இசையமைப்பாளர் சக்ரி விஷம் கொடுத்து கொலை?: தாய், மனைவி ஒருவர் மீது ஒருவர் சரமாரி புகார்

ஹைதராபாத்: பிரபல இசை அமைப்பாளரும், தெலுங்கு பாடகருமான சக்ரி விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக ஹைதராபாத் போலீசில் மனைவி மற்றும் தாயார் தனித்தனியே ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளித்துள்ளனர்.

தெலுங்குப் பாடகரும், பிரபல இசை அமைப்பாளருமான சக்ரி(40), கடந்த மாதம் திடீரென மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனையில் கூறப்பட்டது.

இந்நிலையில், தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சக்ரியின் மனைவி ஸ்ராவனி ஹைதராபாத் ஜூப்லிஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

இசையமைப்பாளர் சக்ரி விஷம் கொடுத்து கொலை?: தாய், மனைவி ஒருவர் மீது ஒருவர் சரமாரி புகார்

அப்புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் எனது கணவர் மாமியார் வித்யாவதி மற்றும் மைத்துனி குடும்பத்துடன் ஜூப்ளி ஹில்ஸ் ஜர்னலிஸ்ட் காலனியில் குடியிருந்த வந்தேன். எனது 2-வது மைத்துனி கிருஷ்ண பிரியா கணவர் ராஜேஸ்வர ராவுக்கு வியாபாரத்துக்காக எனது கணவர் சக்ரி ரூ.45 லட்சம் கொடுத்தார். கடந்த நவம்பர் 27-ந்தேதி பணத்தை திருப்பி கேட்டார்.

இதனால் எனது மாமியார் கோபம் அடைந்து யூகப் கூடாவில் உள்ள அவரது இன்னொரு மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.

டிசம்பர் 14-ந்தேதி இரவு எனது மாமியார் அழைத்ததின் பேரில் எனது கணவர் சக்ரி யூகப்கூடா சென்றார். புறப்படும் போது மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். ஆனால் இரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிய போது மிகவும் சோர்வாக இருந்தார். சகோதரி வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாக கூறினார். சொத்து விஷயத்தில் அவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் சொந்தத்தை விட அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டு கூறி தூங்கச் சென்றார்.

ஆனால் காலையில் எழுந்திருக்கவே இல்லை. அசைவற்று இருந்த அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.

எனது கணவர் மறைவுக்கு பிறகு என்னை எனது மாமியாரும், மைத்துனிகளும் சித்ரவதை செய்தார்கள். வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார்கள்.

இவர்களது செயல்பாடுகளை பார்க்கும் போது எனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கிறேன். அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன்.

எங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று எனது கணவர் குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது எனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எனது கணவர் குடும்பத்தினர் தான் காரணமாக இருக்கும். எனது உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் எனது கணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், ‘‘ஸ்ராவனியின் மாமியார் வித்யாவதி, மைத்துனர் மகித் என்ற மாதவராஜ், மைத்துனிகள் வானிதேவி, கிருஷ்ண பிரியா இவர்களது கணவர்கள் லட்சுமணராவ், நாகேஸ் வரராவ், உறவினர்கள் ஆதர்ஷினி, காளிகிரி, காளி பிரத்யுக்ஷா ஆகிய 9 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ராவனியின் புகாரைத் தொடர்ந்து சக்ரியின் தாயார் வித்யாவதியும் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சக்ரியை அவரது மனைவியும், மனைவியின் பெற்றோரும் சேர்ந்து விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சக்ரியின் உடலை பிரேதபரிசோதனை செய்ய வேண்டாம் என ஸ்ராவனி சம்மதிக்க வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி மற்றும் தாயாரின் புகார்களைத் தொடர்ந்து, சக்ரியின் மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் படத்துக்கு கோல்டன் குளோப் விருது

வெஸ் ஆன்டர்சன் இயக்கிய 'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்' சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருதினைப் பெற்றுள்ளது. இசை மற்றும் காமெடிப் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் மதிப்பு மிக்க 72வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நேற்று இரவு நடந்தது.

தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் படத்துக்கு கோல்டன் குளோப் விருது

இந்த விழாவில் காமெடி மற்றும் இசைப் பிரிவில் சிறந்த படமாக தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் படம் தேர்வு செய்யப்பட்டது.

இந்தப் படத்தில் ரால்ப் ஃபென்ஸ் நடித்துள்ளார். ஜூப்ரோகா என்ற கற்பனையான ஒரு நாட்டில் உள்ள ஹோட்டல் அதிபரைச் சுற்றி நிகழும் கதை இந்தப் படம். அட்ரின் பிராடி, எட்வர்ட் நார்டன், ஜெப் கோல்ட்ப்ளம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த விருது டேவிட் ஓ ரஸ்ஸல் இயக்கிய அமெரிக்கன் ஹஸ்ஸில் படத்துக்கு வழங்கப்பட்டது.

 

இதுபோல் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? - கண்ணீர் வடித்த ராக்லைன் வெங்கடேஷ்!

யாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைக்காத வாய்ப்பை லிங்கா மூலம் எனக்கு ரஜினி வழங்கினார். ஆனால் அந்தப் படத்தை சரித்திர வெற்றிப் படமாக ஆக்கும் வாய்ப்பைக் கெடுத்துவிட்டார்கள் சிங்கார வேலனும் அவரது கூட்டாளிகளும் என்று கண்கலங்கக் கூறினார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.

இதுகுறித்து அவர் மீடியா நிருபர்களிடம் பேசுகையில், "எப்பேற்பட்ட வாய்ப்பு இது? நான் ரஜினி சாரை நடிகராகப் பார்க்கவில்லை. அவரது தீவிர ரசிகன் நான். தன் ரசிகனைத் தயாரிப்பாளராக்கிப் பார்த்தார் ரஜினி சார். அவர் என் தெய்வம். அவரை வைத்து நான் தயாரித்த முதல் படம் இது. இந்தப் படம் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும்... இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கெடுத்துவிட்டார்களே.... இதைக் கெடுத்ததை என்னால் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது சார்!" என்றார்.

இதுபோல் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? - கண்ணீர் வடித்த ராக்லைன் வெங்கடேஷ்!

-இந்த வார்த்தைகளை வெங்கடேஷ் சொன்னபோது, உணர்ச்சி மேலீட்டால் கண்கலங்கினார்.

மேலும் கூறுகையில், "பணம் என்பது ஒரு பொருட்டல்ல... மனிதர்கள்தான் முக்கியம் சினிமா என்பது ஒரு குடும்பம். இதில் சட்ட நடவடிக்கை எடுத்தால் கசப்பு மட்டும்தான் மிஞ்சும். நான் அதை விரும்பவில்லை. ஆனால் என்னால் சிங்கார வேலனை மட்டும் மன்னிக்கவே முடியாது. என் தெய்வம் ரஜினியின் நல்ல படத்தை திட்டமிட்டுக் கெடுத்த அவர் அதற்கான பலனைப் பெறுவார்.

31 படம் தயாரித்திருக்கிறேன். 30 ஆண்டுகள் சினிமா தொழில் செய்கிறேன். ஆனால் படம் வெளியான நான்காவது நாளே அதைக் கெடுக்க பிரச்சாரத்தை ஆரம்பித்து, நான்காவது வாரத்தில் உண்ணாவிரதம் வரை கொண்டு போன ஒரு நிலைமையை இங்கேதான் பார்க்கிறேன். இது நிச்சயம் நஷ்ட ஈடு கேட்டு நடந்த உண்ணாவிரதமில்லை என்பதை மக்கள் அறிவார்கள்," என்றார்.

 

கோல்டன் குளோப் 2015 - பாய்வுட் படத்துக்கு மூன்று விருதுகள்

2015-ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பாய்வுட் படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது.

2015-ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்து முக்கியமான கவுரவமாகப் பார்க்கப்படுவது இந்த கோல்டன் குளோப் விருது.

கோல்டன் குளோப் 2015 - பாய்வுட் படத்துக்கு மூன்று விருதுகள்

ரிச்சர்ட் லிங்க்லேடர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பாய்வுட் படம் 5 பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைப்பட்டது.

இவற்றில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், மற்றும் சிறந்த துணை நடிகர் (இதன் ஹாவ்க்) ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றது.

இந்த ஆண்டு சிறந்த பட பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களில் பாய்வுட்டும் ஒன்று.

கோல்டன் குளோப் விருது பெற்ற மற்ற படங்கள் மற்றும் கலைஞர்கள்:

சிறந்த நடிகர் (பொது): எட்டி ரெட்மைனே (தி தியரி ஆப் எவ்ரிதிங்)

சிறந்த நடிகர் (இசை அல்லது காமெடி) : மைக்கேல் கீட்டன் (பர்ட்மேன்)

சிறந்த நடிகை: ஜூலியன் மோர் (ஸ்டில் அலைஸ்)

சிறந்த நடிகை : எமி ஆடம்ஸ் (பிக் ஐஸ்)

சிறந்த இயக்குநர் : ரிச்சர்ட் லிங்க்லேடர் (பாய்வுட்)

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் : ஜோஹன் ஜோஹன்சன் (தி தியரி ஆப் எவ்ரிதிங்)

சிறந்த ஒரிஜினல் பாட்டு: ஜான் லெஜன்ட் அன்ட் காமன் (க்ளோரி... செல்மா)

 

அமிதாப் தலைமையில் மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா- முன்னணி கலைஞர்கள் பங்கேற்பு

சென்னை: ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வரும் 20-ஆம் தேதி மும்பையில் அமிதாப் பச்சன் தலைமையில் பாராட்டு விழா நடக்கிறது.

பாலிவுட் திரையுலகம் சார்பில் நடத்தப்படும் இந்தப் பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை இயக்குநரும் தயாரிப்பாளருமான பால்கியும் அமிதாப் பச்சனும் செய்து வருகிறார்கள்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பால்கி கூறியது:

தற்போது எனது இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து வரும் ஷமிதாப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

அமிதாப் தலைமையில் மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா- முன்னணி கலைஞர்கள் பங்கேற்பு

இந்த விழாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்து ஆயிரம் படங்கள் என்ற மைல் கல்லை எப்போதோ தாண்டிவிட்ட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தவுள்ளோம். இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அனைவருக்கும் அழைப்புகளை அமிதாப் பச்சனே அனுப்பி வருகிறார்.

விழாவில் பாலிவுட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள், பின்னணி பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஜானகி, பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இளையராஜா இசையமைத்த படங்களில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். விழாவில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இளையராஜாவும் பாடுகிறார்.

மேடையில் அவர் பாடுவதை, இசையமைப்பதை பார்ப்பதே ஒரு பரவசமான அனுபவம். எனவே செய்தியாளர்களான நீங்களும் மும்பைக்கு வாங்க," என்றார்.

ஷமிதாப் படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒரு பாடலை அமிதாப் பச்சன் பாடியுள்ளார்.

 

நோ பார்க்கிங்கில் கார்: கன்னட முன்னணி ஹீரோ தர்ஷனுக்கு அபராதம் விதித்த பெங்களூரு போலீஸ்

பெங்களூரு: நோ-பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தியதற்காக, கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகன் தர்ஷன் காருக்கு அபராதம் விதித்துள்ளனர் பெங்களூரு போலீசார்.

கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தர்ஷன். 63 படங்களில் நடித்துள்ளார், 3 படங்களை தயாரித்துள்ளார். இவரிடம் ஆடி நிறுவனத்தின் கியூ-7 வகை கார் உள்ளது.

பெங்களூரு காந்திநகரிலுள்ள மதசார்பற்ற ஜனதாதள தலைமை அலுவலகத்தின் வெளியே, இன்று, இந்த காரை நிறுத்தி வைத்துவிட்டு, தனிப்பட்ட வேலைக்காக தர்ஷன் சென்றிருந்தார்.

நோ பார்க்கிங்கில் கார்: கன்னட முன்னணி ஹீரோ தர்ஷனுக்கு அபராதம் விதித்த பெங்களூரு போலீஸ்

ஆனால், கார் நிறுத்தப்பட்ட பகுதி நோ-பார்க்கிங் ஏரியாவாகும். எனவே டிராபிக் போலீசார், அந்த காருக்கு அபராதம் விதித்தனர். அப்போதுதான், காரின் பக்கவாட்டு கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்ததையும் போலீசார் கவனித்துள்ளனர். எனவே, அதற்கும் சேர்த்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த வாரம்தான், கன்னட திரையுலகின் மற்றொரு ஹீரோவான துனியா விஜய் காரில் கருப்பு பிலிம் ஒட்டியிருந்ததற்காக அபராத விதிப்புக்கு உள்ளானார் என்பது நினைவிருக்கலாம்.

செல்வாக்கு உள்ள நடிகர்களுக்கே இந்த நிலை என்றால், நம்மை போலீசார் சும்மா விட்டுவிடுவார்களா என்ற அச்சம், இவ்விரு சம்பவங்களால், பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 

குட்டி பிரேக் எடுக்கும் அஜீத்: தள்ளிப் போகும் சிவாவின் படம்

சென்னை: அஜீத் தனது கர்ப்பமான மனைவியுடன் நேரத்தை செலவிட இரண்டு மாதம் பிரேக் எடுக்க உள்ளாராம்.

அஜீத், ஷாலினி தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். கௌதம் மேனனின் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் அஜீத். படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவித்தனர். பின்னர் என்னவென்றால் படம் வரும் 29ம் தேதி தான் ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

ஷாலினிக்காக குட்டி பிரேக் எடுக்கும் அஜீத்

இதையடுத்து அவர் பொங்கல் பண்டிகை முடிந்ததும் சிறுத்தை சிவாவின் படத்தில் நடிக்கத் துவங்குவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் நேரத்தை செலவிட இரண்டு மாத காலம் பிரேக் எடுக்கிறாராம். இதனால் சிவாவின் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது என்று கூறப்படுகிறது.

முன்னதாக ஆரம்பம் படத்தில் நடிக்கையில் அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு அவர் இன்னும் அறுவை சிகிச்சை செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

ஒரு வேளை இந்த குட்டி பிரேக்கில் அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொள்வாரோ?

 

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...! எஸ் பாஸ், இதைத்தான் சிவா இயக்கப் போகிறார்!

சென்னை : ரேடியோவில் இருந்து சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி, தமிழ்ப் படம் என்ற ஒரே படத்தில் "உலக சூப்பர் ஸ்டாராகவும்" மாறி, "நடனத்திலும், நடிப்பிலும்" உலகப் புகழ் பெற்ற பல கலைஞர்களுக்கு "சவால்" விட்டு சாதனை படைத்த நடிகர் சிவா, விரைவில் இயக்குநராகப் போகிறாராம்.

ரேடியோ தொகுப்பாளராக இருந்த சிவா, வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ்படம், தில்லுமுல்லு, கலகலப்பு, வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு...! எஸ் பாஸ், இதைத்தான் சிவா இயக்கப் போகிறார்!

நகைச்சுவையான உச்சரிப்பு மற்றும் முகபாவனைகள் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்தார் சிவா. இவர் தற்போது 144 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே ‘ஆடாம ஜெயிச்சோமடா' படத்தின் மூலம் வசனகர்த்தாவாக மாறினார் சிவா. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து, நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க வசனகர்த்தாவாகவும் தொடருவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர், வசனகர்த்தா என்பதைத் தொடர்ந்து விரைவில் இயக்குநராக புது அவதாரம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் சிவா. இதற்கென மூன்று கதைகளை ரெடி செய்து வைத்துள்ளாராம்.

இதில், ‘காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு' என்ற கதையை அவரே இயக்கி, நடிக்கவும் போகிறாராம். இந்தப் படத்தை முழுக்க முழுக்க மதுரையில் வைத்து இயக்கப் போகிறாராம் அச்சு அசல் சென்னைப் பையனான சிவா.

‘144' படத்தை முடித்த பிறகு, தனது புதிய படத்தை சிவா இயக்கத் தொடங்குவார் என அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

டோலிவுட் போகும் ஷங்கர்: யார் அந்த அதிர்ஷ்டக்கார ஹீரோ?

சென்னை: ஷங்கர் விரைவில் தெலுங்கில் நேரடிப் படம் ஒன்றை இயக்க உள்ளார்.

விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் தெலுங்கு டப்பிங்கான மனோகருடுவின் இசை வெளியீட்டு விழா அண்மையில் ஹைதராபாத்தில் எளிமையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்கள் ஷங்கரையும், அவரது படைப்புகளையும் பாராட்டினார்கள்.

டோலிவுட் போகும் ஷங்கர்: யார் அந்த 'லக்கி' ஹீரோ?

விழாவில் பேசிய ஷங்கர் தான் விரைவில் நேரடி தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்தார். தெலுங்கு படத்தை இயக்கும் ஆசை இருந்தும் அது பல காரணங்களால் இதுவரை கைகூடவில்லை என்றார் ஷங்கர்.

முன்னதாக அவர் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கு படம் எடுக்க இரண்டு முறை முயற்சி செய்தும் நடக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் தற்போது தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.

ஷங்கரின் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு எந்த ஹீரோவுக்கு கிடைக்கப் போகிறதோ?

கோலிவுட்டில் ஷங்கரின் இயக்கத்தில் அல்லது அவரது தயாரிப்பிலாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை பல நடிகர்களுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

யு ஏ சான்றிதழுடனே வெளியாகிறது ஐ... போட்ட முதல் திரும்புமா?

ஷங்கரின் யு ஏ சான்றிதழுடனே வெளியாகிறது ஐ... போட்ட முதல் திரும்புமா?  

படத்தின் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் மிக கோரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்தப் படத்துக்கு யு ஏ சான்று கொடுத்தது சென்சார்.

வரி விலக்கு கிடைக்காமல் போகுமே என்பதற்காக, யு சான்று பெற டெல்லியில் உள்ள ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினர்.

ஆனால் அவர்கள் யு சான்று தர முடியாது என மறுத்துவிட்டனர். இதற்காக காத்திருந்தால் படம் மொத்தமாகவே போய்விடும் வாய்ப்பு இருப்பதால், யு ஏ சான்றுடனே வெளியிடுகிறார்கள்.

இதனால் 30 சதவீத வரியை அரசுக்கு செலுத்தியாக வேண்டும், ஐ வசூலிலிருந்து.