'மண் பானை' படத்திற்காக வாஷிங்டனில் சிறந்த இயக்குநர் விருது பெறும் பாண்டியராஜன்

Director Pandiarajan Wins Best Director Award

சென்னை: வாஷிங்டனில் நடந்த பட விழாவில் பாண்டியராஜன் சிறந்த டைரக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டைரக்டரும், நடிகருமான ஆர்.பாண்டியராஜன், ‘மண் பானை' என்ற குறும்படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். 20 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். பி.லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார். பாண்டியராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பதுடன், தயாரித்தும் இருக்கிறார்.

இந்த படத்தை அவர், வாஷிங்டனில் நடந்த ஹைபல்ப் திரைப்பட விழாவுக்கு அனுப்பியிருந்தார். அந்த படவிழாவில், ‘மண் பானை' படம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்காக பாண்டியராஜனுக்கு சிறந்த டைரக்டருக்கான விருது கிடைத்து இருக்கிறது.

 

வெளி மாநிலங்களில் மிரட்டல்: ஸ்டண்ட் நடிகர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக்!

Stunt Union Announces Indefinite Strike

சென்னை: வெளி மாநிலங்களில் மிரட்டப்படுவதால், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சினிமா ஸ்டன்ட் நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சங்க தலைவர் ‘பெப்சி' எஸ்.விஜயன், சென்னையில் இதுகுறித்து கூறியதாவது:

"உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் நாங்கள் வெளி மாநிலங்களில் பணிபுரிய செல்லும்போது, அந்தந்த மாநில சங்கத்தினரால் துன்புறுத்தப்படுகிறோம். மிரட்டப்படுகிறோம். எங்களை தொழில் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் தலையிட்டு பிரச்சினைக்கு முடிவெடுக்க வேண்டிய ‘பெப்சி' தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

பிற மொழிகளில்...

பிறமொழி படங்களில் பணிபுரியும்போது, 70-30, 80-20 என்ற அடிப்படையில் பணி வாய்ப்புகளை வழங்குகிறார்கள். இதனால் எங்கள் சங்க உறுப்பினர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள்.

தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் படங்கள் உள்பட எந்த மொழி படங்களிலும் எங்கள் சங்க உறுப்பினர்கள் இன்று முதல் பணிபுரிய மாட்டார்கள். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

அமீர் விலக வேண்டும்

எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விட்ட பெப்சி தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா ஆகிய இருவரும் அந்த பொறுப்புகளில் இருந்து விலகும் வரை, பெப்சியில் இருந்து விலகியிருப்பது என்றும் முடிவு செய்து இருக்கிறோம்," என்றார்.

 

கௌரவம்- சினிமா விமர்சனம்

Rating:
3.0/5

-எஸ். ஷங்கர்

நடிகர்கள்: சிரீஷ், யாமி கவுதம், பிரகாஷ்ராஜ், குமரவேல்
இசை: எஸ்எஸ் தமன்
ஒளிப்பதிவு: ப்ரீதா
தயாரிப்பு: பிரகாஷ் ராஜ்
இயக்கம்: ராதா மோகன்

படிப்பு, நாகரீகம், விஞ்ஞானம் என அனைத்து மாறுதல்களையும் ஏற்று அனுபவிக்கும் இந்த சாதிய கட்டமைப்பு, தலித் மக்களை மட்டும் அவர்களின் அடிப்படை உரிமையைக் கூட அனுமதிக்க விடுவதில்லை.

இன்னமும் செருப்புப் போட்டு தெருவில் நடக்க முடியாத நிலை, மேற்படிப்பு படித்தால் ஒதுக்கி வைக்கும் சாதீய கட்டுப்பாடுகள், தெருவோர டீக்கடைகளில் இரட்டை டம்ளர், மற்ற சாதியினருடன் ஒன்றாக உட்கார்ந்து ஒரு சினிமா கூட பார்க்க முடியாத கொடுமை, சாலை முனைகளில் மூடப்பட்டுக் கிடக்கும் சூரியனாய் அம்பேத்கர் சிலை... இதையெல்லாம் முதல் முறையாக ஒரு சினிமாவில் காட்சிகளாய் வைத்திருக்கிறார்கள் என்றால் அது இந்த 'கௌரவ'த்தில்தான்!

gouravam review   
குடும்ப கவுரவம் என்ற பெயரில், தன் சாதி கவுரவத்தைக் காக்க எதையும் செய்யத் துணியும் ஒரு குடும்பம் அல்லது கிராமத்தின் கதைதான் இந்தப் படம்.

தன் அலுவலக வேலையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பும் வழியில் உடன்படித்த நண்பனின் கிராமத்தைப் பார்க்கிறார் ஹீரோ சிரீஷ். நண்பனைப் பற்றி விசாரிக்கிறார். அப்போதுதான் அவன் உயர்சாதி பெண்ணை காதலித்து, ஊரைவிட்டே ஒடிப்போனதாகவும், அதன் பிறகு அவனைப் பற்றியோ அந்தப் பெண்ணைப் பற்றியோ எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள். நண்பனைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை என களமிறங்குகிறார். உடன் படித்த நண்பர்களுக்கும் தகவல் சொல்லி திரட்டுகிறார். நண்பனைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

யாரும் தொடத் தயங்கும் தலித்களுக்கு எதிரான சாதீய கொடுமைகளை இந்தப் படம் மூலம் சாட முயன்றுள்ள இயக்குநர் ராதாமோகன், அதை நினைத்த மாதிரி சொல்ல முடியாமல் அல்லது எதற்காகவோ சமரசம் செய்து கொண்டதில் சற்றே சறுக்கிவிட்டார் இந்தப் படத்தில் என்பதையும் சொல்லாமலிருக்க முடியாது.

ஆரம்ப காட்சிகளில் தெரியும் அழுத்தம், போகப் போக நீர்த்துப் போகிறது. ஊர் பெரிய மனிதர் பிரகாஷ் ராஜையும் அவரது மகனையும் காட்டும்போதே, காணாமல் போன ஜோடிக்கு என்ன நேர்ந்திருக்கும், அந்த குடும்பத்தின் சாதி கவுரவம் எப்படிக் காப்பாற்றப்பட்டிருக்கும் என்ற உண்மை தெரிந்துவிடுகிறது. அதற்குமேல் நகரும் காட்சிகள் ஒரு சடங்கு மாதிரி ஆகிவிடுவதுதான் படத்தின் பெரிய மைனஸ்.

யாரும் போகத் தயங்கும் அந்த பேய்க் கோயிலில் மனநிலை பிறழ்ந்த சிறுவனைக் காட்டும்போதே, அவன்தான் இந்தக் கதையின் முக்கிய சாட்சி என்பதுகூட எளிதாய் புரிந்துவிடுகிறது.

பாதிக்கப்படும் சமூகத்தையும் அவர்களுக்கு நேரும் அவலங்களையும் காட்டிய ராதா மோகனால், பாதிப்பை ஏற்படுத்தும் சாதியை குறிப்பிட்டுச் சொல்ல முடியாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில், ஆதிக்க சாதி என்ற நிலையில் இருக்கும் எந்த சாதிக்கும் இந்த குணம் பொதுவானதுதானே!

Gouravam Review

ஹீரோ சிரீஷுக்கு நடிப்பு, உடல்மொழி என எதுவும் சரியாக வரவில்லை. அவர் இந்தப் படத்துக்கு சரியான தேர்வுமல்ல. தெலுங்குக்கான ராதாமோகனின் இந்த சமரசம், தமிழையும் காவு வாங்கிவிட்டது. நாயகி யாமி குப்தா சில காட்சிகளில் பரவாயில்லை. ஆனால் அவருக்கு படத்தில் என்ன வேலை என்பதுதான் புரியவில்லை.

நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கும் நண்பர்களை இணைத்து போராடும் காட்சிகள், சமீபத்திய மாணவர் போராட்டங்களை நினைவூட்டின. நாடகத்தனமாக இருந்தாலும், நடப்பது சாத்தியமே!

நாசரை வீணடித்திருக்கிறார்கள். நான்கைந்து காட்சிகளில் வரும் பிரகாஷ் ராஜ் அடக்கி வாசிக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகத் தெரிபவரை, க்ளைமாக்ஸில் நல்லவராக்கியிருக்கிறார் இயக்குநர். வழக்கம்போல குமரவேலுக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார்.

ப்ரீத்தியின் ஒளிப்பதிவும், தமனின் இசையும் பரவாயில்லை எனும் அளவுக்குதான் உள்ளன. ஆனால் விஜியின் வசனங்கள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக சென்னையைப் பற்றியும், ஆதிக்க சாதியினரிடம் அடிபட்ட வலியில் 'நாம அடிச்சா ரத்தம் வராதாடா' என்று குமரவேல் கொந்தளிக்கும் காட்சியில், வார்த்தைகள் சாதாரணமாக இருந்தாலும், அந்த வலியை உணர வைக்கிறது.

ஒரு கிராமம் கிடக்கு.. பச்சையுடுத்திய வயலுக.. அச்சமுடுத்திய பயலுக வாழ... என்ற பாடல் வரிகள் மதன் கார்க்கியை மெச்ச வைக்கின்றன.

தலித்களின் வலியை ஒரு தலித்தான் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமில்லை. சமூகத்தில் ஒரு பார்வையாளனாக நிற்கும் யாரும் சொல்லலாம். அப்படியொருவர்தான் ராதா மோகன்.

நல்ல முயற்சி.. முழுமையாக இல்லையே என்ற ஆதங்கத்துடன் விமர்சிக்க வேண்டியுள்ளது!

 

நார்வே தமிழ் திரைப்பட விழா - இயக்குநர் மணிவண்ணன் பங்கேற்கிறார்!

Director Manivannan Attend Norway Film Festival

நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார் இயக்குநர் மணிவண்ணன்.

தமிழ் சினிமாவை கவுரவிக்கவென்றே ஆண்டுதோறும் நடக்கும் விழா, நார்வே தமிழ் திரைப்பட விழா.

உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கலைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடக்கிறது.

லண்டனில் தமிழ் படத் திரையிடல் மட்டும் நடக்கிறது. இந்த விழாவுக்கு கும்கி, சுந்தரபாண்டியன், சாட்டை, நீர்ப்பறவை, வழக்கு எண் 18/9 உள்பட 15 படங்கள் தேர்வாகியுள்ளன.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பொன்விழா காணும் இயக்குநர் - நடிகர் மணிவண்ணன் கலந்து கொள்கிறார். அவருடன் ஏராளமான முன்னணி நடிகர்கள், இயக்குநர்களும் பங்கேற்கின்றனர். கலைநிகழ்ச்சிகள், திரையுலக ஜாம்பவான்களின் அனுபவப் பகிர்தல், ரசிகர்களுடன் உரையாடுதல் என சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இந்த விழாவில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குறும்படங்களிலிருந்து தேர்வான படங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா உள்பட பல நாடுகளிலிருந்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகின்றனர்.

இந்த விழாவில் 35-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை விஎன் மியூசிக்ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வசீகரன் சிவலிங்கம் செய்து வருகிறார்.

 

ஹீரோவாக நடிக்கிறார் யுவன் சங்கர் ராஜா!

Yuvan Becomes Hero Now

தான் இசை அமைக்கும் படங்களில் பாடல் காட்சிகளில் அவ்வப்போது தோன்றி தன் நடிப்பு ஆசையைக் காட்டி வந்த யுவன் சங்கர் ராஜா, இப்போது முதல் முறையாக முழு நீள ஹீரோவாக நடிக்கிறார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நடிப்பதற்கு வசதியாக, தான் இசையமைக்கும் படங்களுக்கு மூன்று மாதங்கள் தள்ளி கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

மேலும், இந்தப் படம் நன்றாக ஓடினால் மட்டுமே தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன் என்றும் அவர் முன்னெச்சரிக்கையாகக் கூறியுள்ளார்.

இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறவர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸின் எஸ் மதன்.

ஏற்கெனவே சில இசை வீடியோக்களிலும் யுவன் நடித்திருக்கிறார். ஹீரோவாக நடிப்பதால் நடனம், உடற்பயிற்சி என மிகத் தீவிரமாக உள்ளாராம்.

 

யுவன் சங்கர் ராஜாவுடன் பாடி ஆடிய எம்எஸ் விஸ்வநாதன்

Msv Dances With Yuvan Thillu Mullu

சென்னை: இளம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் பாடி ஆடி அசத்தினார் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன்.

1981ல் ரஜினி நடிப்பில் வெளியான தில்லு முல்லு திரைப்படம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரில் ரீமேக் ஆகிறது.

இதில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிவாவும், மாதவி வேடத்தில் இஷா தல்வாரும் நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பத்ரி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்காக முதன் முறையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தில்லு முல்லு தில்லு முல்லு' எனத் தொடங்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதில் எம்.எஸ்.வியுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜாவும் ஆடியிருக்கிறார்.

இது குறித்து யுவன் ஷங்கர் ராஜா கூறுகையில், "என் தந்தை இளையராஜாவும் எம்எஸ்வியும் இணைந்து நான்கு படங்களுக்கு இசையமைத்துள்ளனர். தற்போது ‘தில்லு முல்லு' ரீமேக்கிற்காக நான் எம்எஸ்வியுடன் இணைந்து இசையமைத்துள்ளேன். இதைவிட வேறு பெருமை இல்லை.

பழைய ‘தில்லுமுல்லு' படத்தில் இடம்பெற்ற ‘தில்லு முல்லு தில்லு முல்லு ' என்ற பாடலுக்கு வரிகளை மாற்றாமல் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு இசையமைத்துள்ளேன். இந்தப் பாடலுக்கு எம்எஸ்வியுடன் இணைந்து பாடியதோடு, அவருடன் ஆடினேன்" என்றார்.

இதுகுறித்து எம்எஸ் விஸ்வநாதன் கூறுகையில், 'யுவனுடன் பணியாற்றியது ஒரு புதிய அனுபவம். இப்படி ஆடிப் பாடுவது இன்னும் புதிய அனுபவம்," என்றார்.

 

ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் ரஜினி!

Rajinikanth Attends Sridevi Private Party

நேற்று இரவு ஸ்ரீதேவி கொடுத்த விருந்தில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பொதுவாக சினிமா நிகழ்ச்சிகள், விருந்துகளில் ரஜினி பங்கேற்பதில்லை. அதுவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த பிறகு வெளியில் செல்வதை நிறுத்திக் கொண்டார் ரஜினி.

ஆனால் தவிர்க்க முடியாத நண்பர்களின் அழைப்பை கவுரவிக்கும் வகையில் திடீரென வருகை தந்து அசத்துவது ரஜினி வழக்கம்.

நேற்று இரவு சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டல் பால்ரூமில் ஒரு பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் திரையுலக மறுபிரவேசத்தைக் கொண்டாடும் வகையிலும், பத்மஸ்ரீ விருது பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதா.

ரஜினிக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

விருந்து நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களில் மின்னலாய் வந்தார் ரஜினி. விருந்துக்கு வந்திருந்த கேஎஸ் ரவிக்குமார், விவேக், பிரபு, ஜெயம் ரவி, பிசி ஸ்ரீராம், ராதிகா, லிஸி, பூர்ணிமா போன்றவர்களுக்கு ஹாய் சொன்னவர், ஸ்ரீதேவியிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

ரஜினியுடன் அதிகப் படங்களில் ஜோடி சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இருவரும் 25 படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டெல்லி சிறுமி கற்பழிப்பு- ஷில்பா ஷெட்டி கடும் கண்டனம்!

Time Wake Up Shilpa Shetty On Delhi Rape Case   

டெல்லி: ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நடிகை ஷில்பா ஷெட்டி, இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஏதாவது செய்தாக வேண்டும் என்றார்.

டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

கற்பழிப்பு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடக்கின்றன. நடிகர், நடிகைகளும் சிறுமி கற்பழிக்கப் பட்டதை கண்டித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இதுபற்றி கூறும்போது, "ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும். இந்த கொடுமைகளுக்கு முடிவு எப்போது ஏற்படும் என்று தெரியவில்லை.

இதுபோன்ற கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காலம் கடத்தாமல் உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்," என்றார்.

 

பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

Violin Maestro Lalgudi Jayaraman Is No More

சென்னை: பிரபல வயலின் மேதை லால்குடி ஜெயராமன் சென்னையில் காலமானார்.

பிரபல வயலின் மேதையும், சிறந்த இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. அவர் பத்ம ஸ்ரீ (1972), பத்ம பூஷன் (2001) ஆகிய விருதுகளைப் பெற்றவர். சிருங்காரம் என்னும் படத்திற்கு சிறப்பாக இசையமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இசைத்துறையில் எட்ட முடியாத சாதனைகளைத் தொட்ட பிரபல வயலின் மேதையும், சிறந்த ஓவியரும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இசைக்குடும்பத்தில் பிறந்து, மனதைக் கரைக்கும் உன்னத இசைக்குச் சொந்தக்காரரான லால்குடி ஜெயராமன் இசையின் பல பரிமாணங்களை இந்த உலகுக்கு உணர்த்தியவர், இசை மாமேதைகளான ஜி.என்.பி., செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளை தனது வயலினால் அழகுபடுத்தியவர்.

தன்னுடைய வயலின் மூலம் வார்த்தைகளை ஒலிக்கச் செய்தவர். கடினமான ராகங்களான "நீலாம்பரி', "தேவகாந்தாரி' ஆகிய இரண்டு ராகங்களில் வர்ணம் அமைத்து இசை மேதைகளை இன்ப அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.

சங்கீத நாடக அகாதெமி, சங்கீத சூடாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்பட பல விருதுகளைப் பெற்றவர். இவர் இசையமைத்த "சிருங்காரம்' என்ற திரைப்படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது. லால்குடி ஜெயராமனின் மறைவு கர்நாடக இசைத்துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

லால்குடி ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

லால்குடி ஜெயராமனுக்கு மனைவியும், மகன் கிருஷ்ணன், மகள் விஜயலட்சுமி ஆகியோரும் உள்ளனர். அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோரும் பிரபல வயலின் வித்வான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு

Sinhalese Actress Prabhu Deva Movie Hmk Condemns

சென்னை: பிரபுதேவா இயக்கும் இந்தி படத்தில் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ராமைய்யா வஸ்தாவையா என்ற படத்தில் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். அவர் சில காட்சிகளில் வருவதோடு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். பிரபுதேவாவின் படத்தில் ஒரு சிங்கள நடிகையை நடிக்க வைப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இதே போன்ற பாலகனான, தன் மகனை இழந்த பிரபு தேவாவுக்கு இந்த வலி நிச்சயம் தெரிந்திருக்கும்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து நடிகையை அழைத்து வந்து தன் படத்தில் பிரபுதேவா நடிக்க வைப்பது மன்னிக்க முடியாதது. இலங்கை நடிகையை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.