திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்த சூரிய சக்தி ஊழல் வழக்கில் கேரள நடிகை ஷாலு மேனன் போலீசாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை பொருத்தி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கான பண மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி அலுவலகத்துக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதாநாயர் என்ற பெண் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் முதல்வர் அலுவலக உதவியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு உதவியதாக கேரள நடிகை சாலுமேனன் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சாலுமேனன் மீது திருச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த ஊழல் விவகாரத்தில் நடிகை சாலுமேனனுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அவரையும் அவரது தாயாரும் சம்மன் அனுப்பி விசாரித்தனர் போலீசார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் அருகே செங்கனாஞ்சேரி வீட்டில் தங்கியிருந்த நடிகை சாலு மேனனை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் அருகில் உள்ள செங்கனூர் என்ற இடத்துக்குக் கொண்டு போய் விசாரணை நடத்தி வருகின்றனர்.