4/25/2011 12:12:33 PM
சுவாமி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'செங்காத்து பூமியிலே'. ரத்னகுமார் இயக்கி உள்ள இப் படத்தில் பவன், செந்தில், பிரியங்கா, சுனுலட்சுமி நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்தது. பாடல்களை வெளியிட்டு இளையராஜா பேசியதாவது: ஒரு காலத்தில், பாடல் வெளியீட்டு விழா நடத்தப்படுவதில்லை. ஆனால் 'அண்ணக்கிளி', '16 வயதினிலே' பாடல் வெளியீட்டு விழா, இதே சேம்பர் தியேட்டரில்தான் நடந்தது. பல இனிய நினைவுகளோடு இருக்கும் இந்த தியேட்டர் இடிக்கப்பட இருக்கிறது. 908 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். சுதீந்திரன், ரத்னகுமார் போன்ற இயக்குனர்களோடு பணியாற்றுகிறேன். இளம் தலைமுறை இயக்குனர்கள் சினிமாவுக்கு நம்பிக்கை தருபவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பட கதையை ரத்னகுமார் சொன்னபோது அதில் நிறைய வன்முறை காட்சிகள் இருந்தது. குறைக்கச் சொன்னேன். அதை அவர் செய்துள்ளார். இவ்வாறு இளையராஜா பேசினார். விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன், சேம்பர் செயலாளர் ரவி கொட்டாரக்கரா, பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சுசீந்திரன், பாண்டிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தயாரிப்பாளர் துரைமுருகன் வரவேற்றார். முடிவில் ரத்னகுமார் நன்றி கூறினார்.