மக்கள் ரசனையில் குறையில்லை... நல்ல படங்கள் அதற்கான மரியாதையைப் பெற்றே தீரும்! - வசந்தபாலன்


பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் மீது படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் வைக்கும் குற்றச்சாட்டு, 'ரசனை மாறிவிட்டது' என்பதுதான். நல்ல படம் கொடுத்தாலும் ரசிக்கமாட்டேன் என்கிறார்களே என பலரும் புலம்புவதைக் கேட்க முடிகிறது.

ஆனால் வசந்த பாலன் பார்வை வேறு. மக்கள் ரசனையில் பழுதில்லை. நல்ல படைப்புகள் அவற்றுக்குரிய மரியாதை - அங்கீகாரத்தைப் பெற்றே தீரும், என்கிறார்.

ஆல்பம் படத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தவர் வசந்த பாலன். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. வசந்த பாலனுக்கு அது பெரும் ஏமாற்றத்தையும் சோதனைகளையும் தந்துவிட்டது. ஆனால் அவர் மக்களையோ, ரசிகர்களையோ குறை சொல்லவில்லை. அதே நேரம் தன் தரத்தில் சமரசமும் செய்து கொள்ளவில்லை.

அடுத்த படம் வெயில் கொடுத்தார். வாழ்க்கையில் தோற்றவனின் கதையைச் சொல்லி வென்றார். பாக்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றது அந்தப் படம்.

அடுத்த படமான அங்காடித் தெரு, தமிழ் சினிமாவின் புதிய மைல்கல் என்று போற்றப்பட்டது. நல்ல வசூல், பெரிய அளவில் அங்கீகாரம் என வசந்த பாலன் அடுத்த கட்டத்துக்குப் போனார்.

அடுத்தடுத்து ஜெயித்தாலும், இந்த வழக்கமான கதைகளிலிருந்து வெளியில் வர விரும்பியவர், அரவானைக் கையிலெடுத்தார்.

பழந்தமிழரின் வாழ்வை மையப்படுத்திய ஒரு கதை. 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் சமூகம், களவை மையமாகக் கொண்டு வாழ்க்கை நடத்திய ஒரு கூட்டத்தின் வாழ்க்கை நெறிகள், சாகஸங்கள், சோகங்கள் என வித்தியாசமான படைப்பை உருவாக்கி முடித்துவிட்டு, மீடியாக்களை சந்தித்து வருகிறார்.

பிரசாத் லேபில் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுத்த வசந்த பாலன், தட்ஸ்தமிழுக்கு அளித்த பேட்டி:

அரவான் எடுக்க உங்களை உந்தியது எது?

ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை நாம் தரவேண்டும். இந்த எண்ணம் மனதில் உதித்தவுடன், என்னால் வழக்கமான எந்த கதைகள் பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. என்ன தரலாம், எப்படி உருவாக்கலாம் என மனசு பூரா பரபரவென இருந்தது. ஒரு நாள் காவல் கோட்டம் நாவல் படித்துக் கொண்டிருந்தேன். அது வேறு உலகத்துக்கு என்னை கூட்டிச் சென்றது. அந்தக் கதையில் வரும் ஒரு பத்து பக்க சமாச்சாரம்தான் அரவானுக்கான விதை.

இதுதான் நாம் எடுக்க வேண்டிய சினிமா. ரசிகர்களுக்கு இப்படி ஒரு தீனிதான் இப்போது அவசியம் என முடிவெடுத்ததும் விறுவிறுவென உருவானது அரவான் திரைக்கதை.

பொதுவாக, ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது, நல்ல படங்களை ரசிப்பதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். உங்கள் கண்ணோட்டம் என்ன?

யார் குற்றம் சொல்கிறார்கள் என்றெனக்குத் தெரியவில்லை. ரசிகர்களின் ரசனை அப்படியேதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் எனக்குத் தெரியவில்லை. என்ன, மாற்றுப் பொழுதுபோக்குகள் அதிகரித்துவிட்டதால், திரையரங்குக்கு அவர்கள் அடிக்கடி வரமுடியாமல் போயிருக்கலாம். அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் நல்ல படங்கள் அவற்றுக்கான அங்கீகாரத்தை ரசிகர்களிடம் பெறத் தவறியதே இல்லை. வெயிலும், அங்காடித் தெருவும் வெளியான போதும் தமிழ் சினிமாவில் இதே சூழல்தானே இருந்தது? என் படங்கள் இரண்டு ஓடிவிட்டதால் இப்படி நான் சொல்லவில்லை. இன்னும் எத்தனையோ நல்ல படங்கள் சரியான திட்டமிடலோடு, உரிய நேரத்தில் வெளியாகி வெற்றியை ஈட்டியுள்ளன.

எனக்கு மக்கள் ரசனை மீது, நமது ஊடகங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைதான் என்னை அரவான் என்ற பீரியட் பிலிம் எடுக்க வைத்தது.

உங்கள் படைப்புகளில் அரவானை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரவான் நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதிக்கும் படமாக இருக்கும். இதில் பங்காற்றியுள்ள அத்தனை பேருக்கும் தனி மரியாதையை இந்தப்படம் பெற்றுத் தரும். தனித்தனியாக ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. அனைவருமே அப்படியொரு உழைப்பை இந்தப் படத்தில் கொட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இதுவரை நான் பண்ணதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள்தான். இந்தப் படத்தில் ஒரே ஜம்பாக எகிறிவிட்டேன். ஆனால் நான் கீழே விழுந்துவிடாமல் பத்திரமாக தரையிறங்கக் காரணமாக இருந்தவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா. இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் சினிமா தழைக்கும். நல்லா இருக்கும். சினிமாவை நிஜமாக நேசிக்கிற ஒரு மனிதருக்குப் படம் பண்ணதில் எனக்கு ஆத்ம திருப்தியும் கூட.

சரித்திரப் படம் என்றால் அந்த உணர்வை திரையில் கொண்டு வருவது முக்கியம். உங்கள் இசையமைப்பாளர் கார்த்திக் ஒரு மாடர்ன் இளைஞர். எப்படி வந்திருக்கிறது அரவான் இசை?

மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது. இன்றைக்கு அரவான் படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட். இந்தப் படத்துக்காக அவரை பிழிந்தெடுத்தேன் என்று சொன்னால் மிகையில்லை. அந்த அளவுக்கு மெனக்கெட்டுள்ளோம். திரையில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் உணர்வு நிச்சயம் கிடைக்கும்.

கார்த்திக் என்றில்லை. என் கேமராமேன் சித்தார்த், கலை இயக்குநர் விஜயமுருகன் என அத்தனை பேரும் பிரமிக்க வைக்கும் அளவு பங்களிப்பைத் தந்துள்ளனர் அரவாணுக்கு. எனக்கு என் தயாரிப்பாளரின் பணத்தை வீணடிக்கக் கூடாது என்ற பதைப்பு. கிடைத்த பெரிய வாய்ப்பு சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தவிப்பு. அதற்காக அத்தனை பேரையும் கடுமையாக வேலை வாங்கியிருக்கிறேன். என் செட்டில் ஒருவருக்குக் கூட ரத்தக்காயம் ஏற்படாமல் இருந்ததில்லை. அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கவும் நேரமில்லை. ரிசல்ட் சரியாக இருக்க வேண்டும். அதற்காக எத்தனை கஷ்டத்தையும் பட்டே தீரவேண்டும்.

பொதுவாக நடிகைகளுக்கும் இயக்குநர்களுக்கும் அல்லது நடிகைகளுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்பார்கள். ஆனால் பசுபதிக்கும் உங்களுக்கும் அப்படியொரு புரிதல். உங்கள் படங்களில் அவர் பங்களிப்பு அவுட்ஸ்டேன்டிங்காக உள்ளது. எப்படி?

அதுதான் பசுபதியின் சிறப்பு. அவருடைய கேரியரில் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தேன் என்ற சின்ன திருப்தி எனக்கு இருக்கிறது. ஆனால் அவரது திறமைக்கு அவர் சர்வதேச அளவில் எங்கோ இருக்க வேண்டும். தமிழ் சினிமாவே இன்னும் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மற்றவர்களைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும். என் படங்களில் ஆண் பெண் என்ற பேதமில்லாமல், கதைப்படி முக்கியத்துவம் இருக்கும். சொல்லப்போனால், இதுவரை நான் எடுத்த மூன்று படங்களிலுமே பெண் பாத்திரங்களின் பங்களிப்பு கணிசமாகவே இருக்கும்.

அடுத்தபடம் குறித்து...?

அரவான் வெளியாகும் வரை எனக்கு வேறு சிந்தனையே இல்லை!
 

தைரியம் எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி! - சினேகா சிறப்புப் பேட்டி


நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன.... தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தட்ஸ்தமிழின் தீபாவளி ஸ்பெஷலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

இந்த பதினோரு ஆண்டு திரையுலக அனுபவங்கள் குறித்து....

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திரையுலகில் இன்றைக்கு இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான். எனக்கு அந்த வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் நான் எவ்வளவோ படங்கள் நடித்தாலும், என்னைத் திரையில் பார்த்து அல்லது என் நடிப்பைப் பார்த்து யாரும் முகம் சுளித்ததில்லை. இது எனக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. நிறைய பாடங்களை இந்த பதினோரு ஆண்டுகளில் கற்றுக் கொண்டேன்.

எல்லோருக்கும் தங்கள் ஆதர்ஸ நடிகை என்று யாராவது இருப்பார்கள். இவர்களைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன் என்று சொல்வார்கள். உங்களுக்கு?

எனக்கு அப்படி யாரும் இல்லை. காரணம் நான் யாரைப் பார்த்தும் உந்தப்பட்டு இந்த துறைக்கு வரவில்லை. ஒரு விபத்து போலத்தான் என் திரைப்பிரவேசம் அமைந்தது.

ஆனால் நான் திரையுலகில் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்ப்பது, இவரைப் போல இருக்க வேண்டும் என நினைப்பது, ராதிகா மேடத்தை பார்த்துதான். எனக்கு தனிப்பட்ட முறையிலும் சரி, திரையிலும் சரி அவரை ரோல்மாடல் என்று சொல்லலாம். அவரது துணிச்சல், பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், சவால்களை அவர் சந்திக்கும் பாங்கு... எல்லாமே எனக்குப் பிடிக்கும்.

சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்தீர்கள். துணிச்சலாக சண்டையெல்லாம் போட்டிருந்தீர்கள். நிஜத்தில் உங்கள் துணிச்சலின் அளவு என்ன?

முன்பெல்லாம் நான் கொஞ்சம் பயந்த சுபாவமாகத்தான் இருந்தேன். ஆனால் இந்த சினிமாவில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னை நிறைய மாற்றிவிட்டன. இன்றை பிரச்சினைகளைப் பார்த்து பயப்படுவதில்லை. வருவது வரட்டும் என துணிந்து நிற்கிறேன். யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை. என் சுபாவத்தை மாற்றுவதில்லை. இப்போது எனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான்!

ஒரு இடைவெளி விழுந்த மாதிரி இருக்கே... அடுத்தடுத்த படங்கள் என்ன?

பொன்னர் சங்கரில் ஒரு ரோல் பண்ணியிருந்தேன். இப்போது முரட்டுக்காளை, விடியல்னு ரெண்டு படம் வரவேண்டியிருக்கு.

தெலுங்கில் ராஜன்னா என்ற படமும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை எந்த மொழி என்று பார்க்காமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதால் இடைவெளி ஏதும் தெரிவதில்லை.

நமக்கான பாத்திரம், திறமைக்கேற்ற வேடம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

இதில் வருத்தப்பட என்ன உள்ளது. சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம். இங்கு ஹீரோயின்கள் வேலை மிகவும் குறைவு. ஆரம்பத்தில் நான்கு சீன்கள் இருக்கும். இடையில் நான்கு பாடலுக்கு கூப்பிடுவார்கள். க்ளைமாக்ஸில் இருந்தால் இருப்போம். இல்லாவிட்டால் எல்லாம் முடிந்து கடைசி சீனில் மகிழ்ச்சியாக ஒரு போஸ்... இவ்வளவுதான் ஹீரோயின்கள் வேலை. எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைப்பதுண்டு. எனவே கிடைக்கிற வாய்ப்புகளில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வழக்கமான கேள்விதான்... ஆனால் கேட்க வேண்டியது அவசியமாக உள்ளது. திருமண திட்டம் என்ன?

சினிமா போதும், போரடித்துவிட்டது என எப்போது எனக்குள் குரல் கேட்கிறதோ அப்போது, வேறு தளத்துக்கு மாறிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டியுள்ளது.

வதந்திகள், கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. அதுவும் என்னைப் போன்றவர்கள் இருப்பது ஷோ பிஸினஸ். இங்கு கிசுகிசுக்கள் வராமலிருந்தால்தான் ஆச்சர்யம். உண்மை தெரியாமல் எழுதுகிறார்களே என்று முதலில் வருத்தமாக இருந்தாலும், இப்போதெல்லாம் அதை சகஜமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

இந்த தீபாவளிக்கு உங்கள் படம் எதுவும் வரவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

நிச்சயமாக. எல்லா நடிகைகளுக்குமே தங்கள் படம் பண்டிகையின்போது வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். சரி, அதனால் என்ன... எப்படியும் சின்னத்திரையில் என்னைப் பார்ப்பார்கள் ரசிகர்கள். அடுத்த தீபாவளிக்கு என் படம் ரிலீசாகும் என நம்புகிறேன்.
 

பாலிவுட் பார்ட்டியில் அனுஷ்காவுக்கு 'இச்' கொடுத்து சிக்கிய ஷாஹித்


பார்ட்டி ஒன்றில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், நடிகை அனுஷ்கா ஷர்மாவை ஓரங்கட்டி 'உம்மா' கொடுக்கும்போது கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும், பிரியங்கா சோப்ராவும் அவ்வப்போது சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். தற்போது அவர்கள் நிரந்தரமாக பிரிந்துள்ளனர். அதற்கு காரணம் ஷாருக் கான் என்று கூறப்படுகிறது. பிரியங்காவும் ஷாஹித்தை பிரிந்த பிறகு ஷாருக்குடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் ஷாருக் மனைவி கௌரி கடுப்பாகியுள்ளார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், ஷாஹித் கபூரும் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை உறுதிபடுத்த முடியவில்லை. இந்நிலையில் இம்ரான் கான் நடிதத் மேரி பிரதர் கி துலஹன் பட வெற்றியைக் கொண்டாட பார்ட்டி கொடுக்கப்பட்டது.

பார்ட்டிக்கு வந்த ஷாஹித் அங்கு அத்தனை பேர் இருப்பதை மறந்துவிட்டு அனுஷ்காவை ஓரங்கட்டி அவருக்கு இச், இச் என்று முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் யப்பா, மீடியாக்காரங்க இருக்காங்க, அப்புறம் முத்தம் கொடுக்கலாம்னு சொல்லி இருவரது 'உதடு'களையும் கஷ்டப்பட்டு பிரித்து வைத்துள்ளார்.

இருந்தாலும் பிரியாமல், ஒட்டி உறவாடியபடி, பார்ட்டி முழுவதும் ஷாஹித்தும், அனுஷ்காவும் ஒட்டிக் கொண்டே திரிந்துள்ளனர். கரீனா கபூரை காதலிக்கும்போது ஷாஹித் அவருக்கு லிப் டூ லிப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவும், ஷாஹிதும் சேர்ந்து பத்மாஷ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் வேறு 'கம்பெனி'க்கு மாறிவிட்டது உறுதியாகி விட்டது இந்த 'இச் இச்' மூலம்.
 

இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்துவேன் - சோனியா அகர்வால்


அழகு, நடிப்பு என ஒரு நல்ல நடிகைக்குரிய அனைத்து லட்சணங்களுடன் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் சோனியா அகர்வால்.

செல்வராகவனுடன் திருமணம், விவாகரத்து என அவரது வாழ்க்கை இடையில் சில ஆண்டுகள் கழிந்தது.

இப்போது விவாகரத்துக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள அவருக்கு நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. பொதுவாக கல்யாணமான நடிகைகளை வயது வித்தியாசமின்றி அக்கா அம்மா வேடங்களுக்குத் துரத்திவிடும் தமிழ் சினிமா, சோனியாவுக்கு மட்டும் மீண்டும் ஹீரோயின் அந்தஸ்தைக் கொடுத்துள்ளது.

ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தி்ல கதையின் நாயகியாக நடிக்கும் சோனியா, அடுத்து தீர்வு எனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதேநேரம் இன்னொரு ஹீரோயின் நடிக்கும் படங்கள் என்றாலும் இன்னொரு நாயகியாக நடிக்க தயங்குவதில்லை அவர்.

இதனால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வரத் தொடங்கியுள்ளதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எதிர்பார்க்காத வரவேற்பு இப்போது கிடைத்துள்ளது. இதை தக்கவைத்துக் கொள்வேன். முதல் நாயகியா இரண்டாவது நாயகியா என்று பார்க்கும் நிலையில் நான் இல்லை. என் பாத்திரம் பேசப்படுமானால் எந்த வேடமும் ஓகே. இரண்டாவது இன்னிங்ஸிலும் மக்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை," என்றார்.
 

வசூல் அதிகமாயிடுச்சி... நன்கொடை கேட்டு நச்சரிக்கிறாங்க! - இயக்குநர் சித்திக்


பாடிகார்ட் இந்திப் படத்தின் வசூல் எக்கச்சக்கம் என செய்தி வெளியாகியுள்ளதால் தினமும் நன்கொடை கேட்டு நச்சரிக்கிறார்களாம் அந்தப் படத்தின் இயக்குநர் சித்திக்கை.

கேரள பட உலகின் முன்னணி இயக்குனர் சித்திக். இவர் தமிழில் விஜய் நடித்த பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். பாடிகார்ட் மலையாள படத்தை தமிழில் காவலன் என்ற பெயரில் இயக்கினார். இதில் விஜய் நடித்தார். அதே போல் இந்தியிலும் பாடிகார்ட் படத்தை இயக்கினார். இந்தியில் வெளியான பாடிகார்ட் படம் 200 கோடி வரை வசூல் செய்தது.

இதனால் மலையாள பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக சித்திக் இணைந்தார். பாடிகார்ட் படம் மூலம் கோடிக்கணக்கான பணம் வசூல் ஆனது தெரிந்து, தன்னை தினமும் பல சேவை அமைப்புகள் நன்கொடை கேட்டு நச்சரிப்பதாகவும், இதனால் தனக்கு தூக்கமே போய்விட்டதாகவும் சித்திக் புலம்ப ஆரம்பித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "படத்தை இயக்குவதோடு எனது கடமை முடிந்து விடுகிறது. அதில் வரும் லாபம் அனைத்தும் தயாரிப்பு நிறுவனத்துக்குதான் சேரும். இது புரியாமல் பலரும் என்னை தேடி வருவதால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாடிகார்ட் படம் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தை தயாரித்தவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. எனக்கும் திருப்தியான சம்பளம் கிடைத்துள்ளது.

மலையாள படங்களை மாற்று மொழிகளில் இயக்குவது கடினமானதாகும். ஆனாலும் பிற மொழி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தன்னிடம் படம் இயக்கி தருமாறு கேட்பதால் மறுக்க முடியவில்லை. விரைவில் மீண்டும் தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளேன்," என்றார்.
 

ஓட்டல் ஆரம்பிக்க திட்டமிட்டு உணவு தளம் ஆரம்பித்த லேகா ரத்னகுமார்!


 

வேலூர் மாவட்டம் - விமர்சனம்


பொதுவாக சென்னை அல்லது தென் மாவட்டங்களை மையப்படுத்திதான் திரைப்படங்கள் வருகின்றன. தமிழ் சினிமா கண்டுகொள்ளாத வேலூர் மாவட்டத்தை மையப்படுத்தி ஒரு படம் வருவது அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும். அதுவும் போலீஸ் கதை.

ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் நந்தாவுக்கு, ஐபிஎஸ்தான் வாய்க்கிறது. இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ஏற்றுக் கொண்டு வேலூர் மாவட்ட ஏஎஸ்பியாக பணியில் சேர்கிறார்.

வழக்கம்போல, ஏஎஸ்பி நந்தாவின் நேர்மைக்கும் உள்ளூர் அரசியல் பின்புலத்தோடு வளைய வரும் தாதா அழகம்பெருமாளுக்கும் மோதல். அவரைக் கைது பண்ண இவர் திட்டமிட, இவரை காலி பண்ண அவர் திட்டமிட... இந்த போலீஸ் - திருடன் கண்ணாமூச்சில் போலீஸ் உயர் அதிகாரிகளும் தாதா பக்கமே நிற்கிறார்கள். வெறுத்துப் போய் வேலையை ராஜினாமா செய்கிறார்.

ராஜினாமா செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தாதா கும்பல் அவரை அடித்து குற்றுயிராய் விட்டுவிட்டுப் போக, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புகிறார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்காத போலீஸ் தலைமையகம், அவரை மீண்டும் வேலூரில் பணியாற்றவும் அனைத்து உதவிகளைச் செய்யவும் உறுதியளிக்கிறது. மீண்டும் புத்துணர்ச்சியோடு பணியில் சேரும் நந்தா, தான் நினைத்ததைச் சாதித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

ஏற்கெனவே நமக்குப் பரிச்சயமான அதே போலீஸ் கதைதான் என்றாலும், கதை நிகழுமிடம் புதிது என்பதால், பார்க்க ப்ரெஷ்ஷாகத்தான் இருக்கிறது!

தனி ஹீரோவாக, தன் திறமையை முழுமையாகக் கிடைத்த வாய்ப்பை நந்தா நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். தன்னை நேர்மையாக செயல்படவிடாமல் சக அதிகாரிகளே தடுக்கும்போதும், அரசியல் தாதா விபச்சாரியுடன் உல்லாசம் இருக்க, அவருக்கு காவலுக்கு நிற்க நேர்ந்த அவமானத்தையும் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்துக்குப் பிறகாவது இந்த நல்ல நடிகரை பயன்படுத்துங்கப்பா!

பூர்ணாவுக்கு பெரிதாக வேலை ஒன்றுமில்லை. கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுகிறார், களைத்துப் போய்!

மெயின் வில்லனாக வரும் அழகம் பெருமாள் அசல் அரசியல் தாதாவை கண்முன் நிறுத்துகிறார். வேலூர் மாவட்டத்தில் உண்மையிலேயே இவரைப் போல பலரைப் பார்த்த நினைவு!

அமைச்சராக வருபவர் ஒரிஜினல் அரசியல்வாதி ஒருவரை நினைவுபடுத்துகிறார். நல்ல தேர்வு.

டிரைவராக வரும் சந்தானத்துக்கு சில சீரியஸ் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதுபோக தனக்கு கொடுத்த நகைச்சுவை வாய்ப்பில் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டவும் அவர் தவறவில்லை.

சுந்தர் சி பாபுவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க முடிகிறது. பின்னணி இசை பரவாயில்லை. கோட்டை, மார்க்கெட், குவாரி என வேலூரை முழுமையாக சுற்றிக் காட்டியிருக்கிறது வெற்றியின் கேமரா. போலீஸ் கதைக்கான வேகத்தை சரியாக மெயின்டெய்ன் பண்ணுகிறது சுரேஷின் எடிட்டிங்.

ஒரு போலீஸ் கதைக்கே உரிய வழக்கமான விஷயங்கள்தான் என்றாலும் ஆர்என்ஆர் மனோகரின் விறுவிறுப்பான இயக்கம் படத்தை பார்க்க வைக்கிறது!
 

நித்யா மேனனுக்கு 'ஷாக்' கொடுத்த 'பவர் ஸ்டார்' சீனிவாசன்-'பியூஸ்' போய் திரும்பினார்!


தமிழ்த் திரையுலகைக் காக்க வந்த 'ஆபத்பாந்தவன்', 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மற்றும் ஒரு 'அலப்பறை'யை அரங்கேற்றியுள்ளார்.

தான் நடிக்கும் படத்திற்கு தன்னுடன் ஜோடி சேர நித்யா மேனனை அணுகியுள்ளார் சீனிவாசன். இதை சற்றும் எதிர்பாராத நித்யா மிரண்டு போய்விட்டாராம். 'பவர்' தாக்குதலில் சிக்கி அதிர்ந்த அவர் சற்றே சுதாரித்து சீனியர்களுடன் ஜோடி சேர மாட்டேன் என்று கூறி அனுப்பி விட்டாராம்.

வழக்கமாக ரசிகர்கள் தான் நடிகர்களுக்கு அடைமொழி வைப்பார்கள். ஆனால் டாக்டர் சீனிவாசனோ தனக்குத் தானே 'பவர் ஸ்டார்' என்ற வைத்துக் கொண்டு தமிழ்த் திரையுலகைக் கலாய்த்து வருகிறார். இவரது லத்திகா என்ற படம் '200 நாட்களைத் தாண்டி ஓடி' தமிழ்த் திரையுலகினரை பேரதிர்ச்சியி்ல ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் சற்றும் சளைக்காமல் அதைப் பற்றி தொடர்ந்து விளம்பரம் கொடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார் சீனி.

50 வயதைத் தாண்டிய இவர் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பாராம். அதுவும் ஆடி, ஓடி 'முடிந்த' நடிகைகளை அணுகி தனக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்கிறாராம். தற்போது தனது 'டேஸ்ட்'டில் சற்று மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்த சீனி, எத்தனை நாளைக்குத் தான் இப்படியே நடிக்கிறது நாமும் 'யூத் டிரெண்டில்' தற்போதுள்ள இளம் நாயகிகளுடன் நடிக்க வேண்டாமா என்று 'புரட்சிகர' எண்ணம் அவருக்கு வந்துள்ளது.

உடனே தனது பட்டாளத்துடன் '180' பட நாயகி நித்யா மேனனை சந்தித்துள்ளார். அவரைப் பார்த்தும் நித்யா இவரு 'அவராச்சே', எதற்காக இங்கு வந்திருக்கிறார் என்று நினைத்திருக்கிறார். உடனே சீனிவாசன் தான் நடிக்கும் புதிய படத்தில் தன்னுடன் ஜோடி சேருமாறும், அதற்காக ரூ. 1 கோடி வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் 1 கோடி தருவதாக கூறியது கூட நித்யாவுக்கு அதிர்ச்சி தரவில்லையாம், மாறாக, கூட நடிக்குமாறு கேட்டதுதான் பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம். சினிமா உலகில் வாய்ப்பு தேடி வந்தால், அது பிடிக்காவிட்டால் நேரடியாக முடியாது என்று கூற மாட்டார்கள். ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சங்காத்தமே வேண்டாம் என்று விலகி விடுவார்கள். அதே பாணியில், நாசூக்காக சீனியர் நடிகர்களுடன் நான் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட பவர் ஸ்டாருக்கு கொஞ்ச நேரம் 'பவர்' போய்விட்டது.

இருந்தாலும் வேறு வழியில்லாமல், மனதைத் தேற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். 'பவர் ஸ்டார்' முகம் பவரில்லாமல் இருப்பதைப் பார்த்த ஆதரவாளர்கள் விடுங்கண்ணே நித்யா மேனன் இல்லை என்றால் என்ன. நாம் டாப்ஸியை கேட்போம் என்று ஆறுதல் கூறியிருப்பதாக தெரிகிறது.

அனேகமாக டாப்ஸி 'டாப் கியரில்' சென்னையை விட்டு தற்காலிகமாக வேறு ஏரியாவுக்குப் பறந்து விடலாம் என்று தெரிகிறது.
 

சிரஞ்சீவி தம்பிக்கு குரல் கொடுக்கும் 'தல'


இயக்குனர் விஷ்ணுவர்தனின் தெலுங்கு படமான பஞ்சா தமிழில் டப் செய்யப்படுகிறது. அதில் ஹீரோ பவன்குமாருக்கு அஜீத் குமார் குரல் கொடுக்கிறார்.

அஜீத் குமார் பில்லா 2 படத்தில் படு பிசியாக இருக்கிறார். அதே போன்று இயக்குனர் விஷ்ணுவர்தன் சிரஞ்சீவி தம்பியை வைத்து பஞ்சா என்னும் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் 'தீராத விளையாட்டுப் பிள்ளையில்' நடித்த நடிகை சாரா ஜேன் மற்றும் மாடல் அழகி அஞ்சலி லாவனியாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தமிழில் டப் செய்கிறார் விஷ்ணுவர்தன். ஹீரோ பவன் கல்யாணுக்கு தமிழில் குரல் கொடுக்க யாரை அணுகலாம் என்று யோசித்த அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது நம்ம 'தல' தான்.

என்னதான் விஷ்ணுவர்தன் பில்லா 2 படத்தில் இருந்து விலகினாலும் அவருக்கும், அஜீத்துக்கும் இடையேயான நட்பு கெடவில்லை. அதனால் அஜீத் குமாரை அணுகி பவன் கல்யாணுக்கு கொஞ்சம் குரல் கொடுங்களேன் என்று கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகிறது. அஜீத் பில்லா-2 படத்தையும், விஷ்ணுவர்தன் பஞ்சா படத்தையும் முடித்த பிறகு இருவரும் சேர்ந்து பணிபுரியவுள்ளனர்.
 

சோனா 'எபக்ட்': பார்ட்டினாலே தலைதெறிக்க ஓடும் வெங்கட் பிரபு


நடிகை சோனா-எஸ்.பி.பி. சரண் விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடு்தது இயக்குனர் வெங்கட் பிரபு இப்போதெல்லாம் நைட் பார்ட்டி என்றாலே தலைதெரிக்க ஓடுகிறாராம்.

மங்காத்தா படம் ஹிட்டானதற்காக அதில் நடித்த நடிகர் வைபவ் மது விருந்து வைத்தார். அதில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை சோனா பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ். பி. பி. சரண் தன்னை கற்பழிக்க முயன்றதாக போலீசில் புகார் கொடுத்தார். வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சரணை சும்மாவிட மாட்டேன் என்று வீர வசனம் பேசிய சோனா கடைசியில் சமாதானம் ஆகிவிட்டார். மன உளைச்சல் காரணமாக 1 ஆண்டுக்கு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட பார்ட்டியில் வெங்கட் பிரபுவும் இருந்தார். அவரது பெயரும் கூட லேசுபாசாக அடிபடத் தொடங்கியது. தற்போது இரவுப் பார்ட்டி, மது பார்ட்டி என்றாலே பிரபுவுக்கு அலர்ஜியாகி விட்டதாம். பார்ட்டிக்குப் போலாமா என்று கேட்டாலே ஓடி விடுகிறாராம்.

தன் மகள் ஷிவானியின் பிறந்தநாளை கடந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாகக் கொண்டிய அவர் இந்த ஆண்டு மலேசியாவுக்கு ஷிப்ட் பண்ணி விட்டாராம்.

வெங்கட் பிரபு மலேசியாவில் கொடுத்த பார்ட்டியில் சர்ச்சைக்குரிய சென்னை பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆஜராகியிருந்திருக்கின்றனர். ஆனால் சோனாவை மட்டும் அழைக்கவேயில்லையாம்.

இவர்தான் இப்படி, இவரது தம்பி பிரேம்ஜி அமரனுக்கு இந்தப் பயமெல்லாம் இல்லையாம். தொடர்ந்து வழக்கம் போல கை விரல்களை நீட்டி மடக்கி வித்தை செய்தபடி பார்ட்டிகளுக்குப் போய் வருகிறாராம்.
 

மாயவரம் இயக்குநர் ராஜேந்திரனை கைது செய்ய நடவடிக்கை!


சென்னை: போலீஸ் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்திய சினிமா இயக்குநர் ராஜேந்திரனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை நந்தம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குள் பர்மா காலனி உள்ளது. இங்குள்ள முனீஸ்வரர் கோவில் அருகே கடந்த 12-ந் தேதி அன்று 'மாயவரம்' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

நள்ளிரவில் நடந்த இந்த படப்பிடிப்புக்கு அரசு அனுமதியோ, போலீஸ் அனுமதியோ வாங்கப்படவில்லை. முறையாக போலீசாருக்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை.

தன்னிச்சையாக படப்பிடிப்பு நடத்தி வந்த படப்பிடிப்பு குழுவினர் நள்ளிரவில் பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதை தட்டிக்கேட்ட அந்த பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரையும் மிரட்டியுள்ளனர். இதனால் சுப்புலட்சுமி நந்தம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நந்தம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. போலீசாரை பார்த்ததும் அந்த படத்தின் தயாரிப்பு மேலாளர் மூர்த்தி, படத்தின் இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள் மீது போலீஸ் அனுமதியில்லாமல் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் படப்பிடிப்பு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

சித்தார்த் - ஸ்ருதி பிரிந்தனர்!


நடிகர் சித்தார்த்தும் ஸ்ருதியும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாஸனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல் ஹாஸனுக்கும் மகளின் இநத உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர்.

இதனை ஸ்ருதி மறுக்கவில்லை. அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார்.

இந்த நிலையில் இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது.

உறவு குறித்து மவுனம் காத்தது போலவே, இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி - சித்தார்த் எதுவும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் சித்தார்த் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காததால் ஸ்ருதி விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.
 

தயாரிப்பாளரிடம் சம்பளத்தை திருப்பித் தந்த விமல்!


நல்ல படம்... அருமையான படைப்பு என போற்றப்படும் சில படங்கள் வணிக ரீதியில் தாக்குப் பிடிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதில் ரசிகர்களின் பங்கும் மீடியாவின் பங்கும் 'மகத்தானது'!

மசாலா படங்களைத் தாங்கு தாங்கென்று தாங்கும் இவர்கள் நல்ல படங்களைக் கண்டுகொள்ளாமல் போவதால் உயர்ந்த லட்சியத்தோடு வரும் படைப்பாளிகள் மசாலா ரூட்டுக்குத் தாவுகிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி, மிக அருமையான படைப்பு என விமர்சகர்களால் புகழப்பட்ட சற்குணத்தின் வாகை சூட வா படத்துக்கும் அப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் வணிக ரீதியாக ஆதரவு தராததால் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.

ஒருவேளை இந்தப் படம் ஓடாவிட்டால் என் சம்பளத்தை திருப்பித் தந்துவிடுகிறேன் என படத்தின் நாயகன் விமல் முன்பே தயாரிப்பாளர் முருகானந்தத்துக்கு வாக்களித்திருந்தாராம்.

இந்த நிலையில் படம் வணிக ரீதியாகப் போகவில்லை என்று தெரிந்ததும், தனது வாக்கைக் காப்பாற்றும் விதத்தில் சம்பளப் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுத்துள்ளார் விமல். அடுத்து இரு புதிய படங்களில் ஒப்பந்தமான அவர், அந்தப் படங்களுக்காக வாங்கி அட்வான்ஸ் தொகையை முருகானந்தத்துக்குக் கொடுத்து, அவரை சிக்கலிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

விமலின் இந்த செயல் கோடம்பாக்கத்தையே வியக்க வைத்துள்ளது. சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்ற அவரது உயர்ந்த நோக்கத்தைக் கண்டு நெகிழ்ந்துவிட்டாராம் தயாரிப்பாளர். வாகை சூட வாவில் மிக கஷ்டப்பட்டு உழைத்திருந்தார் விமல். சேற்றிலும் புழுதியிலும் புரட்டி எடுத்திருந்தார்கள் அவரை. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்ததை, தயாரிப்பாளருக்கு திருப்பித் தந்திருப்பது அவரது உயர்ந்த குணத்தைக் காட்டுவதாக தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இப்படி பணத்தைத் தந்ததோடு, அடுத்த படத்தில் இலவசாகவே நடிச்சுத் தர்றேன் கவலைப்படாதீங்க என்று தயாரிப்பாளரை திக்கு முக்காட வைத்துள்ளார் விமல்.
 

'குளிப்பது' எப்படி?-'டெமோ' காட்டும் பூனம் பாண்டே!


சிலருக்கு வாழ்க்கை இயல்பிலேயே எப்போதும் பரபரப்பாக இருக்கும். சிலரோ, கடுமையாக முயற்சித்து எப்போதும் பரபரப்பாக வைத்துக் கொள்ள முயல்வார்கள். இதில் பூனம் பாண்டே 2வது ரகம் போல.

இவரை சில மாதங்களுக்கு முன்பு வரை நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் இவர் விட்ட ஒரே ஒரு ஸ்டேட்மென்ட்டால் உலகம் பூராவும் பரவி பாப்புலராகி விட்டார். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக காட்சி தருவேன் என்று இவர் விட்ட ஸ்டேட்மென்ட்டால் வலையுலகமே வாரிச் சுருட்டிக் கொண்டு பூனம் பாண்டே குறித்த செய்திகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தது.

ஆனால் தான் சொன்னபடி பூனம் செய்யவில்லை என்பது வேறு கதை. அதற்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டு அம்பேல் என எஸ்கேப் ஆகி விட்டார் பூனம். இருப்பினும் அத்துடன் நில்லாத அவர் தற்போது பார்ட் பார்ட்டாக தனது உடல் பாகங்களை உலகுக்குக் காட்ட ஆரம்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது முக்கால் கவர்ச்சிகரமான போஸ்களை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். பின்னர் அவரது எடுப்பான முன்னழகுப் படங்களை உலவ விட்டார். தற்போது மேலும் ஒரு படி முன்னேறி, குளிக்கும் காட்சி ஒன்றை வீடியோவில் வெளியிட்டு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில்தான் இந்த வீடியோவையும் இணைத்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் குளியல் அறையில்.,பாத் டப்பில் நின்றபடியும், வளைந்து நெளிந்தபடியும், ஹேன்ட் ஷவர் மூலம் தனது உடலில் தண்ணீரை பீய்ச்சியடித்தபடியும் காட்சி தருகிறார் பூனம்.

வெள்ளை நிறத்தில் வெறும் உள்ளாடைகளுடன் மட்டும் காட்சி தரும் பூனம் பாண்டேவின் இந்த வீடியோ படு கவர்ச்சிகரமாக இருக்கிறது. விரைவில் பூனம் பாண்டேவின் புதிய இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதில்தான் இந்த வீடியோ மற்றும் இதுபோன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் இடம் பெறவுள்ளன. இந்த குளியலறை வீடியோவின் இறுதியில், விரைவில் இதுபோன்ற பல வீடியோக்களை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், காட்சி முடிகிறது.



இன்னும் என்னென்ன பூதமெல்லாம் கிளம்பப் போகிறதோ பூனம் பாண்டேவிடமிருந்து...!