பார்த்திபனின் வித்தகன் இன்று ரிலீஸ்!


பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து இயக்கியுள்ள வித்தகன் படம் இன்று வெளியாகிறது.

பார்த்திபன் - பூர்ணா நடித்துள்ள இந்தப் படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்துள்ளார். போலீஸ் அதிகாரியின் கதை இது.

பார்த்திபன் ஏற்கெனவே உள்ளே வெளியே, வாய்மையே வெல்லும் போன்ற படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடமை தவறாத, கண்டிப்பான துணை கமிஷனராக அவர் நடித்துள்ளார். இது தவிர, மேலும் இரண்டு கெட்டப்புகளிலும் அவர் நடித்துள்ளார்.

பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மிலிந்த் சோமன் வில்லனாக வருகிறார்.

ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடைசியாக பார்த்திபன் இயக்கி நடித்த படம் பச்சக்குதிரை. 2006-ல் வெளியானது. அதன் பிறகு இப்போதுதான் அவர் படம் இயக்குகிறார்.
 

மழை நீரில் தத்தளித்த நாய்க்குட்டியைக் காப்பாற்றிய ஷ்ரேயா!


தேங்கிக் கிடந்த மழை நீரில் நடுங்கியபடி தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியை மீட்ட நடிகை ஷ்ரேயா அந்த நாய்க்குட்டியை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

அத்தோடு நில்லாமல் அந்த நாய்க்குட்டியை தனது வீட்டுக்குக் கொண்டு போய் வளர்த்தும் வருகிறார். அந்த குட்டி நாய்க்கு த்ரு என்று பெயரிட்டுள்ளாராம் ஷ்ரேயா.

பிராணிகள் மீது அதீத பாசம் வைத்துள்ளவர்கள் நம்மில் நிறையப் பேர் உண்டு. குறிப்பாக நடிகர், நடிகைகள் பலரும் பிராணிகள் மீது நல்ல பாசம் வைத்துள்ளனர். பழைய நடிகை அமலா பிராணிகள் மீது மகாப் பிரியமாக இருப்பவர். அதேபோல திரிஷாவுக்கும் நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

அந்த வகையில் நடிகை ஷ்ரேயாவும் நாய்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார். சமீபத்தில் தனது நாய்ப்பாசத்தை அவர் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் காரில் போய்க் கொண்டிருந்தாராம் ஷ்ரேயா. அப்போது சாலையோரமாக தேங்கிக் கிடந்த மழை நீரில் ஒரு குட்டி நாய் தத்தளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.

உடனடியாக காரை நிறுத்திய ஷ்ரேயா நாய்க்குட்டியை நெருங்கிப் பார்த்தபோது அதன் உடலில் புண்ணாக இருந்துள்ளது. மிகவும் பரிதவிப்புடன் காணப்பட்ட அந்த நாய்க்குட்டியை பரிவுடன் தூக்கிய ஷ்ரேயா உடனே ஒரு கால்நடை மருத்துவமனைக்கு வண்டியை விட்டார். அங்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

பின்னர் தனது வீட்டுக்குத்திரும்பிய ஷ்ரேயா அந்த நாய்க்குட்டியை தற்போது தானே வளர்த்து வருகிறார். நாய்க்குட்டிக்கு த்ரு என்று பெயரிட்டு செல்லமாக கவனித்தும் வருகிறாராம்.

பாராட்டுக்குரியவர்தான் ஷ்ரேயா.
 

மகளுடன் விரைவில் வீடு திரும்புவார் ஐஸ்வர்யா ராய்-அமிதாப் தகவல்


ஐஸ்வர்யா ராய்க்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை அப்படியே அம்மாவைப் போல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐஸ்வர்யாவுக்கு உள்ளதைப் போலவே ஓவியம் போன்ற அழகிய கண்களாம் குழந்தைக்கு.

முதலில் சிசேரியன் பண்ணுவதாகத்தான் டாக்டர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஐஸ்வர்யாதான்,அதெல்லாம் வேண்டாம், சுகப் பிரசவமாகவே இருக்கட்டும் என்று கூறி விட்டாராம். இதனால் சுகப் பிரசவமாகவே தனது முதல் மகளைப் பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. பிரசவத்தின்போது அவர் மிகவும் மனோ திடத்துடன் இருந்ததை தங்களது பிளாக்குகள் மூலம் கணவர் அபிஷேக் பச்சனும், மாமனார் அமிதாப் பச்சனும் உருகி உருகி எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில், குட்டிப் பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆலோசனைகள் பச்சன் வீட்டில் சூடு பிடித்துள்ளதாம். இருப்பினும் தற்போதைக்கு பேட்டி பி என்று செல்லமாக பெயரிட்டுள்ளனராம்.

இதற்கிடையே, ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் இருவரும் விரைவில் வீடு திரும்ப தயாராகி வருவதாக தனது பிளாக்கில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தாயும், மகளும் மிக மிக நன்றாக உள்ளனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என்று கூறியுள்ள அமிதாப் தனது ஸ்டைலில், ஷோலே படப்பிடிப்பின்போது ஜெயாபாதுரியும் கூட கர்ப்பமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது பேத்தியுடன் ஒரு நாளை செலவிட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் அமிதாப். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் முழுக்க அந்தக் குட்டிக் குழந்தையுடன் இருந்தேன். அதன் அசைவுகளை வேடிக்கை பார்ப்பதே சுவாரஸ்யமானது. மிகவும் அமைதியான குழந்தை. அதற்காகவே பிரத்யேகமாக வாங்கப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான உடையில் அழகாக படுத்திருந்தது. கண்களை எப்போதும் மூடியே வைத்திருக்கிறாள். எப்போதாவது திறக்கிறாள். லேசான புன்னைகையும் கூட அவ்வப்போது வருகிறது. இந்தப் புதிய உலகம் குறித்த கனவோ, என்னவோ என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
 

முத்திரையைத் தவிர்க்கத் துடிக்கும் 'மல்லாங்கிணறு மங்காத்தா'!


எடுத்த எடுப்பிலேயே பாரதிராஜாவின் கலைக்கையில் சிக்கியுள்ள மகிழ்ச்சியில் படு குஷியாக காணப்படுகிறார் இனியா.

முதல் படமான வாகை சூட வாவில் இவரது இனிய நடிப்பு அத்தனை பேரையும் கவர்ந்திழுத்து விட்டது. உணர்ச்சிகளை படு அழகாக தனது முகத்தில் கொண்டு வந்த விதம், இனியாவை பெரிய நடிகைகள் வரிசையில் ஏற்றி வைக்கப் போகிறது என்பது அனைவருக்குமே புரிந்து விட்டது. இதோ, அதற்கான அங்கீகாரமாக பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் மல்லாங்கிணறு மங்காத்தா என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கப் போகிறார் இனியா.

பாரதிராஜாவின் படத்தில் நடிக்கும் பாக்கியம் கிடைத்தது பெரிய சந்தோஷம் மட்டுமல்ல, பெரிய அங்கீகாரமும் கூட என்று கூறும் இந்த மலையாளத்து பட்டுவண்ணச் சிட்டு, ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கக் காத்திருக்கிறாராம்.

எனக்கென்று எந்த இமேஜையும் விரும்பவில்லை. எதைக் கொடுத்தாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைக்க ஆர்வமாக உள்ளேன். என் மீது எந்த முத்திரையும் விழுந்து விடாமல் கவனமாக இருக்கப் போகிறேன். இவருடன்தான் நடிப்பேன், அவருடன் நடிப்பேன் என்றெல்லாம் கூற மாட்டேன்.

எனது 2வது படத்திலேயே பெரிய இயக்குநரான அமீருடன் ஜோடியாக நடிக்கப் போவது பெருமையாக இருக்கிறது. படத்தின் கதை குறித்துக் கூற முடியாது.

இப்படத்திலும் நான் பாவாடை தாவணிதான், ஜாக்கெட் இல்லாமலும் நடிக்கப் போகிறேன். மாட்டு வண்டி கூட ஓட்ட வேண்டியிருக்கும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். கேட்கவே திரில்லாக உள்ளது. கோபக்காரி கேரக்டரில் வருகிறேன்... அய்யய்யோ, கதையை சொல்ல ஆரம்பிச்சுட்டேனே...இதுக்கு மேல சொல்ல முடியாது என்று கூறி ஓடினார் இனியா.

நடிப்பில் மட்டுமல்ல, பேச்சிலும் கூட இனிமைதான்!
 

மறுபடியும் ஜெய் - அஞ்சலி!


ஜெய் - அஞ்சலி இருவரும் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து, நிஜத்திலும் செம ஜோடி என்ற பெயரைச் சம்பாதித்துள்ளனர்.

'இருவருக்குள்ளும் காதல்... ஜெய்யோடு எப்போதும் இணைபிரியாமல் சுற்றுகிறார் அஞ்சலி," என்றெல்லாம் சமீப காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இருவரும் மீண்டும் ஜோடி சேருகிறார்கள்... இது ஏஜிஎஸ் தயாரிக்கும் புதிய படத்துக்காக.

மாசிலாமணி, வேலூர் மாவட்டம் போன்ற படங்களை இயக்கிய ஆர்என்ஆர் மனோகர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த இரு படங்களைத் தயாரித்ததும் கூட ஏஜிஎஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் எங்கேயும் எப்போதும் படம் வந்த பிறகும் ஜெய்க்கு வாய்ப்புகள் இல்லை. அஞ்சலியின் பெயர் இப்போது வாய்ப்பு பெற்றுத்தரும் சக்தியாக மாறியுள்ளது.

நல்லாருந்தா சரி!
 

'வொய் திஸ் கொலை வெறிடி'!


வேறு ஒன்றிமில்லை... இது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் '3' படத்தில் தனுஷே பாடியுள்ள ஒரு பாடலின் ஆரம்ப வரி.

இந்தப் பாடல் மட்டும் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.

பாடலின் விசேஷம்... இது முழுக்க தமிங்கிலீஷில் எழுதப்பட்டிருப்பதுதான். எழுதிய பாடலாசிரியர் - தனுஷ்.

இந்தப் பாட்டு வெளியான கையோடு படு பாப்புலராகிவிட்டது. யு ட்யூப், பேஸ்புக் என சமூக வலை தளங்களில் சக்கைப் போடு போடுகிறது.

அனிருத் என்ற புதிய இசையமைப்பாளர் இசையில், தனுஷ் பாட, இடையிடையே ஸ்ருதி ஹாஸனும், ஐஸ்வர்யாவும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் கட்டமாக இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, மற்ற பாடல்களை அடுத்த விழாவில் வெளியிடுகிறார்.

சமீபத்தில்தான் சினிமாவில் தமிழை வளர்ப்பது கடினம் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இல்லை, இல்லை வளர்க்க வாய்ப்புள்ளது என்று பதிலளித்திருந்தார் வைரமுத்து. இந்த வரிகளைப் பார்க்கும்போது இரண்டு பேரும் இப்போது என்ன பதிலளிப்பார்கள் என்ற யோசனை வருகிறது!
 

ஐஸ்வர்யா மகள் பாடகியாவாரா?


ஐஸ்வர்யா, அபிஷேக் தம்பதியருக்குப் பிறந்துள்ள பெண் குழந்தை என்னவாக வருவார் என்ற கேள்வி இப்பொழுதே பட படக்க ஆரம்பித்துவிட்டது. குழந்தையின் பிறந்த எண்ணை கணக்கிட்டுப் பார்த்த பிரபல எண்ணியல் நிபுணர் தாய்வாக்ன சர்மா, இந்த குழந்தை சிறந்த பாடகியாக வருவார் என்று கணித்துள்ளார்.

ஐஸ்வர்யா, அபிஷேக் தம்பதியருக்கு கடந்த திங்கட்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை பிறந்த தேதியை கணக்கிட்ட எண்ணியல் வல்லுநர் தாய்வாக்ன சர்மா, அந்த குழந்தை மிகச்சிறந்த பாடகியாக வருவார் என்று கணித்துள்ளார்.

கூடும் எதிர்பார்ப்பு

பிரசித்தி பெற்ற நாளிதழ் ஒன்று இதனை ஆமோதித்து கருத்து வெளியிட்டுள்ளது. ஐஸ், அபிஷேக் தம்பதியரின் மகள், அவரது பாட்டனார் அமிதாப் பச்சனைப் போல சிறந்த பேச்சாற்றல் திறமை கொண்டவராகவும் வர வாய்ப்புள்ளதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது முப்பாட்டனார் அதாவது அமிதாப்பின் தகப்பனார் ஹரிவன்ஸ் ராய் பச்சனைப் போல சிறந்த எழுத்தாளராக வருவாரா என்றும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கும் பெட் உண்டா?

அமிதாப் பச்சன் தனது பேத்தியை மிகவும் பிரசித்தி பெற்ற கல்வி சாலையில் படிக்க வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார். கலைத்துறை சார்ந்த படிப்பில் பேத்திக்கு விருப்பம் இருந்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். குட்டிக்குழந்தைக்கு ஐஸைப் போலவே அழகிய கண்கள் அமைந்திருப்பதில் பெற்றோர்களும், தாத்தா , பாட்டியும் பெருமிதம் கொண்டுள்ளனர்.

எது எப்படியோ அந்த குழந்தை உருவானது முதல் பிறக்கும் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது தற்போது பிறந்து சில நாட்களிலேயே என்னவாக வரப்போகிறது என்ற கேள்விகள் வலம் வரத் தொடங்கியுள்ளது. பிறப்பதற்கு பெட் கட்டியவர்கள் இதற்கும் பெட் கட்டுவார்களோ என்னவோ ?
 

நயனதாராவின் கடைசிப் படம் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ரிலீஸ்


பிரபுதேவாவை 2ம் தாரமாக மணக்கப் போகும் நடிகை நயனதாரா நடித்துள்ள கடைசிப் படமாக கருதப்படும் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற தெலுங்குப் புராணப் படம் இன்று திரைக்கு வருகிறது.

ரமலத்துடன் குடித்தனம் நடத்திக் கொண்டே நடிகை நயனதாராவை பக்கவாட்டில் காதலித்து வந்தார் பிரபுதேவா. இந்தக் காதல் ரமலத் வாழ்க்கையில் பெரும் புயலைக் கிளப்பியது. இருவருக்கும் பெரும் மோதல் மூண்டது. பின்னர் ரமலத் கோர்ட்டை நாடினார். இதனால் இவர்களுக்குள் நடந்து வந்த பிரச்சினை தெருவுக்கு வந்தது.

பின்னர் கோர்ட்டில் முறைப்படி ரமலத்தும், பிரபுதேவாவும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நயனதாராவைக் கல்யாணம் செய்யும் வேலையில் பிரரபுதேவா மும்முரமாக உள்ளார். இடையில் இவர்களுக்குள்ளும் கூட மோதல் வந்ததாக செய்திகள் வெளியாகின. இதை நயனதாரா மறுத்தார்.

இருப்பினும் ரமலத்துடன் தான் குடும்பம் நடத்தியதன் அடையாளமாக பிறந்த குழந்தைகளை பிரபுதேவா பார்க்க நயனதாரா தடையாக இருப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் நயனதாரா கடைசியாக நடித்த தெலுங்குப் படமான ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் இன்று திரைக்கு வருகிறது. இது ஒரு புராணப் படமாகும். ராமன் கதையைக் கூறும் படம். இதில் ராமராக என்டிஆர் பாலகிருஷ்ணாவும், சீதையாக நயனதாராவும் நடித்துள்ளனர். ரூ. 45 கோடியில்உருவாகியுள்ளது இப்படம்.

இந்தப் படத்தில் சீதை வேடத்தில் நயனதாரா நடிக்க ஒப்புக் கொண்டபோதுதான் அவருக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மூண்டது. அப்போது ரமலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் பிரபுதேவா. இதையடுத்து இந்து அமைப்புகள், கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நயனதாரா சீதாப் பிராட்டி வேடத்தில் நடிப்பதா என்று போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் அதையும் மீறி பாலகிருஷ்ணா, நயனதாராவை தனது படத்தில் நடிக்க வைத்தார்.

இந்தப் பின்னணியில் ஸ்ரீராம ராஜ்ஜியம் இன்று ஆந்திராவிலும், சென்னையிலும் திரைக்கு வருகிறது.
 

அஜீத் நடிக்கும் பில்லா -2-ல் மீனாட்சி தீக்ஷித் குத்தாட்டம்!


அஜீத் நடித்து வரும் பில்லா-2 படத்தில் குத்தாட்டம் போடுகிறார் மீனாட்சி தீக்ஷித்.

பில்லா -2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் தொடங்கியது. இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். பார்வதி ஓமனக்குட்டன் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் தெலுங்கு திரைப்பட உலகில் 'தூக்குடு' படத்தின் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீக்ஷித் அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் ஆடியுள்ளார். பில்லா படத்தில் யுவன் சங்கர் இசையில் நமீதா ஆடிய ‘ஏதாவது செய்’ என்ற குத்துப்பாடல் மெகா ஹிட்டானது.

அதேபோல் பில்லா 2 விலும் மீனாக்ஷி தீட்சித் ஆடிய குத்தாட்டம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை பிர்லா குழுமத்தின் இன் எண்டர்டெயின்மெயின்டும், சுரேஷ் பாலாஜியும் இணைந்து தயாரிக்கின்றனர்.
 

இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன்? - பாரதிராஜா


அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இளையராஜாவுடன் மீண்டும் இணையாதது ஏன் என்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் இயக்குநர் பாரதிராஜா.

தேனி அல்லி நகரத்தில் தனது குல தெய்வமான வீரப்ப அய்யனார் கோயிலில் கிடா வெட்டி அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கு பூஜைபோட்ட பாரதிராஜா, மாலையில் தேனி நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை என் படம் தொடர்பாகச் சந்திக்கிறேன்.

இதுவரை தேனி அல்லிநகரம் பகுதியில் எந்த விழாவிலும் நான் பங்கேற்றதில்லை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் பேசி இருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளில் என்னை என் பகுதி மக்களும், பள்ளித்தோழர்களும் வரவழைத்து விழா நடத்தவில்லை என்ற கோபம்தான் காரணம்.

இப்போது இந்த படத் தொடக்க விழாவின் மூலம் நானே என்னை வரவழைத்துக் கொண்டேன். நான் இங்கிருந்து சினிமாத்துறைக்கு சென்று அங்கிருந்து சினிமாவை இங்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

அன்னக்கொடியும் கொடி வீரனும் ஒரு மனிதனின் 60 ஆண்டுகால வாழ்க்கையைச் சொல்லும் படம். ஐம்பதுகளில் தொடங்கும் இந்தப் படம் இந்த சமகாலம் வரை நடந்த நிகழ்வுகளின் நெகிழ்ச்சியான பதிவு. இது எனது 49வது படம். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத ஒரு பதிவாக இருக்கும்.

இயக்குநர் அமீர் கட்டுவிரியன் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் லட்சுமணன் என்ற இளைஞரை, என் நண்பனின் மகனை அறிமுகப்படுத்துகிறேன். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத இளைஞன் அவன். அன்னக்கொடியாக, நான் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். ராதா மகளை மட்டுமல்ல, கார்த்திகா மகளையும் இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இன்னொரு முக்கிய வேடத்தில், மல்லாங்கிணறு மங்காதாத்தா என்ற பாத்திரத்தில் இனியா நடிக்கிறார். மீனாள், பாண்டி ஆகியோரும் முக்கிய வேடமேற்றுள்ளனர். மற்ற பாத்திரங்கள் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

குற்றப்பத்திரிகை படத்தின் கதைதான் இந்த அன்னக்கொடியும் கொடிவீரனும் படக்கதையா?

குற்றப்பரம்பரை கடந்த ஏழு ஆண்டுகளாக நான் சொல்லிவரும் படம். அந்தக் கதை பலரும் அறிந்தது. அதை எடுக்கத் தேவையான ஒவ்வொரு விஷயங்களாக சேகரித்து வருகிறேன். எனது அடுத்த படைப்பாக குற்றப்பரம்பரை வரும்.

பார்த்திபன் - அமீர் விவகாரத்தில் நடந்தது என்ன?

என்னடா இன்னும் கேக்கலையேன்னு பார்த்தேன். நீங்க நெனக்கிற மாதிரி எதுவும் நடக்கலை. பார்த்திபன் நல்ல நடிகர். மிக வித்தியாசமான சிந்தனைக்காரன். அவனது திறமைக்கு ஏற்ற உயரம் இன்னும் கிடைக்கவில்லை என்பேன். ஆனால் இந்தக் கதையைப் பொறுத்தவரை, இந்த மண்ணின் மைந்தனாக வாழ வேண்டும். பார்த்திபன் அதை செய்துவிடுவார்தான். ஆனால் அதற்கு முன்பயிற்சி தேவை.

ஆனால் அமீரைப் பார்த்ததும், இந்த வேடத்துக்காகவே பிறந்தவன் மாதிரி தெரிந்தது. அதனால் அவரை தேர்வு செய்துவிட்டேன். குறுகிய காலத்தில் முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. எனவே பார்த்திபனுக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைக்காமல், அமீரையே நாயகனாக்கிவிட்டோம். இது பார்த்திபனுக்கும் தெரியும். நானே அவரிடம் பேசிவிட்டேன்.

அமீரின் அர்ப்பணிப்பு உணர்வு, அந்தப் பாத்திரமாகவே மாறிப் போகும் தீவிரத்தன்மை எனக்கு பிடித்துவிட்டது. கருத்துவேறுபாடுகளைத் தாண்டி நாங்கள் இணைந்தது அதனால்தான்.

நான் என்ன சொன்னாலும் அப்படியே செய்கிறார் அமீர். ஒரு நாள் அவரது உடல் அமைப்பையே இந்தப் படத்துக்காக வேறு ஷேப்புக்கு கொண்டு வர வேண்டும் என்றேன். அடுத்த இரண்டு நாட்களில் நான் பார்த்த அமீர், என் கதைக்கு தேவையான அளவு மாறியிருந்தார்.

அதனால்தான் அமீரைத் தேர்வு செய்தேன்.

உங்கள் பட ஹீரோக்கள் இருவருமே கறுப்பு நிறமுடையவர்கள். ஆனால் ஹீரோயின்கள் மட்டும் சிவப்பாக இருப்பது ஏன்?

அது ஒண்ணுமில்லை... மேக்கப்தான். அதை கழுவிட்டா அவங்களும் ஒரே நிறம்தான்!

இது பீரியட் படமா....

அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா அப்படி சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை. பீரியட் படம் என்றால் 400 வருஷத்துக்கு முந்தைய கதையாக இருக்க வேண்டும்.

இது ஒரு 60 ஆண்டு கால வாழ்க்கைப் பதிவு. நான் வாழ்ந்த வாழும் காலத்திய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறேன். இது எப்படி பீரியட் படமாகும்?

இளையராஜாவுடன் இந்தப் படத்தில் இணையாதது ஏன்?

எத்தனை முறை இதற்கு பதில் சொல்வது... இந்தப் படத்தில் அவருடன் இணைவேன் என்று எப்போதாவது சொன்னேனா... ஒரு கட்டத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். அதன் பிறகு எனக்கு வேறு அனுபவங்கள் தேவைப்பட்டது. அதனால் ரஹ்மான், தேவா, ஜீவி பிரகாஷ் என மாறினேன். ஒவ்வொரு முறையும் புதுப்புது அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. இன்னொன்று இதுபற்றி நானும் இளையராஜாவும் அல்லவா பேச வேண்டும்... மீடியா ஏன் பேசுகிறது!

ஆனால் உங்கள் ரசிகர்களைப் பொறுத்தவரை இளையராஜா - பாரதிராஜா இணைந்தபோது வந்த பாடல்களின் தரம் வேறு படங்களில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இணைவார்களா என எதிர்ப்பார்க்கிறார்கள்... இந்தக் கேள்வி அடிக்கடி பிறக்கிறது...

அதற்குக் காரணம், சின்ன வயதில் அந்தப் படங்களைப் பார்த்து பாடல்கள் கேட்டதால் வரும் உணர்வுதான். அந்தப் பாடல்கள் அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு ரசிகர்களுக்கு. ஏன்... நானும் ரஹ்மானும் இணைந்த கிழக்குச் சீமையிலே பாடல்கள் நன்றாக இல்லையா... கருத்தம்மா பாடல்கள் எப்படி...

இன்னொன்று வெற்றிபெற்ற ஜோடி, பிரிந்த பிறகு மீண்டும் இணைந்தால் அதே வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. எம்எஸ்வி பண்ணாத சாதனைகளா? ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகும் எம்எஸ்வி பெரிய வெற்றிகளைக் கொடுத்தார். ஆனால் மீண்டும் இணைந்தபிறகு அவர்களால் அந்த வெற்றியைத் தர முடிந்ததா?

சின்ன வயதில் அம்மாவோடு நெருக்கமாக இருப்போம். பிரியமுடியாமல் ஒட்டிக் கொண்டே இருப்போம். ஆனால் வயது ஏற ஏற புதிய உறவுகளைத் தேடுவதில்லையா... அதுபோலத்தான்.

இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்லப் போகிறீர்கள் இந்த சமூகத்துக்கு...

இதுவரை நான் என்ன சொல்லியிருக்கிறேன்... அதேதான் இந்தப் படத்திலும்!

-இவ்வாறு பாரதிராஜா பதிலளித்தார்.

-தேனியிலிருந்து நமது சிறப்பு நிருபர்..
 

ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் திருமண தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் இருவரின் திருமணம் குறித்தும் இன்னும் எத்தனை முறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமோ தெரியவில்லை.

இந்திப் படத்தில் ஜோடியாக நடிக்கும்போது காதலித்து, அந்தக் காதலுக்கு எழுந்த எதிர்ப்புகளை மீறி, சமீபத்தில் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டவர்கள் ஜெனிலியாவும் ரிதேஷும்.

இருவருக்கும் வரும் பிப்ரவரி 4-ம் தேதி திருமண தேதி நிச்சயிக்கப்பட்டதாக முதலில் செய்தி வர, உடனே மறுப்பு தெரிவித்தார் ஜெனிலியா.

அப்படியெல்லாம் எதுவும் கிடையாது, தேதியை முடிவு செய்ததும் நாங்கள்தான் அதைச் சொல்வோம் என்றனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் கல்யாணத் தேதியை அறிவித்துள்ளனர். மும்பை ஹயாத் ரெஸிடென்சியில் திருமணம் நடக்கிறதாம்.

தேதி? அதே பிப்ரவரி 4-தான்!

உண்மையை முதலில் சொன்னா யார்தான் ஒத்துக்கிறாங்க!