சினிமாக்காரன் சாலை -20: 'சுஹாசினி உங்க நாக்குல சனி!'

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

முன்குறிப்பு: நானும் சில வாரங்களுக்கு முன் 'இணையத்தில் இயங்கும் சர்வ ஜீவராசிகளும் விமர்சகர்களாகி விட்டார்கள்' என்ற பொருள்பட ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஆனால் அந்தக் கட்டுரைக்கு, சுஹாசினி தன் கணவரைக் காப்பாற்றும் உள்நோக்கம் போல் நல்நோக்கம் எதுவும் இல்லை. மீறியும் வீம்பு பிடிப்பவர்கள் ‘அது வேற வாய்...இது நாற வாய்' என்று எடுத்துக் கொண்டாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை.

999 படைப்புகளை உருவாக்கிவிட்டு ஆயிரமாவது படைப்பை பூமிக்கு அனுப்பும்போது அந்த சிசுவை மட்டும் மூக்கைச் சொறிந்துவிட்டு அனுப்புவாராம் பிரம்மா. அப்படி சொறிந்து அனுப்பப்படும் குழந்தையானது வாழ்நாள் முழுக்க வாய்த் துடுக்கோடு திரியும். வண்டி வண்டியாக வம்பிழுக்கும். அதனால் கண்டவர்களிடம் வாங்கியும் கட்டிக் கொள்ளும்.

'சுஹாசினி, உங்க நாக்குல சனி!'

அப்படி ஆயிரம் பேக்கேஜில் கடைசிக் குழந்தையாம், ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவனை சித்தப்பா என்று அழைக்கும் அந்தக் குழந்தையின் இரு தினங்களுக்கு முந்தைய வாய்த் துடுக்குதான் இன்று இணையங்களில் ஹாட் டாபிக்.

குஷ்புவுக்கு சப்போர்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று சிக்கினார். அடுத்தபடியாய் ‘பருத்தி வீரன்' சமயத்தில் ‘கருப்பா இருக்கிறவனுங்க எல்லாம் ஹீரோவா நடிக்க ஆரம்பிச் சிட்டாங்க' என்று திருவாய் மலர்ந்து டின்னு கட்டிக்கொண்ட கதைகள் பழசு.

இப்போதைய லேட்டஸ்ட் நியூஸ் ‘மவுஸ்'.

'சுஹாசினி, உங்க நாக்குல சனி!'

நேற்று மாலை துவங்கி ஆளாளுக்கு பக்கெட் பக்கெட்டாய் கழுவிக் கழுவு ஊற்றுகிறார்கள். இன்னும் சிலர் சுஹாசினி தெலுங்குப் படங்களில் கிளாமராய் நடித்த காட்சிகளையும், பாடல்களையும் எடுத்துப் பதிவிடுகிற அளவுக்கு உக்கிரமாய் ஆகிவிட்டார்கள்.

'அப்படி என்னத்தை சொல்லக் கூடாததை சொல்லிவிட்டார் சுஹாசினி?'

‘இணையத்தில் இப்போது கண்ட பயல்களும், அதாவது மவுஸை உருட்டத்தெரிந்தாலே போதும், சினிமாவுக்கு விமர்சனம் எழுதத் தொடங்கி விட்டார்கள். இதனால் எங்கள் நிறுவனம் பெருத்த நஷ்டத்துக்கு ஆளாகிவிட்டது. ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு தகுதி தேவைப்படுகிறது. படம் இயக்குவதென்றால் தொடர்ந்து பத்து மரண ஃப்ளாப் கொடுத்தாலும் அதை மண்ரத்னம் செய்யவேண்டும். ரஹ்மான் இசையமைக்கலாம். (பாருங்க ராஜா இசையமைக்கலாமான்னு தெரியலை. மனசுக்குள்ள கலவரமா இருக்கு) விமர்சனம் எழுதுறதுக்குன்னு பத்திரிகையாளர்கள் நீங்க இருக்கீங்க. அதனால கண்டவங்களும் எழுதாம எங்களை பத்திரமா பாத்துக்கங்க'.

சுஹாசினி சொன்னது இவ்வளவுதான் யுவர் ஆனர்.

இதுக்குப் போயி எவ்வளவு கலாய்த்தல்கள், கழுவி ஊத்தல்கள், கண்டனங்கள், நக்கல் நையாண்டிகள், எகத்தாளங்கள், எள்ளி நகையாடல்கள்னு எவ்வளவு ரூட்ல ஓட்டுவீங்க? இதை எப்படி பிஞ்சு உள்ளம் கொண்ட என் கட்சிக்காரர் தாங்குவார் யுவர் ஆனர்?

இப்படி சுஹாசினிக்காக வக்காலத்து வாங்கி, வக்கீல் வண்டு முருகன் போல நான் இணையப் போராளிகளிடம் வாங்கிக்கட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கே வந்துவிடுகிறேன்.

'சுஹாசினி, உங்க நாக்குல சனி!'

இன்றும் இந்தியாவின் முக்கியமான (?) இயக்குநராகக் கொண்டாடப்படும் மணிரத்னம் ‘அலைபாயுதே'வுக்கு (2000 ஏப்ரல் 14) அப்புறம் ஹிட் படம் கொடுத்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன என்றால் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஹிட் கூட வேண்டாம் ஓடாத படங்களில் ஒரு சில நல்ல படங்களாவது இருந்திருக்கலாமே? அதுவும் இல்லை. ‘குரு' ஆயுத எழுத்து' இராவணன்' ‘கடல்' என்று அத்தனையும் ஹைடெக் குப்பைகள். அத்தனையும் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருசேர நிராகரிக்கப்பட்ட படங்கள்.

அந்த தொடர் தோல்விகளை மறக்கடிக்க, நல்ல காஷ்ட்லி பேப்பரில் ‘மணிரத்னம் த கிரேட் டைரக்டர்' என்று பெரிய பதிப்பகத்தைப் பிடித்து புத்தகம் போட்டு தொடர்ந்து இந்தியாவின் முக்கிய டைரக்டர் அந்தஸ்தைத் தக்கவைக்க நினைத்தாலும் சீக்கிரம் மூட்டை கட்டி தன் கணவரை மூலையில் உட்காரவைத்து விடுவார்களோ என்கிற அடிவயிற்று பயம்தான் சுஹாசினியை இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக பேச வைத்திருக்கிறது என்று எளிதில் யூகிக்க முடிகிறது.

இணைய விமர்சகர்கள் என்பவர்கள் சுஹாசினி நினைப்பது போல் சாதாரணர்கள் அல்லர். அவர்களில் சிலர் மணிரத்னத்தையும் விட பன்மடங்கு சினிமா அறிவு கொண்டவர்கள். மணி பார்க்காத உலகப் படங்களையெல்லாம் பார்த்து சிலாகித்து எழுதுபவர்கள். மணிமணியான எழுத்துக்கு சொந்தக்காரர்கள் சிலரும் இருக்கிறார்கள்.

'சுஹாசினி, உங்க நாக்குல சனி!'

இவர்களைப்போய் எழுதாதே என்று சொன்னால் பொங்கி எழாமல் என்ன செய்வார்கள்?' சுஹாசினியின் மெட்ராஸ் டாக்கீஸ் கணக்குப் பிள்ளையை மட்டுமே ‘எழுது எழுதாதே' என்று சொல்ல முடியும்.

முன்பு சினிமாவில் ‘மவுத் டாக்' என்று ஒன்று இருந்ததே அதன் நவீன வடிவமே இன்றைய இணைய விமர்சகர்கள். தியேட்டர் வாசலில், டீக்கடை பெஞ்சுகளில், வீதிகளில் பேசித்திரிந்த சினிமா செய்திகளை இன்று முகநூல், ட்விட்டரில் பேசுகிறார்கள்.

மணியின் தொடர் தோல்விகள் ஒரு மனைவியாக, தயாரிப்பாளராக சுஹாசினியை கவலை கொள்ளச் செய்திருப்பதை இந்தச் சமூகம் புரிந்து கொண்டு அவர் படங்களைப் பற்றி எழுதாமல் இருக்க வேண்டும், பத்திரிகையாளர்கள் மட்டும் எழுதினால் போதும் என்று சுஹாசினி சீரியஸாகவே விரும்பினாரால் ‘ஓ காதல் கண்மணி' படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏகப்பட்ட பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது சுஹாசினிக்கு உகந்ததென்றால் இதில் பஞ்சாயத்துக்கே இடமில்லை. சபையை இத்தோடு கலைத்துவிடலாம்.

ஆனால் சுஹாசினிக்கு மணியின் படம் பெரும் ‘மணி' வசூலிக்க வேண்டும். வாயைப் பொத்திக் கொண்டு அனைவரும் படம் பார்த்துவிடவேண்டும் என்றால்...? இந்தியாவின் 'முக்கிய' இயக்குநர் மணிரத்னம் என்பதையும் விட பெருங்காமெடியாக அல்லவா இது இருக்கிறது.

சூழலுக்கு கொஞ்சமும் பொருந்தாத பாடல் இது. ஆனாலும் சுஹாசினிக்காக ரெண்டு வரி பாடித் தொலைக்கிறேன். மவுஸை உருட்டுகிறவர்கள் எல்லாம் விமர்சனம் எழுதி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் வேண்டுகோள் வைத்தது எங்களை நோக்கி அல்லவா?

‘மவுஸ்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்
சுஹாசினி சொல்லிவிட்டார்...'

(தொடர்வேன்...)

 

கலிபோர்னியாவில் நடக்கும் ஃபெட்னா தமிழ் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா பங்கேற்பு

கலிபோர்னியா: வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா) நடத்தும் தமிழ் விழாவில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்து கொள்ள உள்ளார்.

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015 அதாவது 28வது ஃபெட்னா வருடாந்திர கூட்டம் வரும் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு நடக்க உள்ளது.

தனுஷ், ஐஸ்வர்யா, ஏமி ஜாக்சன் பங்கேற்கும் ஃபெட்னா தமிழ் விழா

இந்த தமிழ் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகரில் இருக்கும் நேஷனல் சிட்டி சிவிக் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ் விழாவோடு சேர்த்து இசைப் பேரறிஞரர் வீ.ப. கா. சுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் பாபநாசம் சிவன் 125வது ஆண்டு விழாவும் நடத்தப்படுகிறது.

விழாவில் நடிகர் தனுஷ், அவரது மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா, நடிகை ஏமி ஜாக்சன், பாடகி முனைவர் சௌமியா, கவிஞர் சுமதிஸ்ரீ, சூழலியலாளர் பூ உலகின் நண்பர்கள் சுந்தரராஜன், கலைக்காவிரி கல்லூரியின் முதல்வர் முனைவர் மார்கரெட் பாஸ்டின், உதயசந்திரன் ஐஏஎஸ், பாடகி மகிழினி மணிமாறன், பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர், எழுத்தாளர் பூமணி, முனைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

சிவகாமியின் சபதம்:

கல்கியின் சிவகாமியின் சபதம் நாடகம் விரிகுடாப்பகுதி கலைஞர்களால் அரங்கேற்றப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாடகத்தை வழங்கிய அபிராமி கலை மன்றம் இந்த நாடகத்தையும் வழங்குகிறது. எழுத்து இயக்கம்: பாகீரதி சேசப்பன், இசை: ஸ்ரீதரன் மைனர், தயாரிப்பு மேற்பார்வை: வேணு சுப்பிரமணியம்.

தமிழிசை:

இசைக்கலைஞர் முனைவர் சௌமியா அவர்கள் தமிழிசை நிகழ்ச்சியை வழங்குகிறார். சங்க காலம் முதல் நிகழ்காலம் வரையிலான பாடல்களைப் பாடவுள்ளார். இசையறிஞர் பாபநாசம் சிவன் அவர்களின் 125-வது ஆண்டு விழாவில் முனைவர் சௌமியா பேரவையில் பாடுவது சிறப்பு.

பாபநாசம் சிவன் அவர்களின் 125-வது ஆண்டை கொண்டாடும் வகையில் 50-ற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் (சிறுவர் முதல் பெரியவர் வரை) அவரது பாடல்களைப் பாடி, இசையமைத்து அப்பெரியவரை நினைவு கூறவுள்ளார்கள்.

பறையிசை:

புத்தர் கலைக்குழுவைச் சேர்ந்த திரு. மணிமாறனும், மகிழினி மணிமாறனும் கலந்து கொள்ளும் தமிழர்களின் தொன்மையான இசையான பறையிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் விரிகுடாப்பகுதித் தமிழர்களும், வட அமெரிக்கா முழுவதிலிருந்து வரும் பறையிசைக் கலைஞர்களும் இணைந்து ஒரு மாபெரும் பறையாட்டத்தை ஆடவுள்ளார்கள்.

மேலும் தமிழ்க்கலைகளான பரதம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரையாட்டம், தெருக்கூத்து, போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

 

நந்திதா சின்ஹா யாரென்றே தெரியாது.. அவர் படத்தில் நடிக்கவில்லை - சூர்யா விளக்கம்

நந்திதா சின்ஹா என்ற தொழிலதிபர் தான் தயாரிக்கும் மூன்று மொழிப் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக நேற்று அறிவித்திருந்தார் அல்லவா... அது முற்றிலும் தவறானது. அப்படி ஒருவரை தனக்குத் தெரியாது என மறுப்பு வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.

நந்திதா சின்ஹா யாரென்றே தெரியாது.. அவர் படத்தில் நடிக்கவில்லை - சூர்யா விளக்கம்

இன்று சூர்யாவின் மக்கள் தொடர்பாளர் அனுப்பியுள்ள மறுப்புச் செய்தி:

நேற்று ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் நந்திதா சின்ஹா என்பவர் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. இது முற்றிலும் தவறான செய்தி.

நந்திதா சின்ஹா என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது என்கிறார் சூர்யா. இந்தப் படம் மற்றும் சூர்யா குறித்து அந்தப் பெண் கூறியுள்ள அனைத்தும் பொய்யானவை.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சிநேகா - பிரசன்னா குடும்பத்தில் மேலும் ஒரு 'புதுவரவு'!

தங்கள் குடும்பத்தில் மூன்றாவதாக ஒருவர் வரப்போவதாக சிநேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.

நடிகர் பிரசன்னாவுக்கும், சிநேகாவுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சினேகா சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

இந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை சிநேகா கர்ப்பம் என செய்தி வெளியாவதும், அதை பிரசன்னா மறுப்பதுமாக போய்க் கொண்டிருந்தது.

சிநேகா - பிரசன்னா குடும்பத்தில் மேலும் ஒரு 'புதுவரவு'!

தற்போது கடந்த சில மாதங்களாக சிநேகா எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்து வருகிறார். நிகழ்ச்சிகளையும் தவிர்த்துவிடுகிறார்.

இந்நிலையில், பிரசன்னா தனது குடும்பத்தில் புதிதாக ஒருவர் வரப் போவதாகக் ட்வீட் செய்துள்ளார்.

அதில், "இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியத்துவமானது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் எங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருவர் வருகிறார்," என்று சூசகமாகக் கூறியுள்ளார்.

சிநேகா கர்ப்பமாக இருப்பதை பிரசன்னா இப்படிக் குறிப்பிடுகிறாரா அல்லது வழக்கம் போல 'அதெல்லாம் இல்லீங்க, நான் வேற ஒருவரைச் சொன்னேன்' என்று சொல்லிவிடப் போகிறாரோ என்ற தயக்கத்தால், இன்னும் பெரிய அளவில் இந்த விஷயம் செய்தியாகாமல் உள்ளது!

 

கார்த்தி பட நடிகை ஹானி கேன்சரால் மரணம்... வெங்கட்பிரபு இரங்கல்

சென்னை: கார்த்தி நாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்த நடிகை ஹானி புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் பிரியாணி. இப்படத்தில் வரும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார். முதல் பார்வையிலேயே அப்பெண்ணை தனது காதல் வழியில் விழ வைத்து, அவரது மொபைல் எண்ணையும் பெறுவார்.

கார்த்தி பட நடிகை ஹானி கேன்சரால் மரணம்... வெங்கட்பிரபு இரங்கல்

அந்தக் காட்சியில் நடித்திருந்தவர் தான் நடிகை ஹானி. இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்' படத்திலும் சிறு கேரக்டரில் வந்துள்ளார். தமிழ்ப் படங்கள் தவிர நிறைய மலேசிய படங்களிலும் ஹானி நடித்துள்ளார்.

இந்நிலையில் புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளான ஹானி, கடந்த சில மாதங்களாக அதற்கு தீவிர சிகிச்சையும் பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹானி மரணமடைந்தார்.

ஹானியின் மறைவுக்கு டைரக்டர் வெங்கட்பிரபு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 

மும்பை வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழைய ஐஸ்வர்யா ராய்க்கு அனுமதி மறுப்பு

மும்பை: மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ஜஸ்பா படப்பிடிப்பை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராய் ஆராத்யாவை பெற்ற பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் விளம்பரப் படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் சஞ்சய் குப்தாவின் ஜஸ்பா படம் மூலம் மீண்டும் பாலிவுட்டில் நுழைகிறார்.

மும்பை வாங்கடே ஸ்டேடியத்திற்குள் நுழைய ஐஸ்வர்யா ராய்க்கு தடை

ஐஸ்வர்யா தற்போது ஜஸ்பா படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பை மும்பையில் உள்ள வாங்கேட மைதானத்தில் நாளை நடத்த அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் அந்த ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி நடக்க உள்ளதால் ஐஸ்வர்யா ராயின் படத்தின் படப்பிடிப்பை நடத்த அளிக்கப்பட்ட அனுமதி திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி நடப்பதால் படக்குழுவினர் யாரும் ஸ்டேடியத்திற்குள் வரக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவுடன் சபானா ஆஸ்மி, இர்பான் கான், அனுபம் கேர் உள்ளிட்டோர் நடித்து வரும் ஜஸ்பா படத்தை அக்டோபர் மாதம் 9ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து காமெடி படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாக அவரின் கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

 

கடன் பாக்கி... பூலோகம் படத்தை வெளியிட ஆஸ்கார் நிறுவனத்துக்கு தடை!

சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பெற்ற கடனைத் திருப்பித் தராததால் பூலோகம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கார் நிறுவனத்துக்கு தடை விதித்து சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பூலோகம் திரைப்படம் தயாரிப்பதற்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆஸ்கார் நிறுவனம் ரூ. 40 கோடி கடன் பெற்றுள்ளது.

கடன் பாக்கி... பூலோகம் படத்தை வெளியிட ஆஸ்கார் நிறுவனத்துக்கு தடை!

இதே போன்று "ஐ' திரைப்படத்துக்காக கதீட்ரல் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆஸ்கார் நிறுவனம் ரூ. 60 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால், இந்தப் பணத்தை திரும்பத் தராமல் 'ஐ' படம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில், வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற ரூ. 40 கோடியை திரும்பச் செலுத்தாமல் பூலோகம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கார் நிறுவனத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், முழுத் தொகையையும் திரும்ப செலுத்திய பிறகே படத்தைத் திரையிட அனுமதி வழங்கக் கோரியும் இந்திய ஓவர்சீஸ் வங்கி சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தீர்ப்பாய உறுப்பினர் ரவீந்திரபோஸ் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் வக்கீல் எஸ்.பி.பெஞ்சமின் ஜார்ஜ் ஆஜரானார்.

மனுவை விசாரணை செய்த தீர்ப்பாய உறுப்பினர், ஏப்ரல் 16-ஆம் தேதி வரை பூலோகம் திரைப்படத்தை வெளியிட தடை விதித்தும், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

பூலோகம் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதிகபட்சம் ரூ 15 கோடியைக் கூடத் தாண்டாத இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி கடன் வாங்கியிருப்பது அதிர வைக்கிறது.

அடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ஐ படம் பெரும் வசூல் குவித்துவிட்டதாக அறிவித்திருந்தார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

அப்படின்னா... வசூலான பணமெல்லாம் என்னதான் ஆச்சு?

 

காசு... பணம்... துட்டு... வாகை சூட வழியில்லாமல் தவிக்கும் நடிகை!

சென்னை: தேசிய விருது வாங்கிய படத்தில் அறிமுகமாகியும் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார் இனிமையான நடிகை.

அழகான உடலமைப்பு, திறமையான நடிப்பு என எல்லாம் பெற்றிருந்தும் நடிகைக்கு புதிய படங்கள் ஏதும் வருவதில்லை. நடிகையும் நாயகியாகத் தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல், குணச்சித்திர வேடம், குத்தாட்டம் என இறங்கி வந்து விட்டார்.

ஆனாலும், புதிய படங்கள் எதிலும் அம்மணி ஒப்பந்தமாகவில்லை. என்ன காரணமாக இருக்கும், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போகிறாரா என விசாரித்தால், நடிகைக்கு நெருக்கமானவர்கள் வேறு காரணம் சொல்கிறார்கள்.

அதாகப் பட்டது, எந்த வேடம் என்றாலும் நடிக்க ஓகே சொல்லும் நடிகை, சம்பளம் தான் தாறுமாறாக கேட்கிறாராம். நாயகியின் சம்பளத்தை விட சமயங்களில் ஒரு காட்சிக்கு நடிக்க நடிகை கேட்கும் சம்பளம் அதிகமாக இருக்கிறதாம்.

சம்பள விசயத்திற்குப் பயந்து தான் நடிகைக்கு வாய்ப்புத் தர இயக்குநர்கள் தயங்குகிறார்களாம்.

 

நித்யா மேனனை படத்தில் நடிக்க வைப்பது அவ்வளவு ஈஸி இல்லை!

சென்னை: நடிகை நித்யா மேனன் தன்னை படத்தில் ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் பல நிபந்தனைகளை விதிக்கிறாராம்.

நடிகை நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள தெலுங்கு படமான ருத்ரமா தேவி விரைவில் ரிலீஸாக உள்ளது. இது தவிர அவர் துல்கர் சல்மான் ஜோடியாக மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ஓ காதல் கண்மணி மற்றும் ராகவா லாரன்ஸுடன் அவர் நடித்திருக்கும் காஞ்சனா 2 பேய் படமும் விரைவில் ரிலீஸாகிறது.

அங்கிள்ஸ், தாத்தா ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன்: நித்யா மேனன்

ஓ காதல் கண்மணி படம் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோலிவுட் ரசிகர்கள் பேய் படங்களாக பார்த்து பார்த்து ஹிட்டாக்குவதால் காஞ்சனா 2 நிச்சயம் கல்லா கட்டும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நித்யா மேனன் தன்னை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய வருபவர்களியம் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்பது தான் அவர் விதிக்கும் முதல் நிபந்தனை ஆகும்.

தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர்கள் தன்னை அங்கு தொடக் கூடாது, இங்கு தொடக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கிறாராம். இத்தனைக்கும் இயக்குனர் சம்மதித்தால் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

 

வீரபாண்டிய கட்டபொம்மனை வாங்கிய மலேசிய தமிழர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி பெரும் பாராட்டுகளைக் குவித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் மறுவெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் பாண்டியன் பெற்றுள்ளார்.

மேடைகளில் கலை நிகழ்ச்சி நடத்த, புதிய நடிகர்கள் நடித்துக் காட்ட இன்றைக்கும் பயன்படுவது 'வானம் பொழிகிறது... ' வசனம்தான். இந்த வசனம் பேசிய நடித்து சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள், வெளிநாட்டு நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது.

வீரபாண்டிய கட்டபொம்மனை வாங்கிய மலேசிய தமிழர்

அரை நூற்றாண்டுக்குப் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் மலேசியா பாண்டியன் எஸ்பிவி ஏவி இன்டர்நேஷனல் சார்பில் வாங்கியுள்ளார்.

 

கண்ணுக்கு குளிர்ச்சியாய் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த த்ரிஷா

சென்னை: நடிகை த்ரிஷா ட்விட்டர் மூலமாக ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகை த்ரிஷா ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி அத்துடன் தான் பட்டுப்புடவையில் இருக்கும் அழகான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

திருமணம் நிச்சயமான த்ரிஷா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பட வாய்ப்புகள் அதிகம் வருவதால் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாப்பிள்ளை வருண் மணியன் வீட்டில் உடனே திருமணத்தை நடத்த நினைத்தாலும் அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று த்ரிஷா தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.