கண்ணூர்: நடிகர் மோகன்லாலுக்கு கண்ணூர் ராணுவ முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பல படங்களில் ராணுவ வீரர் வேடத்தில் நடித்துள்ளார். இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக கடந்த 2009-ம் ஆண்டு மோகன்லாலுக்கு இந்திய எல்லைப்புற ராணுவத்தின் 122வது பட்டாலியனில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு கண்ணூரில் உள்ள ராணுவ முகாமில் மோகன்லாலுக்கு முதல் கட்டமாக ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்போது, நாட்டின் சிறந்த ராணுவப் பயிற்சி முகாமாக கண்ணூர் முகாம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி கண்ணூரில் நடந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியிலும் மோகன்லால் கலந்து கொண்டார்.
தற்போது 2-வது முறையாக மோகன்லாலுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக நேற்று காலை கண்ணூர் ராணுவ முகாமுக்கு மோகன்லால் சென்றார்.
அங்கு ராணுவ கமாண்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் நடந்த ராணுவ வீரர்கள் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். காலை 6 மணிக்கு நடந்த மராத்தானில் பங்கேற்று ஓடினார். பின்னர் பல்வேறு உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.
இன்றைய நிகழ்ச்சியில், மோகன்லாலுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், "ராணுவ சீருடையை அணியும்போது பெருமிதமாக உள்ளது. கடவுளின் அருளாள் இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இங்கே இன்னும் சில தினங்கள் இருக்க ஆசைதான். ஆனால் என் தாயாருக்கு உடல்நலமில்லாததால் செல்ல வேண்டியிருக்கிறது," என்றார்.