சென்னை: கைவசம் அனிருத் என்ற முன்னணி இசையமைப்பாளரை வைத்துக் கொண்டு, யுவன் சங்கர் ராஜாவை தன் படத்துக்கு இசையமைக்க வைத்தது ஏன் என்று ஐஸ்வர்யா தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் படம் 3-ன் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய உறவினர். ஐஸ்வர்யாவின் மாமா மகன்.
3 படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகப் புகழ் பெற்றது.
அந்தப் படத்துக்குப் பிறகு அனிருத் முன்னணி இசையமைப்பாளர் ஆகிவிட்டார். ரஜினியும், இயக்குநர் ஷங்கரும் பாராட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படமான வை ராஜா வை-க்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவை அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சர்யம்.
கைவசம் முன்னணி இசையமைப்பாளர் இருக்கும்போது, ஐஸ்வர்யா இன்னொரு பிரபல இசையமைப்பாளரைத் தேடிப் போனது ஏன் என்று கேள்வி எழுந்தது.
இதற்கு தற்போது ஐஸ்வர்யா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "நானும் அனிருத்தும் மீண்டும் சேரும் போது, ஒய் திஸ் கொலவெறி ரேஞ்சுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது நிறைவேறாமல் போனால் எதிர்மறை விளைவுகள் இருக்கும். யுவன் இன்றைக்கு முதல் நிலை இசையமைப்பாளர். எங்கள் கூட்டணி பற்றி வேறுமாதிரி எதிர்ப்பார்ப்பு இருக்கும். நானும் யுவனும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள்தான். அதனால்தான் யுவனை இசையமைப்பாளராக்கிக் கொண்டேன்," என்று கூறியுள்ளார்.
வை ராஜா வை படத்துக்காக யுவன் 5 பாடல்களைத் தந்துள்ளார். விரைவில் பாடல்கள் வெளியாக உள்ளன.