சென்னை: ரீஜென்ட் சாய்மிரா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் விஸ்வரூபம் படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ரீஜென்ட் சாய்மிரா என்டர்டெயின்மென்ட் பட நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராஜேந்திர ஜெயின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நடிகர் கமல்ஹாசனை வைத்து 'மர்மயோகி' என்ற படத்தை எடுக்க ராஜ்கமல் பட நிறுவனத்துடன் கடந்த 2008ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பேரில் கமல்ஹாசனுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி 'மர்மயோகி' படம் தயாரித்து வெளியிடும் வரை நடிகர் கமல்ஹாசன் எந்த படத்திலும் நடிக்கக் கூடாது.
ஆனால் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 'மர்மயோகி' படம் எடுக்கப்படவில்லை. எனவே, கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்பக் கேட்டு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.
இதற்கிடையே, அவர் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை தயாரித்து வெளியிட்டார். அந்த படத்தை வெளியிடுவதற்கு தடைகேட்டு தொடரப்படட வழக்கீல் ராஜ்கமல் பட நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வங்கி உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே ராஜ்கமல் படநிறுவனம் சார்பில் தற்போது 'விஸ்வரூபம்' என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி டி.டி.எச்.சில் வெளியிடப்பட உள்ளது.
அந்த பட நிறுவனம் எங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.10.5 கோடி கடன் தொகையை திரும்ப தராதவரை 'விஸ்வரூபம்' படத்தை வெளியிட தடைவிதிக்க கேட்டு வழக்கு தொடர்ந்தோம். ஆனால், அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.
அதை அவர் தள்ளுபடி செய்தது தவறு. எங்களது பணத்துக்கு உத்தரவாதம் கேட்டு 'விஸ்வரூபம்' படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். ஆனால் எங்களது வாதத்தை தனி நீதிபதி கருத்தில் கொள்ள தவறிவிட்டார். எனவே, தனி நீதிபதி உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். அப்பீல் வழக்கு முடியும் வரை 'விஸ்வரூபம்' படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன் இது குறித்து ராஜ்கமல் நிறுவனமும், கமல்ஹாசனும் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.