திடீர் மயக்கம்: நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் கார்த்தி திடீரென மயங்கி விழுந்ததால், நேற்று மாலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார்.

திடீர் மயக்கம்: நடிகர் கார்த்தி மருத்துவமனையில் அனுமதி

30 நாட்களாக படப்பிடிப்பு

கடந்த 30 நாட்களாக அவர் கமுதியில் நடந்த ‘கொம்பன்' என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார். முத்தையா டைரக்டு செய்து வரும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படமாக்கி முடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கார்த்தி சென்னை திரும்பினார்.

திடீர் மயக்கம்

இந்நிலையில் நேற்று மாலையில் நடிகர் கார்த்தி, அவரது வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

ஃபுட் பாய்சன்

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு ஃபுட் பாய்சன் காரணமாகவே ஒவ்வாமை ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறினர். கார்த்திக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துள்ளனர்.

இன்று வீடு திரும்பலாம்

கார்த்தி மிகவும் களைப்பாக இருந்ததால், அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கார்த்தி, இன்று வீடு திரும்புவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

 

நேற்றைக்கு மழை பெய்யும்... அடுத்த படம் அறிவித்தார் பாரதிராஜா!

சென்னை: ‘அன்னக்கொடி' படத்திற்கு பிறகு தான் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

இப்படத்திற்கு ‘நேற்றைக்கு மழை பெய்யும்' என்று தலைப்பு வைத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை இயக்குனர் அகத்தியன் எழுதியுள்ளார்.

நேற்றைக்கு மழை பெய்யும்... அடுத்த படம் அறிவித்தார் பாரதிராஜா!

இப்படத்தின் கதாநாயகனாக இயக்குனர் சேரன் நடிக்கிறார். கதநாயாகியை இன்னும் பாரதிராஜா முடிவு செய்யவில்லை.

இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பாரதிராஜா தீவிரமாக உள்ளார்.

காதல்தான் படத்தின் மையக்கரு. ஆகஸ்ட் 3-ந் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடுகிறார் பாரதிராஜா.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் அன்னக்கொடி. இந்தப் படம் சரியாகப் போகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களை இயக்கப் போவதாக பாரதிராஜா அறிவித்திருந்தார். அதில் முதல் படம்தான் இந்த நேற்றைக்கு மழை பெய்யும்!

 

தமிழ்சினிமா பாக்ஸ் ஆபீஸ்... முதலிடத்தில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

சென்னை: தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக முதலிடத்தில் உள்ளது தனுஷின் வேலையில்லா பட்டதாரி.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தனுஷுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிப் படமாக இது பார்க்கப்படுகிறது.

சென்னையிலும் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரியே முதலிடத்தில் உள்ளது.

தமிழ்சினிமா பாக்ஸ் ஆபீஸ்... முதலிடத்தில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

தமிழ் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி வெளியாகி பத்து நாட்களாகிறது. இந்த நாட்களில் மொத்தம ரூ 21 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ 3.5 கோடி வசூலாகியுள்ளது வேலையில்லா பட்டதாரிக்கு.

சதுரங்க வேட்டை

நட்டு என்கிற நட்ராஜ் ஹீரோவாக நடித்துள்ள சதுரங்க வேட்டை ஒரு ஆச்சர்ய ஹிட் படம். மனோபாலாவின் முதல் தயாரிப்பாக வந்துள்ள இந்தப் படம், வேலையில்லா பட்டதாரிக்கு இணையாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திருமணம் எனும் நிக்காஹ்

ரம்ஜான் ஸ்பெஷலாக கடந்த வியாழக்கிழமை வெளியான படம் திருமணம் எனும் நிக்காஹ். போட்டிகளே இல்லாத சூழல். படம் சிறப்பாக வந்திருந்தால் வசூலை அள்ளியிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பை இழந்து, மூன்றாமிடத்தில் உள்ளது இந்தப் படம்.

அரிமா நம்பி

விக்ரம் பிரபு நடித்துள்ள அரிமா நம்பி வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. ஓரளவு நல்ல வசூலையும் பார்த்துவிட்டது.

இருக்கு ஆனா இல்ல

கேஎம் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் இருக்கு ஆனா இல்ல. தமிழ் சினிமாவின் சமீபத்திய ட்ரெண்டான பேய்க் காமெடி. பார்க்கக் கூடிய அளவுக்கு இருந்தாலும், ஏகப்பட்ட படங்கள் ரிலீஸானதில் இந்தப் படத்துக்கு மூச்சுத் திணறிவிட்டது.

 

அடுத்தடுத்த ரிலீஸ்... ப்ரியா ஆனந்த்... பிஸியோ பிஸி!

அரிமா நம்பியைத் தொடர்ந்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.

தமிழில் ஒரு காலத்தில் தோல்விப் பட நடிகையாகப் பார்க்கப்பட்டவர் ப்ரியா ஆனந்த். அவர் அறிமுகமான வாமனன் படம் தொடங்கி அடுத்தடுத்து படங்கள் சரியாகப் போகாத நிலையில், அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் கைகொடுத்தது.

அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்த ரிலீஸ்... ப்ரியா ஆனந்த்... பிஸியோ பிஸி!

சமீபத்தில் அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அரிமா நம்பி வெளியானது. இந்தப் படம் வர்த்தக ரீதியாக நல்ல வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் வெளியாகின்றன. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இரும்புக் குதிரை படம் வெளியாகிறது. இதில் பிரான்சுக்குப் போகும் பாண்டிச்சேரி பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா நாயகனாக நடித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் வெளியாகிறது. இதில் விமலுக்கு ஜோடியாக, மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் ப்ரியா.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வை ராஜா வை படம் வெளியாகிறது.

 

மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டில் சிக்கிய நாயை தத்தெடுத்தார் சத்யராஜ்!

சென்னை: மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் இருந்து சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட நாயை நடிகர் சத்யராஜ் தத்தெடுத்துக் கொண்டார்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டில் சிக்கிய நாயை தத்தெடுத்தார் சத்யராஜ்!

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்கள் மீட்கும் பணி சுமார் ஒரு வாரம் நடைபெற்றது. அப்போது, இடிபாடுகளில் சிக்கியிருந்த இரண்டு நாய்கள் மற்றும் ஒரு காகத்தை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.

ப்ளூ கிராஸ் அமைப்பின் பராமரிப்பில் இருந்த அந்த நாய்க்குட்டிகள் ஒன்று ஏற்கனவே தத்தெடுக்கப்பட்டது. எஞ்சிய மற்றொரு நாய்க்குட்டியை நடிகர் சத்யராஜ் இன்று தத்தெடுத்துக் கொண்டார். அப்போது, அவரது மகன் சிபி ராஜ் உடன் இருந்தார்.

மீட்கப்பட்ட காகம் நல்ல ஆரோக்கியம் அடைந்ததை அடுத்து, அது மீண்டும் பறக்கவிடப்பட்டது.

 

இளையராஜா - வைரமுத்துவிடம் வரம் கேட்கிறேன்! - சீனு ராமசாமி

சென்னை: இசைஞானி இளையராஜா - வைரமுத்து ஆகிய பெருங்கலைஞர்களிடம் வரம் கேட்கும் நிலையில் நான் இருக்கிறேன், என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு வைரமுத்துவின் பாடலை இசைஞானி இளையராஜா பாடப் போகிறார் என்று வெளியான செய்திகள் வெளியாகின.

இளையராஜா - வைரமுத்துவிடம் வரம் கேட்கிறேன்! - சீனு ராமசாமி

இந்த செய்திகளைத் தொடர்ந்து இளையராஜாவை நான் சந்தித்தேன். அவரும் வைரமுத்து பாடலைப் பாட ஒப்புக் கொண்டார் என சீனு ராமசாமி ஒரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து இசைஞானி இளையராஜா தரப்பில் கேட்டபோது, "சீனு ராமசாமி யாரென்றே இளையராஜாவுக்கு தெரியாது. அவரை இளையராஜா சந்திக்கவும் இல்லை," என்று கூறிவிட்டனர்.

அதன் பிறகு வேறொரு நாளிதழுக்குப் பேட்டியளித்த சீனு ராமசாமி, "இளையராஜாவை நான் சந்திக்கவே இல்லை. அந்த நாளிதழ் பொய்யாக செய்தி வெளியிட்டுவிட்டது," என்றார்.

இப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

கலையுலக நண்பர்களே! எனது திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட தமிழ் நெஞ்சங்களே!

அனைவர்க்கும் வணக்கம்.

எனது "இடம் பொருள் ஏவல்" திரைப் படத்தில் தத்தெடுத்த மகனைப் பற்றிய உறவை மையப்படுத்தி ஒரு தாயின் பாடல் இடம்பெறுகிறது. இதை வைரமுத்து எழுத, யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் பாடலை யாரைப் பாட வைக்கலாம் என்ற யோசனையில் என் ஆழ்மனதில் தோன்றியவர் இசைஞானி இளையராஜா அவர்கள். இதை இப்படத்தின் இசை அமைப்பாளர் யுவனிடமும், தயாரிப்பாளர் லிங்குசாமியிடமும் தெரியப்படுத்தினேன். யுவன் தன் அப்பாவிடம் நான் கேட்கிறேன் என்றார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற கள்ளிக்காட்டில் பொறந்த தாயே மாதிரியான ஒரு பாடலை இசைஞானி பாடினால் எப்படி இருக்கும்!

ஆனால் சில நண்பர்கள் இதனை வேறுமாதிரித் திரித்து எழுதி வருகின்றனர். இதைப் பகை முற்றுப்பெற்ற காலமாக நான் பார்க்கிறேன். இரண்டு பெருங் கலைஞர்களின் பெருந்தன்மை சம்மந்தப்பட்ட விஷயம் இது. நான் இருவரிடமும் வரம் கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன்.

"பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்!" - என்ற பாரதியின் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன. இணைத்து வைக்கும் கரங்களே, என்னை ஆசீர்வதியுங்கள்!

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சீனு ராமசாமி மனதுக்குள் நினைத்த விஷயம் அந்த ஆங்கில நாளிதழுக்குத் தெரிந்து, அவர்கள் சீனு ராமசாமி பேட்டியை கற்பனையாக வெளியிட்டதுதான்.

அடேங்கப்பா.. மகா மார்க்கெட்டிங் ப்ளான்தான் போங்க!!