பிரசாத் சினி ஆர்ட்ஸ் சார்பில் கே.வி.பிரசாத் தயாரிக்கும் படம், 'கொள்ளைக்காரன்'. விதார்த், சஞ்சிதா ரெட்டி ஜோடி. தமிழ் செல்வன் இயக்குகிறார். ஏ.எல்.ஜோஹன் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்து. கவிஞர் வைரமுத்து வெளியிட, இயக்குனர் அமீர் பெற்றார். பின்னர் வைரமுத்து பேசும்போது, 'இயக்குனரும் தயாரிப்பாளரும் உணர்ச்சி வசப்படக்கூடாத இடம் திரைப்பட முன்காட்சியும், பாடல் வெளியீட்டு விழாவும். காரணம், இங்குதான் அன்பினால் சொல்லப்படும் பொய்கள் இருக்கும். அக்கறையானவர்கள் சொல்கிற சின்ன சின்ன பொய்கள் வாழ்க்கைச் சக்கரத்திற்குத் தேவை. பெரிய படங்கள் மட்டுமல்ல, சிறிய படங்களும் கவனிக்கப்பட வேண்டும். காட்டில் குயில் மட்டும் கூவினால் காடு நிசப்தமாகிவிடும். எல்லா சத்தங்களாலும் நிறைந்திருந்தால்தான் காடாக இருக்கும்' என்றார்.
தங்கர்பச்சான் பேசும்போது, 'தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவது தமிழர்களும், தமிழ் சினிமாவும்தான். டெல்லியில் தமிழ் சினிமா கலைஞர்களுக்கு மரியாதை இல்லை. இப்போது தமிழகத்தில் நடக்கும் படவிழாவில் தேசிய விருது பெற்ற படத்துக்கு இடமில்லை' என்றார். ஆர்.கே.செல்வமணி பேசும்போது, 'தமிழ் சினிமாவை டெல்லிதான் மதிக்காமல் இருந்தது. இப்போது தமிழ் நாட்டிலும் மதிக்கவில்லை. தமிழர்களை தொடர்ந்து புறக்கணித்தால் தமிழ் நாட்டில் வாழும் மற்றவர்களை நாம் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை வரும்' என்றார். விழாவில் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், அமீர், பாண்டிராஜ், சீனு ராமசாமி, நமீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் பிரசாத் வரவேற்றார். முடிவில் இயக்குனர் தமிழ் செல்வன் நன்றி கூறினார்.