கமல் நடிக்க மறுத்தாலும், மூன்றாம் இரண்டாம் பாகத்தை உருவாக்காமல் விடமாட்டோம் என்று சிலர் கிளம்பியுள்ளனர்.
கமலுக்கு பதில் வேறு ஹீரோ, அதே ஸ்ரீதேவியை வைத்து இந்தப் படத்தை உருவாக்கும் திட்டத்தில் மும்முரமாக உள்ளனர்.
கமல் - ஸ்ரீதேவி நடிப்பில், இளையராஜா இசையில் காலத்தால் அழியாத காவியமாக மூன்றாம் பிறையை உருவாக்கியிருந்தார் பாலு மகேந்திரா. இந்தப் படத்தில் நடித்ததற்காக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
படத்தின் பெரிய பலமாக நின்றது க்ளைமாக்ஸ். இதே பாணியில் அதன் பிறகு பல படங்களின் க்ளைமாக்ஸ் அமைய காரணமாக அமைந்தது.
இந்த படத்தின் 2-ம் பாகத்தை இந்தி, தமிழில் மீண்டும் எடுக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. கிளைமாக்சில் கமலை விட்டு பிரியும் ஸ்ரீதேவி நீண்டநாட்களுக்கு பிறகு உண்மை தெரிந்து அவரிடமே திரும்பி வந்து சேர்வது போல் 2-ம் பாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கமலும், ஸ்ரீதேவியும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர்களை அணுகி பேசினர்.
ஆனால் கமல் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். முதல் பாகம் சோகமாக முடிந்ததுதான் அந்தப் படத்துக்கு காவிய அந்தஸ்தைத் தந்தது என்றும், அதை மீண்டும் எடுத்து மகிழ்ச்சியாக முடிப்பது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த வயதில் அந்த கேரக்டருக்கு தான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்றும் கமல் தெரிவித்தார்.
கமல் ஒப்புக் கொள்ளாததால், அவருக்குப் பதில் வேறு இந்தி நடிகரை வைத்து எடுக்க முயற்சிக்கிறார்கள். ஸ்ரீதேவி பாத்திரத்தில் மீண்டும் அவரையே நடிக்க வைக்கும் முயற்சியும் தொடர்கிறது.
நமக்கென்னவோ கமல் சொல்வதுதான் சரியாகப் படுகிறது!