வித்யாபாலனுக்காக தள்ளிப் போடப்பட்ட தனுஷின் இந்திப் படம்!
வித்யாபாலன் நடித்த காஞ்சக்கார் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாக இருப்பதால், தனுஷின் ராஞ்சனா தள்ளிப் போய்விட்டது.
கொலவெறி பாடல் தந்த புகழ் காரணமாக தனுஷுக்கு இந்தியியிலும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் 'ராஞ்சனா'. சோனம் கபூர் கதாநாயகியாக நடிக்க, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் இது.
இத்திரைப்படத்தை ஜூன் 21-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அதே தேதியில் வித்யாபாலன் நடிக்கும் 'கஞ்சக்கார்' படம் அந்த தேதியில் வெளிவர உள்ளது. அந்த நேரத்தில் தனுஷ் நடித்த ரஞ்சனா படத்தை வெளியிட்டால் பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என்று கருதிய தயாரிப்பாளர்கள், படத்தை ஒரு வாரம் தள்ளிப் போட்டுவிட்டனர்.
அநேகமாக ஜூன் 28-ம் ராஞ்சனாவை வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
தமிழில் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான் படத்தையும் இந்தியில் டப் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
தனுஷின் மரியான்... முதல் பார்வை!
பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மரியான் படத்தின் முதல் பார்வை ஸ்டில்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் இது.
சோதனைகளை சந்திக்க நேரிடும் ஒரு இளைஞன், போராட்டத்தின் விளிம்பில் வாழ்வா சாவா என்று சவாலை எதிர்நோக்குகிறான். ஆனால் அந்த சவால்களை முறியடித்து தனது போராட்ட குணத்தின் மூலம் வெற்றி பெறுகிறான். அதற்கு துணையாகவும், இணையாகவும் இருப்பது அவனது காதலும் அதன் இனிய நினைவுகளும்தான்.
மரியான் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூ பார்வதி.
தேசிய விருது பெற்ற நடிகர்கள் அப்புக்குட்டி, சலீம் குமார் ஆகியோருடன் விநாயகம், ஜெகன், அங்கூர் விகால் மற்றும் உமா ரியாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வந்தே மாதரம் 'ஆல்பம் மூலம் தேசிய அளவில் பெரும் பெயரும் புகழும் பெற்ற பரத் பாலா இப்படத்தை இயக்கியுள்ளார்.
தனுஷ் படத்துக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவரும் 'Johny mad dog ' என்ற உலக பிரசித்தி பெற்ற படத்தின் ஒளிப்பதிவாளருமான மார்க் கோனின்க்ஸ் (Marc Koninckx) இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார் .
கடலோர மீனவ கிராமங்களிலும் கடினமான ஆப்ரிக்க காடுகளிலும், பாலைவனத்திலும் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
தனுஷைப் பொறுத்தவரை இது முக்கியமான படம். படத்தின் போஸ்டர்கள் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதே சிரத்தை காட்சியமைப்புகளிலும் தொடர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
பில்லியனர் கிளப்பில் சேர்ந்த முதல் பாப் பாடகி மடோனா
நியூயார்க்: பிரபல பாப் பாடகி மடோனாவின் சொத்து மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பில்லியனரான முதல் பாப் இசைக் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
54 வயதாகும் பிரபல பாப் பாடகி மடோனா கடந்த ஆண்டு எம்டிஎன்ஏ என்ற உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் நிகழ்ச்சிகளை 2 மில்லியன் மக்கள் கண்டு ரசித்தனர். இந்த சுற்றுப்பயணம் அவருக்கு வெற்றிகரமானதாக அமைந்தது.
இது தவிர அவர் வாசனை திரவியங்கள், ஆடைகள் மற்றும் ஹெல்த் ட்ரிங்குகளிலும் முதலீடு செய்துள்ளார். சுற்றுப்பயணம் மற்றும் இந்த முதலீடுகள் மூலம் அவரது சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது. இதன் மூலம் பில்லியனரான முதல் பாப் இசைக் கலைஞர் என்ற பெருமையை அடைந்துள்ளார் மடோனா.
ஆடைகள், ஷூக்கள் மற்றும் லாஞ்சரி விற்பனை மூலம் மட்டும் அவருக்கு இந்த ஆண்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல! - த்ரிஷா
இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. நிறைவான வேடங்கள், நிம்மதியான வாழ்க்கைதான் முக்கியம் என்கிறார் த்ரிஷா.
தமிழ் சினிமாவில் 2002-ல் அறிமுகமாகி, பத்தாண்டு காலத்தை முன்னணி கதாநாயகியாகவே வெற்றிகரமாகக் கடந்தவர் த்ரிஷா. இன்றைய சூழலில் இது ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ரம் போன்ற படங்களில் நடிக்கிறார் த்ரிஷா.
பத்தாண்டுகள் முன்னணி கதாநாயகியாக நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது அத்தனை சுலபமல்ல. எனக்குக் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நிறைய போராட வேண்டியிருந்தது.
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சினிமாவில் அதுவும் முன்னணி கதாநாயகி இடத்தில் இருப்பது பெருமை, என் அதிர்ஷ்டம்.
ஒரு காலத்தில், ராத்திரி - பகல் என்று பார்க்காமல் ஸ்டுடியோக்களில் முடங்கிக் கிடந்திருக்கிறேன். காரணம், வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாதே என்பதால்.
இன்று என் மனசு விரும்பும் பாத்திரங்களில் நடிக்கிறேன். கதை பிடிக்காவிட்டால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.
அந்த பரபரப்பும் நிம்மதியற்ற சூழலும் இல்லாத நிலையில், முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை அனுபவித்து நடிக்கிறேன்.
இனி எண்ணிக்கை முக்கியமில்லை. இருக்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டு, நல்ல படங்களில் நடிக்க வேண்டும்," என்றார்.