'முதல்வர்' திரிஷாம்மா'!


முதல்வர் வேடத்தில் நடிக்கும் திரிஷா-கன்னடம், தமிழில் உருவாகிறது

திரிஷா விரைவில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ஒரு புதிய கன்னடப் படத்தில். இந்தப் படத்தை தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்குகிறார்கள்.

சிஎம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முற்றிலும் அரசியல் படமல்ல. மாறாக அழகான காதல் கதைதான். இருப்பினும் இதில் முதல்வர் வேடத்தில் திரிஷா நடிக்கப் போகிறார் என்று பரவியுள்ள தகவலால் எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.

இந்தப் படத்தை கன்னடத்திலும், தமிழிலும் உருவாக்குகிறார்கள். முதலில் இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநரும், தயாரிப்பாளரும் அணுகியது அனுஷ்காவைத்தான். அவரது அசத்தலான உயரமும், வசீகரமான முகமும் இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் என நம்பி அனுஷ்காவை நம்பினர். ஆனால் அவருக்கு டேட்ஸ் பிரச்சினை இருந்ததால், அனுஷ்காவை புக் செய்ய முடியாமல் போய் விட்டதாம்.

இதையடுத்தே திரிஷாவை அணுகினர். நான் டப்பு ஜாஸ்தி கேட்பேனே என்று திரிஷா கூறியுள்ளார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர், நீங்க நடிச்சே ஆகணும் என்று கூறியுள்ளனராம். யோசிக்க கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்டுள்ளாராம் திரிஷா. அவர் சம்மதிப்பார் என்ற நம்பிக்கையில் சிஎம் படக் குழு உள்ளது.

திரிஷா ஏற்கனவே இந்தியில் கத்தா மீத்தா படத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோக்கள். கன்னடப் பதிப்பில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். தமிழ்ப் பதிப்புக்கு அர்ஜூன் நாயகனாம்.

இப்படம் குறித்து இயக்குநர் ரகுராம் கூறுகையில், இப்படத்தின் தலைப்புதான் சிஎம். மற்றபடி இதில் அரசியல்ஏதும் இல்லை. இரு முதல்வர்களுக்கிடையே ஏற்படும் காதலை இப்படத்தில் கதையாக்கியுள்ளோம் என்றார்.

தமிழக, கர்நாடக மாநிலங்களின் அரசியல் உறவுகளையும், மக்கள் உறவுகளையும் பலப்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
 

ரம்யா கை நிறைய படங்கள்!


குள்ள நரிக் கூட்டத்தின் மூலம் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ரம்யா நம்பீசனுக்கு இப்போது கை கொள்ளாத அளவுக்குப் படமாம். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நாலா பக்கத்திலிருந்தும் வாய்ப்புகள் வந்து கொட்டுகிறதாம்.

ரம்பா நம்பீசன் குள்ள நரிக் கூட்டத்திற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்த போதிலும் குள்ளநரிக் கூட்டம்தான் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது. இப்படத்தில் நடித்ததன் மூலம் அவரது நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள். அத்தோடு இப்போது சினிமா வாய்ப்புகளும் அதிகமாகவே வருகிறதாம்.

தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வராவிட்டாலும் கூட தெலுங்கு, கன்னடம் மற்றும் தாய் மொழியாம் மலையாளத்திலும் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.

இதுகுறித்து ரம்யா தரப்பில் கூறுகையில், ரம்யாவுக்கு இப்போது 2 தெலுங்குப் படம், கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் தலா ஒரு படம் உள்ளது. மேலும் சில படங்களும் வந்துள்ளன. கதை குறித்துப் பரிசீலித்து வருகிறார் ரம்யா என்கிறார்கள்.

தற்போது மலையாள திரையுலகினர் நடத்தும் ஒரு கலை விழாவில் பங்கேற்பற்காக அமெரிக்கா சென்றுள்ள ரம்யா, தமிழில் தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
 

சில்க்கின் வாழ்க்கைக் கதையான டர்ட்டி பிக்சர்ஸ் ஆபாசமாக இருக்காது- வித்யா பாலன்


சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது என்று சில்க் வேடத்தில் நடித்து வரும் வித்யா பாலன் கூறியுள்ளார்.

சில்க்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தியில் உருவாகும் படம் டர்ட்டி பிக்சர்ஸ். வித்யா பாலன்தான் சில்க் வேடத்தில் கிறங்கடிக்க வருகிறார். சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான ஸ்டில்கள் மற்றும் டிரெய்லர் வெளியானது. இதைப் பார்த்த பலரும் படம் 'டபுள் ஏ' ரகமாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஆனால் படம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது என்று வித்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது அசிங்கமான காட்சிகளை மட்டுமே கொண்ட படமாக நிச்சயம் இருக்காது. ஆபாசங்கள் நிறைந்த படமாகவும் இருக்காது.

நான் ஒரு நடிகையின் வேடத்தில் நடிக்கிறேன். இதை வைத்து என்னை ஆபாசப் பட நடிகையாக முத்திரை குத்துவது சரியாக இருக்காது.

சில்க் ஸ்மிதா ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, மிக அழகான நடிகையும் கூட. அழகும், கவர்ச்சியும் எப்போதுமே பெரிதாக பேசப்படும். அந்த வகையில் இந்தப் படத்திலும் நான் சில்க் ஸ்மிதாவை பிரதிபலித்து நடித்துள்ளேன். எனவே அழகும், கவர்ச்சியும் இருக்கத்தான் செய்யும். அதேசமயம், சில்க் ஸ்மிதா ஒரு ஆபாசப் பட நடிகை அல்ல, அதேபோலத்தான் நானும் ஆபாசப் பட நடிகை அல்ல என்றார் வித்யா.

இப்படத்தில் நஸிருதீன் ஷா, இம்ரான் ஹஷ்மி, துஷார் கபூர் என மூன்று பேரைக் காதலிப்பது போல நடித்திருந்த அனுபவம் குறித்து கேட்டபோது, அருமையாக இருந்தது. நசீருடன் நான் ஏற்கனவே நடித்துள்ளேன். எனவே அவருடன் நடித்தபோது தயக்கம் ஏதும் இல்லை. ஆனால் இம்ரானுடன் நடித்தபோதுதான் சற்று அசவுகரியமாக இருந்தது. அதிலும் நான் அவருக்கு முத்தம் கொடுப்பது போல நடித்தபோது ரொம்பவே சங்கடப்பட்டேன் என்றார் வித்யா.

டிசம்பர் 2ம் தேதி டர்ட்டி பிக்சர்ஸ் திரையரங்கங்களுக்கு வரவுள்ளது.
 

ஷாருக் கானின் வெளிநாட்டுப் பட வசூல் சாதனையை முறியடித்தது சல்மானின் பாடிகார்ட்


சல்மான் கானின் பாடிகார்ட் படம் தொடர்ந்து வசூல் சாதனையை அள்ளிக் கொண்டுள்ளது. முதல் நாள் வசூலில் சாதனை படைத்த இப்படம் பாலிவுட்டின் பல வசூல் சாதனைகளை முறியடித்துக் கொண்டுள்ளது. லேட்டஸ்டாக, சல்மான் கானின் பரம வைரியும், சூப்பர் ஸ்டாருமான ஷாருக் கானின் வெளிநாட்டுப் பட வசூல் சாதனையை பாடிகார்ட் முறியடித்துள்ளது.

இங்கிலாந்தில், ஷாருக் கானின் மை நேம் இஸ் கான் படம் முதல் நாள் வசூலாக 1,91,000 பவுண்டுகளை வசூலித்திருந்தது. தற்போது இந்த சாதனையை முறியடித்துள்ள பாடிகார்ட் படம் முதல் நாள் வசூலாக 1,94,000 பவுண்டுகளை அள்ளியுள்ளது.

மேலும் மத்திய கிழக்கிலும் மிகப் பெரிய வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது பாடிகார்ட். முதல் இரு நாட்களில் மட்டும் இப்படம் 10.6 லட்சம் டாலர்களை வசூலித்துள்ளது. இதற்கு முன்பு வெளியான சல்மானின் தபங் படத்தின் முதல் இரு நாள் வசூல் 10.7 லட்சம் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் சல்மானுக்கு மிகப் பெரிய மார்க்கெட் மதிப்பை பாடிகார்ட் தேடிக் கொடுக்கப் போவதாக பாலிவுட்டில் கூறுகின்றனர்.

கரீனா கபூருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள சல்மான் கானின் பாடிகார்ட் படம் மெரிக்காவில் 30.8 லட்சம் டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது. தபங் படம் அமெரிக்காவில் 50 லட்சம் டாலர்களை வசூலித்தது. ஆனால் பாடிகார்ட் அதை முந்தும் என்கிறார்கள்.
 

முடிந்து போன விஷயத்தை விஷமாக்க சிலர் முயற்சி - நடிகர் விஜய் ஆவேசம்


மதுரை: மதுரையில் நடைபெற்ற வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவை முன்வைத்து சிலர் முடிந்து போன விஷயத்தை விஷமாக்க முயற்சி செய்வதாக நடிகர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையில் சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், வேலாயுதம் இசை வெளியீட்டு விழாவும் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால் என்னை கடவுளாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

இதனைக் கண்டவுடன் அவர்களை அழைத்து இது போன்று போஸ்டர்கள் ஒடக்க கூடாது, அதனை உடனே அகற்ற உத்தரவிட்டேன். அதை ஏற்று உடனே அவர்கள் அகற்றிவிட்டனர். மேலும், இனி வரும் காலத்தில் இது போன்று செய்ய மாட்டோம் என்றும் உறுதி கூறினர்.

ஆனால் முடிந்து போன இந்த விஷயத்தை விஷமாக்க சிலர் முயல்கிறார்கள்.

நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.

நான் ஜாதி, மத, இனத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். மதுரை விழாவில் கறவை மாடுகள், கம்ப்யூட்டர்கள், தையல் மிஷின்கள் வழங்கப்பட்டு, மூன்று மாணவர்களின் முழு படிப்புக்கு உதவித் தொகையும் வழங்கினேன்.

தவிர, நான் ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பது எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் எனக்கு தெரியாது.

எனக்கு இலட்சக்கணக்கக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன ஜாதி, மதம் என்பதும் தெரியாது. ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்க, மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களும் என்ன ஜாதி, மதம் என்பது தெரியாது.

எனக்கு தெரிந்ததெல்லாம், தமிழ், தமிழினம் ஒன்றேதான். ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.