மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவேன்- கமல் மீண்டும் பேச்சு

I M Not Doing These Publicity Says Kamal

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தை விளம்பரத்துக்காக நான் பெரிதுபடுத்துவதாகக் கூறுவது மோசமானது, என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

மும்பையில் விஸ்வரூபம் சிறப்புக் காட்சிக்கு முன், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதிலிருந்து...

எனக்கு வந்ததைப் போன்று யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது. கலைஞர்களை அவமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்களை ஹாலிவுட், பாலிவுட் என வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம். பிரச்சனையை சந்தித்து வரும் நேரத்தில், ஊடகங்கள் எனக்கு ஆதரவாக நின்றது நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. மதத்திலும் நம்பிக்கை இல்லை.

விஸ்வரூபம் பிரச்சனையில் விளக்கம் அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. சினிமா உலகமும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவும் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

இப்போது இந்த விவகாரத்தில் முதல்வர் உதவ முன் வந்துள்ளதால் உச்ச நீதிமன்றம் போக வேண்டிய அவசியமில்லை.

இந்தப் போராட்டத்தில் நான் தனி ஆள் இல்லை. ஆதரவு அளித்த ஊடகங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று நான் சொன்னது வெறுமனே உணர்ச்சிவயப்பட்டோ, மிரட்டவோ அல்ல. உண்மையிலேயே இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால், நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றி பரிசீலனை செய்வேன்.

எனக்கு ஆஸ்கர் விருது தேவையில்லை, இந்திய தேசிய விருதையே விரும்புகிறேன்.

நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல; அரசியல் ரீதியானது. மற்ற இடங்களில் படத்தைப் பார்த்தவர்கள் சிறப்பாக உள்ளதாக கூறுகின்றனர்.

விஸ்வரூபம் மூலம் விளம்பரம் தேட நான் முயற்சிப்பதாக கூறுவது மோசமானது. நான் கோபத்தில் பேசவில்லை, காயப்பட்டதால் பேசுகிறேன். அந்த அளவு புண்பட்டிருக்கிறேன்.

என் படங்களில் முஸ்லீம்களை நான் எப்போதுமே தவறாக காட்டியதில்லை. ஹே ராம் பார்த்தால் புரியும். இந்த சில தினங்களில் நம்ப முடியாத அளவுக்கு எனக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இஸ்லாம் மதம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. அதை நானும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் எந்த நிறத்தில் வந்தாலும் தீவிரவாதம் தீவிரவாதம்தான்.

விஸ்வரூபம் விவகாரத்தில் எந்த இஸ்லாமிய நண்பராவது கைது செய்யப்பட்டிருந்தால் உடனே விடுவிக்க வேண்டும்.

எனது படத்திற்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் தென்னகத்தில் உள்ள என் திரைத்துறை நண்பர்கள் மட்டுமல்ல, சல்மான், ஷாருக், மகேஷ் பட், மதூர் பண்டார்கள் என இங்கே உள்ளவர்களும் ஆதரவு தந்தனர். அவர்களுக்கு நன்றி என்றார் கமல்.

 

கமலுக்காக பேனர்கள் வைத்து 'வாய்ஸ்' கொடுக்கும் ரஜினி, அஜீத் ரசிகர்கள்

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் அஜீத் குமாரின் ரசிகர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.

கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகினர் கமலுக்கு ஆதரவாக உள்ளனர். நேற்று நடிகர் அரவிந்த்சாமி, இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கமலின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர்.

மேலும் கமல் ரசிகர்களும் அவரின் வீட்டுக்கு வெளியே கூடி, நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் ரசிகர்கள் மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கமலுக்கு ஆதரவாகவும், விஸ்வரூபத்தை வெளியிடக் கோரியும் பேனர்கள் வைத்துள்ளனர். கமலுக்காக பிற நடிகர்களின் ரசிகர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் ரிலீஸ் செய்வதில் என்ன பிரச்சனை என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தும் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

 

விஸ்வரூபம் படத்தின் மீது அரசு விதித்துள்ள தடை சரியானதுதான் - சோ

Cho Justifies Ban On Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார்.

கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார்.

நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும்.

ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்," என்றார்.

 

ஷாரூக்கான் சர்ச்சை... 'பிரபலம்னாலே பிராப்ளம்தான்'! - ப்ரியங்கா சோப்ரா

Priyanka On Shah Rukh Khan Celebri

மும்பை: பிரபலமாக இருந்தாலே பெரிய பிரச்சினையில் எளிதாக சிக்கிக் கொள்கின்றனர் என்றார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன் மை சிட்டி என்ற வீடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஷாருக்கான், தான் ஒரு முஸ்லிம் ஆக இருப்பதால் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து கூறிய கருத்துகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது.

எனினும், ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களை பொதுமக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். அத்தகைய பிரபலங்கள் தற்போது எளிதான இலக்காக அவர்களுக்கு உள்ளனர்," என்றார்.

சரி உங்களது பெயரின் பின்னால் கான் என இருந்தால் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கியிருப்பீர்கள் அல்லவா? என்று கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்து பேசும்போது, "சோப்ரா என்ற பெயராலேயே அதிக சர்ச்சைகள் எழுந்தன. ஒன்றுமில்லாத விசயத்தில் இருந்து மிக பெரிய காரியங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் இருந்து கொண்டு இத்தகைய கேள்வியை கேட்பது வெட்கக்கேடானது," என்று பதிலளித்தார்.

 

கமல் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது! - பாரதிராஜா

Dont Pull Kamal Politics Says Bharathiraja

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது என்று இயக்குநர் பாரதிராஜா சீரியஸாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:

விஸ்வரூபத்துக்கு பிரச்னை என்று தெரிந்ததும் கொதித்துப் போய் அறிக்கை விட்டேன். போன வாரம்தான் மதுரையில் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தோட இசை வெளியீடு இருந்தது. ஆனால் அந்த சந்தோஷம் என்னோட மனசில இல்ல. வலிதான் இருக்கும். விஸ்வரூபத்தை வச்சு இங்க நடந்துட்டு இருக்கிற பார்க்கும்போது மனசில ஏற்படற வலி.

உன்னதமான அந்த கலைஞனை எதுக்குப் போய் இப்படி புண்படுத்துறீங்க.... டி.ராஜேந்தர், விஜயகாந்த் ஆகியோர் கட்சி ஆரம்பிச்சபோது அவங்கள திட்டுனேன். ஆனால் அவங்களும் இதுபோன்ற வலியில் சிக்கித்தான் கட்சி ஆரம்பிச்சு இருப்பாங்களோன்னு தோணுது.

இதுவரை கமல்கிட்டப் பேசல. அரசியல் பாதையில் கமலையும் இறக்கி விட்டுராதீங்க. அவர் அரசியலுக்கு வந்தால் உங்களால தாங்க முடியாது. அப்படி அவர் அரசியலுக்கு வந்தா முழுசா எல்லாத்தையும் கத்துக்கிட்டுதான் வருவார்," என்றார் பாரதிராஜா.

 

கமலுக்கே இப்படின்னா, மத்தவங்களுக்கு என்னவெல்லாம் நடக்குமோ?: குஷ்பு

Bollywood Supports Kamal

மும்பை: விஸ்வரூபம் பிரச்சினையில் கமல்ஹாஸனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் உள்ளிட்டோர். சினிமாவுக்காகவே வாழும் கமலுக்கே இப்படி நடக்கிறது என்றால் மற்றவர்களுக்கு என்னவெல்லாம் நடக்குமோ என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அவருடைய நீண்ட கால நண்பரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் ஏற்கனவே ஆதரவு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, வேற்று மொழி நடிகர் நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தி நடிகர் ஷாரூக்கான் கூறுகையில், "இத்தகைய பிரச்சினைகள் எங்களுக்கு புதிதல்ல. கமலுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துவிட்டால், குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்பதே அர்த்தம். கமல்ஹாசன் சீனியர் கலைஞர். அவர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் படத்தின் சில காட்சி அமைப்புகளில் என்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது," என்றார்.

நடிகர் நாகார்ஜுன் கூறுகையில், "கமல்ஜியை நான் நீண்ட காலமாக அறிவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில், அவரும் ஒருவர். அப்படிப்பட்டவர், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை," என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் பேசுகையில், "மிகச்சிறந்த தமிழ் நடிகரான கமல்ஹாசன், தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுவதாக சொல்வதை கேட்ட போது இதயம் நொறுங்கி விட்டது. தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படம் ஓட தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு துயரமான நாள். மோசமான வாரம்", என்றார்.

நடிகை ஜெயப்பிரதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஸ்வரூபம் படம் தொடர்பான அரசியல் தேவையற்றது, அர்த்தமற்றது. கமல், தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார். அவரது நிலைமையில் இருந்தால், நானும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறி இருப்பேன். அவரது படத்தில் எப்போதுமே 'மெசேஜ்' இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், "கமல்ஹாசன், நாட்டின் பொக்கிஷம். அவர் துன்புறுத்தப்படுவது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருண்ட தருணம்," என்றார்.

தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் இதுபற்றி கூறுகையில், "தணிக்கை சான்றிதழ் பெற்ற நிலையிலும், கமல்ஹாசன் வேட்டையாடப்படுகிறார். இதுபோல், மாநில அரசு எப்படி தடை செய்ய முடியும் என்று நாங்கள் ஆய்வு செய்வோம்," என்றார்.

இது குறித்து குஷ்பு கூறுகையில்,

50 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து தான் சம்பாதித்த அனைத்தையும் படத்தில் போட்டுவிட்டு, சினிமாவுக்காகவே வாழும் ஒருவருக்கே இப்படி நடந்தால் மற்றவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று வியக்கிறேன் என்றார்.

சபானா அஸ்மி கூறுகையில்,

சென்சார் போர்டு அனுமதி அளித்த பிறகு எந்த மாநில அரசும் படத்திற்கு தடை விதிக்க முடியாது. விஸ்வரூபம் தங்கள் மனதை புண்படுத்துகிறது என்று நினைப்பவர்கள் அதை பார்க்க வேண்டாம். அவர்கள் எப்படி படத்தை பார்க்க விரும்புபவர்களின் உரிமையை பறிக்க முடியும்? படத்தைப் பார்க்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே. கருத்து சுதந்திரம் குறைந்து கொண்டிருக்கிறது என்றார்.

பிரியதர்ஷன் கூறுகையில், கருத்து சுதந்திரத்திற்கு தடைபோட யாருக்கும் உரிமை இல்லை என்றார்.

 

விஸ்வரூபம் வெளியாகும்வரை ‘தலைவா’ பட வேலைகள் துவங்காது - முதல் முறை வாய் திறந்த விஜய்

Vijay Supports Kamal   

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் நடிகர் விஜய்.

விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை தன் புதிய பட வேலைகளைத் தொடங்கமாட்டாராம் விஜய்.

விஸ்வரூபம் விவகாரம் கடந்த 20 நாட்களாக பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் விஜய் அமைதியாகவே இருந்தார். இந்தப் படத்துக்கு தடை, தடைக்குத் தடை, அதற்கும் ஒரு தடை என பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

ஆனால் அப்போதும் விஜய் அமைதியாக இருந்துவிட்டார். ஏற்கெனவே அரசியல் ஆர்வத்தில் அவரும் அவரது தந்தையும் செய்யும் செயல்களால் ஆட்சி மேலிடத்தின் கோபப் பார்வைக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த நேரத்தில் கமல் பிரச்சினையில் தலையிடுவது ஆபத்து என அமைதி காத்தனர். ஆனால் கமல் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகக் கூறியதும், விஜய் வாய்திறந்துவிட்டார்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை ஏஎல் விஜய் இயக்கும் தன்னுடைய புதிய படமான தலைவா பணிகளைத் தொடங்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ஏறு, உன்னால் முடியும் என்று என்னைத் தூக்கி விட்டவர் எம்.ஜி.ஆர். - கமல்

I Dont Have Fear Because Mgr Lifte

சென்னை: ஆனந்தஜோதி படத்தில், முடியும் உன்னால், ஏறு ஏறு என்று என்னை தூக்கி விடுவார் எம்.ஜி.ஆர். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கி விட்டதனால். எனவே எனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நேற்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வெற்றி தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?

நான் குழந்தையையாக நடிகையர் திலகம் கையில் அணைத்து எடுக்கப்பட்டிருக்கிறேன். காதல் மன்னன் ஜெமினி கணேசன் கையை பிடித்துக்கொண்டு நடை பயின்றிருக்கிறேன்.

மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறி நின்றது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த ஜோதி படத்தில் முடியும் உன்னால் ஏறு..ஏறு..ஏறு.. . என்று தூக்கி விடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால், எனக்கு பயமில்லை என்றார் கமல்.

 

கமல் பேசியதைக்கேட்டு எனது இதயத்தில் ரத்தம் கசிகிறது- தனுஷ்

I Am More Pained Kamal S Speech Says Danush

சென்னை: கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மாபெரும் மனிதர். அவரது பேச்சைக்கேட்டு எனது இதயத்தில் ரத்தம் கசிகிறது. இதற்கு மேல் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷும், அவரது மனைவி இயக்குநர் ஐஸ்வர்யாவும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் விவகாரம் மற்றும் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷடமானது . மிகவும் கஷ்டமாக உள்ளது. நாங்கள் சாரைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது பேச்சால் அதிர்ந்து போயுள்ளோம். சினிமாவுக்காகவே வாழ்பவர் கமல் சார். அவரது படம் ரசிகர்களைப் போய்ச் சேர வேண்டும், யாருக்காக எடுத்தாரோ அவர்களிடம் அது போக வேண்டும். திரைக்குப் போய்ச் சேர வேண்டும்.

கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவரின் ஆதரவும் கமல் சாருக்கு உண்டு என்றார் ஐஸ்வர்யா.

தனுஷ் கூறுகையில், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 50 வருடமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சந்தோஷப்படுத்தி ரசித்து வருபவர் கமல் சார். அவரது பேச்சைக் கேட்டு எனக்கு இதயத்தில் ரத்தம் கசிந்தது. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார் தனுஷ்.

 

'புரட்சித் தலைவி, முதல்வர் அம்மாவுக்கு நன்றி நன்றி!' - கமல் சார்பில் சிவகுமார், ராதிகா

Film Personalities Thanking Jayalalitha

சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான தடையை விலக்கிக் கொள்ள முன்வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கமல் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர் சிவகுமார், ராதிகா உள்ளிட்ட சினிமாக்காரர்கள்.

கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த சூழலில், இன்று கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, அவரது அலுவலகத்தில் கூடினர் சினிமா பிரபலங்கள் பலரும்.

அவர்கள் இந்தத் தடை, கமலுக்கு தங்களின் ஆதரவை எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தபோதே, முதல்வர் ஜெயலலிதாவின் பேட்டி வெளியாகிவிட்டது.

இஸ்லாமிய அமைப்பினருடன் கமல் சமரசமாகப் போய்விட்டால், படத்தை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று முதல்வர் கூறியிருந்தார். இதைக் கேட்டவுடன் ரசிகர்கள் வெளியில் கொண்டாட ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து வந்திருந்த அத்தனை பிரபலங்களும் அப்படியே யு டர்ன் அடித்து, முதல்வருக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தனர்.

முதலில் பேட்டியளித்த நடிகை ராதிகா, "தமிழக முதல்வர், புரட்சித்தலைவரி மாண்புமிகு அம்மா அவர்களின் அறிவிப்பின் மூலம் விஸ்வரூபம் பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரது உள்ளம் கலையுலகினருக்காக எப்போதுமே இரக்கப்படும். அதனால்தான் சுமூகத் தீர்வுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளார். முதல்வருக்கு எங்கள் திரையுலகமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

மும்பையில் இருக்கும் கமல்ஹாசனிடம் இந்தத் தகவலை தெரிவித்துவிட்டோம். இஸ்லாமிய அமைப்புகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காணப்படும். இதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்குகிறோம்," என்றார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில், "முதல்வர் புரட்சித்தலைவிக்கு கமல் சார்பில் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் கமல்ஹாஸன் வந்துவிடுவார். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை முடித்துவிடுவோம். முதல்வருக்கு மீண்டும் நன்றி," என்றார்.

விரைவில் முதல்வரை நேரில் சந்தித்து கமல் நன்றி கூறுவார் என்றும் சிவகுமார் தெரிவித்தார்.

 

இஸ்லாமிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் சார்பில் அமீர் சந்திப்பு!

Ameer Meet Islamic Organisations

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் கமல்ஹாசனுடன் பேச்சு நடத்த அரசே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கமல்-இஸ்லாமிய கூட்டமைப்பு- அரசு என்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் 24 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் கமலும் இஸ்லாமியக் கூட்டமைப்பினரும் சேர்ந்து பேசி பிரச்சனைத் தீர்க்க முயன்றால், அதற்கு அரசு உதவும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இந்தக் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா எம்எல்ஏ,

இந்தப் பிரச்சனையில் முதல்வர் இன்று தெரிவித்த கருத்துக்களை வரவேற்கிறோம். இதற்காக அவருக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி கமலுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளோம்.

இதில் அரசுத் தரப்பும் பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறோம். இது முத்தரப்புப் பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது இந்தக் கருத்தை அரசிடம் தெரிவிப்போம். அதன் பின்னர் பேச்சுவார்த்தை குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இதை அரசியலாக்க முயலவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் கமல் எங்களுடன் பேசவில்லை, மீடியாவில் தான் பேசினார் என்றார்.

அமீரும் முயற்சி...

முன்னதாக இயக்குனர் அமீர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, சரியான நேரத்தில் விஸ்வரூபம் பிரச்னையில் தலையிட்டு ஒரு சுமூக முடிவு ஏற்பட வழி செய்து கொடுத்துள்ளார். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய அமைப்பினர் அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தப் போகிறோம். எந்த இடத்தில் பேச்சு நடக்கும் என பின்னர் சொல்கிறேன். கமல் வந்ததும் இந்த பேச்சு மற்றும் காட்சி நீக்கங்களை முடிவு செய்துவிடுவோம்," என்றார்.

 

ரம்யா கிருஷ்ணனின் 'நீலாம்பரி' அவதாரம்...

Ramya Krishnan As Neelambari

நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் புதிய சீரியல் ராஜகுமாரி சன் டிவியில் இந்த வாரம் தொடங்கியுள்ளது. இதில் ரம்யா கிருஷ்ணனின் திரை உலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய நீலாம்பரி என்ற பெயரை தனது கதாபாத்திரத்தின் பெயருக்கு வைத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

காசி நகரத்தின் ஆன்மீக அழகுடன் கதை ஆரம்பித்துள்ளது. நீலாம்பரியின் பிறந்தநாள் தினத்தில் ஆண்டுதோறும் காசிக்கு வந்து சுவாமிக்கு அர்ச்சனை செய்வது அவரது குடும்பத்தினரின் வழக்கம். இந்த ஆண்டு முக்கியமான பிறந்தநாள் என்றும் உன்னுடைய வாழ்க்கையில் திருப்பங்கள் வரப்போகிறது என்றும் கூறிய சாது நீலாம்பரியை சுவாமிக்கு அபிசேகம், அர்ச்சனை செய்யச் சொல்லுகிறார்.

தொடரின் மற்றொரு பகுதி சென்னையில் நிகழ்கிறது. சரத்பாபு, கிட்டி அண்ணன் தம்பிகள் அவர்களின் சொத்தும் வியாபாரமும் இணைந்தே இருக்கிறது. அவர்களைப் போல அவர்களின் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றனர். இதில் கிட்டி-கீதாவிற்கு பிறந்த மூத்த பெண் ராஜகுமாரியை சிறுவயதிலே தொலைத்து விடுகின்றனர். அந்த குழந்தைதான் நீலாம்பரியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன்.

தனது குடும்பத்தினரை நீலாம்பரி சந்திக்கிறாளா? அண்ணன் தம்பிகள் கடைசிவரை இதே ஒற்றுமையுடன் இருப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் கதை நகர்கிறது. பெரும்பாலான தொடர்களில் அண்ணன் சொல்வதைத்தான் தம்பி கேட்பார்கள். ஆனால் இந்த தொடரில் தம்பி கிட்டி கூறுவதை தட்டாமல் கேட்கிறார் அண்ணன் சரத்பாபு.

சினிமா, சீரியல் என எதிலும் தலை காட்டாமல் கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த சரப்பாபு, கீதா ஆகியோர் இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜகுமாரி தொடர் சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தொடரின் கதைக்களம், காசி, சென்னை என பயணிக்கிறது. காட்சியமைப்புகள் அழகாக இருக்கிறது. படையப்பாவில் வெற்றி பெற்ற நீலாம்பரி இந்த தொடரை வெற்றிகரமாக கொண்டு செல்வாரா என்பது போகப்போகத் தெரியும்.

 

விஸ்வரூபம் விவகாரம்: கமலுக்கு சல்மான் கான் ஆதரவு

Vishwaroopam Salman Khan Supports Kamal

மும்பை: விஸ்வரூபம் பிரச்சனையில் கமல் ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அந்த தடையை நீக்கி படத்தை ரிலீஸ் செய்ய கமல் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திரைத்துறையினர் ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டின் வசூல் மன்னன் சல்மான் கான் விஸ்வரூபம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சல்மானின் ட்வீட்:

கலையை மதியுங்கள், கலைஞனை மதியுங்கள், ரசிகர்களை மதியுங்கள். நான் கமல் ஹாசனை ஆதரிக்கிறேன். சென்சார் போர்டு படத்திற்கு அனுமதி அளித்துவிட்டதல்லவா. 100 சதவீதம் நான் அதைப் பார்க்கப் போகிறேன். படங்கள் நல்ல படம், மோசமான படம் என்று 2 வகைப்படும். படம் ஹிட்டா, தோல்வியா என்பதை டிக்கெட் வாங்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

கமல் கஷ்டத்தைத் தீர்க்க இலவசமாக நடித்துத் தருகிறார் ரஜினி?

Is Rajini Going Act Kamal Direction

சென்னை: சமூக வலைத் தளங்களில் கருத்து சொல்லிக் கொண்டிருந்தது போய், செய்திகள் என்ற பெயரில் இஷ்டத்துக்கும் அடித்துவிட ஆரம்பித்துள்ளனர்.

தாங்கள் கேள்விப்படும் செவி வழி தகவல்களை, நம்பகமான செய்திகளாகவே கொட்டி வருகின்றனர் ஆர்வக் கோளாறில்.

அந்த வகையில் இப்போது வந்துள்ள ஒரு 'செய்தி' இது. கமல் கஷ்டத்தைப் போக்க, அவர் இயக்கத்தில் இலவசமாகவே நடித்துக் கொடுக்கப் போவதாக ரஜினி அறிவித்துள்ளாராம்.

இதனை ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் பிரபலங்கள் கூட பகிர்ந்து வருவதால், இதற்கு ஒரு நம்பகத் தன்மை வந்துவிட்டது.

எனவே அனைவருமே இந்த செய்தி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

"கமலுக்கு நேர்ந்துள்ள பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ரஜினி தீவிரமாக உள்ளது உண்மைதான். அரசியல் மற்றும் அரசு ரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க ரஜினி சிலரிடம் பேசி வருகிறார். ஆனால் கமலுக்கு இலவசமாக படம் நடித்துத் தருகிறேன் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. இது தேவையின்றி அவரை சிக்கலில் மாட்டிவிடும் முயற்சி," என்றனர் நாம் விசாரித்தபோது.

ரஜினி தரப்பில் கேட்டபோதும், அப்படி எந்த அறிவிப்பையும் ரஜினி வெளியிடவில்லை என்றனர்.

பிரச்சினையின் உண்மையான காரணத்தைத் தீர்க்காமல் ரஜினியே படம் நடித்துக் கொடுத்தாலும் நாளை அந்தப் படத்துக்கும் இதே நிலைதான் வரும் என்பது ரஜினிக்கும் புரியுமல்லவா!

 

மும்பை செல்கிறார் கமல்.. அங்காவது பிரச்சினையின்றி வெளியாகுமா விஸ்வரூபம்?

Kamal Fly Mumbai Release Viswaroop

சென்னை: விஸ்வரூபம் படத்தை இந்தியில் வெளியிட இன்று மும்பை செல்கிறார் கமல்ஹாஸன்.

விஸ்வரூபம் படத்துக்கு தடைமேல் தடை, தமிழக அரசுடன் மோதல், தொடர்ந்து இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்திலிருந்து வெளியேறப் போவதாக கமல் மிரட்டல் என பல்வேறு விறு விறு காட்சிகள் நேற்று முழுவதும் அரங்கேறின.

பின்னர் மாலையில் தன் அலுவலகம் எதிரில் திரண்டிருந்த ரசிகர்களுடன் பேசினார் கமல்ஹாஸன்.

அவர் கூறுகையில், ‘மும்பைக்கு சென்று வெற்றிகரமாக திரும்பி வருவேன். அதுவரை அமைதி காக்க வேண்டும். உங்களை நம்பித்தான் மும்பைக்கு செல்கிறேன்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் இந்தப் படம் தயாராகியுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி அங்கு இந்தப் படம் வெளியாகிறது. அடுத்த நாளே டிடிஎச்சில் வெளியாகும் என கமல் கூறியிருந்தார். அது சாத்தியமா என்று தெரியவில்லை.

இந்தியிலும் கமலுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அங்கே பிவிஆர் தியேட்டர் குழுமத்துடன் கமலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வட இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்த உடனே, ஒரு தியேட்டர் கூட தரமாட்டோம் என பிவிஆர் குழுமம் அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம்.

 

உணர்ச்சிவசப்படாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் - இயக்குநர் அமீர்

Director Ameer Calls Calm

சென்னை: இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் விஸ்வரூபம் விஷயத்தில் பொறுமை காக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பிரச்சனைகளுக்கு உயர் நீதிமன்றம் தலையிட்டு அத்திரைப்படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சில ஊர்களில படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கோவையில் பழைய இரும்புக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் வரும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும். எனவே கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்த விஷயத்தில் பொறுகை காக்க வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

தமிழகத்தில் நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதேனும் நடந்துவிட்டால் அது காலத்தால் மறைக்க முடியாத கரும்புள்ளியாகிவிடும். இந்த சூழ்நிலையில் மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்கள் வருத்தத்துடன் பேட்டியளித்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

கமல் போன்ற நிதானமான கலைஞன் தமிழகத்தை மதசார்புள்ள மாநிலமாக கருதக்கூடாது. நான் உள்பட தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் தமிழகத்தை மதசார்பற்ற மாநிலமாகவும், இந்தியாவை மதசார்பற்ற நாடாகவும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே தாங்கள் அவசரப்பட்டு எந்த விதமான முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், ஒரு படைப்பாளியாக சக மனிதனாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாமல் காப்பதுடன் இந்த பிரச்சனை மேலும் உயர் பெறாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.