6 மாத நடிப்புப் பயிற்சி தரும் ராஜீவ் மேனனின் மைன்ட்ஸ்கிரீன்!

பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் சென்னையில் மைன்ட் ஸ்கிரீன் திரைப்படக் கல்லூரியை நடத்தி வருகிறார்.

இதில் குறுகிய காலத்தில் ஒளிப்பதிவு, திரைக்கதை எழுதுவது, நடிப்புப் பயிற்சிக்கு வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் முதல் ஒளிப்பதிவாளர்களுக்கான பயிற்சி மட்டும்தான் தரப்பட்டது.

6 மாத நடிப்புப் பயிற்சி தரும் ராஜீவ் மேனனின் மைன்ட்ஸ்கிரீன்!

அதன்பின்னர் திரைப்படங்களுக்கு சிறந்த திரைக்கதை எழுதுபவர்களை உருவாக்க ‘திரைக்கதை எழுதும் பயிற்சி' வகுப்புகளும் இங்கு தொடங்கப்பட்டது.

இந்த பயிற்சி நடக்கும் போதே, நடிப்புப் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்டு வந்த இந்தக் கல்லூரியில் தற்போது அடுத்த மாதம் முதல் நடிப்புப் பயிற்சி வகுப்புகளும் ஆரம்பமாக உள்ளது.

சிறந்த நடிப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன், தனது நடிப்பிற்காக இரு முறை தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, தலைவாசல் விஜய் ஆகியோரின் வழி நடத்துதலோடு 6 மாத கால நடிப்புப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன.

அவர்களோடு நடிப்புப் பயிற்சி வழங்கும் சிறந்த ஆசிரியர்களை தனது நேரடி மேற்பார்வையில் ராஜீவ் மேனன் தேர்ந்தெடுத்துள்ளார். நடிப்புப் பயிற்சி வகுப்புகளின் தலைவராக நடிகர் தேவேந்திரநாத் சங்கர நாராயணன் செயல்பட உள்ளார்.

களரி மற்றும் யோகா பயிற்சிகளை பழனி வழங்குகிறார். நாடகக் கலைஞர்களான பாலா, ஜானகி ஆகியோர் நடிப்புப் பயிற்சி வகுப்புகளை எடுக்க உள்ளனர்.

சென்னை, அடையாறு திரைப்படக் கல்லூரி முன்னாள் முதல்வரான ஸ்ரீதரன் மைன்ட் ஸ்கிரீன் திரைப்படக் கல்லூரியின் முதல்வராகவும், ஞானசேகரன் டீன் ஆகவும் உள்ளார்கள்.

 

நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா

அறிமுக இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ள படம் 'குற்றம் கடிதல்'. இப்படம் பல்வேறு சர்வதேச திரைபட விழாக்களில் பங்குபெற்று, தற்போது தேசிய விருதையும் வென்றுள்ளது. இந்நிலையில் 'குற்றம் கடிதல்' படத்தின் இயக்குனர் பிரம்மாவை, இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா இயக்குனர் பிரம்மா குறித்து பேசுகையில், "என்னுடைய ‘ நிழல்கள்' படத்தின் தோல்வி தான் என்னை சாதாரணமான சினிமாவிற்குள் தள்ளியது, 'நிழல்கள்' வெற்றிப் பெற்றிருந்தால் உலகத்தரமான சினிமா பக்கம் சென்று இருப்பேன். நான் செய்ய முடியாத அந்த உலகத்தரமான சினிமாவை யாரேனும் செய்வார்களா என்று பல நாள் ஏங்கியதுண்டு. இன்றைய இளைஞர்களில் 50 சதவிதம் அப்படிப்பட்ட கதையுடன் தான் சினிமாவிற்குள் வருகிறார்கள்.

நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா

‘குற்றம் கடிதல்' என்ற இக்கதைக்கு மிக அற்புதமான தலைப்பு, மிக பொருத்தமான தலைப்பு. இந்தப் படம் அதன் கதை, கதாப்பாத்திரங்களின் நிலையில் இருந்து எங்கும் தடமாற வில்லை. ஒரு சினிமாக்காரன் ஒவ்வொரு காட்சிக்கும், கதாப்பாத்திரத்திற்கும் அழகு சேர்ப்பதில் குறியாக இருப்பான். இது பிரம்மா என்ற ஒரு எழுத்தாளனின் படைப்பு. அவன் அந்த கதாப்பாத்திரங்களாக மாறி அவர்களை வடித்திருக்கிறான்.

‘குற்றம் கடிதல்' படம் மூலம் இயக்குனர் பிரம்மா தான் ஒரு படைப்பாளி என்று நிரூபித்திருக்கிறான். படத்தில் நடித்தவர்கள் அவர் எழுத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள். புதுமுகம் ராதிகா ஒரு பள்ளிக்கூட ஆசிரியையாக பொருந்தி இருந்தாள். ஒவ்வொரு காட்சியிலும் அவள் நடிப்பும், கண்ணசைவும் பிரமாதம். மாஸ்டர் அஜய் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அப்படி ஒரு நடிப்பை நடித்திருக்கிறான். இந்த சிறுவனின் மாமனாக வரும் பாவல் நவகீதன் நிஜ வாழ்க்கையில் ஒரு தாய் மாமன் எப்படி இருப்பானோ அப்படியே இருக்கிறான். சினிமாவில் பலர், பெரும் நடிப்பினை வெளிபடுத்தியுள்ளனர். ஆனால், இப்படத்தில் அனைவரும் நடிக்கவில்லை கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன், படத்தில் தன்னை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கதையோடு உருகி உருகி வாசித்திருக்கிறார். படத்திலிருக்கும் எல்லா வகையான சூழ்நிலைகளுக்கும் தகுந்த இசையை வழங்கி மிகவும் திறமையாக இசையை கையாண்டு இருக்கிறார். குறிப்பிட வேண்டும் என்றால் பாரதியாரின் ‘ சின்னஞ்சிறு கிளியே ‘ பாடலை இசையமைத்த விதமும் பாடலை படமாக்கிய விதமும் உலகத்தரத்திலான சிந்தனை.

இப்படி அத்தனை துறையையும் தன் கதைக்கு ஏற்றவாறு எடுத்து சென்று இருக்கிறார் இயக்குனர் பிரம்மா. என்னையும் மிஞ்சிய ஒரு படைப்பாளி பிரம்மா. என்று சொன்னால் அது மிகையல்ல," என்றார் நெகிழ்ச்சியுடன்.

 

ஏப்ரல் 24ல் “வை ராஜா வை”... கோலிவுட்டின் "கிங்" ஆவாரா கெளதம் கார்த்தி?

சென்னை: தமிழில் 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷின் இரண்டாவது படம், வை ராஜா வை ஏப்ரல் 24 திரைக்கு வருகிறது. சென்சார், படத்துக்கு யு சான்றிதழ் தந்துள்ளதால், 30 சதவீத வரிவிலக்குக்கு படம் தகுதி பெற்றுள்ளது.

3 படத்தின் மூலம் இயக்குநரான ஐஸ்வர்யா தனுஷ், இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 2வது படமாக வை ராஜா வை படத்தை இயக்கியுள்ளார். பல திரையுலக வாரிசுகள் இதில் இணைந்துள்ளனர்.

ஏப்ரல் 24ல் “வை ராஜா வை”... கோலிவுட்டின்

வை ராஜா வை படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் டாப்ஸிக்கு முக்கியமான வேடமாம்.

டேனியல் பாலாஜி நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லத்தனம் செய்திருக்கிறார். நகைச்சுவைக்கு விவேக். கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக்குக்கு அதன் பிறகு எந்தப் படமும் சரியாக அமையவில்லை.

இந்த நிலையில், தனது திரைவாழ்க்கையின் முதல் திருப்புமுனையாக வை ராஜா வையையே நம்பியுள்ளார். நம்பிக்கையை படம் காப்பாற்றும் என்கிறார்கள் பட யூனிட்டை சேர்ந்தவர்கள்.

 

மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான கேரள தொழில் அதிபர் சரிதா நாயர் தான் எழுதிய கடிதத்தில் மலையாள நடிகர் மோகன்லால் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார் என்று உள்ளூர் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரிதா நாயர். அவர் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் சோலார் பேனல்களை பொருத்திக் கொடுக்கிறேன் என்று கூறி கேரளா மற்றும் தமிழகத்தில் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு

அவர் சிறையில் இருக்கையில் எழுதியதாகக் கூறி 28 பக்கங்கள் கொண்ட கடிதத்தை கேரள மீடியாக்கள் வெளியிட்டன. அதில் கேரள மாநில நிதி அமைச்சர் கே. மணியின் மகனும், எம்.பி.யுமான ஜோஸ் மணி தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா எழுதியிருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்றும், அந்த கடிதமே போலி என்றும் சரிதா தெரிவித்துள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்த அவர் தான் எழுதிய உண்மையான கடிதத்தை செய்தியாளர்கள் முன்பு காட்டினார். அதை சிலர் புகைப்படம் எடுத்தனர். அந்த கடிதத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கேரள அரசியல்வாதிகள் சிலருடன் சேர்ந்து தன்னை பயன்படுத்திக் கொண்டதாக சரிதா எழுதியுள்ளார் என்று சில பிரபலமான மலையாள செய்தி தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக பிரபல மலையாள நடிகரும், அரசியல்வாதிகளும் சரிதாவை பலாத்காரம் செய்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மோகன்லாலின் பெயர் அடிபடுகிறது. இதனால் மோகன்லால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்பும் கூட சரிதா நாயர் பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினார். ஆனால் அவற்றை அவரால் நிரூபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இசைஞானியும் இசைமுரசும்.. மூன்று முத்தான பாடல்கள்!

மறைந்த இசைமுரசு நாகூர் இஎம் ஹனிஃபா பல ஆயிரம் இஸ்லாமியப் பாடல்களையும் திமுக பிரச்சாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இப்படி ஒரு அரிய குரலை திரைத்துறையில் ரொம்ப காலமாக யாரும் பயன்படுத்தாமல் இருந்தனர். பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற எல்லோரும் கொண்டாடுவோம்.. பாடலில் சில வரிகளை பாடியிருந்தார் நாகூர் ஹனிஃபா. பின்னர் சினிமாவில் பாடுவதில் பெரிய நாட்டம் காட்டவில்லை அவர்.

இசைஞானியும் இசைமுரசும்.. மூன்று முத்தான பாடல்கள்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு இசையமைப்பாளருக்கு பாடச் சம்மதித்தார். அவர் இசைஞானி இளையராஜா.

செம்பருத்தி படத்தில் இடம்பெற்ற மிக அருமையான பாடல் கடலிலே தனிமையில் போனாலும்... எனத் தொடங்கும் சூழ்நிலைப் பாடல். பாடலின் கடைசி சரணத்தை மட்டும் மனோ பாடியிருப்பார். மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது நாகூர் ஹனிஃபாவின் இந்த முதல் திரைப்பாடல்.

அடுத்த பாடலை ராமன் அப்துல்லா படத்துக்காகப் பாடியிருந்தார் இசைமுரசு.

உன்மதமா என்மதமா ஆண்டவன் எந்த மதம் என்று தொடங்கும் அந்தப் பாடலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் பாடலை முழுவதும் ஹனீஃபாவே பாடியிருந்தார்.

நாகூர் ஹனீஃபா பாடிய மூன்றாவது பாடல் இடம்பெற்ற படம் தர்மசீலன். இளையராஜா இசையில் எஸ் பி பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார் ஹனீஃபா. எங்கும் உள்ள அல்லா பேரைச் சொல்லு நல்லா... எனத் தொடங்கும் பாடல் அது.

இந்த மூன்று பாடல்களுமே மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 'தல 56' திரைப்பட பணிகள் முன்கூட்டியே தொடங்கின!

சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.

வீரம் வெற்றி படத்தின் இயக்குநரான சிவா இயக்கும் புதிய படத்தில் அஜித் மீண்டும் நடிக்கிறார். ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ்சுக்காக இப்படத்தின் பெயரை வெளியிடாமல் உள்ள படக்குழுவினர், அதிகாரப்பூர்வமாக படத்தின் பெயரை வெளியிடும்வரை, இப்படத்தின் பெயரை தல 56 என்று அழைக்க உள்ளனர்.

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 'தல 56' திரைப்பட பணிகள் முன்கூட்டியே தொடங்கின!

இப்படத்தில் முதன்முறையாக அஜித்துடன் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேருகிறார். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத் படத்துக்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் பூஜை ஏப்ரல் 14ம்தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று, நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றே இப்படத்தின் பூஜை, ஏ.எம்.ரத்தினம் அலுவலகத்தில் வைத்து நடந்துள்ளது. தயாரிப்பாளர், வியாழக்கிழமை மீது வைத்துள்ள சென்டிமென்ட்தான் இதற்கு காரணம் என்று தெரிகிறது.

அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 'தல 56' திரைப்பட பணிகள் முன்கூட்டியே தொடங்கின!

மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் சிவா இந்த படத்திலும் அஜித்துடன் கை கோர்த்துள்ளார்.

இனி என்ன, அஜித் ரசிகர்களுக்கு தாரை தப்பட்டை கிழியப்போகிறது.

 

'தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன்' - இளையராஜா புகழாரம்

சென்னை: தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன் என்று இளையராஜா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

எழுத்துலகின் பிதாமகனான ஜெயகாந்தன் மறைவு குறித்து இன்று இளையராஜா வெளியிட்ட அறிக்கை:

நான், அண்ணன் பாஸ்கர், பாரதிராஜாவோடு முதன் முதலாக சென்னைக்கு வந்தபோது, நாங்கள் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான்.

'தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன்' - இளையராஜா புகழாரம்

'நாங்கள் உங்களை நம்பித்தான் வந்திருக்கிறோம்' என்று சொன்னபோது, 'என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்?' என்று கேட்டு, எனக்குள் நம்பிக்கை விதையை விதைத்தவர் ஜெயகாந்தன்.

தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர்.

தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல், திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜேகே. தமிழ் எழுத்துலகின் புத்தெழுச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தார். புதிய படைப்பாளிகளின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார்.

தற்கால தமிழ் இலக்கியத்துக்கும், தமிழர்களுக்கும் அவர் செய்த தொண்டு மறக்க முடியாதது. தமிழர்களின் தலை நிமிர்வு ஜெயகாந்தன். அவர் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிலைத்து நிற்பார்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் இளையராஜா கூறியுள்ளார்.

 

ஜெயகாந்தன் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

எழுத்துலக பிதாமகன் ஜெயகாந்தன் உடல் நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

ஜெயகாந்தன் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!

ஜெயகாந்தன் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர் இளையராஜா. வாய்ப்பு கிடைக்கும்போது, தானே ஜெயகாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவது இளையராஜா வழக்கம்.

ஜெயகாந்தன் மரணம் இளையராஜாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவர் மரணத்துக்கு இன்று புகழஞ்சலி செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இன்று மாலை 6 மணிக்கு, ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இளையராஜா.

 

விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்

சண்டக்கோழி 2 படத்தில் மீண்டும் விஷாலுக்கு ஜோடியாகிறார் மீரா ஜாஸ்மின்.

‘பாயும் புலி' படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்க இருக்கும் ‘சண்டக்கோழி' 2-ம் பாகத்தில் நடிக்கிறார் விஷால்.

விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்

இதில் விஷாலுக்கு ஜோடியாக எமி ஜாக்சனை நடிக்க வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இவர் தவிர, மேலும் இரண்டு முன்னணி நடிகைகளையும் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இந்நிலையில் ‘சண்டக்கோழி' முதல் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மினை 2-ம் பாகத்திலும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு தமிழில் ‘இங்க என்ன சொல்லுது', விஞ்ஞானி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டுமே பெரிதாகப் போகவில்லை.

மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மீரா ஜாஸ்மின், சண்டக்கோழி 2-ல் நடிக்க சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.