கொச்சியில் குட்டித்தீவு வாங்கியிருக்கும் நயன்தாரா


நடிகை நயன்தாரா கொச்சி அருகே குட்டித் தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம்.

நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர் என்பது அனைவரும் தெரிந்ததே. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலாகின்றனர். அதற்காக ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார் நயன். எப்பொழுது ஷாப்பிங் சென்றாலும் தனக்கு டிரெஸ் எடுக்கிறாரோ இல்லையோ, தவறாமல் பிரபுதேவாவுக்கு டிரஸ் எடுத்துவிடுவார்.

இந்நிலையில் கொச்சியில் இயற்கை எழில் கொஞ்சும் குட்டித் தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம் நயன்தாரா. இது தவிர திருவல்லா, எர்ணாகுளம், தேவரா ஆகிய இடங்களிலும் வீடு வாங்கியுள்ளாராம்.

சம்பாதித்த பணத்தை எல்லாம் நயன் பிரபுதேவாவுக்காக செலவளித்துவிட்டார். தான் ஆசை, ஆசையாக வாங்கிய பிஎம்டபுள்யூ காரைக் கூட விற்றுவிட்டார் என்றெல்லாம் ஒரு காலத்தில் செய்திகள் வந்தது என்பது குறிப்பிடத்தகக்து.
 

மகன் சாப்பாடு போடவில்லையே... காமெடி நடிகர் லூஸ் மோகன் கண்ணீர்!


சென்னை: சாப்பாடு போட மகன் மறுக்கிறார் என நடிகர் லூஸ்மோகன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

மயிலாப்பூரில் வசித்து வருகிறார் நடிகர் லூஸ்மோகன். எம்ஜிஆர் காலத்திலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் லூஸ் மோகன். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

இன்று காலை போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் வந்த அவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார்.

அதில், "எனது மகன் கார்த்திக், மனைவியுடன் சேர்ந்துகொண்டு சாப்பாடு போட மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் வேறு எதுவும் கேட்க வில்லை. மூன்றுவேளை சாப்பாடு கொடுத்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம்," என குறிப்பிடப்பட்டிருந்தது.

புகார் அளித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களிடம் லூஸ்மோகன் கூறியதாவது:

சினிமாவில் பலரை சிரிக்க வைத்த எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது.

எனது மனைவி 2004-ம் ஆண்டு இறந்து விட்டார். மகனுடன் நான் தங்கி இருக்கிறேன். அவரை நான்தான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டேன்.

கடந்த 3 நாட்களாக மனைவி பேச்சை கேட்டு அவர் வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு சாப்பாடு வாங்கி தருவது இல்லை. வயதாகி விட்டதால் காலையில் 2 இட்லியும், இரவு 2 இட்லியும் மட்டுமே சாப்பிடுகிறேன். அதைக் கூட தர மறுக்கிறார். எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. அதனால் தங்குவதற்கு பிரச்னை இல்லை. என் பையன் என்னை கவனித்து சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதும்," என்றார் கண்ணீருடன்.

கமிஷனரிடம் இவர் அளித்த புகார் மயிலாப்பூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிடப்பட்டுள்ளார்.
 

'காதல்' சந்தியாவுக்கு திருமணம்


தமிழ் சினிமாவில் பெரிதாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர் நடிகை சந்தியா. அவர் நடித்த காதல் படம் ஓடிய ஓட்டம் அப்படி.

ஆனால் அடுத்தடுத்த படங்கள் பெரிதாக கைகொடுக்காததால், சந்தியாவுக்கு தமிழில் பெரிய வெற்றிப் படங்கள் அமையவில்லை. கடைசியாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் சின்ன வேடத்தில் வந்து போனார்.

சொந்த மொழியான மலையாளப் பக்கம் போனார். சில படங்களும் நடித்தார். ஆப்தரக்ஷகா கன்னடப்படத்திலும் நடித்தார்.

இப்போது தமிழில் நூற்றுக்கு நூறு என்ற படத்திலும் மலையாளத்தில் டி 17 என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடித்தது போதும், திருமணம் செய்து செட்டிலாகும் வழியைப் பார் என்ற அவரது அம்மாவின் அட்வைஸ்படி, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

மாப்பிள்ளையும் பார்த்தாகிவிட்டது என்கிறார்கள். ஆனால் இன்னும் அதுகுறித்த விவரங்களைச் சொல்லாமல் ரகசியம் காத்து வருகின்றனர்!
 

சிம்பு பட இசைத் தட்டை வெளியிட்டார் விஜய்!


சிம்பு எப்போதுமே தன்னை அஜீத்தின் ரசிகராக காட்டிக் கொள்பவர். விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதுகூட, நான் அஜீத் ரசிகன். விஜய் படத்தில் நடித்தால் என் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டார்.

அப்படிப்பட்ட சிம்புவின் ஒஸ்தி பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராப் பங்கேற்று, இசைத்தட்டையும் வெளியிட்டார் விஜய்.

காரணம்... விஜய்யின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான தரணி இயக்கியுள்ள படம் ஒஸ்தி என்பதுதான்.

இந்த இசை வெளியீட்டு விழாவின் இன்னொரு ஹைலைட் இயக்குநர் பாக்யராஜ் வந்து வாழ்த்தியதுதான். ஒரு காலத்தில் ரஜினி - கமல் ரேஞ்சுக்கு, பாக்யராஜ் - ராஜேந்தர் போட்டி பிரபலமாக இருந்தது.

பாக்யராஜை மேடைக்கு அழைத்ததும், அங்கே நின்று கொண்டிருந்த டிஆர் அருகில் நின்று கொண்டு ஒரு கேள்வி எழுப்பினார். ராஜேந்தருக்கும் அவர் மகன் சிம்புவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு தெரியுமா என்றார். கூட்டம் விழிக்க, ராஜேந்தர் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர், ஆனால் சிம்பு எல்லா கிசுகிசுவிலும் இருப்பவர், என்று கூற அரங்கில் விசில் பறந்தது!
 

சிங்களப் படத்தில் நடிகை பூஜா!


நடிகை பூஜா மீண்டும் நடிப்புக்குத் திரும்புகிறார். இப்போது ஒரு சிங்களப் படத்தில் நடிக்கும் அவர், மீண்டும் தமிழில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நான் கடவுள் படம் வெளியாகி, பூஜாவுக்கு ஓகோவென பெயர் வாங்கித் தந்தது. ஆனால் அதன் பிறகு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. பெங்களூரில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் என்றார்கள்.

இல்லையில்லை, அப்பா அம்மா பேச்சைக் கேட்டு, ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்கள்.

இன்னும் சிலர் அந்த கம்பெனி ஓனர்தான் பூஜாவின் மாப்பிள்ளை என்றார்கள். ஆனால் எந்த கிசுகிசுவுக்கும் பூஜா பதில் தரவில்லை.

இப்போது சிங்களத்தில் தயாரிக்கும் புத்தரின் இளமைக்கால வரலாறு பற்றிய படத்தில் நடிக்கிறாராம் பூஜா.

இந்தப் படம் முடிந்ததும் தமிழிலும் நடிப்பார் என்கிறா்கள்.
 

புதுமுக ஹீரோவுக்கு ஜோடியானார் ரீமா சென்!


ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு வாய்ப்புகளே இல்லாமல் இருந்த ரீமா சென், ஓட்டல் அதிபரை திருமணம் செய்யப் போவதாக கூறப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இந்த முறை அவர் ஒப்புக் கொண்டிருப்பது பிரபல நடிகர், இயக்குநர் படத்தில் அல்ல. புதுமுக நடிகர் பாஸ்கரன் ஹீரோவாக நடிக்க, புதிய இயக்குநர் ராஜ்குமார் இயக்கும் படம் இது.

ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவர் இந்த ராஜ்குமார். ப்ளூ ஓசியன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். பூபதி ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கை கவனிக்கிறார். நவம்பரில் படத்துக்கான போட்டோ ஷூட் நடக்கிறது.

சில தினங்களுக்கு முன், ஜெஜெ டிவி பாஸ்கரன் சினிமாவில் நடிக்கபோவதாக அறிவித்திருந்தார். ஆனால், படத்தின் இயக்குநர், ஹீரோயின் பற்றி எந்த தகவலும் இல்லை. இப்போது தயாராகும் இந்தப் படத்தின் நாயகன் பெயர் பாஸ்கரன்தான். ஆனால் இவர் ஜெஜெடிவி பாஸ்கரனா என்று கேட்டால், கொஞ்சம் வெயிட் என்ு மழுப்புகிறார்கள்!
 

ராணாவுக்காக ரஜினிக்கு ஸ்பெஷல் மசாஜ்!


ராணாவில் நடிக்க முழுவீச்சில் தயாராக ஆரம்பித்துவிட்டார் ரஜினி. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளவும் அவருக்கு சிறப்பு மசாஜ் அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து வந்த ரஜினி மூன்று மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

நேற்று ரஜினிகாந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடை கல்கண்டு காணிக்கையாக வழங்கினார். அவருடன் மனைவி லதா, மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் உள்பட 16 பேரும் சென்று தரிசனம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது பூரண குணம் அடைந்து விட்டார். பழைய பொலிவுடன் இருக்கிறார்.

ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார். இன்னும் 2 மாதங்களில் அவர் ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதையடுத்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிய உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். முக அழகை மெருகூட்டுவதில் அக்கறை செலுத்துகிறார்.

திருப்பதி செல்வதற்கு 2 நாட்களுக்கு முன் திடீரென்று ரஜினிகாந்த் காரில் சென்னை ஹாரிங்டன் சாலையில் தான் வாடிக்கையாக செல்லும் ஒரு பிரபலமான சலூனுக்கு சென்றார். அங்கு அவர் பேஷியல் செய்து கொண்டார். முகத்தில் தசைகளின் சுருக்கத்தை மறைக்க நிபுணர்கள் மூலம் மசாஜ் செய்யப்பட்டது.

3 மணி நேரம் வரை அவர் சலூனில் இருந்து முக அழகு செய்து கொண்டதாக சலூனிலிருந்தவர்கள் பின்னர் தெரிவித்தனர்.
 

ஜனவரியில் ராணா படப்பிடிப்பு தொடங்கும்! - ரஜினி பேட்டி


திருப்பதி: தான் பூரண நலத்துடன் உள்ளதாகவும், ராணா படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்பதையும் நிருபர்களிடம் தெரிவித்தார் ரஜினி.

உடல்நிலை சரியாகி, தான் எப்போதும் போல நல்ல சுறுசுறுப்புடன் இருப்பதை அனைவருக்கும் காட்டிவிட்ட ரஜினி, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதன்கிழமை திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சென்றார்.

அதே துள்ளல் நடை, விறுவிறு பேச்சு, தனக்கே உரிய வேகத்தில் கும்பிட்டபடி நடந்து வந்தார் ரஜினி.

கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திய அவர், கடவுள் கிருபையாலும், ரசிகர்களின் பிரார்த்தனைகளாலும் தான் மிகவும் நலமுடன் இருப்பதாகக் கூறினார். திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறிய ரஜினியிடம் நிருபர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு ரஜினி கூறிய பதில்கள்:

ராணா படம் என்ன ஆனது? படப்பிடிப்பு எப்போது?

ராணா படம் தொடங்க இன்னும் இரண்டொரு மாதங்கள் பிடிக்கும். காரணம் அது மிகப்பெரிய படம். பெரிய பட்ஜெட். ஆக்ஷன் மற்றும் காஸ்ட்யூம் ட்ராமா. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அநேகமாக ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.

சார்... உங்க ரசிகர்கள் பிரார்த்தனைகள் குறித்து...

அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். என் நன்றியை அவர்களுக்கு எப்படி சொல்வேன் என்று தெரியவில்லை. என் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டி செய்திகளை வெளியிட்டனர் ஊடகங்கள். அவர்களுக்கு என் நன்றி.

ரா ஒன்னில் ஷாரூக்கானுடன் நடித்துள்ளீர்களா?

ஆமாம்... ஷாரூக்கானுக்காக நடித்துக் கொடுத்தேன். அதில் பணியாற்றியது சந்தோஷம். நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்.

-இவ்வாறு கூறினார் ரஜினி. பின்னர் அனைவருக்கும் தனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
 

திருப்பதியில் ரஜினி... ஏழுமலையானுக்கு துலாபாரம் செலுத்தினார்!


திருமலை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதன்கிழமை திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்தார். பின்னர் அவர் காணிக்கையாக துலாபாரம் செலுத்தினார்.

ஏழுமலையானின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். அவர் சமீபத்தில் உடல்நலமில்லாமல் சிகிச்சைப் பெற்று, மீண்டும் பழையபடி ஆரோக்கியத்துக்குத் திரும்பினார்.

தனது உடல்நிலை சீரானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் புதன்கிழமை திருமலைக்குச் சென்றார். அவருடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின் ஆகியோரும், ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபுவும் சென்றிருந்தனர்.

அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர்கள் இரவு 7.30 மணிக்கு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வந்தனர். அவர்களை திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ வரவேற்று வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக தரிசனத்துக்கு அழைத்து சென்றார்.

திருமலையில் ரஜினிக்காக சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலில் துலாபாரம் செலுத்தினார் ரஜினி.

லதா மொட்டை

பேரன் லிங்காவுக்கு முடிகாணிக்கையும் செலுத்தினர். ரஜினி மனைவி லதாவும் கணவருக்காக திருமலையில் முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் அரைமணி நேரம் அங்கிருந்த ரஜினி மற்றும் குடும்பத்தினர் பின்னர் சென்னை திரும்பினர்.

கடந்த ஆண்டு இளையமகள் சௌந்தர்யா திருமணம் முடிந்தபிறகு திருமலைக்கு வந்திருந்தார் ரஜினி. அதன் பிறகு இப்போதுதான் வருகிறார். இடையில் சில மாதங்களுக்கு முன் சௌந்தர்யாவும் அவர் கணவர் அஸ்வினும் திருமலைக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்பா விரைவில் திருமலைக்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவார் என்று அப்போது சௌந்தர்யா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
 

இந்தி நடிகை கீதா பஸ்ராவை மணக்கிறார் ஹர்பஜன் சிங்?


இந்தி நடிகை கீதா பஸ்ராவை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மணக்கப் போவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் வசித்து வரும் பஞ்சாபிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா. தற்போது மும்பையில்தான் வசித்து வருகிறார். தில் தியா ஹை மற்றும் தி டிரெயின் ஆகிய இரு படங்களில் மட்டும் நடித்துள்ளார். டிரெயின் படத்தில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கீதா. திரைப்படங்கள் தவிர ரஹத் பதே அலிகான் மற்றும் சுக்சீந்தர் ஷின்டாவின் கும் சம் கும் சம் என்ற வீடியோ பாடலுக்கு ஆடியுள்ளார் கீதா.

கிஷோர் நமீத் கபூரின் நடிப்புப் பள்ளியில் நடிப்புப் பயிற்சி முடித்தவர் கீதா. இருப்பினும் தற்போது படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் கீதாவுக்கும், ஹர்பஜனுக்கும் இடையே காதல் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை வெறும் நட்பு என்று கீதா கூறியிருந்தார். ஆனால் இந்த நட்பு தற்போது காதலாக மாறி கல்யாணத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

கீதா, ஹர்பஜன் திருமணம் எப்போது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விரைவில் முறைப்படி இரு வீட்டாரும் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.