மணிவண்ணனைக் 'கொன்ற' குரு பாரதிராஜா!!

Bharathirajaa S Abusive Comments Kills Manivannan

மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பு மற்றும் அகால மரணத்துக்குக் காரணமே, இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான்... அவரது கொடூரமான வார்த்தைகளே மணிவண்ணனைக் கொன்றுவிட்டன என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாரதிராஜாவிடமிருந்து வந்து மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர்கள் இருவர்தான். ஒருவர் கே பாக்யராஜ். மற்றவர் மணிவண்ணன்.

பாரதிராஜாவின் கேம்பில் எழுத்தாளர்கள் என கம்பீரமாகச் சொல்லிக்கொண்ட இருவர் பாக்யராஜும் மணிவண்ணனும்தான். இதை பலமுறை பாரதிராஜாவே கூறியுள்ளார்.

மணிவண்ணன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் வேகத்துக்கு படப்பிடிப்பில் யாராலும் ஈடு கொடுக்க முடியாது. அதே நேரம் மிக இளகிய மனம் படைத்தவர். தன்னிடம் பழகிய அனைவரிடமுமே வெளிப்படையாக நடந்து கொள்பவர்.

எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தாலும், தான் பெரிதும் மதிப்பவர்கள் தன்னை அவதூறாகப் பேசினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார்.

ஆயிரம் கருத்து பேதங்கள் இருந்தாலும், தான் மதிக்கும் ஒருவரை எப்போதும் மரியைதைக் குறைவாக அழைத்ததில்லை மணிவண்ணன். ஈழப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தாலும், அவரை எப்போதும் தலைவர் கலைஞர் என்றே குறிப்பிட்டு வந்தார் அத்தனை பேட்டிகளிலும்.

இயக்குநர் பாரதிராஜா மீதும் மணிவண்ணனுக்கு வருத்தங்கள் உண்டு. அவர் தன்னை நடத்திய விதம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மணிவண்ணன் எள்ளலுடன் பேசினாலும், 'பாரதிராஜா என் தகப்பனைப் போன்றவர். அவரில்லா விட்டால் இன்று திரையுலகில் நான் இல்லை. என்னை இரண்டாம் முறை ஈன்றவர். அவருக்கு என் மீது அன்பிருக்கிறதோ இல்லையோ... எனக்கு எப்போதும் உண்டு. நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால்கூட மன்னிச்சிடுங்கப்பா," என்று வெளிப்படையாகப் பேசியவர் மணிவண்ணன்.

ஆனால் பாரதிராஜாவுக்கோ அந்த பெருந்தன்மை துளியும் இல்லை. தன்னைவிட 20 வயது இளையவரான மணிவண்ணன் பற்றி பாரதிராஜா சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருந்ததைப் படித்த அத்தனைப் பேருமே முகம் சுளித்ததோடு, பாரதிராஜாவை சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். அத்தனை கேவலமான எழுத்து.

இதைப் படித்த மணிவண்ணன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவரிடம் பலரும் கருத்துக் கேட்க முயன்றனர். கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது அலைபேசி. ஆனால் அவர் யாருக்கும் பதிலோ விளக்கமோ சொல்லவில்லை.

ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை இந்த மனஅழுத்தமே கொன்றுவிட்டது என்பதுதான் பேச்சாக உள்ளது.

யாகாவாராயினும் நாகாக்க என அய்யன் சொன்னதை பாரதிராஜாக்கள் மறந்துவிடுகிறார்களே!!

பாரதிராஜா ஆனந்தவிகடனில் மணிவண்ணன் பற்றி எழுதியது குறித்து இரு தினங்களுக்கு முன் நாம் வெளியிட்ட கட்டுரை..

 

மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்

சென்னை: மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

அப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார்.

seeman comletes the last wish manivannan   

பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன்.

இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது, அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார். தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர்.

தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை.

சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், "நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.

தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது.

என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை," என்று கூறினார்.

நிறைவேற்றிய சீமான்...

அந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். இன்று மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த சீமான், அவர் உடலில் புலிக்கொடியைப் போர்த்தினார்.

நாளை மாலை மணிவண்ணனின் இறுதிச் சடங்கு சென்னை அருகே போரூரில் நடக்கிறது. மணிவண்ணனின் கேகே நகர் வீட்டிலிருந்து புலிக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று அவரை அடக்கம் செய்கிறார்கள்.

 

ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!

ஹாலிவுட் படமான சூப்பர் மேன் 3டி, வெளியான முதல் நாளிலேயே ரூ 300 கோடிக்கு மேல் குவித்துள்ளது.

சூப்பர் மேன் வரிசைப் படங்களில் லேட்டஸ்டாக வெளியாகியுள்ள படம் 'மேன் ஆப் ஸ்டீல்'.

நேற்று உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களுக்குமேல் திரையிடப்பட்டது. இந்தப்படம் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.300 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

man steel opens fresh with nearly

இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், அடுத்த மூன்று நாட்களில் ரூ 1000 கோடி வரை வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கிரார்கள். இதில் ஹென்றி கேவில், எமி ஆடம்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்னர். ஜாக் ஸ்னைடர் இயக்கியுள்ளார்.

தமிழிலிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. 225 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒரே வாரத்துக்குள் இதை வசூலித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இயக்குநர்- நடிகர்- எழுத்தாளர் மணிவண்ணன் மரணம்- திரையுலகம் அதிர்ச்சி!

சென்னை: இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.

கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா.

பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம்.

vetern film director actor manivannan passed away   

ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 600 படங்கள் வரை அவர் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார்.

மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

 

ராஞ்ஜ்ஹனா வரும்... ஆனா, அம்பிகாபதி வராது!

ambikapathy be postponed   
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் ராஞ்ஜ்ஹனாவின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதி ஒரே நாளில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் முன்னணி நடிகர் தனுஷ் முதல் முறையாக நடித்த இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சோனம் கபூர் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்துள்ளனர்.

வரும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ராஞ்ஜ்ஹனா. இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அந்தத் தேதியில்தான் தனுஷ் நடித்த நேரடி தமிழ்ப் படமான மரியான வெளியாகிறது.

தமிழில் தனுஷ், ரஹ்மானுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரே நேரத்தில் ராஞ்ஜ்ஹனா, அம்பிகாபதி, மரியான் என மூன்றையும் வெளியிடுவது சரியாக இருக்காது என்பதால், அம்பிகாபதியை நிறுத்தி வைக்க அதன் வெளியீட்டாளரான ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஜூன் 21-ம் தேதி ராஞ்ஜ்ஹனாவும் மரியானும் மட்டும் வெளியாகும். அம்பிகாபதி வேறொரு நாளில் வெளியாகும்.

தனுஷின் '3' படத்தின் இந்திப் பதிப்பை இப்படித்தான் தள்ளிப்போட்டனர். ஆனால் அது இன்றுவரை வெளியானபாடில்லை, இந்தியில். இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

 

திலீப் - மஞ்சு வாரியர் விவாகரத்து வதந்தியால் திருச்சூரில் பரபரப்பு!

Dileep Manju Heading Divorce

திருச்சூர்: முன்னணி மலையாள நடிகர் திலீப் - நடிகை மஞ்சுவாரியார் விவாகரத்து செய்ய நீதிமன்றத்துக்கு வரப் போவதாக வதந்தி பரவியதால் திருச்சூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் பெரும் கூட்டம் குவிந்தது.

முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியர் 1998-ல் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மஞ்சு வாரியர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்த நிலையில் திலீப்புக்கும், சமீபத்தில் விவாகரத்தான காவியா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக மீடியாவிலவ் பரபரப்பான செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.

இதனால் திலீப் - மஞ்சுவாரியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர். தற்போது மஞ்சுவாரியர் கணவரை பிரிந்து தனியாக வசிக்கிறார். திலீப் பெரும்பாலும் காவ்யா மாதவனுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திலீப்பும் - மஞ்சு வாரியரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்பட்டது.

இருவரும் திருச்சூர் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒன்றாக ஆஜராகி விவாகரத்து மனுதாக்கல் செய்யப் போவதாக நேற்று செய்தி பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருவரும் நீதிமன்றத்துக்கு வந்து கொண்டிருப்பதாகக் கூறப்பட்டதால், அவர்களை்ப பார்க்க பெரும் கூட்டம் கூடியது. அவர்களைச் சமாளிக்க போலீஸ் குவிக்கப்பட்டது. ஆனால் திலீப் - மஞ்சு நீதிமன்றத்துக்கு வரவே இல்லை!

 

தில்லு முல்லு - விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிப்பு: சிவா, பிரகாஷ் ராஜ், கோவை சரளா, இஷா தல்வார், சந்தானம், சூரி

இசை: எம்எஸ் விஸ்வநாதன் - யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: லக்ஷ்மண்

பிஆர்ஓ: ஜான்சன்

தயாரிப்பு: வேந்தர் மூவீஸ்

இயக்கம்: பத்ரி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படங்களில் ஒன்றான, இன்றும் வாரத்துக்கு ஒருமுறையாவது தொலைக்காட்சிகளில் தவறாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தில்லுமுல்லு படத்தை, மீண்டும் அதே பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

என்னதான் தலைமுறை இடைவெளி, ரசனை மாற்றம் என்றெல்லாம் சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒரிஜினல் தில்லுமுல்லுவையும் இந்த ரீமேக்கையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது.

அப்படி ஒப்பிட்டுப் பார்த்தால்... ஒரிஜினலுக்கு முன் இந்த ரீமேக் ஜூஜுபி!

அதே கதைதான்... திரைக்கதையில் மட்டும் இன்றைய சூழலுக்கேற்ப சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள்.

thillu mullu review

ஒரிஜினல் தில்லுமுல்லுவில் மீசையை வைத்து ஆள்மாறாட்டம் செய்வதாகக் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் சாதாரண கண் பசுபதி, பூனைக் கண் கங்குலி கந்தன் என ஆள்மாறாட்டம் செய்கிறார் சிவா.

கிட்டத்தட்ட எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வசனத்தை ஒப்பிக்கிறார் சிவா. இதையே நடிப்பு என நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் இன்றைய ரசிகர்களும் விமர்சகர்களும். ராகங்கள் பதினாறு பாடலில் சிவாவின் உடல் மொழியும் பாவங்களும்... ரொம்ப்ப பாவம்! 'தமிழ்சினிமா'வை ஒரு முறைதான் ரசிக்க முடியும். நடிக்கிற எல்லா படமும் 'தமிழ்சினிமா'வாகவே இருந்தால், உங்களை நீங்களே ஸ்பூஃப் பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

தேங்காய் சீனிவாசன் பின்னியெடுத்த அந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வேடத்தில் பிரகாஷ் ராஜ். சிவகுருநாதன் எனும் முருகபக்தராக, எதையும் சீக்கிரம் நம்புகிற அல்லது சந்தேகப்படுவராக வருகிறார். அவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர், திறமையாளர் இத்தனை மாங்காவாகவா இருப்பார்... ஆனால் ஒரிஜினலில் இப்படிக் கேட்க முடியாத அளவுக்கு தேங்காய் சீனிவாசன் பாத்திரமும் நிகழ்வுகளும் பின்னப்பட்டிருக்கும்.

சௌகார் நடித்த ஆள்மாறாட்ட அம்மா பாத்திரத்தில் கோவை சரளா. கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரகாஷ் ராஜ் சந்தேகத்துடன் இவரைப் பார்க்க வரும் நேரங்களிலெல்லாம் நாக்கில் வேலைக் குத்தி அவரை உட்கார வைத்து விடுகிறார்கள். ஒரு முறை இரு முறை என்றால் கூட பரவாயில்லை. கோயிலில், நிச்சயதார்த்தத்தின்போது, சாதாரணமாக வீட்டிலிருக்கும்போது என எப்போதும் நாக்கில் வேலோடு கோவை சரளா. முடியல!

படத்தின் பெரிய மைனஸ் கதாநாயகி இஷா தல்வார். ஏதோ மும்பை எக்ஸ்ட்ரா மாதிரி தெரிகிறார். முகத்தில் ஒரு களை இல்லை. நடிப்பு....? வீசை என்ன விலை!!

நண்பன் கூடவே இருந்து அவன் தங்கையை கரெக்ட் பண்ணுபவராக வருகிறார் பரோட்டா சூரி. ரொம்ப ஸாரி... இந்த முறை உங்கள் ஷோ எடுபடவில்லை!

பாத்திரங்கள், அதற்கான தேர்வுகளில் இயக்குநர் கோட்டைவிட்டாலும், வசனங்கள் அவருக்குக் கைகொடுக்கின்றன. சின்னச் சின்ன டைமிங் வசனங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

thillu mullu review

க்ளைமாக்ஸை முழுசாக மாற்றியிருக்கிறார்கள். குன்றத்தூர் முருகன் கோயிலில் நடக்கும் கல்யாண காட்சியும் அதில் நடக்கும் சுவாரஸ்ய ஆள்மாறாட்டங்களும் சுந்தர் சி பட எஃபெக்டைத் தருகின்றன. இந்த க்ளைமாக்ஸ் மொத்தத்தையுமே சந்தானத்திடம் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.

லக்ஷ்மனின் ஒளிப்பதிவில் விசேஷம் ஒன்றுமில்லை. துபாய் காட்சிகளில் கூட கிராபிக்ஸ் விளையாடுவதால், ஒளிப்பதிவாளர் காணாமல் போகிறார்.

எம்எஸ்வி - யுவன் இசைக் கூட்டணியில், அந்த டைட்டில் ரீமிக்ஸ் அசத்தலாக உள்ளது. ராகங்கள் பதினாறு... பாடலை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள். கார்த்திக் குரலை மட்டுமல்ல, மொத்த பாட்டையுமே கூட ரசிக்க முடியவில்லை. ஏதோ கோயிலில் கச்சேரி கேட்ட உணர்வு!

ஒரிஜினல் தில்லுமுல்லு ஒரு காமெடிப் படம் என்றாலும், அத்தனைக் காட்சிகளிலும் ஒரு நேர்த்தியும் ஒழுங்கும் ஸ்டைலும் அழகுணர்வும் மனதை ஆளும் இசையும்... அனைத்துக்கும் மேல் ரஜினியின் சுவாரஸ்ய நடிப்பும் இருந்தது. அதெல்லாம் இந்த ரீமேக்கில் இல்லை. ஒருவேளை இதெல்லாம் இல்லாமலிருப்பதுதான் இந்தத் தலைமுறை பாணி என நினைத்துக் கொண்டார்களோ!

ரஜினியின் தில்லுமுல்லு படத்தை மறந்துவிட்டு இந்தப் படத்தைப் பார்த்தால்... ரசிக்கலாம்!

 

அமீர் கதாநாயகனாக நடிக்கும் 'பேரன்பு கொண்ட பெரியோர்களே'!

Ameer Seeks Second Chance

இயக்குநர் அமீர் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார் படத்தின் தலைப்பு ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே'. இது காமெடி கலந்த அரசியல் படம் என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.

பருத்திவீரன் வெற்றிக்குப் பின்னர் தமிழ் திரை உலகில் அறியப்பட்ட இயக்குநர் அமீர். சமீபத்தில் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட ஆதிபகவன் படத்தை அவ்வளவாக ரசிகர்கள் ரசிக்கவில்லை. எனவே இயக்குநர் வேலையை கொஞ்சம் நிறுத்திவிட்டு நடிக்கப் போய்விடலாம் என்று நினைத்துவிட்டார் அமீர்.

இவர் ஏற்கனவே யோகி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் ‘கன்னித் தீவு பொண்ணா'... என்ற குத்துப் பாட்டுக்கு நடனமாடியுள்ளார்.

நீண்ட நாட்களாக ஆதி பகவான் படத்தை எடுத்து ரிலீஸ் செய்த அமீர் இப்போது மறுபடியும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேரன்பு கொண்ட பெரியோர்களே என்று படத்துக்கு பெயரிட்டுள்ளனர். காமெடி கலந்த அரசியல் படம் என்று கூறப்படுகிறது. இதனை இயக்குபவர் சந்திரன். அமீரிடம் உதவி இயக்குநராக இருந்த ஆதாம் பாலாதான் படத்தை தயாரிக்கிறார்.

 

ஒரே நாளில் தனுஷின் மரியான் - ராஞ்ஜ்ஹனா (அம்பிகாபதி)!

வரும் ஜூன் 21-ம் தேதி தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒரே நாளில் தனுஷ் நடித்த மரியான் மற்றும் முதல் இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா ஆகியவை ரிலீஸாகின்றன.

மரியான் படத்தை பரத்பாலா இயக்கியுள்ளார். நாயகியாக பார்வதி நடித்துள்ளார். ஒரு மீனவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

தனுஷ் முதன் முதலில் இந்தியில் நடித்துள்ள படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். இதுவும் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை.

june 21 big day dhanush

இதே படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பாகி வெளியாகிறது. ஒரு வகையில் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகின்றன.

தனுஷின் திரையுலக வாழ்க்கையில் இது மிகப் பெரிய விஷயமாகும். இந்தப் படங்கள் அனைத்துக்குமே இசை ஏ ஆர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வெற்றிக் கொடி நாட்டிய தனுஷ், இந்தியிலும் அதே வெற்றியைப் பெறுவாரா? அடுத்த வாரம் தெரிந்துவிடும்!

 

மிர்ச்சி சிவா, சந்தானம் மீண்டும் சேர்ந்து லூட்டியடிக்கும் 'தினசரி 4 காட்சிகள்'

Mirchi Siva Santhanam Join Hands K

சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா இயக்குனர் மணிகண்டன் சந்தானம், மிர்ச்சி சிவாவை வைத்து தினசரி 4 காட்சிகள் என்ற படத்தை எடுக்கிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த இயக்குனர் மணிகண்டன். மனிதர் காமெடியில் பின்னி பெடலெடுத்திருந்தார். சந்தானம் பவரை கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மணிகண்டன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

மிர்ச்சி சிவா, சந்தானம் மற்றும் பல நகைச்சுவை நடிகர்களை வைத்து அவர் தினசரி 4 காட்சிகள் படத்தை எடுக்கிறார். படத்தை தேனப்பன் தயாரிக்கிறார். ஏற்கனவே சிவா, சந்தானம் கூட்டணி கலகலப்பில் கலக்கியது. அந்த கூட்டணி தில்லு முல்லுவிலும் வெற்றி பெற்றுள்ளது. தில்லு முல்லு படத்தில் சந்தானத்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் சேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.