும் அவர்களிடம் எது சிறப்பாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

குறை கூற விரும்பவில்லை...

தற்போது அஞ்சான் திரைப்படத்தை நினைவுகூரும்போது, அதிகப்படியான விளம்பரங்களுக்கு பலியானதாகத் தோன்றுகிறதா?

இருக்கலாம். இசை வெளியீடு கூட வேண்டாம் என்றுதான் சொன்னேன். அதிக விளம்பரம் வேண்டாம் என்றே நானும் சூர்யாவும் நினைத்தோம். இப்போது நான் யாரையும் குற்றம் கூற விரும்பவில்லை. ஆனால் என்னையும் அறியாமல் அஞ்சான் திடீரென மிகப்பெரிய படமாக மாறியது. நான் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில்லை ஆனால் ட்விட்டர் போன்ற தளங்களில் படம் குறித்த எதிர்பார்ப்பு, வெளியீட்டிற்கு முன்பிலிருந்தே நிலவி வந்தது எனக்குத் தெரியும். இணையத்தில் அதிக லைக்குகள் பெற்றதினால் கேக் வெட்டியது குறித்து பலர் கிண்டலடித்தனர். இதெல்லாம் எங்கு சென்று முடியும் என அப்போது உணரவில்லை.

மோசமான படமில்லை...

ஆனால், இப்போது அஞ்சானை தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் 'இந்தப் படத்தை ஏன் இவ்வளவு விமர்சித்தார்கள்?' என்று கண்டிப்பாக நினைப்பார்கள். 'ஏக் தோ தீன் சார்' பாடலை விமர்சித்தவர்கள் அனைவரும், தமிழ் தொலைக்காட்சிகளில் தினமும் ஒரு முறையாவது அந்தப் பாடல் ஒளிபரப்பாவதைக் காணலாம். நான் ஒரு மோசமான திரைப்படத்தைத் தரவில்லை என்றே நம்புகிறேன். குறைந்தது, இவ்வளவு விமர்சனங்களுக்கு ஆளாகும் அளவிற்கு மோசமான படம் இல்லை என்றே நம்புகிறேன்.

நிரூபிக்க வேண்டிய கட்டாயம்...

எனது கடந்தகாலத்தை பார்த்தே நான் எனக்கு உத்வேகம் சொல்லிக் கொள்கிறேன். 'ஜி' படத்திற்கு பிறகுதான் 'சண்டக்கோழி' படத்தை எடுத்தேன். 'பீமா'விற்கு பிறகுதான் 'பையா' இயக்கினேன். இந்தத் துறையில், தொடர்ந்து நம்மை நிரூபித்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது.

அஞ்சான் கிண்டல்...

உங்களது பேட்டி ஒன்றில் நீங்கள் கூறிய "டியூன் ஆகிட்டேன்", "மொத்த வித்தையும் எறக்கிருக்கேன்" போன்ற வார்த்தைகளை வைத்துதான், அஞ்சான் திரைப்படம் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது. நீங்கள் எதைப் பற்றி அப்போது கூறியிருந்தீர்கள்?

அஞ்சான் வெளியான ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டி அது. அப்போது அஞ்சானின் கதை கூட முடிவாகவில்லை.

தயாரிப்பு...

உங்கள் தயாரிப்பில் உருவாகும் படங்கள் பற்றி?

கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன், சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் ஆகிய படங்களை ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறேன். உத்தமவில்லன் படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொங்கல் சமயத்திலேயோ அல்லது அதற்குப் பிறகோ படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம். இடம் பொருள் ஏவல், ரா ரா ராஜசேகர் மற்றும் நான் தான் சிவா போன்ற படங்களின் வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன' என இவ்வாறு அப்பேட்டியில் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.