பிச்சைக்காரன் கெட்டப்பில் சிவா... ஷாக்கில் "ரஜினி முருகன்"!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ரஜினி முருகன் படத்தில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் அவர் நடித்து இருந்த ஸ்டில் ஒன்று இணையதளத்தில் வெளியானதால் படப் பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ரஜினி முருகன்.இந்தப் படத்தில் அவர் ரஜினியின் ரசிகராக நடித்து இருக்கிறார்.

Rajini murugan movie secret  stills now leaked in social networks

படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ரஜினியைப் போன்று சிவா தோன்றியதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தின் வெளியிடை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இணையத்தில் வெளியான அந்த வித்தியாசமான கெட்டப்பில் பிச்சைக்காரன் வேடத்தில் சிவா தோன்றுவது போல உள்ளது. ரகசியமாக வைத்து இருந்த படம் எப்படி வெளியானது என்று படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

படத்தின் இசை ஜூன் 7ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. படம் ஜூலை மாதம் 17ம் தேதி ரம்ஜான் விடுமுறை அன்று வெளியாகிறது. நாயகியாக கீர்த்தி சுரேஷும், காமெடியனாக பரோட்டா சூரியும் நடித்துஇருக்கின்றனர்.

வருத்தப்படாத வாலிபன் படத்திற்குப் பின் சிவாவுடன் சூரி இணைந்திருப்பதால் காமெடி காட்சிகளை படத்தில் எதிர்பார்க்கலாம்...

 

ஆத்தாடி.... ராய் லட்சுமியை ‘26 வயது எலிசபெத் ராணி’ எனப் புகழ்ந்த ரசிகர்!

சென்னை: ரசிகர் ஒருவர் தன்னை எலிசபெத் ராணி எனப் புகழ்ந்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவிட் செய்துள்ளார் நடிகை ராய் லட்சுமி.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ராய் லட்சுமி. காஞ்ஸனா, மங்காத்தா, அரண்மனை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது இவர், சவுகார்பேட்டை மற்றும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இது தவிர இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் அகிரா படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக இயங்கி வரும் பிரபலங்களில் ராய் லட்சுமியும் ஒருவர். தினமும் தனது புகைப்படம் அல்லது ஏதாவது கருத்தை அவர் பதிவேற்றம் செய்து வருகிறார்.

அந்தவகையில், இன்று, தான் காரில் அமர்ந்திருப்பது போன்ற செல்பி ஒன்றை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதைப் பார்த்த ரசிகர் ஒருவர், ‘நான் 26 வயதில் எலிசபெத் ராணியை பார்த்ததில்லை. ஆனால், இப்போது பார்க்கிறேன். தலையில் கிரீடம் மட்டும் தான் இல்லை' என கருத்து தெரிவித்துள்ளார்.

ரசிகரின் புகழ்ச்சியால் மனம் மகிழ்ந்த ராய் லட்சுமி அந்த டுவிட்டை ரீடுவிட் செய்துள்ளார்.

 

லேசாக தாடி விட்ட சிம்பு.. மேனனுக்காக!

சென்னை: தனது புதிய படங்களுக்காக லேசான தாடி மீசையுடன் சிம்பு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் பட்ட வாலு படம் ரிலீஸ் செய்யப் படாததால் மிகுந்த சோகத்தில் இருந்த சிம்பு தற்போது படங்களில் நடித்து வருவதால் சற்று நம்பிக்கையுடன் காணப் படுகிறார்.

Actor simbu's getup  change for  Gautham Menon  movie

கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படங்களும் வெளியாகாத நிலையில் விரக்தியில் இருந்த நடிகர் சிம்பு தற்போது செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் பெயரிடப் படாத புதிய படம், கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படங்களில் நடித்து வரும் சிம்பு, இந்தப் படங்களுக்காக தனது லுக்கை மாற்றி உள்ளார்.

செல்வராகவன் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நடிகை த்ரிஷா அப்படத்தில் இருந்து விலகி விட இப்போது டாப்சி, கேதரின் தெரசா என இரண்டு ஹீரோயின்களுடன் நடித்து வருகிறார் சிம்பு.

சமீபத்தில் நடந்த சந்தானம் பட ஆடியோ விழாவின்போது சிம்பு பேசுகையில் ரொம்பவே புலம்பினார் என்பது நினைவிருக்கலாம். இந்த கெளதம் மேனன் படம் வந்து அவருக்கு கை கொடுக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

கவலைப்படாம ஆத்தாவ வேண்டிக்க தம்பி எல்லாம் சரியாகிடும்!.!

 

சந்தோஷ் "ராசாத்தி" நாராயணன் இன்று பிறந்த நாள்!

சென்னை: தமிழ் ரசிகர்களை தன் இசையால் ஈர்த்துக் கொண்டிருக்கும் இளம் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிறந்த தினம் இன்று.

அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனர் ரஞ்சித்தால் இசை அமைப்பாளராக 2012ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சந்தோஷ் நாராயணன் தனது வித்தியாசமான இசையால் அனைவரையும் வசீகரித்தவர்.

அறிமுகப்படுத்திய ரஞ்சித் இந்த இரண்டு வருடத்தில் ஒரு படம் மட்டுமே (மெட்ராஸ்) முடித்திருக்கிறார். சந்தோஷ் அதற்குள் 15 படங்கள் முடித்துவிட்டார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சந்தோசிற்கு டுவிட்டரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளது.

1983 ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி திருச்சியில் பிறந்த சந்தோஷ் இந்தப் பிறந்தநாளில் 31 வயதை தொட்டிருக்கிறார்.

இவரின் இசையமைப்பில் ஜோதிகா நடித்து இன்று வெளிவந்திருக்கும் 36 வயதினிலே படத்தின் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டு வரும் இந்த நாள் உண்மையில் இவருக்கு மகிழ்ச்சியான நாள் தான்.

விரைவில் ரஜினியின் படத்திற்கு இசை அமைக்க இருக்கும் இவர் மேலும் பல சாதனைகளைத் தொடமனமார வாழ்த்துவோம் வாருங்கள்.

 

"ஒன்லி கிளாமர் நோ செண்டிமெண்ட்" – காஜல் அகர்வால் அதிரடி!

ஹைதராபாத்: தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை காஜல் அகர்வால், இனி கிளாமர் கலந்த படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்து அவரது ரசிகர்களின் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறார்.

தமிழில் பழனி படத்தில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால். பக்கம் பக்கமாக அதில் வசனம் பேசி பயமுறுத்தியிருப்பார்.

I want only glamour, says Kajal Agarwal

அதன் பின்னர் துப்பாக்கி, ஜில்லா, போன்ற வெற்றி படங்களில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையான காஜலுக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் கவர்ச்சியாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியுள்ளார் காஜல்.

தமிழில் கைவசம் தனுசுடன் நடித்து வரும் மாரி, விஷாலுடன் பாயும் புலி, மர்ம மனிதன் போன்ற படங்களில் நடித்து வரும் காஜல் கிளாமர் குறைந்த மற்றும் வில்லத்தனமான வேடங்களில் நடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் ரசிகர்கள் என்னை கிளாமராகவே பார்க்க மட்டுமே ஆசைப்படுகிறார்கள் எனவே கிளாமர் குறைந்த வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்திருக்கிறார்.

கோடை வெயிலுக்கு ஏற்ற மாதிரி ஜில்லுனு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் காஜலுக்கு கோவில் கட்ட யாராவது கிளம்பினாலும் கிளம்பலாம்!

 

36 வயதினிலே - விமர்சனம்

Rating:
4.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஜோதிகா, ரகுமான், ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ், அபிராமி, தேவதர்ஷினி
ஒளிப்பதிவு: திவாகரன்
இசை: சந்தோஷ் நாராயணன்
வசனம்: விஜி
தயாரிப்பு: சூர்யா
கதை - இயக்கம்: ரோஷன் ஆன்ட்ரூஸ்

ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும், சினிமா வியாபாரத்தைத் தாண்டி இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்ல விஷயங்களைத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு படத்தைத் தந்த தயாரிப்பாளர் சூர்யாவுக்கும், இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸூக்கும் முதலில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவோம்.

இப்படியொரு கவுரவமான மறுபிரவேசம் வேறு எந்த நடிகைக்காவது அமையுமா தெரியவில்லை. வெல்கம் ஜோதிகா!

கணவன், குழந்தை, குடும்பத்துக்காக தன் சுயத்தை இழந்து நான்கு சுவர்களுக்குள் முடங்கி, அதே கணவன், குழந்தையால் ஒதுக்கப்படும் ஒரு பெண், மீண்டும் எப்படி தன்னைத் தேடி.. ஒரு பெரிய கவுரவத்தைப் பெறுகிறாள் என்பதுதான் 36 வயதினிலே படத்தின் கதை.

36 vayathinile Review

முழுக்க நகரம் சார்ந்த கதைதான். ஆனால் அதில் இயற்கை விவசாயம், உணவுப் பழக்கம், பெண்ணுக்கு கவுரவம் என பல விஷயங்களைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.ஜோதிகா அளவான, அழுத்தமான நடிப்பின் மூலம் நீண்ட நேரம் நினைவுகளை விட்டு அகல மறுக்கிறார். 36 வயசானா ஆன்ட்டியாடி? என மகளிடம் ஆதங்கப்படுவதிலிருந்து, குடியரசுத் தலைவர் தன்னைக் கேட்கப் போகும் அந்தக் கேள்வி என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் தத்தளிப்பது, கணவன் தன்னை வெறுத்து தவிர்க்கப் பார்ப்பதை உணர்ந்து தவிப்பது, 'என் மகளே என்னை தன்னோட அம்மான்னு சொல்லிக்க வெக்கப்படறாடி' என தோழியிடம் குமுறுவது.... அத்தனை இயல்பான நடிப்பு.

நாம் பயன்படுத்தும் உணவுகள் எத்தனை நச்சுத் தன்மை கலந்தவை என்பதை விளக்கும் அந்த காட்சியில் ஜோதிகாவின் கம்பீரம் சிலிர்க்க வைக்கிறது. அந்த ஒரு காட்சி இந்த சமூகத்தின் மீதான பல சாட்டையடிகள். இனி நிறைய மொட்டை மாடிகள் பசுமை இல்லமாக மாற வாய்ப்பிருக்கிறது.

36 vayathinile Review

ஜோதிகாவின் கணவராக வரும் ரகுமான், இடைவெளியை மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறார். 'அயர்லாந்தில் வேலைக்காரி வைத்துக் கொண்டால் ஏக செலவு.. நல்ல சாப்பாடு இல்ல.. அதான் உனக்கு விசா ஏற்பாடு பண்ணிட்டேன்' என்று அவர் சொல்லும் போதே, 'இந்தாளை வெளுக்கணும்டா' என்று தோன்றுகிறது. அத்தனை எதார்த்தம்.

மகளாக நடித்திருக்கும் அந்த சிறுமியின் மீது பார்வையாளர்களுக்கு பாசத்துக்கு பதில் வெறுப்புதான் வருகிறது. கணவன் மனைவி சண்டைக்குள் குழந்தைகளை எப்படி பகடையாக்கி உருட்டுகிறார்கள் என்பதை மிக

36 vayathinile Review

இயல்பாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், அந்த சமையல் பாட்டி, அந்த அலுவலக அக்கப் போர் அம்மணிகள்.. அனைவருமே உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் உறுத்தாத இசையும் வலிந்து திணிக்கப்படாத அந்த இரண்டு பாடல்களும் படத்துக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. திவாகரனின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ்.

36 vayathinile Review

இடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகளில் பிரச்சார நெடி தெரிந்தாலும், இருந்துவிட்டுப் போகட்டுமே.

இந்த மாதிரி படங்களை உற்சாகப்படுத்தத் தவறினால், அந்தப் பாவம் தமிழ் சினிமா ரசிகர்களை சும்மா விடாது!

 

சினிமா எடுப்பதாகக் கூறி சொத்துக்களை ஆட்டயப் போட்ட இயக்குநர்... கஞ்சா கருப்பு போலீசில் புகார்

சிவகங்கை: சினிமா எடுப்பதாகக் கூறி தன் சொத்துக்களை அபகரித்த இயக்குநர் கோபியிடமிருந்து அவற்றை மீட்டுத்தரக்கோரி நடிகர் கஞ்சா கருப்பு சிவங்கை மாவட்ட போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

நடிகர் கஞ்சா கருப்பு சிவகங்கை நகரைச் சேர்ந்தவர். இவர் நேற்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துரையைச் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

Ganja Karuppu lodges complaint against director

அதில், "கடந்த ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை சிவகங்கை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் படமாக்கினர். இந்த படத்தின் இயக்குநராக கோபியும், நிர்வாக இயக்குனராக காளையப்பன் என்பவரும் இருந்தனர். பணம் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றுவிட்டது.

இதனால் இயக்குனர் கோபி, காளையப்பன் ஆகிய 2 பேரும் பணத்திற்காக என்னுடனும், என் மனைவி சங்கீதா, மைத்துனர் சந்தோஷ்குமார் ஆகியோருடனும் பேசினர். அதன்பின்னர் எங்களுக்கு சொந்தமான சிவகங்கையை அடுத்த கட்டாணிபட்டியில் உள்ள இடத்தையும், மதகுபட்டி, மேலூரில் உள்ள 6 சொத்துக்களையும் வங்கியில் அடமானமாக வைத்து ரூ.30 லட்சம் வரை கடன் பெற்றனர்.

அந்த பணத்தைக் கொண்டு படத்தை எடுத்து முடித்தனர். அவர்கள் சொத்துக்களை எங்களிடம் இருந்து பெறும்போது என் மனைவி சங்கீதாவிடம் படம் வெளியானவுடன் பணத்தை கொடுத்து சொத்துக்களை மீட்டுக் கொடுப்பதாக எழுதிக் கொடுத்திருந்தனர்.

ஆனால் படம் வெளியான பின்னர் பேசியபடி அவர்கள் சொத்துக்களை மீட்டுத் தரவில்லை. தற்போது என்னுடைய சொத்துக்களை காளையப்பன், கோபி ஆகியோர் வாங்கி வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றனர். எனவே அவற்றை மீட்டுத் தர வேண்டும்," என்று கோரியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு டிஎஸ்பி தலையிலான படை இந்த புகாரை விசாரிக்கவிருக்கிறது.

 

முன் ஜாமீன் கேட்டு நடிகை அல்போன்சா மனு!

தன் கணவரை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவர் கொடுத்த புகாரில், முன் ஜாமீன் கோரி நடிகை அல்போன்சா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமித்ரா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு புகார் மனு அளித்தார்.

Actress Alphonsa seeks bail

அதில், ஜெய்சங்கர் என்பவருடன் 2013-ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு எனது கணவர் பல நாள்கள் வீட்டுக்கு வராமல் இருந்தார். ஒரே ஒரு நாள் மட்டுமே என்னுடன் வாழ்ந்தார்.

இதற்கிடையில், முகநூலில் தன் மனைவி அல்போன்சா என்று கூறி படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். எனவே, என் கணவரை அல்போன்சாவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்," என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தப் புகார் குறித்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கருதி தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகை அல்போன்சா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

மேற்கத்திய இசை பற்றி சொல்லும் டீகோடு

இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். மேற்கத்திய இசையைப் பற்றி கூற டீகோடு என்ற நிகழ்ச்சி சேனல் யுஎப்எக்ஸ்சில் ஒளிபரப்பாகிறது.

இந்திய தொலைக்காட்சி சேனல்களின் வரலாற்றில் வேறு எந்த சேனல்களிலும் இல்லாத வகையில் மேற்கத்திய இசைகளைப் பற்றி ஒளிபரப்பாகும் தனித்துவம் வாய்ந்த சிறப்பு நிகழ்ச்சி இது என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

Rock, Pop Music Decode on Channel UFX

டீகோடு" நிகழ்ச்சியில் பல்வேறு ஆங்கில பாடல்களை இனம்வாரியாக பிரித்து அந்த பாடல்களில் உள்ள சிறப்புகளையும், இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைக் குறித்ததான நுணுக்கமான தகவல்களையும் ஆராய்ந்து ஒளிபரப்பப்படுகிறது.

டீகோடு நிகழ்ச்சி தொகுப்பாளர் நரேன் ஒவ்வொரு பாடல்களின் ஒலி/ஒளிப்பதிவின்போது நடைபெற்ற சுவாரஸ்யங்கள் மற்றும் நிகழ்வுகளை நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி யுஎப்எக்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 11.00 மணிக்கு ஒளிபரப்பாகும்

 

பெப்பர்ஸ் டிவியில் மாமா டவுசர் கழண்டுச்சு

தமிழ் சினிமாவின் ஹீரோ, ஹீரோயின், காமெடியங்களின் பிரபலமான வசனங்களை கல்லூரி மாணவ மாணவிகளிடம் கொடுத்து பேச சொல்லி கலாட்டா செய்யும் நிகழ்ச்சிதான் "மாமா டவுசர் கழண்டுச்சு".

Mama Douser Kalanduchu on  Peppers TV

ஆதித்யா டிவியில் கொஞ்சம் நடிங்க பாஸ் என்று ஆதவன் கலாய்ப்பார். அதையே பெப்பர்ஸ் டிவியில் கலாட்டா ததும்பும் நிகழ்ச்சியாக மாற்றி "மாமா டவுசர் கழண்டுச்சு"என்று கொடுக்கிறார்கள்.

Mama Douser Kalanduchu on  Peppers TV

இளைஞர்களின் மனதை மட்டுமில்லாமல், அனைவரின் இதயத்தையும் கவர வருகிறதாம் "மாமா டவுசர் கழண்டுச்சு".

Mama Douser Kalanduchu on  Peppers TV

இந்த நிகழ்ச்சியை பிரபல மிமிக்கிரி நடிகர் சென்னை கிரி தொகுத்து வழங்குகிறார். சரியாக டயலாக் பேசாதவர்களின் டவுசர்தான் கழண்டுச்சாம். காமெடி நிகழ்ச்சிதான் ஆனால் டயலாக் பேசுவதை கேட்பதற்குத்தான் தொகுப்பாளருக்கு பொறுமை வேண்டும்.

இந்த நிகழ்ச்சி பெப்பர்ஸ் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 8.00மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.

 

இன்றைய ரிலீஸ்... 36 வயதினிலே, புறம்போக்கு

இன்று வெள்ளிக்கிழமை இரண்டு முக்கிய படங்கள் வெளியாகின்றன. இரண்டுமே எதிர்ப்பார்ப்புக்குரிய படங்கள். சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் தாங்கி வருபவை.

அவற்றில் முதல் படம் 36 வயதினிலே (விமர்சனம் படிக்க). திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிக்கும் முதல் படம். அவரது திரையிலக மறுபிரவேசம் என்பதால் மிகவும் கண்ணியமான, சமூக அக்கறை கொண்ட ஒரு படமாக இதனைத் தயாரித்துள்ளார் சூர்யா.

Today's new releases

மலையாளத்தில் இந்தப் படத்தை உருவாக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே, தமிழிலும் ரீமேக் செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக இது அவருக்கு முதல் படம்.

இன்று வெளியாகும் இன்னொரு முக்கியப் படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. பொதுவுடைமை தத்துவத்தில் ஆழ்ந்த newபற்று கொண்ட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அதை தனது படைப்புகளில் பதிவு செய்யத் தயங்கியதில்லை.

இந்த முறை படத்தின் பெயரிலேயே பொதுவுடைமையை வைத்துவிட்டார். விஜயசேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நடித்துள்ள இந்தப் படத்தை எஸ்பி ஜனநாதனும் யுடிவியும் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

"போடா புறம்போக்கு"ன்னு யாராச்சும் சொன்னா கோபப்படாதீங்க!

சென்னை: புறம்போக்கு.. இந்த நல்ல வார்த்தையை பலரும் கெட்ட வார்த்தையாக்கி விட்டனர். பொதுப் பயன்பாட்டுக்கானவை என்பதைத்தான் புறம்போக்கு என்பார்கள். ஆனால் புறம்போக்கு என்ற இந்த வார்த்தையை எப்படியெல்லாம் நம்மவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்.. இன்று புறம்போக்கு என்ற பெயரில் ஒரு படம் வருகிறது. இயற்கை என்ற அழகான கவிதைப் படத்தைக் கொடுத்த எஸ்.பி. ஜனநாதன் இயக்கியுள்ள படம். மூன்று ஹீரோக்களை வைத்து உருவாக்கியுள்ள படம்.

What about Purambokku?

அருமையான கதை இப்படத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். அதாவது தூக்குத் தண்டனை குறித்த கதையாம் இது. ஒரு தூக்குத் தண்டனைக் கைதி, தூக்கில் கைதிகளைப் போடும் கூலித் தொழிலாளி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி ஆகியோர் சம்பந்தப்பட்ட கதையாம் இது.

இதில் கைதியாக ஆர்யா வருகிறார், தூக்கில் போடும் தொழிலாளியாக விஜய் சேதுபதி, காவல்துறை அதிகாரியாக வருகிறார் ஷாம்.

ஒரு வேளை விருமாண்டி படத்தின் சாயல் இருக்குமோ என்ற சந்தேகம் வரலாம். எதற்கும் படத்தைப் பார்த்து விட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவும்.

ஆனால் இப்படத்தில் கதை வேறு மாதிரியாக இருப்பதாக ஜனநாதனே கூறியுள்ளார். படத்தில் தூக்குத் தண்டனை தொடர்பாக பல நுனுக்கமான விஷயங்களை சொல்லியுள்ளாராம். வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் ஜனநாதன் கூறுகிறார்.

படம் குறித்து ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.. எனவே யாராவது உங்களைப் பார்த்து "போடா புறம்போக்கு" என்றால் கோபப்படாதீர்கள்.. புறம்போக்கு படத்துக்குப் போப்பா என்ற அர்த்தத்தில் அவர் உங்களைச் சொல்லியிருக்கலாம்!

 

ஹீரோ அவதாரம் எடுக்கும் "பேய்" ஆனந்த்!

ஹீரோவாகும் காஞ்சானா -2 பேய் ஜெய ஆனந்த் - வெயிட்டிங்கில் 2 படங்கள்

சென்னை: காஞ்சனா -2 திரைப்படத்தில் பேய்களில் ஒருவராக நடித்து அசத்திய ஜெய ஆனந்த் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

Jaya Anandh will be hero soon

முனி படத்தில் ஒரு பேய் வந்தது. காஞ்சனா படத்தில் 3 பேயைக் காட்டினார்கள். காஞ்சனா 2 படத்தில் அதுக்கும் மேலே போய் நிறைய பேய்களைக் காட்டி பயமுறுத்தினார் ராகவா லாரன்ஸ்.

அந்த வகையில், காஞ்சனா-2 படத்தில் திக்குவாய் பேயாக வந்து அனைவரையும் கவர்ந்தவர் ஜெய ஆனந்த். இவர் இப்போது வேறு அவதாரம் பூண்டுள்ளார். ஆம் ஹீரோவாகி விட்டார்.

ஜெய ஆனந்த், தற்போது இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் "கண்ணாமூச்சி' என்ற குறும்படத்திற்காக சென்ற வருடம் சிறந்த நடிகர் 2014 விருது வாங்கியிருக்கிறார்.

தற்போது கதாநாயகனாக நடித்திருக்கும் "திறப்புவிழா", மு.களஞ்சியத்தின் "ஆனந்த மழை" படங்கள் விரைவில் வெளியாகின்றன. மேலும் ஒரு பெரிய படத்தில் வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

காஷ்மோராவுக்காக துபாய்க்குப் பறக்கும் தமன்னா - கார்த்தி!

கொம்பன் படத்துக்குப் பிறகு கார்த்தி நடித்து வரும் படம் காஷ்மோரா. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், நாகார்ஜூனா இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

Karthi - Tamanna to fly Dubai, Bali

இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கினர். தொடர்ந்து நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு துபாய் செல்லும் படக்குழு, அங்கு வைத்து கார்த்தி-தமன்னா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கப் போகிறார்கள்.

வம்சி பைடிபாலி இயக்கி வரும் இப்படத்தை பி.வி.பி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகுதான் லிங்குசாமி படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

 

சந்தானத்தின் இனிமே இப்படித்தான் ஜூன் 12-ல் ரிலீஸ்!

சந்தானம் நாயகனாக நடித்த இனிமே இப்படித்தான் படம் வரும் ஜூன் 12-ம் தேதி வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சந்தானம்.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் அஷ்னா சவேரி. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துடன் நடித்தவர்தான் இவர். இன்னொரு நாயகியாக கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் நடித்த அகிலா கிஷோர் நடித்துள்ளார்.

Inemey Ippadithaan from June 12

முருகன் - ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது.

இந்த நிலையில் வரும் ஜூன் 12-ம் தேதி முதல் படத்தை உலகெங்கும் வெளியிப் போவதாக அறிவித்துள்ளார் சந்தானம்.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை சந்தானம் தனது ஹேன்ட் மேட் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை சந்தானத்தின் நண்பர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.