விஸ்வரூபம்: தியேட்டர் உரிமையாளர்கள் மீது போட்டி கமிஷனில் கமல் புகார்

Kamal Moves Competition Commission

சென்னை: விஸ்வரூபம் படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதாக சில தியேட்டர் உரிமையாளர் சங்கங்கள் மீது கமல் ஹாசன் போட்டி கமிஷனிடம் புகார் கொடுத்துள்ளார்.

கமல் ஹாசன் தானே இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை வரும் 10ம் தேதி டிடிஹெச்சில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஒரு வழியாக தியேட்டரில் படத்தை வெளியிடுவது என்று கமல் முடிவு செய்தார்.

படம் வரும் 25ம் தேதி 500 திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் தனது படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதாக சில தியேட்டர் உரிமையாளர் சங்கங்களுக்கு எதிராக சட்டரீதியான வர்த்தகப் போட்டியை தடுக்கும் முறைகேடுகளை விசாரிக்கும் ஒழுங்குமுறை ஆணையமான இந்திய போட்டி கமிஷனில்(காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா) கமல் புகார் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து போட்டி கமிஷனின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

விஸ்வரூபம் தொடர்பாக கமலிடம் இருந்து புகார் மனு கிடைத்துள்ளது. இது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்றார்.

 

ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை செலவு செய்யுங்கள்... சேவை வரிவிதிப்புக்கு அஜீத் போர்க்கொடி

Ajith Upset Over The Recently Levied

வரி விதித்து மக்களை வாட்டுவதை விட அரசியல்வாதிகள் ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்தலாம் என்று நடிகர் அஜீத் கூறியுள்ளார்.

சேவை வரிவிதிப்பு எதிர்த்து கடந்த 7ம் தேதி சென்னையில் திரை உலகினர் உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்திற்கு அஜீத் வரவில்லை. ஆனாலும் வரிவிதிப்பை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரெயில் கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ எனத் தெரியாது. நான் திரை உலகினர் மீது சுமத்தப்பட்டுள்ள சேவை வரி பற்றி மட்டும் குறிப்பிட வில்லை. கட்டண உயர்வு, வரி விதிப்புக்குப் பதிலாக, நமது நாட்டிலுள்ள ஊழல் தலைவர்கள் மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை நம் நாட்டு அடிப்படைத் தேவைகள் வளர்ச்சிக்காக செலவு செய்ய முன்வந்தாலே போதும்.

நமது நாடு வளர்ந்த நாடுகளில் ஒன்றாகவோ, ‘டாப் டென்' பணக்கார நாடுகளில் ஒன்றாகவோ மாறும். ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டு இங்கிருந்து மொத்த வளங்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றனர். இந்த உண்மையை நாம் மக்களுக்கு புரிய வைத்தால் அவர்கள் மீண்டும் சிந்திப்பார்கள். ஆனால் ஆங்கிலேயரை விட நமது நாட்டில் உள்ள ஊழல் தலைவர்கள் இன்னும் அதிகமாகவே சுரண்டி உள்ளனர்.

கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். 1947-ல் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கான சுதந்திரம் வழங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடந்த போது, ஒரு அரசியல் வல்லுநர், இது நடந்தால், அதிகாரம் அனைத்தும் அயோக்கியர்கள் கையில் போகும். மக்களுக்கு பயனற்ற தலைவர்கள் உருவாகும் நிலைதான் ஏற்படும். அந்த மாதிரி தலைவர்கள் இனிப்பான நாவையும், காட்டமான இதயத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதிகாரத்துக்காக அவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்வார்கள். இவர்கள் உண்டாக்கும் குழப்பமான அரசியல் கூச்சலில் இரண்டு நாடுகளுமே தொலைந்து போகும். சுவாசிக்கிற காற்றுக்கும், குடிக்கிற நீருக்கும் வரி விதிக்கும் நாள் வரும் என்றாராம்.

இவ்வாறு தன் அறிக்கையில் கூறியுள்ளார் அஜீத்.

 

பவர் ஸ்டாரும் டிவி சேனல்களின் பேட்டியும்...

Power Star Srinivasan Tv Interview

இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன்.

சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார்

சன் டிவியின் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பவர்ஸ்டார் சீனிவாசன், போட்டியாளர்களுடன் கலக்கலாக நடனமாடினார். அதை பார்த்த நடுவர் கங்கை அமரன், தனக்கு இதுதான் வரும் தான் இப்படித்தான் நடனமாடுவேன் என்று கூச்சப்படாமல் நடனமாடுகிறார் சீனிவாசன் என்று பாராட்டினார்.

கமலுக்கு ஹாய் சொன்னேன்

கமலுடன் பேசியிருக்கிறீர்களா? என்று பவர்ஸ்டாரைப் பார்த்து தொகுப்பாளினி காயத்ரி ஜெயராம் கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த சீனிவாசன், கமலும் நானும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். அவருக்கு நான் ஹாய் சொன்னேன் என்றார்.

ரோஜாவின் லக்கா கிக்கா

ஜீ டிவியின் லக்கா கிக்கா நிகழ்ச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பங்கேற்ற சீனிவாசன் அந்த நிகழ்ச்சியில் நடிகை ரோஜா கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வெற்றி பெற்றார். தான் ஜெயித்த பணத்தை நிகழ்ச்சியில் தோல்வியடைந்த நபர்களுக்கு பரிசாகக் கொடுத்தார் சீனிவாசன்.

தமிழ் பேசும் கதாநாயகிகள்

ராஜ் டிவியின் ‘தமிழ்பேசும் கதாநாயகிகள்' இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பவர்ஸ்டார் சீனிவாசன். இதில் முக்கிய அம்சமே இறுதிச்சுற்றில் பங்கேற்ற 15 கதாநாயகிகளும் பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்டனர்.

சங்கர் படத்தில நடிக்கிறேன்

சினிமாவிலும் சரி சின்னத்திரையிலும் சரி இப்போது பவர்ஸ்டார் ரொம்ப பிஸி. கண்ணா லட்டு தின்ன ஆசையா இதே பொங்கலுக்கு ரிலீசாகிவிட்டது. அடுத்து சங்கரின் ‘ஐ' படத்தில் நடிக்கிறார். இந்த பிஸியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பிரபல சேனல்களில் எல்லாம் பவர்ஸ்டாரின் பேட்டி ஒளிபரப்பாகிறது என்பதுதான் ஹைலைட்.

 

தமிழ் பேசும் கதாநாயகி சஞ்சனா… பாலாஜி சக்திவேல் படத்தில் நடிக்க வாய்ப்பு

Raj Tv Tamil Pesum Kadhanayagi Reality Show

ராஜ்டிவியின் ‘தமிழ்பேசும் கதாநாயகிகள்' ரியாலிட்டி ஷோ பட்டத்தை சஞ்சனா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவுக்கு நன்கு தமிழ் பேசத் தெரிந்த கதாநாயகிகளை உருவாக்கி தர ‘எச்2ஓ' எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் ஜான் விஜய். இதற்காக ராஜ் டிவியுடன் இணைந்து ‘தமிழ் பேசும் கதாநாயகி' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இவரின் இந்த முதல் முயற்சியிலேயே 70 இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், அவர்களில் 15 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்கள். அதிலிருந்து அட்டகாசமாக தமிழ் பேசும் நாயகிகளாக சஞ்சனா, அஞ்சலி, கோபிகா ஷா, ரமா, பத்மா ஆகிய 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், வசந்த், எஸ்.ஜே.சூர்யா, பாலாஜி சக்திவேல், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாலாஜி மோகன், சாந்தகுமார் மற்றும் நடிகை வடிவுக்கரசி ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த 5 பேரையும் தேர்வு செய்தனர்.

இந்த 5 நாயகிகளையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்ற அனைவரும் கலந்து கொண்டு தமிழ் பேசும் நாயகிகளை தேர்வு செய்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஜான் விஜய் பேசும்போது, தமிழில் திறமையான நடிகைகள் இருந்தாலும், அவர்கள் சொந்த குரலில் பேசாமல் ‘டப்பிங்' குரலில் நடிப்பதால்தான் விருதுகள் கிடைக்காமல் இருக்கிறது. அதை அறிந்துதான் இந்த முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டேன். இந்த முயற்சிக்கு எனது மனைவி மாதவி மற்றும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாலாஜி மோகன் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர் என்றார்.

இறுதிச் சுற்றில் பங்கேற்ற 5 பேரில் சஞ்சனா முதலிடத்தைப் பெற்று ‘தமிழ் பேசும் கதாநாயகி' பட்டத்தை வென்றார். அவருக்கு மேடையிலேயே அதிர்ஷ்ட வாய்ப்பு அடித்தது. அதாவது, இயக்குனர் பாலாஜி சக்திவேல், சஞ்சனா விரும்பினால் தன்னுடைய அடுத்த படத்தில் கதாநாயகியாகலாம் என்று அறிவித்தார். மற்ற நால்வருக்கும்கூட படவாய்ப்புகள் கிடைத்துள்ளன.

ஓரம்போ' படத்தில் அறிமுகமாகி ‘வ', ‘மவுன குரு', ‘தில்லாலங்கடி', ‘கலகலப்பு' ஆகிய படங்களில் காமெடி கலந்த வில்லனாக கலக்கியவர் ஜான் விஜய். இப்போதும் ஏகப்பட்ட வாய்புகள் இருந்தாலும், சத்தமில்லாமல் தமிழ் பேசும் கதாநாயகிகளைத் தேடி தமிழகம் முழுவதும் வலம் வந்துள்ளார் ஜான் விஜய்.

இந்த நிகழ்ச்சி பொங்கல் பண்டிகை தினத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

 

பூஜா பட்டுக்கு செல்போனில் ஆபாச திட்டு... கொலை மிரட்டல்!

Death Threat Pooja Bhatt

மும்பை: தனக்கு சிலர் செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை பூஜா பட் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை மற்றும் இயக்குநர் பூஜா பட். இவருக்கு நேற்று முன்தினம் செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசிய மர்ம ஆசாமி யார் என்று தெரியவில்லை.

மிரட்டலால் பூஜாபட் அதிர்ச்சியாகியுள்ளார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மிரட்டியவரின் செல்போன் நம்பரையும் போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளார்.

இது குறித்து பூஜாபட் கூறுகையில், "செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாகவும் ஆபாசமாகவும் என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டித் தீர்த்த பிறகு போனைத் துண்டித்து விட்டான். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி உள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

மகள் பூஜா பட்டுக்கு இந்த மாதிரி மிரட்டல் வந்திருப்பது கவலை அளிப்பதாக அவரது தந்தை இயக்குநர் மகேஷ் பட் தெரிவித்தார்.

 

கார்த்தியின் சந்தோஷ 'டபுள் ரிலீஸ்!'

Karthi Ranjani Blessed With Girl Child

நடிகர் கார்த்தி உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அது இந்த பொங்கலுக்கு ரிலீசாகியிருக்கும் அவரது அலெக்ஸ் பாண்டியன் படத்துக்காக மட்டுமல்ல... அதே நாளில் அழகு மகள் பிறந்ததால்!

கடந்த ஆண்டு கார்த்திக்கும் ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனிக்கும் கோவையில் விமரிசையாக திருமணம் நடந்தது.

ரஞ்சனி கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்துக்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நேற்று மாலை 3 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும், நடிகர் கார்த்தி மருத்துவமனைக்கு வந்து மனைவியையும், குழந்தையையும் பார்த்தார்.

ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

 

வெயிட்டான நாயகி வேண்டாம்: ஹன்சிகாவை அதிரவைத்த தெலுங்கு இயக்குனர்

Puri Jagannath Stuns Hansika   

ஹைதராபாத்: பிரபாஸ் நடிக்கும் படத்தில் நாயகி வாய்ப்பு கேட்ட ஹன்சிகாவை படத்தின் இயக்குனர் பூரி ஜெகநாத் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

ஒல்லிக்குச்சியான உடம்பு வைக்க போட்டி போடும் ஹீரோயின்களுக்கு மத்தியில் ஹன்சிகா கொழுக் மொழுக் என்று இருக்கிறார். அவர் அப்படி இருப்பதும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. ஹன்சிகாவை தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகநாத். அவர் தற்போது பிரபாஸை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார்.

இது குறித்து கேள்விப்பட்ட ஹன்சிகா நம்மை அறிமுகப்படுத்தியவர் தானே என்ற உரிமையில் அவரை அணுகி உங்கள் புதுப்படத்தில் என்னை ஹீரோயின் ஆக்குங்களேன் என்று கேட்டுள்ளார். அதற்கு பூரியோ என் படத்திற்கு உன்னைப் போன்று பூசினால் போல் உடம்பு உள்ள ஹீரோயின் ஒத்துவராது என்று தெரிவித்துவிட்டாராம்.

இதைக் கேட்ட ஹன்சியின் முகம் சுருங்கிவிட்டதாம். இவர் என்ன இப்படி சொல்லிவிட்டாரே என்று கவலைப்பட்டாராம் ஹன்சிகா.

 

பாக்யராஜ் மீது வழக்குப் போடுவாராம் - சொல்கிறார் புஷ்பா கந்தசாமி

Pushpa Kandasamy Denies Bagyaraj

சென்னை: தன் கதையைத் திருட்டுத்தனமாக விற்றதாக என்மேல் குற்றம்சாட்டும் பாக்யராஜ் மீது வழக்குப் போடுவேன் என்று கூறியுள்ளார் பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி.

தான் எழுதி இயக்கி நடித்த இன்று போய் நாளை வா படத்தை அதன் கதை உரிமையாளராகிய தன்னைக் கேட்காமல், பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பெரிய விலைக்கு விற்றுவிட்டார் என்று இயக்குநர் கே பாக்யராஜ் புகார் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இன்னும் இதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் அந்தப் படம் நாளை வெளியாகவிருக்கிறது.

கதை எழுதியவர் பாக்யராஜ். அதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை யாருக்கும் விற்கவில்லை என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் கதையின் உரிமை தன்னிடம் இருப்பதாக சொல்லி அதனை ராமநாராயணனுக்கு பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றுள்ளதாக பாக்யராஜ் குற்றம்சாட்டினார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளார்.

பாக்யராஜ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து புஷ்பா கந்தசாமி கூறுகையில், "பாக்யராஜ் தேவை இல்லாமல் என்னை இந்த பிரச்சினையில் இழுத்துள்ளார். அவரை சந்தித்து 'இன்று போய் நாளை வா' படத்தின் உரிமையை நான் கேட்டதாக சொல்லி உள்ளார். அதில் உண்மை இல்லை. பாக்யராஜை இதற்காக நான் சந்திக்கவே இல்லை. தமிழ் படங்களை தமிழிலேயே "ரீமேக்" செய்யும் வழக்கம் முன்பெல்லாம் கிடையாது.

ஆனால் இப்போது அதை செய்ய தொடங்கி உள்ளனர். இது போல் படங்களை 'ரீமேக்' செய்கிறவர்கள் அதன் கதைக்கான உரிமை யாரிடம் இருக்கிறதோ அவரை அணுகி வாங்கிக் கொள்கின்றனர். படத்தின் இயக்குனருக்கு பணத்தை செட்டில் செய்யும் போது கதைக்கான உரிமையை எழுதி வாங்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

இன்று போய் நாளை வா படத்தை பொறுத்த வரை சட்டப்படி உறுதிப்படுத்திய பிறகே நான் வாங்கினேன். இதில் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளதாக பாக்யராஜ் நினைக்கிறார். அது தவறு.

யாரையும் ஏமாற்றும் எண்ணம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தும் நான் வரவில்லை. இந்த பிரச்சினையில் என்னை இழுத்தால் பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்," என்று கூறியுள்ளார்.

கதை உரிமை தன்னிடமே உள்ளது என பாக்யராஜ் ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார். ஆனால் கதை உரிமையை யாரிடமோ வாங்கியதாக புஷ்பாகந்தசாமி கூறியுள்ளார். பாக்யராஜுக்கு உரிமையுள்ள கதையை சம்பந்தமே இல்லாத புஷ்பா கந்தசாமி விற்றதோடு, இப்போது பாக்யராஜ் மீதே வழக்குப் போடப் போவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்கது!

 

ஏ.ஆர்.ரஹ்மானின் 'தாய் மண்ணே வணக்கம்'… ஜெயா டிவியில் பொங்கல் ஸ்பெஷல்

Jaya Tv Pongal Special Program

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ‘தாய் மண்ணே வணக்கம்' லைவ் கான்செர்ட் நிகழ்ச்சி பொங்கல் விடுமுறை நாளில் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமான மேடையில் முப்பதாயிரம் பார்வையாளர்கள், மூந்நூறுதொழில்நுட்பக் கலைஞர்கள், இசை நடனக் கலைஞர்கள் இவர்களுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தாய் மண்ணே வணக்கம்' இசைவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினரோடு அமெரிக்காவை சேர்ந்த ஏழு பெண் இசைக் கலைஞர்கள் முதன்முறையாக டிரம்ஸ் வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பல பாடல்களை பாடினார். இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகர்கள் மனோ, ஹரிஹரன், சித்ரா, கார்த்தி ,பென்னி தயால், சின்மயி உள்ளிட்டோர் பாடல்களை பாடினார்கள். பாடல்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான பல நடனங்களும் நிகழ்த்தப்பட்டது. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஜெயா டிவியில் வருகிற பொங்கல் விடுமுறை தினங்களான ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் உலகத் தரதில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது கூடுதல் சிறப்பாகும்.

 

அலெக்ஸ் பாண்டியன்- விமர்சனம்


Rating:
2.0/5

நடிப்பு: கார்த்தி, அனுஷ்கா, சந்தானம்

இசை: தேவிஸ்ரீபிரசாத்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: சுராஜ்

சகுனி சறுக்கலுக்குப் பிறகு, கார்த்தி சுதாரித்துக் கொண்டிருப்பார் என்று அலெக்ஸ் பாண்டியன் பார்க்கப் போனவர்கள்... தெறித்து ஓடும் அளவுக்கு செய்திருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

'தமிழ்ப் படம்' மாதிரி, ஏதோ எழுபது அல்லது எண்பதுகளில் வெளியான சூப்பர் ஹிட் படங்களைக் கிண்டலடித்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்களோ என்றுதான் ஆரம்பத்தில் தோன்றியது. அப்புறம்தான் தெரிந்தது, படமே அப்படித்தான் என்று!

alex pandian review
இன்றைய இளைஞர்கள் விரும்பும் நாயகன், காமெடியன், துள்ளல் இசை எல்லாம் கிடைத்தும் சுராஜ் இப்படி கோட்டை விட்டிருப்பது ஆச்சர்யமாகத்தான் உள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு மருந்துகளை கடத்தி வந்து விற்று ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதிக்க முனைகிறது ஒரு கும்பல். இதற்கு
பணக்கார டாக்டர் மிலிந்த் சோமன், தலைமைச் செயலர் பிரதாப் போத்தன், போலி சாமியார் மகாதேவன் உள்ளிட்டோர் உடந்தை. அனுமதி தரமறுக்கும் முதல்வரை மிரட்ட அவர் பெண்ணையே கடத்த திட்டமிடுகிறார்கள். அப்படி கடத்த வரும் ஹீரோ கார்த்திக்கும் முதல்வர் மகள் அனுஷ்காவுக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அப்புறம்தான் ஹீரோவுக்கு நாட்டுக்கு வரும் ஆபத்து புரிகிறது. அப்புறமென்னவென்பதை சுலபத்தில் ஊகித்திருப்பீர்கள் அல்லவா...

இதுநாள் வரை இயல்பாக அறிமுகமாகி, எளிதில் ரசிகர்கள் மனதில் உட்கார்ந்த, கார்த்திக்கு, இதில் ஆர்ப்பாட்டமான அறிமுகம். குத்துப் பாட்டு, பஞ்ச் வசனங்கள் என பொருந்தாத சட்டையைப் போட்டுக்கொண்டு ஆடுவது போன்ற ஒரு தோற்றம். பல நூறு படங்களில் பார்த்துச் சலித்துப் போன இந்த காட்சி அமைப்புகளுக்கு எப்படி கார்த்தி ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை.

அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக பிரகாசிக்க ஆசைப்படுகிறார் கார்த்தி என்பது புரிகிறது. ஆனால் அதற்கான கதை, விறுவிறு திரைக்கதையைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே் அது சாத்தியமாகும்.

இந்த மாதிரி படங்களில் அனுஷ்காவுக்கு என்ன வேலை? முதலில் பயப்பட வேண்டும். அடுத்து காதல் கனவு காண வேண்டும்... டூயட் பாட வேண்டும். அதையெல்லாம் செய்திருக்கிறார் அனுஷ்கா. ஆனால் ஏனோ டல்லாகவே தெரிகிறார்.. திரிகிறார் படம் முழுக்க.

சந்தானம் இருக்கிறார். ஆனால் அவரது காமெடிக்கு இப்போதெல்லாம் சிரிக்க முடியவில்லை. அது பார்ப்பவர் தவறல்ல!

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஒரு பெரிய ஆறுதல்.

ஒளிப்பதிவு சுமார்தான். ஏதோ தெலுங்குப் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகின்றன காட்சிகளின் டோன்!

ஒரு கம்பீரமான தலைப்பை இப்படி சொதப்பியிருக்க வேண்டாம் சுராஜ்.

பழைய மொந்தை.. ரொம்ப பழைய கள்ளு!

-எஸ்எஸ்

 

நான் மறுபடியும் விஜயுடன் நடிக்கிறேனே: காஜல் அகர்வால்

Kajal Vijay Pair Again Jilla

ஹைதராபாத்: தான் மீண்டும் விஜயுடன் சேர்ந்து நடிக்கப் போவதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் விஜயுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்தது ஏஆர் முருகாதாஸின் துப்பாக்கி படத்தில் தான். அவருக்கு நன்றாக நடிக்க வந்தாலும் துப்பாக்கியில் அவருக்கு ஒன்றும் பெரிய கதாபாத்திரம் இல்லை. அவ்வப்போது வந்து விஜயை காதலித்துவிட்டும், டான்ஸ் ஆடிவிட்டு மட்டும் சென்றார். துப்பாக்கி சூப்பர் ஹிட்டாகியுள்ளதால் காஜல் குஷியாகியுள்ளார்.

இந்நிலையில் காஜல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கார்த்தியுடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நான் மீண்டும் விஜயுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றார்.

விஜய் தற்போது இயக்குனர் விஜயின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். அடுத்தபடியாக அவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்கும் ஜில்லா படத்தில் காஜல் தான் நாயகி. இதைத் தான் காஜல் தெரிவித்துள்ளார்.

 

காமெடியில் இருந்து ஆக்ஷனுக்கு தாவும் உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin Turns Action Hero For Nayan

சென்னை: இது கதிர்வேலின் காதலி படத்தில் உதயநிதி வேலைவெட்டி இல்லாதவராக வருகிறாராம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவான தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் படம் இது கதிர்வேலின் காதலி. முதல் படத்தில் காமெடி ஹீரோவாக வந்த அவர் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக வருகிறாராம். ஆனால் ஓவர் பில்ட் அப் கொடுக்காமல் அவரால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே முயற்சி செய்யப் போகிறார்.

படத்தில் அவர் வேலை வெட்டியில்லாமல் சுற்றும் வாலிபராக நடிக்கிறார். மதுரைக்கு போகும் இடத்தில் நயன்தாராவை காதலிக்கிறார். படம் முழுக்க சிரிக்க வைக்க சந்தானம் இருக்கிறார். இந்த படத்தை சுந்தர பாண்டியன் பட புகழ் பிரபாகரன் இயக்குகிறார்.

எனது பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறு இருந்ததால் தான் இது கதிர்வேலின் காதலி படத்தில் நடிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.